ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை சோழர் தலைநகராக மாற்றியது ஏன்?

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை சோழர் தலைநகராக மாற்றியது ஏன்?

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை சோழர் தலைநகராக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி.

தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசனாகப் பதவியேற்றார் ராஜேந்திர சோழன். அடுத்த இரு ஆண்டுகளில் சோழப் பேரரசின் அரியணை முழுவதுமாக அவர் வசம் வந்து சேர்ந்தது. கி.பி. 1014ஆம் ஆண்டு முதல் தஞ்சையில் மணிமுடி சூடினார் ராஜேந்திர சோழன்.

அரசனாகப் பதவியேற்றதும் அவர் அரண்மனைக்குள் இருந்த நாட்களைவிட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். போரில் அரசர்களை வீழ்த்தி அவர்கள் ஆட்சிப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசர்கள் பலரைப் பார்த்திருப்போம்.

ஆனால் வீழ்த்தியவர்களிடமே மீண்டும் அரியாசனத்தை ராஜேந்திர சோழன் ஒப்படைத்த நிகழ்வு, ஒருமுறை அல்ல, பல முறை மிகச் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது.

கங்கை முதல் கடாரம் வரை நடைபெற்ற பல போர்களில் அவர் வென்ற போதிலும், அப்பகுதிகள் அந்தந்த அரசர்களிடமே மீண்டும் வழங்கப்பட்டது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தலைமைக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தும் அரசாக அவற்றை ராஜேந்திர சோழன் மாற்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

சாளுக்கியர், பாண்டியர், சேரர், சிங்கள அரசர், வங்கதேச அரசர், கடார அரசர் என இத்தனை பேரை ராஜேந்திரன் வீழ்த்த எடுத்துக்கொண்ட மொத்த காலம் வெறும் 10 ஆண்டுகள்தான். அரசனாகப் பதவியேற்ற கி.பி. 1014 முதல் 1024 வரை போர்க்களம் மட்டும்தான் ராஜேந்திரன் தன் வாழ்வில் பார்த்தது.

ராஜராஜன் காலத்திலேயே சோழர்களின் படைபலம் பெருகிய போதிலும், அவை உச்சம் பெற்றது ராஜேந்திரன் காலத்தில்தான். போருக்கு ஆயத்தமாகி படைகள் வெளியேறுவதும், வென்ற பின் ஆரவாரத்துடன் அரண்மனைக்கு திரும்புவதும் தஞ்சையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள்.

ஆனால் ராஜேந்திரன் காலத்தில் ஒரே நேரத்தில் அவர் கங்கை நோக்கிப் படையெடுக்க, அவரது தளபதிகள் ஈழம் நோக்கிப் படையெடுப்பர். இதனால் மிக அதிக படைகள் வருவதும் போவதுமாக இருக்கும். இவையனைத்தும் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு வேறு மாதிரியான இடைஞ்சலைக் கொடுத்தது.

இருந்தபோதிலும் அரசாங்கம் பலமாக நடைபெறுவதற்கு பொருளாதாரம் மிக முக்கியம். அந்தப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு வணிகம் பெருகிட வேண்டும். அதன் அடிப்படையில் வணிகர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏற்றுமதி வணிகம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் ராஜேந்திர சோழன் சிந்தித்துச் செயல்படுத்திய திட்டத்தின் இறுதி வடிவம்தான் தலைநகரமான கங்கை கண்ட சோழபுரம்.

தஞ்சாவூரில் இருந்து எப்படி கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டது என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும தலைவரும், பொறியாளருமான கோமகன் கங்கைகொண்ட சோழபுரம் உருவாக்கம் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.

ராஜேந்திர சோழ பேராறு உருவாக்கிய தலைநகரம்

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

கங்கை கொண்ட சோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதற்கு பல பின்னணிகள் இருந்தபோதிலும், அவற்றில் முதன்மை பெறுவது நடுநாட்டின் அரசியலும் சோழ வணிகமும்தான் என்கிறார் கோமகன்.

“இந்தப் பகுதி வணிக நகரமாக உருவாக்கப்பட்டதில் கொள்ளிடம் என அழைக்கப்படும் ராஜேந்திர சோழ பேராறு உறுதுணையாகவும் முதன்மைக் காரணியாகவும் இருந்தது.

சோழப் பேரரசு வணிகத்திற்கு முன்னுரிமை வழங்கிய காலகட்டத்தில் சிறந்து விளங்கிய பல்வேறு வணிக குழுக்கள் பற்றிய செய்திகள் மூலம் இதை உணரலாம். இந்திய பெருங்கடல் பரப்பும், இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசிய கடற்கரைகள் அனைத்துமே சோழ ஆதிக்கத்தின் கீழே இருந்தன.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து சிறப்பாக இருந்ததையும் அது துறைமுகத்தோடு நிலவழி மூலமும் இணைக்கப்பட்டிருந்தது என்பதையும் தற்போதைய நீர் வழித்தடங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிய முடியும்,” என்று பொறியாளர் கோமகன் கூறினார்.

நீர் வழித்தடங்கள் உருவாக்கிய சோழ வணிகம்

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

கோமகனின் கூற்றுப்படி, சோழர்களின் நீர் வழித்தடங்கள் சோழ வணிகத்திற்குப் பெரும் உதவியாக இருந்தன. இதன்மூலம் சோழ நாட்டின் பொருளாதாரம் மேன்மை பெற்றது. சோழர்களின் நீர் ஆதார அமைப்புகள் அரச குடும்பத்தினர் பெயரில் வழங்கப்பட்டிருப்பது அந்த அமைப்புகளின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை, பங்களிப்பை, ஈர்ப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

“ராஜேந்திர சோழ பேராறு என்னும் கொள்ளிடம் ஆறு, கடல் முகத்துவாரம் காவிரி பூம்பட்டினத்திற்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது. இந்தக் கழிமுக கடற்கரை சங்க காலத்தில் இருந்தே துறைமுகத் தகுதியைப் பெற்று கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. இதை அகப்புறச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

பட்டினப்பாலை என்ற நூலில் உள்நாட்டில் கடற்கரை உப்பை விற்று பதிலீடாக விளைபொருளை ஏற்றி வந்த படகுகள் வரிசையாக குதிரைகள் நிறுத்தப்படுவது போல் நிற்கின்றன எனக் கூறுவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்,” என்கிறார்.

எப்படி உருவானது கங்கைகொண்ட சோழபுரம்?

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

“தஞ்சையில் இருந்து 50 கி.மீ தொலைவில் காவிரி வடிநிலப் பகுதியான கொள்ளிடத்தின் வடகரையில் ஒரு பெரிய நிலப்பகுதி தேர்வு செய்யப்பட்டது.

தலைநகருக்கு நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு பெரிய ஏரியை ராஜேந்திரன் வெட்டினான். தஞ்சையைப் போல மிகப் பெரிய அரண்மனையைக் கட்டி எழுப்பினான். அகழி, கோட்டைச் சுவருடன் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலம் கொண்டதாக புதிய தலைநகரம் கட்டி எழுப்பப்பட்டது,” என்கிறார் கோமகன்.

கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக உருவாக்கப்பட்டதில் கொள்ளிடம் என அழைக்கப்படும் ராஜேந்திர பேராறு உறுதுணையாகவும் முதன்மைக் காரணியாகவும் இருந்தது. இந்த ஆற்றின் தென்கரை கரிகாலக்கரை எனவும் வழங்கப்படுகிறது.

நீர்வழி போக்குவரத்து தடத்தை பயன்படுத்திய வணிகக் குழுக்கள்

ராஜேந்திர சோழன் காலத்திய கொள்ளிடம் நீர்வழிப் போக்குவரத்து தடமாக இருந்ததற்கான சான்றுகளை உறுதிப்படுத்த அக்காலத்தில் இருந்த வணிகக் குழுக்கள் மற்றும் அவற்றின் சேவைப் பிரிவுகள் நகரங்கள் பற்றி தெரிந்துகொள்வது அடிப்படை. சோழர்கள் காலத்திய சமூகம் பெரு வளர்ச்சியடைவதற்கு கடல் வணிகம் பெரிதும் உதவியது. அது பதினோராம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. சோழர்கள் காலத்து வணிக குழுக்கள் தங்களுக்கான பாதுகாப்புப் படையை வைத்துக்கொள்ளும் வலிமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர்.

“வீரர், அங்ககாரன், கைக்கோளர், கொங்காள்வர், செட்டி, வலங்கை வீரர், வீர கோடியார், சீட்புலி உள்ளிட்ட 21 பிரிவுகள் இருந்தன. இவர்கள் வணிக நகரங்களிலும் நீர்வழி தடத்திலும், நில வழித்தடத்திலும் முக்கிய இடங்களில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் இருந்த இடம் இவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டு இன்றும் சற்று மறுவி அவர்கள் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது,” என்று விளக்குகிறார் கோமகன்.

“கொள்ளிட தென் கரையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ள சிட்புலியூர் தற்போது சீப்புலியூர் என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் கொள்ளிட வடகரை காட்டுமன்னார்குடி வட்டத்தில் செட்டித்தாங்கல் ஊராட்சி, அரியலூர் மாவட்டம் கொள்ளிட வடகரை தா.பழூர் வட்டத்திற்கு உட்பட்ட அங்ககாரன் பேட்டை தற்போது அன்னக்காரன் பேட்டை என்று அழைக்கப்படுகிறது,” என்றும் கூறினார்.

அதேபோல், “தா.பழூர் வட்டம் அங்ககார நல்லூர் தற்போது அங்கராயநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இருகையூர், இடங்கண்ணி ஆகிய ஊர்கள் தற்போதும் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றது. மேற்கண்ட ஊர்கள் வணிகக் குழுக்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் வழித்தடத்தில் இருப்பிடம் கொண்டு அவர்கள் வணிக பயணத்திற்கு ஏதுவாக கொள்ளிடக்கரை ஓரமாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று,” என்று ஊரின் பெயர்களைப் பழங்கால பெயர்களுடன் படித்து தற்போது வழங்கப்படும் பெயர்களையும் விவரித்தார் கோமகன்.

கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக மட்டுமல்லாது வணிக நகரமாகவும் வடிவமைக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. அவ்வகை வணிக நகரத்திற்கு நிலவழிகள், நீர் வழிகள் அடிப்படை. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் அமைந்திருந்தன. பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் நீர் தேவையும் அதற்குக் காரணம்.

இதன்படி கங்கைகொண்ட சோழபுரத்தை இணைக்கும் பெருவழிகள் நீர் தடத்தை ஒட்டியே இருந்துள்ளன. இவை பெரும்பாலும் வணிகத் தலங்களையும் அதிகார மையங்களாக விளங்கிய ஊர்களையும் இணைத்து இருக்கின்றன. கொள்ளிடக்கரை இருபுறமும் உள்ள சாலை அக்கால பெரு வழியாக இருந்தன.

பெருவழிச்சாலை இணைத்த ஊர்கள்

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

அதைத்தொடர்ந்து பொறியாளர் கோமகன் பெருவழிச்சாலை இணைத்த ஊர்களைப் பற்றி விளக்கி கூறினார். “மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, வீராணம் ஏரி, நெடுஞ்சேரி ஆகிய ஊர்களை சிதம்பரத்துடன் இணைக்கும் இராசராசன் பெருவழி, ஆயுதக்களம், உதயநத்தம், சோழமாதேவி, குணமங்கலம், விக்கிரமங்கலம், விளாங்குடி, கீழப்பழுவூர் பகுதிகளை திருச்சியுடன் இணைக்கும் விளாங்குடையான் பெருவழி‌ உட்கோட்டை, வானாதிராயன் குப்பம், வீரசோழபுரம், குழவுடையார் பகுதிகளை அணைக் கரையுடன் இணைக்கும் கூழையானை போனபெருவழி. (கூழை என்றால் படை அணி என்று பொருள்)

பள்ளி விடை, வெத்யார்வெட்டு, கல்லாத்தூர், ஆண்டிமடம், விளந்தை, தஞ்சாவூர் பகுதிகளை திருமுட்டத்துடன் இணைக்கும் திருமுட்டம் ஏறப்போன பெருவழி என முக்கிய வழிகள் பெருநகரங்களை இணைக்கும் சாலைகளுடன் இணைந்து இருந்தன என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன,” என்று கூறினார்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கு வாசல் வேம்புக்குடியில் இருந்துள்ளது. வேம்புக்குடி வாசலுக்கு போன வழியை பற்றி கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகின்றது. கொள்ளிடத்தின் வடகரையில் அணைக்கரை வழியாகத்தான் கங்கைகொண்ட சோழபுரத்திற்குள் நுழைய முடியும்.

வேம்புக்குடி வாசல் ராஜேந்திர சோழ பேராற்றின் வடகரை ஊராக மட்டுமல்லாது உள்நாட்டு படகு துறையாகவும் இருந்துள்ளது. வீரநாராயண பேரேரி எனப்படும் வீராணம் ஏரிக்கு நீரேற்றும் மதுராந்தகப் பெரிய வாய்க்கால் என்று அழைக்கப்படும் வடவாறு இங்கிருந்துதான் பிரிந்து கிளை ஆறாகச் செல்கிறது.

ஆங்கிலேயர்கள் மறுசீரமைத்த அணைக்கரை

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

“உள்நாட்டு நீர் வழித்தட மரக்கலங்கள் துறையாகப் பயன்படுத்தும் வகையில் வேம்புக்குடிவாசலின் கரை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் கொள்ளிடம் தெற்கு தடம், வடக்கு தடம் என இரண்டாகப் பிரிந்து நடுவில் ஒரு திட்டை உருவாக்கி மீண்டும் சிறிது தூரத்தில் ஒன்றாக இணைந்து ஓடுகிறது. அத்திட்டு அணைக்கரை என இன்றும் வழங்கப்படுகிறது,” என்று கூறினார் கோமகன்.

கொள்ளிடத்தில் இந்தத் திட்டின் குறுக்கே ஆங்கிலேயரால் கி.பி.1826இல் கதவணைகள் அமைக்கப்பட்டது. இதற்குத் தேவையான கற்கள் கங்கைகொண்ட சோழீச்சுரத்தை தகர்த்து எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை- கும்பகோணம்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை NH45C தடம் இதன் மீதுதான் செல்கிறது.

இயற்கையை மாற்றிய ராஜேந்திர சோழன்

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

இயற்கையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல, ஆனால் அறிவியல் நுட்பத்துடன் இணைந்து இயற்கையை மனித வளத்திற்கு தகுந்தவாறு மாற்றிய பெருமை ராஜேந்திர சோழனையே சேரும் என்று கூறிய பொறியாளர் கோமகன் எவ்வாறு மாற்றப்பட்டது என்பதையும் விவரித்தார்.

“இயற்கை அமைப்பில் இந்த இடத்தில் கொள்ளிடம் இரண்டாகப் பிரிவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக இல்லை. மேற்கிலிருந்து ஓடிவரும் நீர்த்தடம் வடவாறு எனப்படும், மதுராந்தக பெரிய வாய்க்காலுக்கு நீரை வழங்கி தன் வேகத்தை குறைத்துக் கொள்வதோடு தன் இயல்பான வேகத்தோடு அதைக் கடக்கின்றது.

இது தென்புறமாக தடம் மாறுவதற்கான நிலவியல் நீரியல் தேவையும் இல்லை இயற்கையாக ஆறு தன் போக்கிலிருந்து வடபுறமாக தான் தடம் மாறுகின்றன. இதற்கு வடபுல காந்தவிசை காரணம்,” என்று கோமகன் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், “கொள்ளிடம் இவ்விடத்தில் இயற்கையாக நிலவியல் நீரியல் அடிப்படையில் வடக்கு திசையில்தான் ஓடியிருக்க வேண்டும். ஆனால் இது சோழனின் மனித ஆற்றலால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் நீர் வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டபோது அதற்கான முதன்மை உள்நாட்டு ஆற்றுத் துறையாக அணைக்கரை எனும் வேம்புக்குடி வாசல் வடிவமைக்கப்பட்டது. அதன்படி கொள்ளிடத்தில் தென்புறப்பகுதி மரக்கலங்களை ஆற்றுத் துறையில் கையாளுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

நீரியல் பண்பு நீர்நிலை இயல்பாக மாற்றப்படுதல்

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

சோழர்கள் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதன் நீர்பரப்பை அதிகப்படியாகக் கூட்டியுள்ளனர். மேற்கிலிருந்து வரும் நீரின் அளவு இரண்டாகப் பிரிகிறது. இதனால் நீரின் வேகம் மட்டுப்படுத்தப்படும். அகன்ற நிலப்பரப்பால் நீரியியல் பண்பு நீர் நிலையியல் பண்பாக மாற்றப்படுகிறது. இந்த அறிவியல் தத்துவத்தை ராஜேந்திர சோழன் வெகு லாகவமாகக் கையாண்டுள்ளார். கொள்ளிடம் வழியே வரும் மரக்கலங்களுக்கு இந்த இடம் ஆற்றுத் துறையாகப் பயன்பட்டு வணிக நகரத்திற்கான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இந்தத் துறையில் இருந்து படை அணிகள் (கூழை) மரக்கலங்கள் மூலம் நீர் வழித்தடம் வழியாக கிழக்கு கடலை விரைவாக அடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. வணிகப்படையினர் இந்த ஆற்றங்கரையை வாழ்விடமாகக் கொண்டதை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.

கடல் வழி வந்த கப்பல்களில் இருந்து உள்நாட்டிற்கு தோணி, படகுகள் மூலம் நீர்த்தடத்தின் வழியே வணிகப் பொருட்கள் வந்தன என்பதற்கு பட்டினப்பாலை பாடல்களே சான்று.

தஞ்சையில் இருந்து காவிரி வழியே மன்னியாற்றை அடைந்து அதிலிருந்து பிரியும் நீர்த்தடங்கள் கொள்ளிடத்தில் இணையும் ஓடம் போக்கிகளின் தடம் இன்றும் உண்டு. அந்த இடம் படகுத்துறை, தோணித்துறை என வழங்கப்படுகின்றன. மண்ணியார் தலைப்பில் கதவணைக்கு அருகே ஓடம்போக்கி அணையும் தற்போது பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருக்கின்றது. மண்ணி ஆற்றில் இருந்து திருப்புரம்பியம் அருகே உள்ள கொந்தகை எனும் இடத்திலிருந்து பிரியும் ஓடம்போக்கி ஆறு கொள்ளிடத்தில் இணைகிறது. திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றில் இருந்து பிரியும் ஓடம்போக்கி நீர் தடம் கொள்ளிடம் தென்கரையில் இணைகிறது.

அதேபோல் கொள்ளிடம் வடகரையில் உள்ள மருதையாறு வணிக நகரங்களை இணைத்து கொள்ளிடத்தில் கலக்கிறது. ராஜேந்திர சோழன் வடபுலத்தில் கங்கை வெற்றிக்குப் பிறகு வந்தடைந்த இடம் கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ள திரு லோக்கியம். இங்குள்ள “ராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்து தொழுது” எனத் தொடங்கும் கல்வெட்டும் இதை உறுதி செய்கிறது.

ராஜேந்திர சோழன் கடல் பகுதியில் இருந்து கொள்ளிட நீர் வழித்தடத்தில் வந்து சேர்ந்த இடம் இதுவே ஆகும்.

ராஜேந்திர சோழன் கட்டமைத்த நீர்வழி, நிலவழி தடங்கள்

கொள்ளிடத்தில் வடக்கு தெற்கு தடங்களின் நிலவியல் மண்ணடுக்குகளை ஆய்வு செய்யும்போது வடக்குத்தடம் கிடை மட்டத்தில் இருந்து 9 மீட்டர் ஆழத்திலேயே ஆற்றின் உறுதியான படிமமான கங்கர் எனப்படும் சுண்ணாம்புப் பாறை உள்ளது. ஆனால் இந்த வகை பாறை தெற்கு தடத்தில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில்தான் கிடைக்கிறது.

வடக்குத் தடத்தில் ஆறு நீண்டகாலம் பாய்வதால் சுண்ணாம்புப் பாறை படிமம் வரை இயற்கை மண் அடுக்குகள் அரிக்கப்பட்டு 9 மீட்டர் அளவிலான மணல் படிமத்தால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு தடம் வடக்குத்தடத்தைவிட 11 மீட்டர் சுண்ணாம்புப் பாறையின் படிமம் மேற்பரப்பில் கூடுதலாக உள்ளது.

இந்த அடுக்கின் மீதான மணல் சேர்க்கையும் குறைவாகவே உள்ளது. வடக்கு தடத்தோடு தெற்கு தடத்தை ஒப்பிடும்போது சுண்ணாம்புப் பாறையின் மேல் அடுக்குகள் வெவ்வேறான தன்மையுடையதாகவும் உள்ளது.

வடக்குத்தடத்தின் வடகரையிலிருந்து வடவாறு எனும் மதுராந்தக பெரிய வாய்க்கால் பிரிந்து செல்வதால் அதற்கான நீர் ஏற்றம் வடபுறத்தின் கிடைமட்ட நீரேற்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும். இதனால் வடபுறத்தின் மண் அடுக்கு அரிப்பும், மேலடுக்கு மணல் சேர்க்கையும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

ஆனால் தெற்கு புறத்தடத்தில் அவ்வகையான பெரிய வாய்க்கால் அமைப்புகள் இல்லை. வடக்கு புற வாய்க்கால்கள் பிற்காலத்தியவை.

கொள்ளிட ஆற்றில் வடபுற தடத்தில் உள்ள அணைக்கரை, வேம்புக்குடி வாசல் பகுதியில் நீரியல் பண்புகளான நீரோட்டம்,நீரோட்ட வேகம், மற்றும் ஆற்றின் போக்கு அடிப்படையிலும் இயற்கையானது ஆகும். தென்புறத் தடம் அதன் அமைப்பின் அடிப்படையில் செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மண் அடுக்குகள் ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. கொள்ளிடத்தின் மீது மனித ஆற்றல் ஆதிக்கம் செலுத்தியுள்ளது இதன் மூலம் தெளிவாக அறிய முடியும் . நீரியல் தன்மையை தளர்த்தி நீர் நிலையியல் தன்மை புகுத்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த ஆதிக்கத்தை செலுத்தியது ராஜேந்திர சோழன்  என்பதால் தான் கொள்ளிடம் ராஜேந்திர சோழ பேராறு என அழைக்கப்படுகிறது . அந்த இடத்தில் மரக்கலன்களுக்கு ஆற்றுத் துறையை உருவாக்கி நீர் வழித்தடத்தில் கூடுதல் வசதியை  மேம்படுத்தியதே இதற்கு காரணம் வணிக நகரமாக அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இடத்தில் கடற்பயணத்திற்கு ஏதுவான உள்நாட்டு நீர் வழித்தடமும் அமைக்கப்பட்டு அது நிலவழி பெருவழிகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதுடன் மக்களின் பொருளாதாரம் மேன்மை பெறுவதற்கும் படைகள் போர்களுக்கு சென்று வர நிலவழி மற்றும் நீர் வழித்தடங்களை நேர்த்தியாக உருவாக்கியதை மண் ஆய்வுகளுடனும் தெளிவாக பொறியாளர் கோமகன் விவரித்து முடித்தார்.

கொள்ளிட ஆற்றில் வடபுற தடத்தில் உள்ள அணைக்கரை, வேம்புக்குடி வாசல் பகுதியில் நீரியல் பண்புகளான நீரோட்டம், நீரோட்ட வேகம், மற்றும் ஆற்றின் போக்கு அடிப்படையிலும் இயற்கையானது.

தென்புறத் தடம் அதன் அமைப்பின் அடிப்படையில் செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மண் அடுக்குகள் ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. கொள்ளிடத்தின் மீது மனித ஆற்றல் ஆதிக்கம் செலுத்தியுள்ளது இதன்மூலம் தெளிவாக அறிய முடியும்.

நீரியல் தன்மையை தளர்த்தி நீர் நிலையியல் தன்மை புகுத்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த ஆதிக்கத்தைச் செலுத்தியது ராஜேந்திர சோழன் என்பதால்தான் கொள்ளிடம் ராஜேந்திர சோழ பேராறு என அழைக்கப்படுகிறது.

அந்த இடத்தில் மரக்கலங்களுக்கு ஆற்றுத் துறையை உருவாக்கி நீர் வழித்தடத்தில் கூடுதல் வசதியை மேம்படுத்தியதே இதற்குக் காரணம். வணிக நகரமாக அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இடத்தில் கடற்பயணத்திற்கு ஏதுவான உள்நாட்டு நீர் வழித்தடமும் அமைக்கப்பட்டு அது நிலவழி பெருவழிகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதுடன் மக்களின் பொருளாதாரம் மேன்மை பெறுவதற்கும் படைகள் போர்களுக்குச் சென்று வர நிலவழி மற்றும் நீர் வழித்தடங்களை நேர்த்தியாக உருவாக்கியதை மண் ஆய்வுகளுடன் தெளிவாக பொறியாளர் கோமகன் விவரித்தார்.

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றியது ஏன்?

கங்கை வரை ராஜேந்திரன் படையெடுத்து வென்ற பிறகு, அங்கிருந்த அரசர்களை வைத்து கங்கை நீரைத் தனது தலைநகருக்கு எடுத்து வந்ததன் நினைவாக, நகருக்கு “கங்கை கொண்ட சோழபுரம்” என்ற பெயர் நிலைபெற்றதாகக் கூறுகிறார் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் இந்த நகரின் பெயருக்கான பின்னணியை விவரித்தார்.

கி.பி.1025ஆம் ஆண்டு சோழப் பேரரசின் புதிய தலைநகரம் உதயமானது. இதை திருவாலங்காட்டு செப்பேடுகள் உறுதி செய்கின்றன.

தலைநகர் மாற்றம் பெற்றபின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார் ராஜேந்திரன். இக்காலத்தில் சிற்சில போர்கள், கலகங்கள் நடைபெற்ற போதிலும், அவை மக்களின் அமைதிக்கும் வாழ்விற்கும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. ஆதலால் கி.பி 1025 முதல் 1044 வரையிலான அமைதிக் காலத்தை “பிற்கால சோழர்களின் பொற்காலம்” என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜேந்திர சோழர் மன்னராட்சியிலும் கூட்டாட்சி முறையை நெறிப்படுத்தியவர் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.

“சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் அந்த மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். ராஜேந்திரன் கங்கை முதல் கடாரம் வரை வென்றபோதும் இந்த நிலை நீடித்தது. வென்ற பகுதிகளை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி நடத்தியிருந்தால் ராஜேந்திரன் தனியாளாக 4 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவை ஆண்டிருப்பார். தற்போதைய இந்திய நாட்டின் பரப்பளவே அதைவிடக் குறைவுதான். (இந்தியாவின் பரப்பளவு 3.287 லட்சம் சதுர கி.மீ.)” என்றும் பேராசிரியர் ரமேஷ் கூறினார்.

நீர்வழித் தடத்தின் மூலமாகத் தனது நாட்டை வளமான நாடாகவும் வணிகத்தின் மூலமாகp பொருளாதார மேன்மை மிகுந்த நாடாகவும் ராஜேந்திர சோழன் மாற்றினான். கங்கை வெற்றிக்காக ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் புகழ்பெற்ற பெயரைப் பெற்றதுடன் அவர் அமைத்த புதிய நகரம் கங்கைகொண்ட சோழபுரம் என அழைக்கப்பட்டது.

கல்வெட்டுச் சான்றுகள்

கொள்ளிட ஆற்றில் வடபுற தடத்தில் உள்ள அணைக்கரை, வேம்புக்குடி வாசல் பகுதியில் நீரியல் பண்புகளான நீரோட்டம்,நீரோட்ட வேகம், மற்றும் ஆற்றின் போக்கு அடிப்படையிலும் இயற்கையானது ஆகும். தென்புறத் தடம் அதன் அமைப்பின் அடிப்படையில் செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மண் அடுக்குகள் ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. கொள்ளிடத்தின் மீது மனித ஆற்றல் ஆதிக்கம் செலுத்தியுள்ளது இதன் மூலம் தெளிவாக அறிய முடியும் . நீரியல் தன்மையை தளர்த்தி நீர் நிலையியல் தன்மை புகுத்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த ஆதிக்கத்தை செலுத்தியது ராஜேந்திர சோழன்  என்பதால் தான் கொள்ளிடம் ராஜேந்திர சோழ பேராறு என அழைக்கப்படுகிறது . அந்த இடத்தில் மரக்கலன்களுக்கு ஆற்றுத் துறையை உருவாக்கி நீர் வழித்தடத்தில் கூடுதல் வசதியை  மேம்படுத்தியதே இதற்கு காரணம் வணிக நகரமாக அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இடத்தில் கடற்பயணத்திற்கு ஏதுவான உள்நாட்டு நீர் வழித்தடமும் அமைக்கப்பட்டு அது நிலவழி பெருவழிகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதுடன் மக்களின் பொருளாதாரம் மேன்மை பெறுவதற்கும் படைகள் போர்களுக்கு சென்று வர நிலவழி மற்றும் நீர் வழித்தடங்களை நேர்த்தியாக உருவாக்கியதை மண் ஆய்வுகளுடனும் தெளிவாக பொறியாளர் கோமகன் விவரித்து முடித்தார்.

தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில்

திருக்கழிப்பாலை பால்வண்ணாநாதர் கோவிலில் நான்கு சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. அதில் முதலாம் ராஜராஜ சோழனின் 26வது ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் மஹாதேவன் என்பவன் நுந்தா விளக்கு எரிப்பதற்காகப் பத்து காசுகளை தானமாக வழங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறது.

ராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள சிதைந்த கல்வெட்டு ஒன்றில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த திரிபுவனமாதேவி பேரங்காடியை சார்ந்த கூத்தன் அடிகள் என்ற வணிகன் பொன் வழங்கியுள்ளதையும், இவன் பெருநல்லூர் என்ற ஊரைப் பூர்விகமாகக் கொண்டவன் என்றத் தகவலையும் கூறுவதாக பேராசிரியர் ரமேஷ் விளக்கினார்.

இம்மன்னரது மற்றொரு சிதைந்த கல்வெட்டில் பூர்வதேசம், கங்கை, கடாரம் கொண்ட போன்ற சொற்களும், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை குளியல் அறையின் பணிப் பெண்ணாகப் பணியாற்றிய ஒருவர் இக்கோவிலுக்கு தானங்களை வழங்கியுள்ள தகவலையும் சுட்டுகிறது.

“விக்கிரம சோழப் பிரம்மமாராயன் என்பவன் திருக்கழிப்பாலை பால்வண்ண நாதருக்கு நாள்தோறும் ஒரு நாழி தும்பைப்பூ வழங்குவதற்காகத் தானம் வழங்கியுள்ளதை மற்றொரு துண்டுக் கல்வெட்டின் வாயிலாக அறியலாகிறது.

எனவே ராஜேந்திர சோழன் காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் செல்லும் நீர்வழிப் பாதையின் அருகில் இக்கோவில் கட்டப்பட்டிருந்ததாலேயே கங்கைகொண்ட சோழபுரம் பேரங்காடியைச் சார்ந்த வணிகரும், மன்னரின் மேலாண்மையைப் பெற்றிருந்த பணிப்பெண்ணும் இக்கோவிலுக்கு தானங்களை வழங்கி சிறப்பித்துள்ளதை நோக்கும்போது தேவிக்கோட்டைக்கும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் இடையே நிச்சயமாக கொள்ளிடம் ஆற்றின் வழியாக நீர்வழிப்பாதை ஒன்று செயல்பட்டிருக்க வேண்டும்.”

மேற்கண்ட வணிகனின் ஊரான பெருநல்லூர் என்ற ஊர் இன்று நல்லூர் என்ற பெயருடன் மகேந்திரப்பள்ளியின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

மேலும் கங்கை பகுதியின் வெற்றியின் சின்னமாகத்தான் சோழ கங்கம் என்னும் பேரேரி வெட்டப்பட்டது. திருவாலங்காட்டு செப்பேடுகள் இதை “ஜலமயமான சயத்தம்பம்” நீர்மயமான வெற்றித் தூண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *