
நேச பிரபு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, நியூஸ் 7 தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர்மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர் முன்பே பாதுகாப்பு கேட்டும் காவல்துறை பாதுகாப்பு வழங்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றுபவர் நேச பிரபு (31). இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பகுதியில் செய்தியாளராக இருந்துவருகிறார்.
இந்நிலையில் ஜனவரி 24-ஆம் தேதி இரவு காமநாயக்கன்பாளையம் அருகே பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாள்களுடன் நேச பிரபுவை துரத்தியுள்ளனர். அச்சத்தில் அவர் பெட்ரோல் பங்கின் அலுவலகத்திற்குள் சென்ற நிலையில், மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து நேசபிரபுவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நேச பிரபு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் போலீஸார் நான்கு தனிப்படைகள் அமைத்து, செய்தியாளர் நேச பிரபுவை வெட்டியது யார் என விசாரித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்பே தகவல் தெரிவித்த நேசபிரபு
மர்ம நபர்கள் வெட்டுவதற்குச் சில நிமிடங்கள் முன்பு நேச பிரபு காமநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்பது போன்ற ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்தியாளர் நேச பிரபு தெரிவித்தும், போலீஸார் பாதுகாப்பு கொடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக புகாரும் எழுந்துள்ளது.
செய்தியாளருக்கு என்ன நடந்தது?
செய்தியாளர் நேச பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் இருப்பது என்ன என்பது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் செய்தியாளர்கள், “கடந்த சில நாட்களாக காமநாயக்கன்பாளையம் பகுதியில், அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் பைக்கில் நேச பிரபு வீட்டுக்கு அருகே அவர் குறித்து விசாரித்துள்ளனர். அவரது வீட்டை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்ததாகவும் நேசபிரபு அனைவரிடமும் தெரிவித்து வந்தார்,” என்றனர்.
“ஜனவரி 24-ஆம் தேதி (புதன்கிழமை,) சம்பவம் நடக்கும் முன்பே அவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்திருந்தார். அன்று மாலை, தன்னை மீண்டும் மர்ம நபர்கள் நோட்டமிடுவதை அறிந்த நேசபிரபு, அவர்களின் தகவல்களை போலீஸாருக்கு தெரிவிப்பதற்காக, வீட்டில் இருந்து புறப்பட்டு அருகிலிருந்த பெட்ரோல் பங்க் சென்றுள்ளார்.
“அங்கிருந்து நேச பிரபு, செல்போனில் காமநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் மர்ம நபர்கள் வந்த வாகனங்களின் தகவல்களை தெரிவித்துக் கொண்டிருந்தபோதே, கார்கள் மற்றும் பைக்குகளில் வந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் அவரை துரத்தியுள்ளனர். அப்போது, பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் உயிர் பிழைக்க தப்பிச்சென்றுள்ளார். அலுவலக கண்ணாடியை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அரிவாள்களில் அவரை கை மற்றும் கால்களில் பல முறை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்,” என்கின்றனர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள்.

நேச பிரபு
இருவர் கைது – போலீஸாரின் விளக்கம் என்ன?
இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்க பிபிசி தமிழ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதனை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முன்னதாக சம்பவம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்திருந்த காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், “சம்பவம் நடந்த பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, 4 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம். இன்னமும் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேசபிரபு அளித்த புகார் மீது, போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,” எனக்கூறியிருந்தார்.
தனிப்படை போலீஸார் இன்று மாலை, சம்பவத்தில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த பிரவீன் (27) மற்றும் திருப்பூரை சேர்ந்த சரவணன் (23) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரசு மீது கடும் கண்டனம்
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் மற்றும் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
“தமிழகத்தில் செய்தியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை. காவல்துறை செய்தியாளருக்கு போதிய பாதுகாப்பு கொடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது,” என, எதிர்கட்சித்தலைவரும் அ.தி.மு.க முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, ”தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வி,” எனக்கூறி இச்சம்பவத்துக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பா.ம.க தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
‘இது உளவுத்துறையின் தோல்வி’
செய்தியாளர் நேசபிரபு மீது நிகழத்தப்பட்டது தாக்குதல், அனைத்து செய்தியாளர்களுக்கும் மிரட்டல் விடுப்பதற்கான செயல் என்கிறார், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல்.
பிபிசி தமிழிடம் பேசிய தியாகச்செம்மல், “பல்லடம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே, அனுமதியற்ற பார்கள், தாபா என்ற பெயரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடத்தி வருகின்றன. தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் நேச பிரபு, தொடர்ச்சியாக சட்ட விரோத மது விற்பனை, மக்கள் பிரச்னைகள் குறித்து செய்தி சேகரித்து வந்தார். ஏற்கனவே அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்தன, இது குறித்து 6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தோம்,” என்றார்.
“செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல், மிரட்டல் வருவது சாதாரணம் தான். ஆனால், நேரடியாக அச்சுறுத்தலை சந்தித்த நேச பிரபு கடந்த சில நாட்களாகவே, காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுள்ளார். ஆனால், போலீஸார் பாதுகாப்பு கொடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். காவல்துறையின் உளவுத்துறை ‘ஃபெய்லியர்’, பணி செய்யாமல் அலட்சியமாக இருந்ததால் தான், மர்ம நபர்கள் நேசபிரபுவை தாக்கியுள்ளனர்,” என, குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் அவர்.
‘செய்தியாளர்களை மிரட்டுவதற்கான முயற்சி’
மேலும் தொடர்ந்த தியாகச்செம்மல், “வடமாவட்டங்களில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடப்பதை பார்த்திருப்போம். ஆனால், மேற்கு மாவட்டங்களில் குறிப்பாக, கோவை, திருப்பூரில் செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் என்பது இதுவே முதல் முறை,” என்றார்.
“நேச பிரபுவை வெட்டியவர்கள் குறிப்பாக அவரை கொலை செய்யக்கூடாது, மாறாக வாழ்நாள் முழுதும் அவர் செயல்படக்கூடாது என்ற நோக்கில் தான் வெட்டியுள்ளனர். ஏனெனில் வெட்டப்பட்ட இடங்கள் மற்றும் வெட்டப்பட்ட விதம் அப்படி இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த செய்தியாளர்களையும் மிரட்டும் விதமாகத்தான் மர்ம நபர்கள் நேசபிரபு மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
“இந்தத் தாக்குதலையும், காவல்துறையின் அலட்சியத்தையும் நியூஸ் 7 தொலைக்காட்சி கடுமையாக கண்டிக்கிறது. நேசபிரபுவுக்கான மருத்துவ செலவு, பொருளாதார உதவிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்,” என்றார்.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
‘காவல்துறை மீது உரிய நடவடிக்கை’ – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்த சம்பவத்துக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட செய்தி அறிந்து வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது. இதன் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நேசபிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார். செய்தியாளர் நேச பிரபுவுக்கு 3 லட்சம் வழங்கப்படும்,” என அறிவித்துள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்