பட மூலாதாரம், MAHA_MARIAMMAN_VALLI_KUMMI
ஈரோடு மாவட்டத்தில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை, ‘கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே…’ எனக்கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு உறுதிமொழி ஏற்க வைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தின் கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தமிழ் கடவுள் முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை குறித்தான வள்ளிக்கும்மி ஆடுவதற்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், விழாக்காலங்களில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் கொங்கு மக்கள் தேசியக் கட்சியினர் வள்ளிக்கும்மி பயிற்சியளித்து வருகின்றனர்.
பட மூலாதாரம், MAHA_MARIAMMAN_VALLI_KUMMI
நிகழ்ச்சியில் என்ன நடந்தது?
கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, கொங்குநாடு கலைக்குழு என்ற பெயரில் குழு அமைத்து ஈரோடு சுற்றுப்பகுதியில் வள்ளிக்கும்மி பயிற்சியளித்து வருகிறார்.
நவம்பர் 13-ஆம் தேதி ஈரோட்டில் இவர் நடத்திய நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில், கே.கே.சி பாலு பெண்களை உறுதி மொழி ஏற்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கே.கே.சி பாலு,‘‘சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே… கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வீட்டு பையனையே… இது போதும், இது போதுமே எனக்கு வேறேதும் வேண்டாம் அம்மா,’’ எனக்கூறி, அந்தப்பெண்களை உறுதிமொழி ஏற்க வைத்துள்ளார்.
2021 இல் தி.மு.க கட்சி சின்னத்தில் ஈரோடு பெருந்துறையில் போட்டியிட்டதுடன், தி.மு.க கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலுவின் இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், ‘கே.கே.சி பாலு பேசியது சாதிய கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சி’ என, சமூக வலைதளங்களிலும், அரசியல் கட்சியினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

‘சாதிய வளர்ப்புக்கான முயற்சி!’
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, ‘‘வள்ளிக்கும்மி நிகழ்ச்சிக்காக வந்த பெண்களை, வலுக்கட்டாயமாக உறுதிமொழி ஏற்க வைத்து, அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறித்துள்ளனர். இதை, உறுதிமொழி என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்தி, சாதியத்தை வளர்ப்பதற்கான முயற்சி என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு நிதியுதவி, இடஒதுக்கீடு வழங்கி, சாதியத்தை, அரசு கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், சாதியத்தை வளர்க்கும் விதத்தில் பெண்களை உறுதி மொழி ஏற்க வைத்தது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை, தமிழக அரசு கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

கே.கே.சி. பாலு பிபிசியிடம் கூறியது என்ன?
குற்றச்சாட்டுகள் குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலுவிடம் பிபிசி தமிழ் பேசினோம்.
அப்போது அவர், ‘‘எங்க வீட்டு பொண்ணுங்களுக்கு நான் பதனம் (அறிவுரை) சொன்னேன், இதுல என்ன சர்ச்சை இருக்கு? நிகழ்ச்சில பங்கேற்ற பெண்களோட பெற்றோர் சொன்னதால், அவர்கள் சம்மதத்தோட இந்த அறிவுரையைச் சொன்னேன். அவர்களை எங்கள் வீட்டுப் பெண்களாக நினைத்துத்தான் அறிவுரை சொல்லியிருகிறேன்.”
“பெற்றோர் சம்மதத்தோட திருமணம் செய்யுங்கள் என்றும் சொல்லியிருக்கேன். ஆண்களுக்கு சூதாடக்கூடாது, மது, புகைபிடிக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கி்த்தான் அவர்களுக்கும் வள்ளிக்கும்மி பயிற்சி கொடுக்கிறோம். இதில் சர்ச்சை ஏதும் இல்லை,’’ என்றார்.
கொங்கு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியது என்ன?

வள்ளிக்கும்மியில் உறுதிமொழி ஏற்றது சாதியத்தை வலுப்படுத்தவா? என்ற கேள்வியை, கொங்கு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.
அதற்கு விளக்கமளித்த ஈஸ்வரன், ‘‘பாலு பேசியதை விமர்சனம் செய்து, அதை ஊதிப்பெரிதாக்க வேண்டிய அவசியமே இல்லை. வள்ளிக்கும்மி மூலம் பல கிராமங்களில் இருக்கும் மக்கள் தங்களுக்குள் சமூக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர். வள்ளி கும்மி நன்றாக நடந்து வருவதால் அதில் சிக்கலை ஏற்படுத்ததான் இப்படியெல்லாம் பேசுகின்றனர். வள்ளி கும்மி நடப்பதை பாசிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும், ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காத ஆதங்கத்தில் பாலு பேசிவிட்டார்,’’ என்றார் சுருக்கமாக.
வள்ளி கும்மியில் எடுத்த உறுதிமொழி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் குழந்தை தினத்தன்று சாதி மறுப்பை மையப்படுத்தி ஆடிய கும்மி ஆட்டம் வீடியோவை, சர்ச்சைக்குள்ளான வள்ளி கும்மி வீடியோவுடன் ஒப்பிட்டும் பரப்பப்பட்டு வருகிறது.

வள்ளிக்கும்மி யாருடையது?
வள்ளி கும்மி நிகழ்ச்சி சர்ச்சைகளுக்குப்பின் வள்ளி கும்மி கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்துக்கே உரித்தானதா? தமிழகத்தில் வள்ளி கும்மியை எந்த சமூகத்தினர் கொண்டாடுகின்றனர்? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான அ.கா பெருமாள்.
பிபிசி தமிழிடம் பேசிய பெருமாள், ‘’18ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழகம் முழுவதிலும் பல்வேறு வகையான கும்மி நடனங்கள் ஆடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. தெருக்கூத்து, நாடகம் போன்று கும்மியை மக்கள் தங்கள் பொழுது போக்குக்கான ஒன்றாக பயன்படுத்தி வந்தனர். கடவுள் முருகன் மற்றும் அவரது மனைவி வள்ளி இவர்களது வாழ்க்கை, வள்ளி பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கையை பாடி கும்மி ஆடுவது தான் வள்ளி கும்மி,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த அவர், “இதைக் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கானது என நாம் சொல்ல முடியாது. ஏனெனில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாடார், சாம்பவர், வேடுவர், புலையர் என பல சமுதாய மக்கள் வள்ளி கும்மி ஆடி வந்ததற்கான வரலாற்று பதிவுகள் உள்ளன.”
“வள்ளி கும்மி என்பது அனைத்து தமிழ் சமுதாய மக்களால் ஆடப்பட்டது, காலப்போக்கில் பல சமுதாய மக்கள் அதை மறந்து விட்டனர் அவ்வளவுதான். வள்ளி கும்மி தமிழகத்தின் அனைத்து சமுதாயத்துக்கும் சொந்தமானதே தவிர, அது எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கும் உரித்தானது அல்ல என்பது தான் உண்மை,’’ என்றார் அ.கா பெருமாள்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
