லட்சத்தீவு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்? அனுமதி பெறுவது எப்படி?

லட்சத்தீவு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்? அனுமதி பெறுவது எப்படி?

மாலத்தீவு

பட மூலாதாரம், lakshadweep.gov.in

படக்குறிப்பு,

36 தீவுகளைக் கொண்ட லட்சத்தீவு, அதன் கடற்கரை அழகுக்காக மாலத்தீவுடன் ஒப்பிடப்படுகிறது

வெள்ளை மணல் கொட்டிக்கிடக்கும் கடற்கரை, நீல நிற கடல் நீர், ஆர்ப்பாட்டமின்றி கரையைத் தொடும் அலைகள். இதைப் படிக்கும்போதே, ஒரு அழகிய கடற்கரையை காண வேண்டும் என மனதில் தோன்றலாம். கடற்கரைகளையும், கடலையும் விரும்பாதவர்கள் மிகவும் குறைவே. இந்தியாவில் அழகான கடற்கரைகளுக்கு பஞ்சமில்லை.

அதிலும், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் லட்சத்தீவுகளும், அழகான இந்தியக் கடற்கரைகள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். இந்தியாவின் தென்மேற்கில் உள்ள லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசம். 36 தீவுகளைக் கொண்ட இந்த இடம், அதன் கடற்கரை அழகுக்காக மாலத்தீவுடன் ஒப்பிடப்படுகிறது.

நீங்கள் லட்சத்தீவு செல்ல நினைத்தால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். லட்சத்தீவுக்கு எப்படி செல்வது? எந்த வழியாக செல்வது வழி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்?, இதையெல்லாம் தெரிந்துகொள்ளும் முன் லட்சத்தீவு பற்றி சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

லட்சத்தீவுகள் பயணம், அதன் உணவுகள், சுற்றுலாத்தலங்கள்

பட மூலாதாரம், LAKSHADWEEP.GOV.IN

லட்சத்தீவு பற்றிய அடிப்படைத் தகவல்கள்

  • கேரளாவின் கொச்சியில் இருந்து 440 கிலோமீட்டர் தொலைவில் லட்சத்தீவு உள்ளது.
  • லட்சத்தீவு குழுவில் 36 சிறிய தீவுக் கூட்டங்கள் உள்ளன.
  • மொத்த மக்கள் தொகை சுமார் 64 ஆயிரம்.
  • சுமார் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது லட்சத்தீவு.
  • பேசப்படும் மொழிகள் – மலையாளம் மற்றும் ஆங்கிலம்.
  • முக்கியமான தீவுகள்- கவரட்டி, அகட்டி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய்.
  • நிர்வாகத்தின் தகவல்படி, லட்சத்தீவில் 13 வங்கிகள், 13 விருந்தினர் மாளிகைகள், 10 மருத்துவமனைகள் உள்ளன.
லட்சத்தீவுகள் பயணம், அதன் உணவுகள், சுற்றுலாத்தலங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

லட்சத்தீவு கல்பானி தீவு

லட்சத்தீவை அடைவதற்கான அனுமதி பெறுவது எப்படி?

கேரளாவின் கொச்சிக்கு, இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் விமானம் அல்லது ரயிலில் செல்லலாம். நீங்கள் கொச்சியை அடைந்ததும் முதலில் செய்ய வேண்டியது லட்சத்தீவுக்குச் செல்ல அனுமதி பெறுவது தான்.

இந்தியாவில் இதுபோன்ற சில முக்கியமான, பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன. அங்கு செல்வதற்கு முன் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். லட்சத்தீவும் அப்படிப்பட்ட ஒரு இடம். லட்சத்தீவு நிர்வாகத்தின் அலுவலகம் கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவு பகுதியில் உள்ளது. இங்கு சென்று அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.

உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஆன்லைனில் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் போது, ​​பயண தேதி மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் 15 நாட்களுக்கு முன்னரே செய்து முடித்தால் நல்லது. அனுமதி கிடைத்த பிறகு, 30 நாட்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் 300 ரூபாய்.

விமான நிலையத்தில் க்ரீன் டேக்ஸ் (Green Tax) எனப்படும் வரியையும் (ரூபாய் 300) செலுத்த வேண்டும். மற்றொரு வழி, லட்சத்தீவு நிர்வாகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.

முதலில் இந்த விண்ணப்பத்தை கவனமாக நிரப்ப வேண்டும். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அனுமதிப்பத்திரம் கிடைக்க நேரம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுவது நல்லது.

உங்களின் அடையாளச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை உங்களுடன் வைத்திருக்கவும். இந்த அனுமதிப் பத்திரத்தை நீங்கள் லட்சத்தீவில் உள்ள காவல் நிலையம் அல்லது நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஒரு விஷயம், நீங்கள் ஸ்கூபா டைவிங் செய்ய அல்லது வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதற்கு சில கூடுதல் அனுமதிகளைப் பெற வேண்டியிருக்கும். இறுதியாக அனைத்து அனுமதிகளையும் பெற்றப் பிறகு, லட்சத்தீவுகளை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்கலாம்.

லட்சத்தீவுகள் பயணம், அதன் உணவுகள், சுற்றுலாத்தலங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அகட்டி விமான நிலையம்

கொச்சியில் இருந்து லட்சத்தீவு செல்வது எப்படி?

நீங்கள் இரண்டு வழிகளில் லட்சத்தீவுகளை அடையலாம். ஒன்று- விமானம் மூலம், இரண்டாவது – கப்பல் மூலம். இந்த இரண்டு வழிகளுக்கும் நீங்கள் கேரளாவின் கொச்சி நகரத்திற்கு வர வேண்டும். கொச்சியைத் தவிர வேறு எங்கிருந்தும் லட்சத்தீவுக்கு நேரடி விமானம் இல்லை.

கொச்சியை அடைந்த பிறகு, விமானத்தில் லட்சத்தீவு செல்ல விரும்பினால், அகட்டி விமான நிலையத்திற்கு இங்கிருந்து விமானங்கள் கிடைக்கும். இந்த விமானத்தின் மூலம் பயணம் செய்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

ஆனால் தற்போது வரை லட்சத்தீவுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதன் அர்த்தம் நீங்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை சரியாக திட்டமிட வேண்டும்.

விமானம் மட்டுமின்றி, கப்பல் மூலமாகவும் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு செல்லலாம். லட்சத்தீவு நிர்வாக இணையதளத்தின்படி, கொச்சியில் இருந்து அகட்டி மற்றும் பங்காரம் தீவுகளுக்கு விமானங்கள் உள்ளன. அகட்டியில் ஒரே ஒரு விமான ஓடுதளம் தான் உள்ளது.

ஆன்லைனில் தேடினால், கொச்சியில் இருந்து அகட்டிக்கு செல்லும் விமானங்கள் மட்டுமே கிடைக்கும், அதுவும் குறைவாகவே இருக்கும். லட்சத்தீவு நிர்வாகத்தின் தகவல்படி, அக்டோபர் முதல் மே வரை அகட்டியிலிருந்து கவரட்டி மற்றும் காட்மட் வரை படகுகள் கிடைக்கும். மழைக்காலத்தில் அகட்டியிலிருந்து கவரட்டிக்கு ஹெலிகாப்டர் வசதி உள்ளது.

லட்சத்தீவுகள் பயணம், அதன் உணவுகள், சுற்றுலாத்தலங்கள்

பட மூலாதாரம், LAKSHADWEEP.GOV.IN

படக்குறிப்பு,

பங்காரம்

கடல் வழியாக லட்சத்தீவுக்கு செல்வது எப்படி?

நீங்கள் லட்சத்தீவுக்கு கடல் வழியாகச் செல்ல விரும்பினால், கொச்சியிலிருந்து ஏழு பயணிகள் கப்பல்கள் புறப்படுகின்றன.

அவற்றின் பெயர்கள்:

எம்வி கவரட்டி

எம்வி அரேபியன் சி

எம்பி லக்ஷ்வதீப் சி

எம்வி லகூன்

எம்வி கோரல்ஸ்

எம்வி அமிண்டிவி

எம்வி மினிகாய்

இந்த பயணிகள் கப்பல்கள் மூலம் சென்றடைய 14 முதல் 18 மணி நேரம் ஆகும். நீங்கள் எந்த தீவுக்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பயண நேரம் மாறுபடும். இந்த கப்பல்களில் பயணம் செய்ய பல வகுப்புகள் உள்ளன. ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, பேக்-பங்க் வகுப்பு.

கடல் பயணம் செய்யும் போது சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்காக கப்பலில் ஒரு மருத்துவரும் இருக்கிறார்.

லட்சத்தீவு நிர்வாகத்தின் கூற்றுப்படி, எம்வி அமிண்டிவி, எம்வி மினிகாய் கப்பல்களில் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். மேலும் அந்த கப்பல்கள் பயணிகளை கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு ஒரே இரவில் அழைத்துச் செல்லும்.

சீசன் காலங்களில், அதிவேகப் படகுகளும் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு இயக்கப்படும்.

லட்சத்தீவுகள் பயணம், அதன் உணவுகள், சுற்றுலாத்தலங்கள்

பட மூலாதாரம், LAKSHADWEEP.GOV.IN

லட்சத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

  • கவரட்டி தீவு
  • லைட் ஹவுஸ்
  • ஜெட்டி தளம், மசூதி
  • அகட்டி
  • கட்மத்
  • பங்காரம்
  • தின்னகரா

மாலத்தீவுகளைப் போலவே லட்சத்தீவுகளிலும் வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன. இங்கு செல்ல மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் சிறந்த நேரம்.

இங்கு வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். நீங்கள் லட்சத்தீவுகளை நன்றாக சுற்றிப் பார்க்க விரும்பினால், ஆறு முதல் ஏழு நாட்கள் போதுமானது.

லட்சத்தீவுகள் பயணம், அதன் உணவுகள், சுற்றுலாத்தலங்கள்

பட மூலாதாரம், LAKSHADWEEP.GOV.IN

லட்சத்தீவில் கிடைக்கும் உணவுகள் என்ன?

நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் சில பிரச்னைகள் இருக்கலாம். தேங்காய்ப்பால், வாழைப்பழ சிப்ஸ், பலாப்பழம் போன்ற சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்க வேண்டும். அதே நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் லட்சத்தீவு உங்களுக்கு ஒரு நல்ல இடமாக இருக்கும்.

கீழே குறிப்பிட்டுள்ள அசைவ உணவுகள் உங்களுக்கு கிடைக்கும்,

  • கவரட்டி பிரியாணி
  • ஸ்டெம் கறி
  • இறைச்சி ஊறுகாய்
  • இறால் மசாலா
  • கணவாய் பொரியல்

இதைத் தவிர்த்து பல வகையான கடல் உணவுகளும் கிடைக்கும்.

லட்சத்தீவுகள் பயணம், அதன் உணவுகள், சுற்றுலாத்தலங்கள்

பட மூலாதாரம், ANI

லட்சத்தீவு செல்ல எவ்வளவு செலவாகும்?

முக்கியமான கேள்வி இது. நீங்கள் லட்சத்தீவுக்கு எந்த சீசனில் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும், எவ்வளவு நாட்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தும் உங்கள் லட்சத்தீவு பயணத்திற்கான செலவு தீர்மானிக்கப்படும் என்பதே பதில்.

மேலும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலைகள் உங்கள் பேரம் பேசும் திறனைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். முக்கியமான விஷயம், காகிதப் பணத்தை எடுத்துச் செல்லுங்கள். ஏடிஎம் அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

உதாரணத்திற்கு, (12 ஜனவரி 2024 நிலவரப்படி) பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான டிக்கெட்டின் விலை ரூபாய் 3000 மற்றும் கொச்சியில் இருந்து அகட்டிக்கு ரூபாய் 5500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ரயில் டிக்கெட் 300 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. பேருந்துகள், சொந்த வாகனம் மூலமாகவும் செல்ல முடியும்.

நீங்கள் கொச்சியில் இருந்து கப்பல் மூலம் லட்சத்தீவுகளை அடைய விரும்பினால், பல தனியார் நிறுவனங்கள் டூர் பேக்கேஜ்களை வழங்குகின்றன. இரண்டு நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரையிலான பேக்கேஜ்களில் பல தீவுகளைச் சுற்றிப்பார்க்கலாம். இந்த பேக்கேஜின் விலை 15 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.

பங்காரத்தில் ஒரு காட்டேஜ் சுமார் ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும். மூவாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய்க்கு கட்மத்தில் அறை கிடைக்கும். அகட்டியில் தங்குவதற்கு ரூபாய் 1500 முதல் 3000 ஆகலாம். கவரட்டி தீவில் 11,000 ரூபாய்க்கு ஒரு ரிசார்ட்டில் அறை எடுக்கலாம்.

லட்சத்தீவில் 20 நிமிட ஸ்கூபா டைவிங் ரூபாய் 3,000க்கும், 40 நிமிட ஸ்கூபா டைவிங் சுமார் ரூபாய் 5,000க்கும் கிடைக்கும். ஸ்நோர்கெலிங் பேக்கேஜ்கள் ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கும். சராசரியாக ஒரு தீவுக்கான டூர் பேக்கேஜ் ஒரு நபருக்கு ஒன்றரை முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

நீங்கள் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு கப்பலில் செல்கிறீர்கள் என்றால் அதற்கு நான்காயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

லட்சத்தீவு

பட மூலாதாரம், lakshadweep.gov.in

இணைய வசதி எப்படி இருக்கும்?

லட்சத்தீவுக்குச் செல்லும்போது சமூக ஊடகங்களில் பயணம் குறித்து போஸ்ட் செய்ய விரும்பினால், நீங்கள் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். தற்போது இணைய வசதி எல்லா இடங்களிலும் வேகமாக இல்லை. ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் இணைப்புகள் நன்றாக இருப்பதாகவும், வைஃபை வசதி சற்று மோசமாக இருப்பதாகவும் லட்சத்தீவு சென்றவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் லட்சத்தீவுக்குச் செல்ல திட்டமிட்டால், உங்கள் பயணத்தின் படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்களை சமூக ஊடகங்களில் வெளியிடவும், அது பிறருக்கு உதவலாம். அதே நேரத்தில் நீங்கள் அங்கு இருக்கும்போது லட்சத்தீவுகளின் அழகை முழுமையாக ரசிக்கவும் மறந்துவிடாதீர்கள்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *