பட மூலாதாரம், Getty Images
காமிக்ஸ் உலகில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வரும், உலக அளவில் பிரபலமான ஜப்பானிய மாங்கா காமிக்ஸ்களில் ஒன்றான ட்ராகன் பால் மாங்காவை உருவாக்கிய அகிரா தோரியாமா தனது 68வது வயதில் உயிரிழந்துள்ளார்.
ஒருவகையான மூளை ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது. டிராகன் பால் காமிக்ஸ் உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. மேலும் இது, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் வழியாக அனிமேஷன் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
டிராகன் பாலின் முதல் அச்சிடப்பட்ட தொடர் 1984இல் வெளியிடப்பட்டது. இது சயான்கள் எனப்படும் வேற்றுலகவாசிகளிடம் இருந்து பூமியைப் பாதுகாக்க மாயாஜால சக்தியை தேடும் சான் கோகு என்ற சிறுவனின் சாகசங்களைப் பற்றிய கதை.
பட மூலாதாரம், Getty Images
டிராகன் பால்
டிராகன் பால் இணையதளத்தின்படி, மார்ச் 1ஆம் தேதி உயிர்நீத்த இவரது இறுதி நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
“அவர் இன்னும் பல விஷயங்களைச் சாதித்திருப்பார். ஆனாலும், அவர் பல மாங்கா தீம்கள் மற்றும் கலைப் படைப்புகளை இந்த உலகிற்கு விட்டுச் சென்றுள்ளார்,” என்று அவரது ஸ்டுடியோ குறிப்பிட்டுள்ளது.
மேலும், “உலகில் உள்ள பலரும் அகிரா தோரியாமாவின் தனித்துவமான படைப்பை நோக்கி நீண்ட காலத்திற்கு ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
தொடக்க காலம்
பட மூலாதாரம், Getty Images
அகிரா தோரியாமா
அகிரா தோரியாமா 1955இல் கிழக்கு ஜப்பானில் உள்ள ஐச்சி மாகாணத்தில் உள்ள கியோசு என்ற சிறிய நகரத்தில் பிறந்தார்.
தோரியாமாவின் கூற்றுப்படி, “அவர் பள்ளியிலிருந்தே மாங்கா மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மேலும் அவரது முதல் ரசிகர்களாக அவரின் பள்ளித் தோழர்களே இருந்துள்ளனர்”
சில வருடங்களுக்கு முன்புகூட “நான் எப்போதும் வரைவதில் ஆர்வமாக இருந்தேன்,” என்று ஸ்டோர்ம்பேஜஸ் என்ற இணையதளத்திடம் கூறியுள்ளார் அவர்.
“சிறுவயதில் இன்று இருப்பது போன்ற பொழுதுபோக்கெல்லாம் எங்களுக்கு இருந்ததில்லை. அதனால் எல்லோரும் எதையாவது வரைவோம். ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது, மாங்கா அல்லது அனிமேஷன் கதாபாத்திரங்களை வரைந்து ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளவோம்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில்தான் தோரியாமா தனது அறிவின் எல்லையை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளார். டிராகன் பால் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தோரியாமா, தனது குழந்தைப் பருவத்தில் டிஸ்னி அனிமேஷன் படங்களின் சிறந்த ரசிகராக இருந்தார்(குறிப்பாக அவருக்கு “101 டால்மேஷியன்கள்” படம் மீது தனித்துவமான ஈர்ப்பு உண்டு ).
மேலும் பல்வேறு படங்கள் மற்றும் கலைஞர்களைப் பார்த்தும் தோரியாமா வியந்துள்ளார். அவர்களது சில குறிப்புகளை தனது கலையிலும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
டிராகன் பால் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தோரியாமா, தனது குழந்தைப் பருவத்தில் டிஸ்னி அனிமேஷன் படங்களின் சிறந்த ரசிகராக இருந்தார்.
அதில், மேற்கத்திய படங்கள் (தோரியாமாவின் காலத்தில் மேற்கத்திய படங்கள் செர்ஜியோ லியோன் இயக்கத்தில் உச்சத்தை அடைந்தது), அறிவியல் புனைகதை (தோரியாமா விரும்பிய கதைகளில் ஸ்டார் வார்ஸுக்கும் தனி இடமுண்டு) மற்றும் ஆக்ஷன் (புரூஸ் லீ மற்றும் ஜாக்கி சான், ஏலியன்ஸ்கள், ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கிய படங்கள்) ஆகியவை அடங்கும்.
மாங்கா தொடரை தொழில்ரீதியாக உருவாக்கும் முதல்வாய்ப்பு அகிராவுக்கு 1977ஆம் ஆண்டு கிடைத்தது. ஜப்பானின் மிக முக்கியமான மாங்கா வெளியீட்டாளரான ஷுயிஷாவின் ஆசிரியர்களில் ஒருவரே அகிராவின் திறமைகளை முதன்முதலில் அடையாளம் கண்டார்.
ஷோனென் ஜம்ப் பத்திரிக்கையின் புதிய திறமைகளைக் கண்டறியும் வருடாந்திர போட்டியின்போது அவர் அகிராவின் திறமைகளைப் பார்த்து அந்நிறுவனத்தில் வாய்ப்பளித்தார்.
முதலில் இளம் வயது அகிராவின் மாங்கா தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு நிராகரிக்கப்பட்டன. பின்னர் அவரது முதல் மாங்கா தொடரான வொண்டர் ஐலண்ட், ஷோனென் இதழில் வெளியிடப்பட்டது. ஆனால், அதுவும் வாசகர்களால் கவனிக்கப்படாமல் போனது.
டாக்டர். ஸ்லம்ப் மற்றும் டிராகன் பால்
பட மூலாதாரம், Getty Images
டாக்டர். ஸ்லம்பில் முதல் மானுடவியல் விலங்குகள், ஆண்ட்ராய்டுகள் மற்றும் எதிர்கால உலகங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாங்கா உலகில் தனது முதல் வெற்றியின் சுவையை 1980இல் டாக்டர் ஸ்லம்ப் மூலம் சுவைக்கத் தொடங்கினார் அகிரா.
இந்தத் தொடரில் ஆண்ட்ராய்டு பெண்ணின் கதையை சிறப்பாகப் பதிவு செய்திருந்ததால், பலரும் அது உண்மையாக சூப்பர் பவர்களை கொண்ட ஓர் உண்மையான பெண் என்று மக்கள் நம்பினர்.
ஆனால் உண்மையில் இந்த தொடர் இளம் எழுத்தாளராக இருந்த அகிராவுக்கு, டிராகன் பால் உலகத்தைப் படைப்பதற்கான கூறுகளை ஆராய்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.
டாக்டர். ஸ்லம்பில் முதல் மானுடவியல் விலங்குகள், ஆண்ட்ராய்டுகள் மற்றும் எதிர்கால உலகங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் இதுவே டிராகன் பால் தொடருக்கு தனித்துவமான பாணியைக் கொடுத்தது.
பட மூலாதாரம், Getty Images
முதன்முதலில் டிராகன் பால் 1985ஆம் ஆண்டு ஷோனென் வார இதழில் வெளியிடப்பட்டது.
இந்த முதல் தொடர், 1984 வரை ஓடி, பின்னர் தொலைக்காட்சிக்கு மாறியது. அவரது அடுத்த தொடருக்காக, பாரம்பரிய சீனக் கதைகள் பற்றிய அறிவு கொண்ட தனது மனைவியின் உதவியை நாடியதாக தோரியாமா கூறினார். குறிப்பாக, “தி மன்கி கிங்” அவரது கவனத்தை ஈர்த்தது.
முதன்முதலில் டிராகன் பால் 1985ஆம் ஆண்டு ஷோனென் வார இதழில் வெளியிடப்பட்டது. இது சன் கோகு என்ற குரங்கு வால் கொண்ட ஒரு சிறுவன் தனது நண்பர்களுடன் பயணம் செல்லும்போது டிராகன் பந்துகளைக் கண்டுபிடிக்கும் கதை.
இது 1978ஆம் ஆண்டு வெளியான ஜாக்கி சானின் நகைச்சுவை படமான “தி டிரங்கன் மாஸ்டர்” உள்ளிட்ட பல படங்களின் மூலம் உத்வேகம் பெற்று இது எடுக்கப்பட்டது.
மேகங்களில் “சர்ஃப்” செய்யும் திறன் உட்பட மன்கி கிங்கின் பவர்களை, அவர் தனது முக்கிய கதாபாத்திரத்திற்கு எடுத்துக்கொண்டார்.
டிராகன் பாலின் தாக்கம்
பட மூலாதாரம், Getty Images
இது 1978ஆம் ஆண்டு வெளியான ஜாக்கி சானின் நகைச்சுவை படமான “தி டிரங்கன் மாஸ்டர்” உள்ளிட்ட பல படங்களின் மூலம் உத்வேகம் பெற்று இது எடுக்கப்பட்டது.
கடந்த 1996இல் டிராகன் பால் Z மாங்காவை எழுதுவதை அகிரா நிறுத்தியபோது, கோகு மற்றும் அவரது நண்பர்களின் சாகசங்கள் குறித்து அதுவரையில் கிட்டத்தட்ட 9,000 பக்கங்களை எழுதியிருந்தார்.
குத்துச்சண்டை வீரர் சாஷா பேங்க்ஸ் சாகா அனிமேவின் தீவிர ரசிகர்.
இந்த ஒரிஜினல் சாகா அனிமே 156 எபிசோடுகள் கொண்ட ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடராக மாற்றியமைக்கப்பட்டது. இது உலகளவில் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது.
இந்த வெற்றி, டிராகன் பால் Z மாங்காவையும் தொலைக்காட்சித் தொடராக மாற்றுவதற்கான உந்துசக்தியாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அந்த மாங்கா மொத்தம் 291 அத்தியாயங்களாக தயாரிக்கப்பட்டது. இவை குறைந்தது 81 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
“டிராகன் பால் ஜப்பானில் உள்ள அனிமேஷன் ரசிகர்களான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இணையத்தில் நம்ப முடியாத அளவிற்குப் பிரபலமாகியுள்ளது”
இதுவரை, தோரியாமா உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் 24 டிராகன் பால் திரைப்படங்களும், கிட்டத்தட்ட 50 வீடியோ கேம்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2001ஆம் ஆண்டில், அமெரிக்க கார்ட்டூன் சேனலான கார்ட்டூன் நெட்வொர்க்கில் டிராகன் பால் Z தான் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக இருந்தது. அந்த ஆண்டு பிரிட்னி ஸ்பியர்ஸை (Britney Spears) விட அதிகமாக தேடப்பட்ட சொற்களின் பட்டியலில் டிராகன்பால் முதலிடத்தைப் பிடித்தது என்று லைக்கோஸ்(Lycos) தெரிவித்தது.
அந்தநேரம் Lycos50 ஆய்வாளர் ஒருவர், “டிராகன் பால் ஜப்பானில் உள்ள அனிமேஷன் ரசிகர்களான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இணையத்தில் நம்ப முடியாத அளவிற்கு பிரபலமாகியுள்ளது” என்று கூறினார்.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மாங்கா மற்றும் அனிமேஷன் உலகிற்குள் நுழைவதற்கான நுழைவு வாயிலாக டிராகன் பால் மாறியுள்ளது.
“உங்களது மரபு என்றென்றும் வாழும். எக்காலத்திற்குமான மிகச் சிறந்த அனிமே கதாபாத்திரத்தை உருவாக்கியதற்கு நன்றி அகிரா” என்று அவரது மரணத்தை அறிந்த ஒரு ரசிகர் தனது சமூக ஊடக பக்கத்தில் எழுதியுள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
