லாட்டரி அதிபர் மார்ட்டின்: தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய இவர் யார்?

லாட்டரி அதிபர் மார்ட்டின்: தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய இவர் யார்?

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

பட மூலாதாரம், martinfoundation.com

படக்குறிப்பு,

சாண்டியாகோ மார்ட்டின்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, ‘லாட்டரி கிங்’ என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள், நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது. அவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தத் தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 14-ஆம் தேதி) தனது இணையதளத்தில் வெளியிட்டது.

அதில் இருந்த தரவுகளின்படி, அதிகபட்ச தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் எனத் தெரியவந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

2021-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த நிறுவனம் 195 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டு முறை ரூ.210 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களையும் வாங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.63 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது.

பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 1991-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதன் பதிவு அலுவலகம் இருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின்

சாண்டியாகோ மார்ட்டின் ‘லாட்டரி கிங்’ ஆனது எப்படி?

சாண்டியாகோ மார்ட்டினின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை.

மார்ட்டினின் பெற்றோர் மியான்மரில் வசித்தவர்கள். மியான்மர் நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியாக அவரது வாழ்க்கை துவங்கியது. மியான்மரில் இருந்து நாடு திரும்பிய இவரது குடும்பம், கோயம்புத்தூரில் குடியேறியது. 13 வயதில் ஒரு தேநீர் கடையில் லாட்டரி சீட்டுகளை விற்க ஆரம்பித்த மார்ட்டின், விரைவிலேயே தனக்கென தனியாக ஒரு நெட்வர்க்கை உருவாக்கினார்.

1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மார்ட்டின் கர்நாடகா என்ற நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநிலத்திலும் மார்ட்டின் சிக்கிம் லாட்டரி நிறுவனத்தின் மூலம் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மாட்டின். இது தவிர மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிராவிலும் லாட்டரி விற்பனையில் இவரது நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.

இந்தக் கட்டத்தில்தான் ‘லாட்டரி கிங்’ என்ற பெயர் இவருக்கு வந்து சேர்ந்தது. 260-க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள், 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என ஒரு பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் மார்ட்டின்.

கடந்த 1990-களில் இவரது நிறுவனத்தின் இரு நம்பர் லாட்டரி, கோயம்புத்தூரில் கொடி கட்டிப் பறந்தது. லாட்டரி மோகம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்த நிலையில் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லாட்டரியைத் தடைசெய்தது.

இருந்தாலும் பிற மாநிலங்களில் இவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரச்சனையின்றி தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் லாட்டரி மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொழுதுபோக்கு, ஜவுளி, மருத்துவம், கல்வி, மென்பொருள், விவசாயம், கட்டுமானப் பொருட்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்தது இவரது நிறுவனம்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்
படக்குறிப்பு,

தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது

மார்ட்டினின் அரசியல் நெருக்கம்

பல மாநிலங்களிலும் பல அரசியல் தலைவர்களுடன் பெரும் நெருக்கம் இவருக்கு இருந்தது.

கடந்த 2007 – 2008-ஆம் ஆண்டில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான தேசாபிமானிக்கு மார்ட்டின் ரூ.2 கோடி நன்கொடை அளித்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, அந்தப் பணத்தை கட்சி திருப்பி அளித்ததோடு, தேசாபிமானியின் பொது மேலாளர் இ.பி. ஜெயரஞ்சன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

2011-இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை அடிப்படையாக வைத்து கதை – வசனம் எழுதிய ‘இளைஞன்’ படத்தை மார்ட்டினின் மார்ட்டின் புரொடக்ஷன்ஸ் தயாரித்தபோது, அது பற்றியும் சர்ச்சை எழுந்தது.

2011-இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நில அபகரிப்பு வழக்கில் மார்ட்டினை கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில் அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சுமார் 7 மாதங்கள் சிறையில் இருந்த மார்ட்டின், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

இந்தத் தருணத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்த வடிவேல் என்பவரும் சென்னையைச் சேர்ந்த செல்வம் என்ற ஹல்வா செல்வமும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தராவிட்டால், வேறு மாநிலங்களில் இருந்து லாட்டரியைக் கடத்திவந்து, தமிழ்நாட்டில் மார்ட்டினின் பெயரில் விற்கப்போவதாகக் கூறுவதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் காவல் துறையில் புகார் அளித்தார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்

பட மூலாதாரம், martinfoundation.com

படக்குறிப்பு,

மார்டினின் மனைவி லீமா ரோஸ் மார்டின்

லீமா ரோஸ் மார்ட்டின் கைது

2013-ஆம் ஆண்டில் கணக்கில் வராத பணத்தை, சட்டபூர்வமாக்குவதற்காக போலித் பத்திரங்களைத் தயார் செய்த குற்றச்சாட்டில் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கைதுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகு, பாரி வேந்தரின் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்தார் லீமா ரோஸ். 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோதி கோயம்புத்தூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது, அந்த மேடையில் லீமா ரோஸ் மார்ட்டினும் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லீமா ரோஸ் தற்போதுவரை இந்திய ஜனநாயகக் கட்சியில்தான் இருந்து வருகிறார்.

சாண்டியாகோ மார்ட்டின் – லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதிக்கு டெய்ஸி என்ற மகளும் சார்லஸ் ஜோஸ், டைஸன் ஆகிய மகன்களும் இருக்கின்றனர். 2015ஆம் ஆண்டில் சார்லஸ் ஜோஸ் பா.ஜ.கவில் இணைந்ததாக ஒரு செய்தி புகைப்படங்களுடன் பரவியது. அந்தச் செய்தியை இரு தரப்பும் உறுதிசெய்யவில்லை.

மார்ட்டினுக்கு எதிரான காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள்

சாண்டியாகோ மார்ட்டின் பல முறை காவல்துறை நடவடிக்கைகளுக்கும் மத்தியண புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்கும் உள்ளாகியிருக்கிறார்.

2015-ஆம் ஆண்டில் வருமான வரித்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த மார்ட்டினின் இடங்களில் சோதனை நடத்தியது.

2016-இல் பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பாக 2018-இல் மத்தியப் புலனாய்வுத் துறை மார்ட்டினின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 3-ஆம் தேதியன்று வெள்ளியங்காடு அருகே பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் சித்ரவதை காரணமாக தன் தந்தை மரணமடைந்ததாக அவரது மகன் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் அந்தத் தருணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.900 கோடி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத் துறை 2023-ஆம் ஆண்டு மே 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், சென்னையிலும் கோவையிலும் உள்ள பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை அடுத்து சுமார் ரூ. 457 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற 15 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

விற்கப்படாத லாட்டரி சீட்டுகளை தக்கவைத்துக்கொண்டு, அவற்றுக்கு பரிசு விழுந்ததாகக் காட்டுவது, விற்கப்படாத லாட்டரிகளை விற்றதாகக் காட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *