பட மூலாதாரம், FACEBOOK
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அடிக்கடி செய்திகளில் வருகிறது. சமீபகாலமாக, திருமலை நடைபாதையில் சிறுத்தை தாக்குதலுக்கு திருப்பதி தேவஸ்தானம் தலைப்புச் செய்திகளில் வந்தது.
இச்சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் எடுத்த நடவடிக்கைகள் கடும் விசமர்சனத்திற்கு உள்ளானது.
தற்போது, திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஊழியர்களை வழங்கும் ஸ்ரீ லட்சுமி ஸ்ரீனிவாசா மேன் பவர் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
திருப்பதி கோயிலில் லட்டு தயாரிப்பதற்கான ஆட்கள் வேண்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமலை பிரசாதம் தயாரிப்பதில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவது நியாயமில்லை என்று இடதுசாரித் தலைவர்கள் வீடியோ வெளியிட்டதால் இப்பிரச்சனை பெரிதாகியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு திருப்பதி காேயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பதில் என்ன? வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
பட மூலாதாரம், TTD
“தகுதிகளில் சாதியும் ஒன்று”
சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பிரசாதம் தயாரிக்கும் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆறு பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் வேலைகளை அறிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், பிரசாதம் தயாரிப்பதில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது தகுதியாக, விண்ணப்பதாரர்கள் ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியது. தற்போது இது சர்ச்சையாகியுள்ளது.
பட மூலாதாரம், UGC
இது சாதி பாகுபாடு: சிஐடியு
திருப்பதி சிஐடியு மாவட்ட பொதுச்செயலாளர் கண்டரபு முரளி, திருமலையில் பிரசாதம் தயாரிப்பதில் சாதி பாகுபாடு இருப்பது பொருத்தமற்றது என்றும், அவர்களின் அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருமலை கோவிலில் உள்ள பொதுவில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஆட்சேபனைக்குரியது என்றார்.
“ராமானுஜாச்சாரியார் திருமலை கோயில் அமைப்பை சாதிக்கு அப்பால் வழிநடத்தினார். இப்போது, அது போல் அல்லாமல், திருப்பதி தேவ்ஸ்தானம் குறிப்பிட்ட சாதியினருக்கு பிரசாதம் தயாரிக்கும் பணி வழங்க வேண்டும் என்று அறிவிப்பது நியாயமானது அல்ல,” என்றார் அவர்.
தயாரித்த பிரசாதத்தை வெளியே எடுத்து வருவது தலித்துகள் தான். ஆனால், பிரசாதம் தயாரிப்பதில் மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன் என்றும் கண்டரபு முரளி கேள்வி எழுப்பினார்.
“ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்கள் பிரசாதம் தயாரித்தால், மற்ற பிராமணர்கள் அதனை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் தலித்துகள் தான் கனரக பிரசாதத் தட்டுகளை கோயில் வாசலில் இருந்து வாகனங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பிரசாதம் எடுத்துச் செல்வதற்கு மட்டும் தலித்துகளை பயன்படுத்தும்போது, லட்டு தயாரிப்பதற்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறோம். இந்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட மூலாதாரம், UGC
ஆகம சாஸ்திரத்தின்படி அறிவிப்பு: தலைமை அர்ச்சகர்
ஆனால் இந்த அறிவிப்பு திருப்பதி தேவஸ்தானம் பின்பற்றும் ஆகமசாஸ்திர விதிகளின்படி உள்ளது என்று கோவிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதுலு பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த சர்ச்சை குறித்து பிபிசியிடம் பேசிய அவர், “கோயில் சமையலறையில் பிரசாதம் தயாரிப்பது ஸ்ரீ வைஷ்ணவர்கள். பிரசாதம் தயாரிப்பது வைகானசா சாதியைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இல்லாதபோது, அல்லது கிடைக்காதபோது ஸ்ரீவைஷ்ணவர்களை அந்தப்பணியில் அமர்த்தலாம் என்கிறது ஆகம சாஸ்திரம். சாஸ்திரப்படி ஸ்ரீவைஷ்ணவர்கள் லட்டு செய்யலாம்.”
“சின்ன சின்ன கோவில்கள் இருக்கும் போது, ஒரே ஒரு அர்ச்சகர் இருந்தால், அவரே பூஜை, பிரசாதம் எல்லாம் செய்வார். கிராமங்களில் கூட, பூசாரி தனது வீட்டில் பிரசாதம் செய்து அதை கடவுளுக்கு வழங்குகிறார். பெரிய கோயில்கள் இருக்கும்போது அதற்கு மாற்றாக ஸ்ரீ வைஷ்ணவர்களை நியமிக்கலாம் என்று ஆகம சாஸ்திரம் சொல்கிறது,” என்றார் அவர்.
பட மூலாதாரம், TTD
‘வைகானசாவிற்கு பிறகு ஸ்ரீ வைஷ்ணவர்கள்’
ஆகம சாஸ்திரப்படி கோயிலில் முதலில் தங்குவது வைகானசா சாதியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கோயில்களில் அர்ச்சனை, பூஜைகள் செய்வது வழக்கமாகி வருகிறது என்றும் வேணுகோபால தீட்சிதுலு கூறினார்.
தற்போது அவர்கள் கிடைக்காததால் பிரசாதம் தயாரிப்பதற்கு மாற்றாக ஸ்ரீ வைஷ்ணவர்்கள் எடுக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
‘‘அந்தக் காலத்தில் கோயில்களில் அனைத்தையும் அர்ச்சகர்கள்தான் செய்தார்கள். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் உதவியாளர்களாக அழைக்கப்பட்டு அவர்களால் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டன.
அர்ச்சனைகள் மற்றும் கைங்கரியங்கள் கூட வைகானசார்களால் செய்யப்படுகின்றன. வைகானசர்களும் பிரசாதம் தயாரிக்கலாம். ஆனால் வைகானசா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்காததால், பிரசாதம் தயாரிப்பதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை ஈடுபடுத்துவது வழக்கம்.
இவை நமது சாஸ்திரம் மற்றும் மரபுப்படி பின்பற்றுகிறோம். ஒவ்வொரு அமைப்பிலும் சில கோயில்களுக்கு சில சடங்குகள், நடைமுறைகள் மற்றும் மரபுகள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவோம்” என்றார் வேணுகோபால தீட்சிதுலு.
மேலும், தற்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் தான் பிரசாதம் தயாரித்து வருவதாகவும், அதனால் அந்த பாரம்பரியம் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், UGC
ஆரம்பத்தில் பிரசாதம் தயாரிக்க யாரும் இல்லை, அதனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அதைச் செய்ததாக வரலாற்று ஆய்வாளர் கோபி கிருஷ்ணா ரெட்டி கூறினார்.
எங்கிருந்து வந்ததுஇந்த வழக்கம்? – கோபி கிருஷ்ணா ரெட்டி
வரலாற்றாசிரியர்கள் மற்றொரு வாதத்தை முன்வைக்கின்றனர்.
திருப்பதியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோபி கிருஷ்ணா ரெட்டி கூறுகையில், “ஆரம்பத்தில் பிரசாதம் தயாரிக்க யாரும் இல்லை, அதனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் செய்ய தொடங்கினர். தொடக்கத்தில் இருந்தே எந்த சாதி செய்கிறார்கள், எந்த சாதி செய்யவில்லை என்று குறிப்பிடவில்லை. ஸ்ரீவைஷ்ணவர்களில் சிலர் முதலில் தோட்டத்திற்குள் நுழைந்தனர். பின்னர், லட்டு தயாரிப்பது உட்பட அனைத்து துறைகளிலும் நுழைந்தனர். படிப்படியாக அவர்களின் வலிமை அதிகரித்தது. ஆரம்பத்திலிருந்தே அனைத்தையும் செய்கிறோம் என்று சொல்கிறார்கள். தொடக்கத்தில், இதுபோன்ற விதிமுறைகள் எதுவும் இல்லை,” என்றார்.
அரசு உதவி பெறும் நிறுவனங்களில் அனைத்து சாதியினருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், பிற சாதியினர் இருந்தால் அரசு மானியம் தருவதாகவும் கோபி கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.
“ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்தனர். அது இப்போதும் இருக்கலாம். அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு, அரசு மானியம் வழங்குகிறது. அனைத்து வகையான மக்களையும் சேர்த்து வேலை வழங்க வேண்டும்.”
பட மூலாதாரம், TTD
“பிராமணர்கள் வந்தபிறகு எல்லாம் பிராமணர்களாக இருக்க வேண்டும், அதிகாரம் இருப்பதால் வேறு யாரும் நுழையக்கூடாது என்ற விதிகளைக் கொண்டு வந்தார்கள். இந்த வேலையை மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஒரு வழக்கப்படி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதை அவர்களே தான் செய்ய வேண்டும் என்ற ‘விதி’ எங்கே இருக்கிறது என்று யாரும் காட்டுவதில்லை” என்கிறார் கோபி கிருஷ்ணா ரெட்டி.
இது போன்ற அனைத்தும் வழக்கங்களும் நடைமுறையாக மாறிவிட்டதாகவும், அந்த பணிகளில் திருப்பதி தேவஸ்தானம் பிற சாதியினரை பணியமர்த்த வேண்டும் என்றும், சமீபத்திய அறிவிப்பபை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பாரம்பரியத்தை மதிக்க வேண்டும் என்றார்.
“தமிழ்நாட்டில் இது போன்ற கோவில்களில் வேலைகளுக்கு சாதி கிடையாது. மந்திரங்களைக் கற்றால் அர்ச்சகராகப் பணிபுரியலாம், அனைத்து மரபுகளையும் அறிந்தால் அர்ச்சகராகப் பணியாற்றலாம்,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
