
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை தொடர்வதால் உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைக்கும் என்ற கவலை எழுந்துள்ளதை அடுத்து உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.
சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய்களில் ஒன்றான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.25 டாலர் அதிகரித்து 86.83 டாலராக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் பெட்ரோலியப் கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனிய பகுதிகளில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் உலக அளவில் நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தாக்குதல் பல ஆண்டுகளாகத் தொடரும் சண்டையின் மிகப்பெரிய ஒரு தாக்குதலாகும்.
மேற்கத்திய நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பாலத்தீன போராளிக் குழுவான ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில், “உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான இரான் ஹமாஸ் அமைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது” என்றார்.
ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இரான், தனக்கு இந்த தாக்குதலுடன் எந்தவிதத் தொடர்பு இல்லை எனத் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனிய பகுதிகளில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
திங்களன்று, இஸ்ரேல் அமெரிக்க எண்ணெய் நிறுவனமான செவ்ரானுக்கு நாட்டின் வடக்கு கடற்கரையில் உள்ள தாமர் இயற்கை எரிவாயு கிணற்றில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. இப்பகுதி காசாவிலிருந்து எளிதில் தாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
ஏற்கெனவே இது போல் பதற்றம் நிறைந்த காலங்களில் உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்ட நாட்டின் எரிசக்தி அமைச்சகம், இஸ்ரேலின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய மற்ற ஆதாரங்களில் இருந்து போதுமான எரிபொருள் இருப்பதாகக் கூறியது.
இஸ்ரேலின் மிகப்பெரிய கடல் எரிவாயு உற்பத்தி நிறுவனமான லெவியதன் வழக்கம் போல் தொடர்ந்து இயங்குகிறது என்று செவ்ரான் தெரிவித்துள்ளது.
எரிசக்தி தொடர்பாக ஆய்வுகளை நடத்திவரும் சவுல் கவோனிக் பிபிசியிடம் பேசியபோது, “அருகில் உள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகியவற்றுக்கும் இது போன்ற தாக்குதல் மற்றும் பதற்றம் பரவக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக” உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் பிற நாடுகளுக்கும் தாக்குதல் பரவும் என்ற அச்சம் உலக அளவில் அதிகரித்துவருகிறது.
திங்கட்கிழமை காலை, அமெரிக்காவின் வெஸ்டர்ன் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 2.50 டாலர் அதிகரித்து 85.30 டாலராக இருந்தது.
“ஹமாஸ் தாக்குதல்களை ஆதரிப்பதாக இரான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இரானும் இத்தாக்குதலில் பங்கேற்றால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 3% வரை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது” என்று கவோனிக் தொடர்ந்து பேசுகையில் கூறினார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி இரான் இந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக கேபிடல் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் கரோலின் பெயின் பிபிசியின் டுடேவிடம் பேசியபோது தெரிவித்தார்.
“இரானிய உற்பத்தியில் நிலையான அதிகரிப்பை அமெரிக்கா கண்மூடித்தனமாக அனுமதித்து வருவதாகத் தெரிகிறது. அது இரான் இங்கிருந்து தொடர்ந்து முன்னேறுவதைப் புறக்கணிப்பதை அமெரிக்காவுக்கு மேலும் சிக்கலாக்கும்,” என்று அவர் கூறினார்.
மூலதனப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் எண்ணெய்க்கான தேவை வினியோகத்தை விட அதிகமாக இருக்கும் என்றும், அதனால் “எண்ணெய் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது” என்றும் கரோலின் பெயின் தெரிவித்தார்.
முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் நடக்கும் நிலையில், உலகளாவிய விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு அங்கேயே முடங்கிவிடும் என்று கவோனிக் கூறினார்.
எரிசக்தியை மட்டும் நம்பிக்கொண்டிருக்கும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய ஏற்றுமதியாளர்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கியமானது.

எரிசக்தியை மட்டும் நம்பிக்கொண்டிருக்கும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய ஏற்றுமதியாளர்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கியமானது.
வரவிருக்கும் நாட்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கான நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் டாலரில் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கலான காலங்களில் இதை முதலீட்டாளர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் என ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியின் ஜேம்ஸ் சியோ கூறினார்.
சந்தைகளில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையைச் சமாளிக்கும் விதத்தில் 3000 கோடி அமெரிக்க டாலர்கள் வரையிலான வெளிநாட்டு நாணயத்தை விற்கப் போவதாகவும், மதிப்பு குறைந்து வரும் சொந்த நாணயமான ஷேக்கலின் மதிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலின் மத்திய வங்கி திங்களன்று கூறியது.
“இது போன்ற காலகட்டத்தில், பதட்டம் கொஞ்சம் அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் இன்னும் கொஞ்சம் தெளிவு பெற விரும்புகிறார்கள். குறிப்பாக பொருளாதார தரவு மற்றும் புவிசார் அரசியலின் நிச்சயமற்ற தன்மையுடன் தொடர்புடைய முன்னேற்றங்கள் குறித்து இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது,” என்று மேலும் பேசிய சியோ கூறினார்.
பிப்ரவரி 2022 இல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விலை உயர்ந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய் 120 அமெரிக்க டாலரைத் தாண்டியது.
இந்த ஆண்டு மே மாதத்தில் அந்த விலைகள் ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலர்களுக்கு சற்று அதிகமாகச் சரிந்தன. ஆனால் உற்பத்தியாளர்கள் சந்தையை கட்டுப்பாட்டில் வைக்க உற்பத்தியைக் குறைக்க முயற்சித்ததால் அந்த விலைகள் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்துள்ளன.
எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடான சௌதி அரேபியா, ஜூலை மாதம் ஒரு நாளுக்கு பத்து லட்சம் பேரல்கள் வரை உற்பத்தி குறைக்கப்படும் என்று கூறியுள்ளது .
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக் + (Opec+) இன் மற்ற உறுப்பினர்களும், எண்ணெய் விலைகளை உயர்த்தும் முயற்சியில் உற்பத்தியைத் தொடர்ந்து குறைப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஒபெக்+ உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40% பங்கு வகிக்கிறது என்பதுடன் அந்த அமைப்பின் முடிவுகள் எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்