சூடோபெட்ரின்: மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படும் இந்தப் பொருள் தமிழ்நாட்டுக்குள் எப்படி வருகிறது?

சூடோபெட்ரின்: மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படும் இந்தப் பொருள் தமிழ்நாட்டுக்குள் எப்படி வருகிறது?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம், HANDOUT

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்ட, அதனை மறுத்திருக்கிறது தமிழக காவல்துறை. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பியிருக்கும் நிலையில், கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகக் கூறுகிறது தமிழக அரசு. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மேற்கு தில்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சூடோபெட்ரின் (Pseudoephedrine) என்ற தடைசெய்யப்பட்ட பொருள் 50 கிலோ அளவுக்குக் கைப்பற்றப்பட்டது.

மெத்தாஃபெட்டமைன் என்ற போதைப் பொருளைத் தயாரிக்க இந்த சூடோபெட்ரின் உதவும் என்பதால், இவ்வளவு பெரிய அளவில் அந்தப் பொருள் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம், @BJP4TAMILNADU/X

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து தேங்காய்த் தூள் என அனுப்பப்பட்ட பொட்டலங்களில் சூடோபெட்ரின் இருந்ததாக இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. இதையடுத்துத்தான் சம்பந்தப்பட்ட கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு 45 முறை இதுபோல வெளிநாடுகளுக்கு இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதன் பின்னணியில் ஜாபர் சாதிக் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடுவதற்கான பணிகள் துவங்கின. சென்னையில் இருந்த அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸும் விடுக்கப்பட்டது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

ஜாபர் சாதிக் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த நிலையில், அவரைக் கட்சியைவிட்டு நீக்குவதாக தி.மு.க. அறிவித்தது. அவருடைய சகோதாரர் அ. முகமது சலீம் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அவர் வி.சிகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னமும் ஜாபர் சாதிக்கும் முகமது சலீமும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உடனடியாக கையில் எடுத்துக்கொண்டன. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதனை முன்வைத்து ஆளும் கட்சி மீது கடுமையான தாக்குதலை நடத்தினர்.

எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அ.தி.மு.க. நடத்தியது.

இதன் உச்சகட்டமாக மார்ச் 4ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். “ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சார்பில், போதைப் பொருட்கள் தங்குதடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கிவருகிறது என்பது என் மனதை உருக்கும் கவலை” என்று குறிப்பிட்டார் மோதி.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

தமிழ்நாடு காவல்துறை கூறுவது என்ன?

பிரதமரின் பேச்சுக்கு பதில் சொல்லும் வகையில், கடந்த ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் எவ்வளவு போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் பிடிபட்டன என்பது குறித்த விவரத்தை தமிழக காவல்துறை வெளியிட்டது. காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 470 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் சேர்த்து 1914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தபெட்டமைன், வலி நிவாரணியான டெபென்டடால் 100 எம்ஜி மாத்திரைகள் 70, 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2200 டைடால் மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் இரண்டு இடங்களில் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையினரால் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதும் நடந்திருக்கிறது.

மார்ச் 1ஆம் தேதி அதிகாலை மதுரைக்கு வந்த சேர்ந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து 15 கிலோ பவுடர், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளுடன் பிடிபட்ட நபர், சென்னையைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டார்.

அவர் தந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் இருந்து 3 பொட்டலங்களில் ஆறு கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைனை கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை கூறியது. மொத்தமாக மதுரையிலும் சென்னையில் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 36 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைனின் சர்வதேச மதிப்பு 180 கோடி ரூபாய் இருக்கும், என்றும் வருவாய் புலனாய்வுத் துறை குறிப்பிட்டது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம், Getty Images

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப் பொருள்

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, மார்ச் ஐந்தாம் தேதி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகை வழிமறித்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சாக்குப் பைகளைக் கைப்பற்றியதாகவும் அந்த சாக்குப் பைகளில் இருந்து 99 கிலோ எடையுடைய 111 பாக்கெட்களை எடுத்ததாகவும் தெரிவித்தனர்.

அந்தப் பாக்கெட்டுகளில் இருந்த பழுப்பு நிற பிசுபிசுப்பான பொருளை ஆய்வு செய்ததில், அது தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான ஹஷீஷ் என்பது தெரியவந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. படகிலிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்களுக்கு இந்தப் பொருளை பாம்பனில் இருந்த ஒருவர்தான் தந்து, இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் தரச் சொன்னதாக கூறியதையடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து நடந்த விசாரணைகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட இந்த போதைப் பொருள் இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக இங்கே கொண்டுவரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

போதைப் பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகரித்துள்ளதா, இல்லையா என்பதைச் சொல்லும் வகையில் நடப்பு வருடத்திற்கான புள்ளிவிவரங்கள் ஏதும் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. 2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தான் மிக சமீபத்திய புள்ளிவிவரம்.

மதுவிலக்குத் துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி பார்த்தால், 2022ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. 28,383 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 63,848 மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. 98 கிலோ இதர போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன.

2022ஆம் ஆண்டில், கஞ்சாவைத் தவிர்த்த பிற பொருட்கள் மிகக் குறைவாகவே பிடிபட்டுள்ளன. ஓபியம் அடிப்படையிலான ஹெராயின் 21 கிலோ 360 கிராமும், கொக்கையின் 104 கிராமும் சூடோஎஃபிட்ரின் 27 கிலோவும் எல்.எஸ்.டி. 1 கிலோ 640 கிராமும் மெதாபெட்டமைன் 18 கிலோ 111 கிராமும் பிடிபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறதா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

“சூடோஎஃபிட்ரின் கடத்தப்படுவது பல காலமாக நடந்துவருகிறது. சூடோஎஃபிட்ரின் என்பது ஒரு மருந்துப் பொருள். அது இருமல் மருந்துகளில் சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தனி மனிதர்கள் யாரும் தயாரிக்க முடியாது. மருந்து நிறுவனங்கள்தான் தயாரிக்க முடியும். இந்திய அளவில் எந்தெந்த மருந்து நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.”

“அங்கிருந்து கசியும் மருந்துகள்தான் இப்படி கடத்தப்படுகின்றன. இந்த சூடோஎஃபிட்ரினை வைத்துத்தான் மெத்தபெட்டமைன் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சாதான் அதிகம் பிடிபடும் போதைப் பொருளாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதீதமான அளவில் திடீர் அதிகரிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.

ஆனால், கடந்த சில நாட்களில் போதைப் பொருள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் திடீரென போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி உடனடியாக சேதத் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.

அரசு கூறுவது என்ன?

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாக விளக்கமளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குஜராத்தில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டில் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் விளைகிறது. அந்த மாநில டிஜிபியுடன் பேசி அதனைத் தடுக்க முயற்சித்து வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சரே கஞ்சா வியாபாரத்திற்கு ஆதரவாக இருந்தார். இப்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. “

“2019இல் 11,418 கிலோ கஞ்சாவும் 2020இல் 15,144 கிலோ கஞ்சாவும் 2021இல் 20,431 கிலோ கஞ்சாவும் 2022இல் 28,383 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பலூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள்” என்று குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, அவர்கள் பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை வாசித்தார்.

மேலும், குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் சில குறிப்பிட்ட ரக மருந்துகளை வாங்கி போதைப் பொருளாக பயன்படுத்துவதைத் தடுக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, X, H, H1 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் மருந்துகளை விற்கக்கூடிய மருந்துக் கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு சிசிடிவிகளை பொருத்த வேண்டுமெனக் கூறியுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *