
பட மூலாதாரம், Getty Images
2018ஆம் ஆண்டில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம் விவரிக்கிறது.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் உர்ஜித் படேல். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், அவர் ராஜினாமா செய்த பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோதுதான் இந்தியாவில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ஆளுநராக இணைந்த நிலையில், நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதற்கு இரு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார் உர்ஜித் படேல். இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், இந்தியாவின் நிதிக் கட்டமைப்பின் உச்சத்தில் இருந்தவர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை.
அந்தத் தருணத்தில் இந்தியாவின் நிதிச் செயலராக இருந்த சுபாஷ் சந்திர கார்க் அப்போது என்ன நடந்தது என்பதை தனது சமீபத்திய நூலான We Also Make Policy புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக்கிறார். ஹார்ப்பர் காலின்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த நூலில், உர்ஜித் படேலுக்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் வெடித்த மோதலையும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
மோதி – உர்ஜித் படேல் உறவு பகையானது எப்படி?
2018 மார்ச் – ஏப்ரல் காலகட்டத்தில் இந்திய அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு உர்ஜித் படேல் பல வகைகளில் முட்டுக்கட்டை போட்டார். முதலில் வங்கிகளே இந்த பத்திரங்களை வழங்கலாம் என்பதற்கு ஒப்புக் கொண்டவர், பிறகு ரிசர்வ் வங்கிதான் அதனை வழங்கும் என்றார். அதுவும் டிஜிட்டல் முறையில்தான் வழங்கப்படும் என்றார். இதன் மூலம் அந்தப் பணத்தை வழங்குபவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால் அந்தத் திட்டம் துவங்கப்படாமலேயே இருந்தது.
பண வீக்கத்தைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. பிராம்ப்ட் கரெக்டிவ் ஆக்ஷன் திட்டத்தின் கீழ் 8 பொதுத் துறை வங்கிகளைக் கொண்டுவந்ததால், அவற்றால் கடன் கொடுக்க முடியவில்லை. ரூபாய் – டாலர் மதிப்பை சரியாமல் வைத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி சந்தையில் டாலர்களையும் விற்றுவந்தது.
இதையெல்லாம் மத்திய அரசு சரிசெய்ய நினைத்தது. பணப் புழக்கத்தை அதிகரிப்பதோடு, டாலர் கையிருப்பையும் உயர்த்த விரும்பியது. ஆனால், அரசு எவ்வளவுக்கெவ்வளவு இவை குறித்தெல்லாம் விவாதிக்க விரும்பியதோ, அந்த அளவுக்கு விலகிச் சென்றார் உர்ஜித் படேல்.
இந்த நிலையில்தான், பொருளாதாரம் குறித்து விவாதிக்க கூட்டம் ஒன்றை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோதி. செப்டம்பர் 14ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இரண்டு துணை ஆளுநர்கள், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமரின் செயலர், நிதிச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிதி நிலைமை மிகச் சிக்கலானதாக மாறியிருந்தது. கச்சா எண்ணெயின் விலை 80 டாலர்களைத் தொட்டிருந்தது. ரூபாயின் மதிப்பு வீழ்ந்துவந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பாண்டுகளை விற்றுவந்தனர். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துகொண்டே வந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் உர்ஜித் படேல் சில ஆலோசனைகளை முன்வைத்தார். அதில் நான்கு யோசனைகள் குறிப்பானவை. 1. நீண்ட கால முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்திற்கான வரியை ரத்து செய்வது 2. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க பொதுத்துறை பங்கு விற்பனையை அதிகரிப்பது 3. ஆசிய கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி, நியு டெவலப்மெண்ட் வங்கி ஆகியவற்றை அணுகி இந்திய பங்குகளில் முதலீடு செய்யும்படி கோருவது, 4. பல நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டியிருக்கும் தொகையைக் கொடுப்பது.
இதில் எல்லா யோசனைகளுமே அரசு செய்ய வேண்டியதாக இருந்தது. ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என எதுவுமே இல்லை. இதைக் கேட்டு விரக்தியடைந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இவையெல்லாம் நடக்கக் கூடிய காரியங்களே இல்லை என்றார். பிறகு, இந்த ஆலோசனைகளில் உள்ள சிக்கல்களை நிதித் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் பிரதமர் மோதியின் நேரடியான பேச்சு
இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை தனது நூலின் “Governor Patel Receives Some Plain – Speak from the PM” பகுதியில் விளக்குகிறார் சுபாஷ் சந்திர கார்க்.
“பொருளாதார நிலைமை மோசமடைந்து வந்ததோடு, அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் உருவாகிவந்த உரசலும் பிரதமர் மோதியின் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. டாக்டர் உர்ஜித் படேலை ஆளுநராகத் தேர்வுசெய்தது அவர்தான். தொடர்ந்து அவரை பாதுகாத்தும் வந்தார். ரிசர்வ் வங்கிக்கோ, உர்ஜித் படேலுக்கோ அசௌகர்யத்தைக் கொடுக்கக் கூடிய எந்த ஒரு திட்டமும் பிரதமர் அலுவலகத்தால் முளையிலேயே கிள்ளியெறியப்படும்.
உர்ஜித் படேல் தான் நினைப்பதை விளக்குவதில் அவ்வளவு திறமையானவர் அல்ல. 2018 ஜூலையிலேயே என்னுடன் பேசுவதை அவர் நிறுத்திவிட்டார். நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடனும் (அவருக்கு உடல் நலமில்லாத காலகட்டத்தில்) அந்தப் பொறுப்பில் இருந்த பியூஷ் கோயலுடனும் அவர் பேசுவதும் மிகக் குறைவாக இருந்தது. பி.கே. மிஸ்ரா மூலமாக பிரதமர் அலுவலகத்துடன் மட்டும் தொடர்பில் இருந்தார். தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பல்டி அடித்த பிறகு பி.கே. மிஸ்ராவுடனான பேச்சுவார்த்தைகளிலும் தடை ஏற்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக உருவாகிவந்த இந்தச் சூழல் பிரதமருக்குப் பிடிக்கவில்லை. அவரது பொறுமை முழுமையாக சோதிக்கப்பட்டுவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
“பணக் குவியலின் மீது உட்கார்ந்திருக்கும் பாம்பு”
ஆளுநர் உர்ஜித் படேல் சொல்வதை கவனமாகவும் மிகப் பொறுமையாகவும் கேட்டார் பிரதமர் மோதி. இரண்டு மணி நேரமாக முன்வைக்கப்பட்ட விளக்கங்கள், விவாதங்கள் ஆகியவற்றுக்குப் பிறகும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. ரிசர்வ் வங்கி நிலைமையைப் புரிந்துகொள்ளவில்லை என பிரதமர் நினைத்தார். பொருளாதார நிலையைச் சரிசெய்யவும் அரசுடன் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கவும் அர்த்தமுள்ள எதையும் செய்ய விரும்பவில்லை என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.
இந்தத் தருணத்தில் பிரதமர் தனது பொறுமையை முழுமையாக இழந்தார். நேரடியாக உர்ஜித்துடன் பேச ஆரம்பித்தார். அவரை இவ்வளவு கோபமாக நான் பார்த்தது அதுவே முதல் முறை. வாராக் கடன் பற்றிய ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டையும் தீர்வுகளைக் காண்பதில் யதார்த்த நிலைக்கு மாறாகவும் விட்டுக்கொடுக்காத போக்குடன் இருப்பதையும் கடுமையாகத் தாக்கினார். யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத, நிலைபெற்றுவிட்ட நீண்ட கால முதலீட்டு லாபம் மீதான வரியை திரும்பப் பெற வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததற்காகவும் நிதியாண்டின் மத்தியில் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் எனக் கோரியதற்காகவும் ஆளுநர் உர்ஜித் படேலைக் கடுமையாக விமர்சித்தார். ரிசர்வ் வங்கியில் சேர்ந்திருக்கும் பணத்தை எதற்கும் பயன்படாமல் வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி பணக் குவியல் மீது உட்கார்ந்திருக்கும் பாம்போடு உர்ஜித் பட்டேலை அவர் ஒப்பிட்டார்.” என்கிறது இந்தப் புத்தகம்.
சுபாஷ் சந்திர கார்க் கூறுவதன்படி பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியைக் கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதன்படி, 1934ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7ஐ பயன்படுத்த முடிவு செய்திருந்தது. அந்தச் சட்டத்தின்படி, பொருளாதாரத்தின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அளிக்க இந்தச் சட்டம் வழிவகுத்தது.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் சிலரையும் அரசு மாற்றியது. ரிசர்வ் வங்கி வாரியத்தில் உர்ஜித் படேலுக்கு ஆதரவாக இருந்த அறிவுசார் சக்தியான நிசிகேத் மோர் ராஜினாமா செய்யும்படி சொல்லப்பட்டார். அரசுக்கும் கட்சிக்கும் நெருக்கமான எஸ். குருமூர்த்தி உள்ளே கொண்டுவரப்பட்டார். வேறு சில இயக்குநர்களும் மாற்றப்பட்டனர். இது வாரியத்தில் ஒரு சமநிலையைக் கொண்டுவந்தது.
மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள், பிரதமருடனான கூட்டம் ஆகியவற்றுக்குப் பிறகு உர்ஜித் படேல் தனது போக்குகளை மாற்றிக் கொள்வார் என, தான் நம்பியதாக சொல்கிறார் சுபாஷ் சந்திர கார்க். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
திடீரென டிசம்பர் 10ஆம் தேதி தனது பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். இது நிகழ்வு குறித்து தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் சுபாஷ் சந்திர கார்க்:
“வழக்கமில்லாத வகையில் தனது ராஜினாமாவைச் செய்தார் உர்ஜித் படேல். தனது ராஜினாமா கடிதத்தை ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் வெளியிட்டார் அவர். விதிகளின்படியும் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படியும் ராஜினாமா கடிதத்தை அவர் அரசுக்கு அனுப்பவில்லை. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட பிறகு, நேரே வீட்டிற்குச் சென்றுவிட்டார். சொந்த காரணங்களால் பதவி விலகுவதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். கடந்த பல ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியுடன் பல்வேறு பதவிகளில் தான் செயல்பட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்த அவர், வங்கியின் சில சாதனைகளை குறிப்பிட்டு, அதன் ஊழியர்கள், அதிகாரிகள், நிர்வாகம் ஆகியவற்றால்தான் இதைச் செய்ய முடிந்தது என்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள், சகாக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அவரது ராஜினாமா கடிதத்தில் அரசு, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோரைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாதது வித்தியாசமாகவே இருந்தது”.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுபாஷ் சந்திர கார்க் எழுதிய இந்த நூலில், இந்தியாவில் சமீப காலத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பதன் பின்னணித் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி, ஏ.டி.எம்மில் திடீரென ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, ஆறு விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டது, க்ரிப்டோ கரென்சி குறித்த சட்ட மசோதா, 2018, 2019ஆம் ஆண்டு பட்ஜெட்கள் உருவான விதம் போன்றவை குறித்து விரிவான தகவல்களை இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார் சுபாஷ் சந்திர கார்க்.
இந்தியாவின் நிதித் துறை செயலரான சுபாஷ் சந்திர கார்க், 2017 – 19 காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராகவும் செயல்பட்டவர். அவரது இந்த We Also Make Policy நூல், இந்தியாவின் உயர்மட்டத்தில் பொருளாதாரக் கொள்கைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பது குறித்த பல உள் தகவல்களை அளிக்கிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்