பட மூலாதாரம், Getty Images
டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் இருவரும் அதிரடியாக சதம் அடித்து, வலுவான ஸ்கோரை நோக்கி ஆஸ்திரேலிய அணியை நகர்த்தியுள்ளனர்.
வார்னர், மார்ஷ் அதிரடியைச் சமாளிக்க முடியாமல், இருவரின் பேட்டிங்கிற்கும் கடிவாளம் போட முடியாமல், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துக்கொண்டே பந்துவீசினார்கள் என்றால் அது மிகையல்ல.
அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 39 பந்துகளில் அரைசதத்தையும், 85 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். அதேபோன்று மார்ஷ் 40 பந்துகளில் அரைசதத்தையும், 100 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து பாகிஸ்தானை பிழிந்தெடுத்துவிட்டனர்.
பாபர் ஆசம் இப்படி முடிவெடுக்கலாமா?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என வர்ணிக்கப்படுவது உண்டு.
வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் என்னதான் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும், பந்து ஸ்விங் ஆகாமல், நேராக பேட்டுக்கே வரும். பேட்டர்களுக்கு அடித்து ஆடுவதற்கு சிரமமில்லாத ஆடுகளம் பெங்களூரு சின்னசாமி மைதானம்.
இப்படிப்பட்ட ஆடுகளத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் டாஸ் வென்று ஏன் முதலில் பேட் செய்யாமல், பந்துவீச்சைத் தேர்வு செய்தார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. முதலில் பேட் செய்யாமல் சேஸிங் செய்யலாம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் எடுத்த முடிவு தற்கொலைக்குச் சமமானது.
சேஸிங் சாத்தியமா?
பட மூலாதாரம், Getty Images
இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் சேஸிங்கில் பாகிஸ்தான் எப்படி செயல்பட்டுள்ளது என்பதைத் தெரியாமல், பேட்டர்கள் கடைசி நேரத்தில் நெருக்கடியைத் தாங்கிக்கொண்டு பேட் செய்வார்களா எனத் தெரியாமல் சேஸிங் செய்ய முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சைச் சமாளித்து, பாகிஸ்தான் அணியால் 368 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்துவிட முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது.
முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்ததே, இதுபோன்ற ஆடுகளத்தில் வெற்றியைத் தட்டில் வைத்து பாகிஸ்தான் தாரை வார்த்ததைப் போன்றது.
பேட்டிங் பயிற்சி
இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், மார்ஷ் இருவரும் ஃபார்மின்றி தவித்து வந்தனர். பெரிதாக எந்தப் போட்டியிலும் ஸ்கோர் செய்ய முடியாமல் தடுமாறினர். இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் பல்லைக் காட்டியது.
பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணியினர் ஃபார்மை தொலைத்துவிட்டனர் என்ற விமர்சனத்துக்கு வார்னர், மார்ஷ் இருவரும் பதிலடி கொடுத்துள்ளனர்.
அவர்கள் பதிலடி கொடுத்தனர் என்பதைவிட, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் பேட்டிங் பயிற்சி அளித்தனர் என்றுதான் கூற வேண்டும்.
வார்னரும், மார்ஷும் தொடக்கத்தில் இருந்தே ஓவருக்கு பவுண்டர், சிக்ஸரை விளாசித் தள்ளினர். ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் தொடக்கத்தில் இருந்தே ராக்கெட் வேகத்தில் புறப்பட்டது. பவர்ப்ளே ஓவரில் 83 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தது.
வார்னருக்கு கேட்ச் வாய்ப்பு “மிஸ்ஸிங்”
பட மூலாதாரம், Getty Images
டேவிட் வார்னர் 10 ரன்கள் சேர்த்திருந்தபோது, அஃப்ரிடி பந்துவீச்சில் அடித்த ஷாட்டை உசாமா மிர் கேட்ச் பிடிக்காமல் கோட்டைவிட்டார்.
வார்னர் போன்ற ஆபத்தான பேட்டர்களுக்கு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டால் என்ன ஆகும் என்பதை பாகிஸ்தான் அணி பின்னர் உணர்ந்தது.
ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்
கிரிக்கெட் உலகில் அதிவேக வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சை மார்ஷ் உருட்டி எடுத்துவிட்டார்.
ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்களை குவித்து பிழிந்துவிட்டார். 4 ஓவர்களை வீசிய ராஃப் 59 ரன்களை வாரி வழங்கினார். ஓவருக்கு 15 ரன்ரேட் என்பது கொடுமை.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் யார் பந்து வீசினாலும் மார்ஷ், வார்னர் இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக துவம்சம் செய்தனர்.
ஆஸ்திரேலிய அணி 12.3 ஓவர்களில் 100 ரன்களையும், 20.2 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 29.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை எட்டியது.
பாகிஸ்தானுக்கு வார்னர் கொடுத்த தண்டனை
பட மூலாதாரம், Getty Images
அதிரடியாக பேட் செய்த வார்னர் 85 பந்துகளில் தனது 18வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக வார்னர் தொடர்ச்சியாக அடிக்கும் 4வது சதம் இது. வார்னருக்கு 10 ரன்னில் கேட்ச் பிடிக்கத் தவறியதற்காக பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுத்ததைப் போன்று இது இருந்தது.
வரலாற்றுத் தொடக்கம்
மார்ஷ், வார்னர் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்தனர்.
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் அதிகபட்சம் 2011 உலகக்கோப்பையில் கனடா அணிக்கு எதிராகச் சேர்த்த 183 ரன்கள்தான். இதை இருவரும் முறியடித்து புதிய வரலாறு படைத்தனர்.
மார்ஷ் பிறந்தநாள் பரிசளித்த பாகிஸ்தான்
பட மூலாதாரம், Getty Images
மார்ஷுக்கு இன்று 32வது பிறந்தநாள். தனது பிறந்தநாளில் மார்ஷ் மறக்க முடியாத போட்டியாக மாற்றி அமைத்து தனது 2வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.
மார்ஷ் 10 ரன்களில் இருந்தபோது, கிடைத்த கேட்ச் வாய்ப்பை உஸ்மா மிர் தவறவிட்டார். இரு முக்கிய கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டதற்கு இரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் சதம் அடிக்க வைத்துப் பெரிய விலை கொடுத்தனர்.
அதிலும் பிறந்தநாளான இன்று மார்ஷுக்கு பரிசாக ஒரு கேட்ச் வாய்ப்பையும் பாகிஸ்தான் வீரர் தவறவிட்டு சதம் அடிக்க உதவினார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். அஃப்ரிடி வீசிய 34வது ஓவரில் உசாமா மிர்ரிடம் கேட்ச் கொடுத்து 121 ரன்னில் மார்ஷ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 சிக்ஸர், 10 பவுண்டரி அடங்கும்.
விக்கெட் சரிவு
பட மூலாதாரம், Getty Images
அடுத்து வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்திலேயே மிட்ஆன் திசையில் பாபர் ஆசமிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்-அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் நிலைக்கவில்லை. 7 ரன்கள் சேர்த்த ஸ்மித், உசாமி மிர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
விக்கெட் இழப்பின்றி 259 ரன்கள் வரை பயணித்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.
டேவிட் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்கள் அடித்து பிறகு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரின் கணக்கில் 9 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
மார்ஷ், வார்னர் இருவரும் சேர்ந்து இதுவரை 18 சிக்ஸர்கள் அதாவது 102 ரன்களையும், 24 பவுண்டரிகள் அதாவது 96 ரன்களையும் என மொத்தம் 198 ரன்களை பவுண்டரி, சிக்ஸர் வாயிலாகவே சேர்த்தனர்.
தற்போது 368 என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்யவுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
