பட மூலாதாரம், ANI
உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கை குறித்து ஸ்மிதி இரானி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உலகளாவிய பசி குறியீட்டின் அண்மைய அறிக்கை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியின் நிலைமை தீவிரமாக உள்ளது. 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் இருந்தது.
வெள்ளிக்கிழமையன்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஹைதராபாத்தில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, ’குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்’ போன்ற குறியீடுகள் இந்தியாவை அதன் உண்மையான அர்த்தத்தில் பிரதிபலிக்கவில்லை என்றும், இதெல்லாம் முட்டாள்தனம் என்று மக்கள் நம்புவதாகவும் கூறினார்.
உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையை நிராகரித்த ஸ்மிருதி இரானி, 140 கோடி பேர் வாழும் நாட்டில் 3 ஆயிரம் பேருக்கு ஃபோன் செய்து பசியாக இருக்கிறதா என்று கேட்கிறார்கள். “இந்தக் குறியீடு இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பான நிலையில் இருப்பதாகக் கூறுகிறது. இதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதுமட்டுமின்றி, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 4 மணிக்கே வீட்டை விட்டு வெளியேறியதாகவும், 10 மணிக்காவது சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், “அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த நபர்களிடமிருந்து ஒரு அழைப்பு எனக்கு வந்தால், அவர்கள் என்னிடம் பசியாக இருக்கிறதா என்று கேட்டால், நான் ஆம் என்றுதான் சொல்வேன்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
உலகளாவிய பசி அட்டவணை என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட நான்கு அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்வி
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட், ஸ்மிருதி இரானியின் கருத்து உணர்ச்சியற்றது என்று கூறியுள்ளார்.
பட்டினி போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்னையில் இவ்வளவு லேசாகப் பேசுவது உங்களின் அறியாமையா அல்லது உணர்வின்மையா என்று தெரியவில்லை. நீங்கள் இந்த நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
உலகளாவிய பசி அட்டவணை என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட நான்கு அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது. அவை ஐ.நா. அமைப்பின் நிலையான இலக்குகளின் ஒரு பகுதி. இதை நிறைவேற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
“வறுமை, ஏழ்மை, பட்டினியால் இரவில் ஒரு ரொட்டிக்குக் குறைவாகச் சாப்பிட்டு உயிர் பிழைக்கும் மக்களின் காயங்களை நீங்கள் நிச்சயமாகக் கீறிவிடுகிறீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்,” என்றார்.
ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு ராஷ்ட்ரிய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் பதிலளித்துள்ளார்.
அவர் எக்ஸ் சமூக ஊடக தளத்தில், “இந்த சர்வேயில் ஸ்மிருதி இரானி பசியாகவோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடுள்ளவராகவோ காட்டப்பட மாட்டார்,” என்று எழுதியுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசும்போது, “பாஜக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளால், கடந்த 10 ஆண்டுகளில் பட்டினி குறியீட்டில் இந்தியா 63வது இடத்தில் இருந்து 111வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இப்போது மத்திய பாஜக அரசு, இந்த அறிக்கையைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு அதன் கொள்கைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக அறிக்கையையும், குறியீட்டையும் தவறானது மற்றும் குறைபாடுள்ளது என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.
பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட், ஸ்மிருதி இரானியின் கருத்து உணர்ச்சியற்றது என்று கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் பட்டினி பற்றிய அறிக்கை குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது. ஜெர்மனியில் செயல்படும் Welt Hunger Hilfe மற்றும் அயர்லாந்தில் செயல்படும் Concern Worldwide NGO ஆகிய இரண்டு ஐரோப்பிய அமைப்புக்களால் இது வெளியிடப்படுகிறது.
உலகளாவிய பசி குறியீட்டில், எந்த நாட்டிலும் பட்டினி கிடக்கும் சூழ்நிலையைக் கண்டறிய நான்கு அளவுருக்கள் மதிப்பிடப்படுகின்றன.
- ஊட்டச்சத்துக் குறைபாடு: தினசரி உணவில் போதுமான கலோரிகள் இல்லாத ஒரு நாட்டின் மக்கள் தொகையும் இதில் அடங்கும்.
- குழந்தை சிதைவு: உயரத்தைவிட எடை குறைவாக இருக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
- குழந்தை வளர்ச்சி குன்றியிருப்பது: ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அவர்களின் வயதைவிட உயரம் குறைவாக இருக்கும்.
- குழந்தை இறப்பு விகிதம்: இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
இந்த நான்கு பரிமாணங்களுக்கும் 100 புள்ளிகளின் நிலையான மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒரு நாடு 20 முதல் 34.9 புள்ளிகளைப் பெற்றால், அது ‘கடுமையான’ பிரிவிலும், 35 முதல் 49.9 வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற நாடுகள் ‘மிகக் கடுமையான’ வகையிலும் சேர்க்கப்படும்.
பட மூலாதாரம், Getty Images
தினசரி உணவில் போதுமான கலோரிகள் இல்லாத ஒரு நாட்டின் மக்கள் தொகையும் இந்த அட்டவணையில் அடங்கும்.
111-வது இடத்தைப் பிடித்த இந்தியா
2023 உலகளாவிய பசி குறியீட்டில், 125 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 28.7 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களுடன், இந்தியா ‘கடுமையான’ பிரிவில் இணைந்து 111வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும் விகிதம் உலகிலேயே மிக அதிகமாக 18.7 சதவீதமாக உள்ளது. இது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் காட்டுகிறது.
குழந்தை வளர்ச்சி குன்றியதைப் பற்றி நாம் பேசினால், இந்த அறிக்கையின்படி இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 16.6 சதவீதமாகவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த புள்ளிவிவரங்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பு மூலம் நிராகரித்துள்ளது.
உலகளாவிய பட்டினி குறியீடு இந்தியாவின் உண்மையான நிலைமையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அந்தக் குறியீட்டில் உள்ள பசியை அளவிடுவதற்கான தரநிலைகளும் தவறானவை என்றும் அமைச்சகம் கூறுகிறது.
குறியீட்டில் பயன்படுத்தப்பட்ட நான்கு அளவுருக்களில், மூன்று குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பானவை என்று அரசாங்கம் கூறுகிறது. இது இந்தியாவின் முழு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை அளவிட, பட்டினி குறியீடு மூவாயிரத்தின் மிகச் சிறிய மாதிரியை அடிப்படையாகக் கொண்டது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய பசி குறியீட்டில் குழந்தை எடை குறைவு விகிதம் 18.7 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்த விகிதம் 7.2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதை ஊட்டச்சத்துக் கண்காணிப்பு குறித்த புள்ளி விவரங்களில் பார்க்க முடியும் என்று அமைச்சகம் கூறுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
