ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா போல நடித்துள்ள விஷ்ணு பிரியா பிபிசியிடம் பேசினார்
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தில் வெற்றிக்கு காமெடி, நடிகர்களின் திரைமொழி எனப் பல்வேறு காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான நாள் முதல், திரைப்படத்தில் வரும் அந்த 3 நிமிட காட்சிக்காக ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர்.
இறந்த தமிழ்நாட்டின் பிரபல நடிகையான சில்க் ஸ்மிதாவை, அந்த ஒரு காட்சியில் அச்சு அசலாக எப்படி மீட்டுருவாக்கம் செய்து காட்சிப்படுத்தினர் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக சமூக ஊடகங்களில் விவாதித்தனர்.
இறந்த ஒரு நபரை மீண்டும் உருவாக்கி திரையில் நடிக்க வைத்ததன் பின்னணியில் இருப்பது சென்னையைச் சேர்ந்த பிரசாத் நிறுவனம்.
அதை உருவாக்குவது மிக சவாலாக இருந்ததாக பிரசாத் இஎஃப்எக்ஸ் (Prasad EFX) அகாடமியினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
VFX (Visual Effects) என்பது என்ன?

பட மூலாதாரம், Mini Studios
VFX (Visual Effects) என்பது ஒரு கணினி தொழில்நுட்பம். அதைக் கொண்டு ஒரு காட்சியில் நடைபெறும் மாயாஜாலங்களை, கற்பனையே செய்ய முடியாத உயிரினங்களை, நடிகர், நடிகைகளின் இரட்டை வேடங்களை, வேறோர் உலகத்தை, விலங்குகளை, மிருகங்களை, பறவைகளைப் பேச வைக்கும் காட்சிகளைக் கணினியில் பயன்படுத்தப்படும் படங்கள் (CGI) மற்றும் பிற விளைவுகளைச் சேர்த்து உருவாக்குகிறார்கள்.
கற்பனைக்கே எட்டாத சாத்தியமில்லாத விஷயங்களை சாத்தியமாக்க உதவும் ஒரு கணினி தொழில் நுட்பமே VFX.
சில்க் ஸ்மிதாவை உருவாக்க தயக்கம்
மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்க் ஸ்மிதாவின் மறு உருவாக்கம் குறித்து அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசும்போது, “நான் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் கதையை எழுதும்போதே அதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் பற்றியும் எழுதியிருந்தேன்,” என்று தெரிவித்தார்.
“எனக்கு சில்க் ஸ்மிதா என்றால் மிகவும் பிடிக்கும். அவரை என்னதான் கவர்ச்சி பிம்பமாகப் பார்த்தாலும், சினிமா என்ற வியாபாரத்திற்கு கவர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதை ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்தவராக இருந்திருக்கிறார். அதனால்தான் அவர் அதை அத்தனை துணிச்சலாக அனைவரும் ரசிக்கும்படியாகச் செய்திருக்கிறார்,” என்றார்.

பட மூலாதாரம், Prasad EFX
விஷ்ணு பிரியாவின் உருவ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு சில்க் ஸ்மிதாவின் உருவம் கிராபிக்ஸ் உதவியுடன் மீண்டும் உருவாக்கப்பட்டது.
தனக்கு சில்க் ஸ்மிதா என்ற நடிகையைத் தாண்டி விஜயலட்சுமி என்பவரை மிகவும் பிடிக்கும். கதை விவாதத்தின்போதும், அனைவரும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கென ஒரு பாடலும் வைக்கலாம் என்றார்கள். ஆனால் அதை உறுதியாக மறுத்துவிட்டதாக ஆதிக் கூறினார்.
அதனால்தான் சில்க் ஸ்மிதாவை வெறுமனே காட்சிப் பொருளாக காட்டாமல், அவருக்கு ஒரு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், “ஆண்கள் நிறைந்த சினிமா உலகில் தனி ஆளாக ஒரு பெண்ணாக ஜெயித்துக் காட்டியிருக்கிறீர்கள்,” என வசனம் எழுதினேன் என அவர் கூறினார்.
சில்க் ஸ்மிதா அவர்களின் உருவத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வி.எஃப்.எக்ஸ் மூலம் மறுவுருவாக்கம் செய்வதாக முடிவு செய்து கதை எழுதினேன். ஆனால் சில்க் ஸ்மிதாவாக யார் நடிப்பார்கள் எனக் கேள்வி எழுந்தது.

பட மூலாதாரம், Prasad EFX
சென்னையைச் சேர்ந்த குழுவினர், மார்க் ஆண்டனி படத்திற்காக சில்க் ஸ்மிதாவை கிராபிக்ஸ் தொழிநுட்பத்தின் உதவியுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
ரீல்ஸ் புகழ் விஷ்ணு பிரியாவையும், கேரளாவை சேர்ந்த இன்னொரு பெண்ணையும் தேர்வு செய்தோம். தவிர்க்க முடியாத சில காரணங்களால் கேரளாவை சேர்ந்த பெண் வர முடியவில்லை. அதனால், நாங்கள் விஷ்ணு பிரியாவை வைத்து சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தை உருவாக்கினோம் என்றார் ஆதிக்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சில்க் ஸ்மிதா இன்றளவும் எல்லாத் தலைமுறைகளாலும் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படுகிற நடிகை. அவரை மீண்டும் திரையில் காட்டும்போது மிகவும் தத்ரூபமாக வர வேண்டும்.
சிறிய சறுக்கல் என்றாலும் அது நகைச்சுவையாகிவிடும் என்ற பயம் இருந்தது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பணிகள் ஆரம்பித்தபோது சில்க் ஸ்மிதாவின் மறுவுருவாக்க காட்சிக்காக நாங்கள் வெளி நாடுகளில் உள்ள வி.எஃப்.எக்ஸ் ஸ்டூடியோக்களை நாடினோம்.
விஷ்ணு பிரியாவின் முகத்தை சில்க் ஸ்மிதாவாக மாற்ற வேண்டும் எனக் கூறினோம். நாங்கள் அணுகிய அத்தனை ஸ்டூடியோக்களும் விஷ்ணு பிரியாவின் முகச் சாயல் எந்தக் கோணத்திலும் சில்க் ஸ்மிதாவுடன் பொருந்திப் போகவில்லை என நிராகரித்தனர்,” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Prasad EFX
இறுதியாக சென்னையிலுள்ள பிரசாத் நிறுவனம், எங்களுக்காக இந்த வேலையைச் செய்து தர ஒப்புக்கொண்டனர். விஷ்ணு பிரியாவை சில்க் ஸ்மிதாவாக மாற்ற ஏழு மாதங்கள் ஆனது என்று படத்தின் இயக்குநர் ஆதிக் பிபிசி தமிழிடம் கூறினார்.
சில்க் ஸ்மிதாவை உருவாக்குவதில் இருந்த சவால்கள்
வெளிநாடுகளில் நிராகரித்த ஒரு வேலையை எப்படி தேர்வு செய்து வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது என பிரசாத் இ.எஃப்.எக்ஸ் நிறுவனத்திடம் பிபிசி தமிழ் பேசியது.
அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அபிஷேக் பிரசாத், “மார்க் ஆண்டனி படத்தின் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் எங்கள் அகடாமியின் முன்னாள் மாணவர்.
அவர் என்னிடம் பேசும்போது, இந்தப் படத்திற்காக சில்க் ஸ்மிதாவை கிராபிக்ஸ் காட்சிகள் மூலமாக மீண்டும் உருவாக்க எந்த வெளிநாட்டு நிறுவனமும் தயாராக இல்லை என்று என்னிடம் கூறினார்.”
“எங்கள் நிறுவனத்தில் சிறிய பணிகளான ப்யூட்டி கரெக்ஷன்ஸ் வேலைகளைச் செய்து வந்தோம். அதாவது நடிகர், நடிகைகளின் முகத்திலுள்ள பரு, சுருக்கம், தொப்பையைக் குறைப்பது ஆகியவற்றைச் சரிசெய்யும் பணிகளைச் செய்வோம். ஜெயிலர், வாரிசு போன்ற படங்களில் இந்தப் பணிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.”

மார்க் ஆண்டனி படத்தில், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த விஷ்ணு பிரியா நடித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வந்த தங்களுக்கு, ஒரு நடிகையின் சாயலில் இருக்கும் ஒருவரின் உருவத்தை வைத்து உண்மையாக அந்த நடிகையை உருவாக்கும் வேலை புதிதான ஒன்று என்று அபிஷேக் தெரிவித்தார்.
“மொபைல் ஃபோனின் ஸ்க்ரீன் 7-12 இன்ச் வரை இருக்கும். அதில் நவீன செயலிகளின் ஃபில்டர்களை உபயோகப்படுத்தி விஷ்ணு பிரியா, சில்க் ஸ்மிதாவை போல இமிடேட் செய்திருக்கலாம்.
ஆனால் சினிமா திரையரங்குகளின் அகலமான திரையில் விஷ்ணு பிரியா, சில்க் ஸ்மிதா போன்று தோற்றமளிப்பாரா என்ற கேள்வி இருந்தது.”
விஷ்ணு பிரியாவின் முகத்தைக் காட்டி இதில் சில்க் ஸ்மிதாவின் உருவத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியபோது அதிர்ச்சியாக இருந்தது.
பிறகு எங்கள் குழுவுடன் அமர்ந்து விவாதித்து, இந்த வேலையைச் செய்து முடிப்பதாக படக்குழுவிடம் தெரிவித்தோம் என்கிறார் அபிஷேக்.
AI தொழிநுட்பத்தின் உதவியால் சாத்தியம்

பட மூலாதாரம், Mini Studios
சில்க் ஸ்மிதாவின் முகத்தை மறுவுருவாக்கம் செய்த VFX குழுவின் தலைவரான வெங்கடேசன், “சில்க் ஸ்மிதாவின் காட்சிகள் விஷ்ணு பிரியாவை வைத்து படமாக்கப்பட்டு, எங்களிடம் வந்தபோது எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது.
ஏனென்றால், விஷ்ணு பிரியாவின் முகம் கொஞ்சம் குண்டாக இருந்தது. சில்க் ஸ்மிதாவின் முகம் ஒல்லியான முகம். அங்கேயே எங்களுக்கு சவால் ஆரம்பித்து விட்டது,” என்று தெரிவித்தார்.
சந்தையிலிருக்கும் மிகவும் லேட்டஸ்டான Artificial Intelligence in Machine Learning (AIML) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சில்க் ஸ்மிதாவின் முக பாவனைகளைப் புகைப்படங்களாகப் பதிவேற்றினோம்.
அதையடுத்து, விஷ்ணு பிரியாவின் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சில்க் ஸ்மிதாவின் முகமாகச் செதுக்கினோம் என்று வெங்கடேசன் தெரிவித்தார்.
“ஒவ்வொரு முறை நாங்கள் சில்க் ஸ்மிதாவை விஷ்ணு பிரியாவின் முகத்திலிருந்து எடுக்க முயலும்போதும் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கும்.
ஏனேன்றால், தமிழ்நாடே கொண்டாடும் ஒரு நடிகையின் முகச் சாயலை நாங்கள் தவறாக வடிவமைத்துவிட்டால், அது திரைப்படத்திற்கே மிகப் பெரிய இழுக்காகிவிடும்.

பட மூலாதாரம், Prasad EFX
விஷ்ணு பிரியாவின் உருவ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு சில்க் ஸ்மிதாவின் உருவம் கிராபிக்ஸ் உதவியுடன் மீண்டும் உருவாக்கப்பட்டது.
எனவே, மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டோம். வாரம் ஒருமுறை இயக்குநரை சந்தித்து எங்கள் முயற்சியைக் காட்டினோம். இறுதியாக நாங்கள் உருவாக்கிய சில்க் ஸ்மிதாவின் மறுவுருவாக்கம் திரைப்படக் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது,” என்று கூறும் வெங்கடேசன், இருந்தாலும், பயம் எங்களை விட்டுப் போகவில்லை என்றும் கூறினார்.
பின்னர், மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானபோது, பிரசாத் இ.எஃப்.எக்ஸில் (Prasad EFX) உள்ள அனைவரும் இணைந்து திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
அங்கே ரசிகர்கள் பலரும் சில்க் ஸ்மிதா திரையில் தோன்றியபோது கொண்டாடித் தீர்த்தனர். அதிலும், “சிலர் உற்சாக மிகுதியால், மொபைல் ஃபோனில் சில்க் ஸ்மிதா எனக் கத்திக் கொண்டே புகைப்படம் எடுத்தனர். அதைப் பார்த்தபோது, எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மனம் மகிழ்ந்தோம்” என்றார்.
மேலும், VFX மென்பொருளைப் பயன்படுத்தி, ரசிகர்களைப் பரவசமாக்க, பல திரைப்படங்களில் பல யுக்திகளை முயன்றிருந்தாலும், சில்க் ஸ்மிதாவை மறுவுருவாக்கம் செய்தது அவர்களுக்கு இதுதான் முதல் முறையென்றும், அது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்தார்.
சில்க் ஸ்மிதாவை மறுவுருவாக்கம் செய்தது போன்று, காலத்தால் அழியாத கலைஞர்கள் நாகேஷ், மனோரமாவையும் திரையில் மறுவுருவாக்கம் செய்து ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்த விருப்பம் என்றும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்