ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கட்டிட தொழிலில் தொடங்கி தற்போது முன்னணி கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ள ஷமர் ஜோசஃப் யார்?
வெஸ்ட் இண்டீசில் இருந்து அடுத்த வேகப்புயல் – அறிமுக தொடரிலேயே ஆஸ்திரேலியாவை சாய்த்தது எப்படி?
எழுமிச்சை பழம், கொய்யாப் பழம் என பழங்களைக் கொண்டு ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர், இன்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 27 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்க காரணமாகியிருக்கிறார். பெருவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது வெஸ்ட் இண்டீசை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார் ஷமர் ஜோசஃப். யார் அவர்? என்ன நடந்தது?.
காபா மைதானத்தில் ஒருவித நிசப்தம். ஆஸ்திரேலிய கைவசம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. 2வது டெஸ்டை வெல்ல 9 ரன்கள் மட்டுமே தேவை. 91 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் தனி ஆளாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அதுவரை ஸ்மித் எதிர்கொண்டிருந்த அந்த ஓவரின் 5வது பந்தை ஹேசில்வுட் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துல்லியமாக பந்தை வீசினார் ஷமர் ஜோசஃப். பந்து பேட்டை கடந்து ஸ்டம்புகளை சிதறடித்தது.
27 ஆண்டுகள்… ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையிலேயே வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு 27 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. போட்டியை வென்ற உற்சாகத்தில் ஷமர் ஜோசஃப் உணர்ச்சிப்பெருக்கில் காபா மைதானத்தை சுற்றி ஓட, வீரர்களையும் அவரை ஆரத்தழுவி வெற்றியை கொண்டாடினர்..
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கள் குளமாகிப்போனதையும் காண முடிந்தது. கார்ல் ஹூப்பர் அழுதேவிட்டார். ஆதம் கில்கிறிஸ்ட் வர்ணணை அரங்கில் இருந்தவாறு வெஸ்ட் இண்டீசை மனதார பாராட்டினார்.
24 மணி நேரத்திற்கு முன்பு பெருவிரலில் அடிபட்டு வெளியேறிய அதே ஷமர் ஜோசஃப் வெஸ்ட் இண்டீசுக்கு வரலாற்று வெற்றியை தேடித் தந்திருக்கிறார். முதல் டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கி தான் வீசிய முதல் பந்திலேயே தலைசிறந்த டெஸ்ட் ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றி பலரையும் பிரமிக்க வைத்த ஷமர் இந்த முறை 11.5 ஓவர்கள் மட்டுமே வீசி ஒன்றல்ல இரண்டல்ல 7 விக்கெட்களை சாய்த்து ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றிருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
காயத்தில் பாதிக்கப்பட்ட போதும் தனது அணியை வெற்றிபெற வைத்துள்ளார் ஷமர்
வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
காபா டெஸ்ட் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை படைத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் ஆட்டம் காபாவில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களை சேர்த்தது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 289 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது.
2வது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. பேட்டிங்கின்போது ஸ்டார்க் வீசிய அதி வேக யார்க்கர் பந்து ஷமர் ஜோசஃப் பெருவிரலை பதம் பார்க்க, வலியில் துடித்த ஷமர், விளையாட முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார். அவர் விளையாடுவது சந்தேகம் என்றே முதலில் பேசப்பட்டது.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. வலியை பொருட்படுத்தாது பந்துவீச்சுக்கு தயாரானார் ஷமர் ஜோசஃப். 11.5 ஓவர்களை வீசி அடுத்தடுத்து 7 விக்கெட்களை அவர் சாய்க்க, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ்.
இதுகுறித்து பேசிய ஷமர் ஜோசஃப், உண்மையை சொல்ல வேண்டும் எனில், காலையில் இருந்தே நான் இந்த மைதானத்தின் பக்கம் வரவே இல்லை. என் மருத்துவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். என் விரலை அவர் ஏதோ செய்தார். நிச்சயமாக அவர் என்ன செய்தார் எனத் தெரியாது. நான் களத்திற்குச் சென்றேன். என் அணியை வெற்றிபெற வைத்தேன் என போட்டிக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் என் கண்கள் குளமாகின. ஆனால் நான் ஏற்கனவே முதல் டெஸ்டில் அழுதுவிட்டேன் என ஷமர் ஜோசஃப் கூறினார். முதல் டெஸ்டிலும் ஷமர் ஜோசஃப் 5 விக்கெட்களை சாய்த்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைதொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர்.
ஷமர் ஜோசஃப் பின்னணி என்ன?
முன்னணி கிரிக்கெட் ஊடகமான கிரிக்பஸ் இணையதளத்தின் படி, ஷமர் ஜோசஃப் 1999ம் ஆண்டு பிறந்தவர்.
கயானாவில் பரகாரா எனும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர். தந்தையுடன் மர வேலைக்குச் செல்வதும், கட்டட தொழில், காவலாளி என கிடைத்த வேலைகளைச் செய்துள்ளார் ஷமர் ஜோசப்.
“எங்கள் கிராமத்தில் வசதிகள் குறைவு. தரமான கிரிக்கெட் பந்துகள் கிடைக்காது. நாங்கள் பழங்களையும் சில சமையம் பிளாஸ்டிக் பாட்டில்களை உருக்கி அதை பந்து வடிவத்திற்கு கொண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவோம்” என்கிறார் ஷமர் ஜோசஃப்பின் உறவினரான ஓர்லாண்டோ டான்னர்(Orlando Tanner).
ஷமர் ஜோசஃப் உள்பட பரகாராவில் உள்ள எந்த குழந்தைகளுக்கும் பெரியளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கான வசதிகள் இருந்ததில்லை என்றும் ஓர்லாண்டோ டான்னரை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“2018 வரை இண்டெர்நெட் என்றால் என்ன வென்றே தெரியாது. நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஸ்மார்ட் ஃபோன்களைக் கண்டு என்ன இது என ஆச்சரியப்பட்டேன். சிறிது பணத்தை சேகரித்து ஸ்மார்ட் ஃபோன் வாங்கி அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருந்தது” என ஷமர் ஜோசஃப் கிரிக்பஸ் இணையளத்திற்கு தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துளார்.
பட மூலாதாரம், Getty Images
பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல என கூறியுள்ளார் ஷமர்
கிரிக்கெட் வாய்ப்பு
2023-ல் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஜோசஃப் ஷமருக்கு கிடைத்தது. அதுதான் அவரது முதல் தர கிரிக்கெட் போட்டி முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட்களை கைப்பற்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார். 2023 கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் நெட் பவுலராகும் வாய்ப்பு ஷமருக்கு கிடைத்தது.
அப்போது அவருக்கு பயிற்சியாளரும் கிரிக்கெட் வல்லுநருமான இந்தியாவைச் சேர்ந்த பிரசன்னா உடன் தொடர்பு ஏற்பட்டது.
பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல. சிபிஎல்லில் நெட் பவுலராக இருக்கும்போது அவரை சந்தித்தேன். நான் இரண்டு பந்துகள் தான் வீசியிருப்பேன். பிரசன்னா என்னிடம் வந்து நீ ஏன் கயானா அணியில் இல்லை என கேட்டார். நான் திகைத்துப்போனேன். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. சிபிஎல் தொடரிலும் டெஸ்ட் ஆட்டத்திலும் நீ விரைவில் விளையாடுவாய் என பிரசன்னா கூறியதை கிரிக்பஸ் உடனான நேர்காணலில் பகிர்ந்தார் ஜோசஃப் ஷமர்.
இதே விஷயத்தை பிரசன்னாவும் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். நெட் பவுலராக வந்த ஷமரை அணியில் எடுக்கும்படி கூறினேன். என் மீது நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தார்கள். மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக வருவார் என இரண்டே பந்துகளில் கணித்தேன் என பிரசன்னா கூறினார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, ரவிச்சந்திரன் அஷ்வினுடனான கலந்துரையாடலிலும் ஷமர் ஜோசஃப்பின் திறமைகள் குறித்து பிரசன்னா பேசினார்.
“ஷமர் ஜோசஃப் அடுத்த ஒரு வருடத்தில் எங்கிருப்பார் என்பதை பாருங்கள். ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஐபிஎல் ஏலத்தின்போது என்னிடம் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளரை பரிந்துரைக்கச் சொன்னார். நான் ஷமர் ஜோசஃபை பரிந்துரைத்தேன்.” என்றார் அவர்.
மிக குறுகிய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்த ஷமர் ஜோசஃப் இன்று தனக்கான வரலாறையும் ஆஸ்திரேலியாவில் படைத்திருக்கிறார்.
முழு விவரம் காணொளியில்…
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
