நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக்கை தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் – எவ்வளவு தூரம் ஈட்டி எறிந்தார்?

நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக்கை தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் - எவ்வளவு தூரம் ஈட்டி எறிந்தார்?

நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நீரஜ் சோப்ரா

இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். உலக தடகளப் போட்டியில் அவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக, ஈட்டி எறிதலில் அவர் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருந்தார்.

இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. செக் குடியரசு வீரர் யாகூப் வாட்லெச் வெண்கலம் வென்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப்

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 11.30 மணியளவில் தொடங்கியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தியிருந்த 24 வயதேயான நீரஜ் சோப்ரா பங்கேற்றதால் இந்தியர்கள் அனைவரின் கவனமும் இந்த போட்டியின் மீது திரும்பியிருந்தது.

நீரஜ் சோப்ரா மீண்டும் சாதிப்பார் என்று கோடிக்கணக்கான இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல், உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் அசத்தினார் நீரஜ் சோப்ரா. கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அவர் இம்முறை முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

சரிவில் இருந்து மீண்ட நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்தப் போட்டியில் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா மற்ற வீரர்களைக் காட்டிலும் பின்தங்கியே இருந்தார். ஆனாலும், சுதாரித்துக் கொண்டு அடுத்த சுற்றிலேயே மீண்டு வந்தார். உடலில் இருந்த சக்தியை ஒன்றுதிரட்டி, முழு வேகத்தில் அவர் வீசியெறிந்த ஈட்டி 88.17 மீட்டர் தொலைவில் போய் விழுந்தது. இது நீரஜ் சோப்ராவின் சிறந்த முதல் 5 செயல்பாடுகளில் ஒன்றாக அமையவில்லை. ஆனாலும், இதுவே இந்தப் போட்டியில் ஒரு வீரர் அதிக தூரம் ஈட்டிய தூரமாக அமைந்தது.

இதன் மூலம் போட்டியில் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வசமாக்கினார். காமன்வெல்த் போட்டிகளில் 90 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமால் இம்முறை 87.52 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. செக் குடியரசு வீரர் யாகூப் வாட்லெச் 86.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.

இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா ஐந்தாவது இடத்தையும், டி.பி.மானு ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றிக்குப் பிறகு நீரஜ் என்ன சொன்னார்?

நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்

பட மூலாதாரம், Getty Images

தங்கம் பதக்கத்தை வென்ற பின்னர் பேசிய நீரஜ் சோப்ரா, “என்னால் அதிக தூரம் ஈட்டி எறிய முடியும் என்று நினைத்தேன். முதல் சுற்றில் சில உத்தி ரீதியான பிரச்னையால் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அது மோசமாக அமைந்துவிட்டது. அது நடக்கவே செய்யும். ஆனால், இன்னும் அதிகமாக நான் முயற்சித்தேன். என்னுடைய காயம் குறித்தும் சிந்தித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருந்தது. என்னுடைய செயல் திறன் 100 சதவீத அளவில் இல்லை. நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் சிறப்பாக உணர மாட்டேன். உடல் தகுதிக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்.” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக நள்ளிரவிலும் கண் விழித்திருந்த இந்தியர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நான் வென்ற இந்த தங்கப்பதக்கம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உரியது. ஒலிம்பிக்கில் சாம்பியனான நான் தற்போது உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறேன். இந்தியர்கள் எதையும் சாதிக்க முடியும்.” என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *