தமிழ்நாடு: “எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது” – தண்டவாளத்தில் டார்ச் லைட்டுடன் ஓடிச் சென்று மோதவிருந்த ரயிலை நிறுத்திய தம்பதி

தமிழ்நாடு: "எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது" - தண்டவாளத்தில் டார்ச் லைட்டுடன் ஓடிச் சென்று மோதவிருந்த ரயிலை நிறுத்திய தம்பதி

”எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது” - ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தம்பதி

பட மூலாதாரம், Railway PRO

படக்குறிப்பு,

சண்முகையா-வடக்குத்தியம்மாள்

இருள் சூழ்ந்த நள்ளிரவு, மலைப்பாங்கான பகுதி, வயது முதிர்ச்சி. எதுவும் தடையாக இருக்கவில்லை 60 வயதான சண்முகையாவுக்கும் 50 வயதை எட்டிய அவருடைய மனைவி வடக்குத்தியம்மாளுக்கும். செங்கோட்டை அருகே நேரவிருந்த பெரும் ரயில் விபத்தை தங்கள் உயிரை பணயம் வைத்து, துணிச்சலுடன் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும். என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமத்தில் ’எஸ்’-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், பிப். 25-ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், கேரளாவில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து விழுந்து செங்கோட்டை – கொல்லம் ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அதேநேரத்தில், செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று, அதே தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலை தடுத்து நிறுத்த தம்பதி இருவரும் தண்டவாளத்திலேயே சிறிது தூரம் ’டார்ச்லைட்டை’ அடித்துக்கொண்டே ஓடிச்சென்று நிறுத்தியுள்ளனர். தங்களுக்கு மிக நெருக்கமாக ரயில் வந்தபோது, தண்டவாளத்திலிருந்து அவர்கள் அலறல் சத்தத்துடன் இறங்கிய பின்னரே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, ரயிலின் எஞ்சினும் முதல் ‘கோச்’சும் அவர்களை கடந்த பின்னரே ரயில் நிறுத்தப்பட்டது.

இந்த ரயில் தண்டவாளத்திலிருந்த லாரி மீது மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தைத்தான் சண்முகையாவும் அவர் மனைவி வடக்குத்தியாளும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

”எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது” - ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தம்பதி

பட மூலாதாரம், DIPR TN

டார்ச் லைட்டுடன் தண்டவாளத்தில் ஓடிய தம்பதி

புளியரை கிராமத்தைச் சேர்ந்த இருவரும் இந்த விபத்தை எப்படி தடுத்து நிறுத்தினர்?

பிபிசியிடம் பேசிய வடக்குத்தியம்மாள் அந்த சம்பவத்தை விவரித்தார்.

“இரவு 12.54 மணி இருக்கும். ‘தடார்’னு ஒரு சத்தம். தூங்கிக்கிட்டு இருந்த நாங்கள் எழுந்திருச்சு வெளிய வந்து பார்த்தோம். தண்டவாளத்தில் லாரி ஒன்று பாரத்துடன் தலைகுப்புற விழுந்து கிடந்தது. எதிர்புறம் பார்த்தால், ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. நாங்கள் பதறிப்போய், ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு ஓடினோம்” என கூறுகிறார் வடக்குத்தியம்மாள்.

வடக்குத்தியம்மாள் தண்டவாளத்தின் ஓரமாக ஓடிச்செல்ல, 60 வயதான சண்முகையா தன் உயிரை பொருட்படுத்தாமல் தண்டவாளத்தின் மீதே டார்ச்லைட் அடித்துக்கொண்டே ஓடியிருக்கிறார்.

“நான் தண்டவாளம் ஓரமாக ஓடினேன். என் கணவர் டார்ச் லைட்டை அடித்துக்கொண்டே தண்டவாளத்தில் ஓடினார். ஒரு 15 நிமிடம் ஓடியிருப்போம். பின்னர், டார்ச்லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தச் செய்தோம்” என்கிறார் வடக்குத்தியம்மாள்.

சுமார் 4 ரயில்வே போஸ்ட்டுகளை கடந்தே ரயிலை நிறுத்த முடிந்தது.

இந்த விபத்தில், முக்கூடல் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியின் கிளீனர், வாகனத்திலிருந்து தானே கீழே விழுந்து உயிர் பிழைத்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தண்டவாளத்திலிருந்த லாரியை அப்புறப்படுத்தினர். அந்த ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

”எங்களுக்கு பயம் இல்லை, உயிரை காப்பாற்றும் எண்ணமே இருந்தது” - ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தம்பதி

பட மூலாதாரம், MK Stalin/X

‘”ரயில் எங்களை தாண்டி சென்றது”

தம்பதியின் சிறிய வீட்டுக்கு அருகே எந்த வீடுகளும் இல்லை. தினமும் எந்தெந்த ரயில்கள் வரும் என்பதை அறிந்தவர்கள் இவர்கள். எனவே, லாரி தண்டவாளத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதே தண்டவாளத்தில் ரயில் வந்தால் பெரும் விபத்து ஏற்படும் என்பதையறிந்து இருவரும் துரிதமாக செயல்பட்டதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இரவு நேரத்தில் இந்த செயலை செய்வதற்கு பயமாக இல்லையா எனக் கேட்டால், “நாங்கள் ரயிலை நிறுத்தவில்லை என்றால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். நல்ல வேளை நாங்கள் நிறுத்திவிட்டோம். உயிரை பணயம் வைத்து ஓடினோம். எங்களுக்கு பயம் இல்லை. ரயிலின் உள்ளே இருந்தவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது” என்கிறார் வடக்குத்தியம்மாள்.

இவர்களின் செயலை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவரையும் நேரில் அழைத்துப் பாராட்டி ரூ. 5 லட்சம் வழங்கினார்.

முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகையா, “நாங்கள் ரயில் தண்டவாளத்திலேயே ஓடிச் சென்றோம். நாங்கள் கீழே இருந்து சைகை காட்டினால் தெரியாது என்பதால் ரயில் தண்டவாளத்தில் ஓடினோம். 50 அடியில் நான் கீழே இறங்கி விட்டேன். எங்களையும் தாண்டி ரயில் சென்று விட்டது, நான் மிகவும் அதிகமாக கூச்சலிட்டதால் ரயில் தண்டவாளத்தில் வந்தவர் கீழே விழுந்து விட்டாரா என்று பார்த்து துரிதமாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்” என தெரிவித்தார்.

ரயில் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் வந்து கொண்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்பதி இருவரும் ரப்பர் பால் வெட்டும் கூலி வேலை செய்துவருகின்றனர். எப்போதாவதுதான் வேலை இருக்கும் என பிபிசியிடம் கூறிய வடக்குத்தியம்மாள், வேலை இருக்கும் நாட்களில் இருவருக்கும் சேர்த்து நாளொன்றுக்கு 700 ரூபாய் கிடைக்கும் என்றார்.

கூடுதல் தகவல்கள்: மு.சுப கோமதி, பிபிசி தமிழுக்காக

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *