தருமபுரி: மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் பணியிடை நீக்கம் – என்ன நடந்தது?

தருமபுரி: மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் பணியிடை நீக்கம் - என்ன நடந்தது?

தருமபுரி சாதி வன்கொடுமை
படக்குறிப்பு,

உடன் இருந்த பயணிகளும் தனக்கு ஆதரவாக பேசவில்லை என்கிறார் பாஞ்சாலை

தருமபுரி மாவட்டத்தில் பெண் பயணி ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பாதுகாப்பற்ற வழித்தடத்தில் இறக்கி விட்ட சம்பவத்தில் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒசூர் வரை செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த நவலை கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை (59) என்ற பெண்மணி விற்பனை செய்வதற்காக ஒரு பாத்திரத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றிருக்கிறார்.

அதையறிந்த பேருந்து நடத்துனர் பாதுகாப்பிலாத மோப்பிரிபட்டி வனப்பகுதியில் அவரை இறக்கிவிட்டுள்ளார். அடுத்த பேருந்து நிறுத்ததிலாவது இறக்கிவிடுமாறு அப்பெண் நடத்துனரிடம் கேட்டும் நடத்துனர் நடுவழியிலேயே அவரை இறக்கி விட்டுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த பாஞ்சாலை நடந்தே அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று வேறு பேருந்தில் ஏறி வீடு சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் அடுத்த முறை அதே வழியில் வரும் போது ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இப்படி ஒரு பெண் பயணியை பாதுகாப்பில்லாமல் நடு வழியில் இறக்கி விட்ட சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு தெரிய வந்ததையடுத்து, அதுகுறித்து விசாரணை செய்து ஓட்டுனர் சசிகுமார் மற்றும் நடத்துனர் ரகு ஆகிய இருவரையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தருமபுரி சாதி வன்கொடுமை
படக்குறிப்பு,

தருமபுரி மாவட்டம், நவலை கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை

இச்சம்பவத்தில் என்ன நடந்தது?

இது குறித்து பிபிசி தமிழுக்காக பாதிக்கப்பட்ட மூதாட்டி பாஞ்சாலையிடம் பேசினோம். அவர், தான் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக மாட்டுக்கறி சுக்கா, சில்லி சிக்கன் ஆகிய பண்டங்கள் விற்கும் கடை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

“நான் எப்போதும் எங்கள் ஊரில் இருந்து அரூர் டவுனுக்கு போய் மாட்டுக் கறி வாங்கிக்கொண்டு, ஓசூர் அரசு பேருந்திலோ தனியார் பேருந்திலோ விடு திரும்புவது வழக்கம்,” என்றார்.

ஆனால், தான் கடந்த ஆறு மாதமாக ஓசூர் பஸ்ஸில் ஏறுவதில்லை என்று தெரிவித்த அவர், அதற்கான காரணத்தையும் கூறினார்.

“நான் ரோட்டு ஓரத்திலே கடை வைத்துள்ளதால், ஓசூர் பஸ்சில் வரும்போதும், போகும்போதும் இதே கண்டக்டர், டிரைவர் பார்த்துக் கொண்டே போவார்கள். ஒருமுறை ‘தூக்குவாளியில் மாட்டுக்கறி வைத்துள்ளாயா’ என்று எல்லார் முன்னும் கேட்டு அசிங்கப்படுத்திட்டார். இது யாருக்கும் தெரியாது,” என்றார்.

“அதனால் தான், வழக்கமாக வேறு பேருந்தில் சென்று வருவோம். இந்த சம்பவத்தன்று எங்கள் அண்ணனின் பேரன் உடன் வந்தான். 700 ரூபாய் கொடுத்து கறியை வாங்கி தூக்குவாளியில் போட்டு மூடிக் கொண்டேன். அதன் பின்னர் மதியம் 12:30 மணிக்கு இருவரும் பேருந்து நிலையத்திற்கு வந்தோம். அப்போது அரூரில் இருந்து ஓசூருக்கு போகக்கூடிய பஸ் நின்றிருந்தது. என்னை பஸ்ஸில் ஏறக்கூடாது என்று சொன்ன கண்டக்டரும் இருந்தார்,” என்கிறார் பாஞ்சாலை.

தொடர்ந்து பேசிய அவர், “என் பேரனிடம், இந்த கண்டக்டர் நாம் மாட்டுக்கறி வைத்து இருப்பதால் பஸ்ஸில் ஏற விடமாட்டார் அதனால அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று சொன்னேன். அதற்கு வா பாட்டி நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி பேரன் அழைத்துச் சென்றான். நாங்கள் பஸ்ஸில் ஏறிய போது, கண்டக்டர் எங்களைப் பார்த்தார். நானும் எதுவும் பிரச்னை வேண்டாமென்று பஸ்ஸின் கடைசி சீட்டில் ஓரமாக உட்கார்ந்து கொண்டேன்.

“என் பேரன் பஸ்ஸின் நடு பக்கம் போய் உட்கார்ந்து கொண்டான். பஸ்ஸில் சுமார் 40லிருந்து 50 பேருக்கு மேல் இருந்தார்கள். பஸ் புறப்பட்டு விட்டது. காட்டுப்பக்கம் போகும்போது கண்டக்டர் என்னிடம் வந்தார். நான் எனக்கும் தூக்குவாளியில் உள்ள கறிக்கும் சேர்த்து முப்பது ரூபாய் கொடுத்தேன். என் பணத்தை வாங்காமல் ‘உனக்கு எத்தனை முறை சொல்றது மாட்டுக்கறியை வைத்துக்கொண்டு ஏறக்கூடாது என்று, கீழே இறங்கு என்று சொல்லி பஸ்ஸை விசில் அடித்து நிறுத்தி விட்டார்,” என்று கூறினார் பாஞ்சாலை.

‘மன்னிப்பு கேட்டும், கண்டக்டர் ஏற்றுக்கொள்ளவில்லை’

தருமபுரி சாதி வன்கொடுமை
படக்குறிப்பு,

நடத்துனர் ரகு

‘மிகவும் அவமானமாக இருந்தது’

உடன் இருந்த பயணிகளும் தனக்கு ஆதரவாக பேசவில்லை என்கிறார் பாஞ்சாலை.

“நான் தம்பி ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கள், என்னை ஊரில் இறக்கி விடுங்கள் என்று கெஞ்சினேன். நான் வைத்திருந்த தூக்குவாளியையும் என் சேலையில் மறைத்தேன். அப்போது கோபமாக பேசி கெட்ட வார்த்தையில் திட்டினார். டிரைவர் வண்டியை ஆப் செய்து விட்டார். சுமார் 10-15 நிமிடம் அங்கேயே பஸ்சை நிறுத்திவிட்டனர். நடுக்காட்டில் இறக்கி விட்டால் என்னால் நடக்க முடியாது. அடுத்து எட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் இருக்கிறேதே அங்கே விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை,” என்றார்.

அப்போது பஸ்ஸில் இருந்த அனைவரிடத்திலும் ‘மாட்டு கறி வைத்திருக்கும் இவளை எப்படி பஸ்ஸில் ஏற்ற முடியும் என்று பேசி அவமானப்படுத்தினார், என்றார். பஸ்ஸில் இருந்தவர்களும் தங்கள் வேலை கெடுவதால் தன்னை இறங்கச் சொன்னதாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “வேறு வழியில்லாமல் கறியை எடுத்துக் கொண்டு இறங்கினேன். அந்த நடு காட்டில், எனக்கு அவமானமாகவும் அசிங்கமாகவும் இருந்தது. வேறு வழி இல்லாமல் கொஞ்ச தூரம் நடக்க முடியாமல் நடந்தேன். உச்சி வெயில் காலையில் இருந்து சாப்பிடாததால் மயக்கம் வருவது போல் இருந்தது, அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டேன்,” எனக் கூறினார் பாஞ்சாலை.

உதவி செய்த தனியார் பஸ் ஊழியர்கள்

தருமபுரி சாதி வன்கொடுமை
படக்குறிப்பு,

“நானும் கட்டப்பையில் கறி வைத்திருந்தேன், அதை அவர் கண்டுபிடிக்கவில்லை” என்கிறார் பாஞ்சாலையின் அண்ணனின் பேரன் தென்னரசு

அதற்கடுத்து நடந்ததைப் பற்றி விவரித்தார் பாஞ்சோலை, “கொஞ்ச நேரம் கழித்து அடுத்த பஸ் ஸ்டாப்பிற்கு நடக்க ஆரம்பித்தேன். அப்போது எங்கள் ஊர் வழியாக செல்லக்கூடிய தனியார் பஸ் வந்தது. நான் நடந்து போவதைப் பார்த்துவிட்டு பஸ்ஸை நிறுத்தி ஏன் நடந்து போகிறீர்கள் என்று கேட்டார்கள்.

“அப்போது நான் நடந்ததை சொன்னேன், அவர்களும் வருத்தப்பட்டு என்னிடம் காசு எதுவும் வாங்காமல் ஏற்றிக்கொண்டு வந்து எங்கள் ஊரில் இறக்கி விட்டார்கள்,” எனக் கூறுகிறார்.

இதுகுறித்து உடன் பயணம் செய்த அவரது அண்ணன் பேரன் தென்னரசுவிடம் பேசினோம்.

“வழக்கமாக அம்மாவும் பாட்டியும் தான் கறி எடுக்க அரூர் வந்து போவார்கள். இந்த சம்பவத்தன்று அம்மாவுக்கு வேலை இருந்ததால் என்னை பாட்டியுடன் அனுப்பி வைத்தார். நானும் பாட்டியும் அரூரில் வந்து கறி வாங்கிட்டு வந்து அரூர்-ஓசூர் பஸ்ஸில் ஏறச் சென்றோம். அப்போது என் பாட்டி இந்த பஸ் டிரைவர் கண்டக்டர் மாட்டுக்கறி வைத்திருந்தால் ஏற்ற மாட்டார்கள், அதனால் அடுத்த பஸ்ஸுக்கு போகலாம் என சொன்னார்.

“டிரைவர், கண்டக்டர் இரண்டு பேருமே பார்க்கும் போது தான் பஸ்ஸில் ஏறினோம். காட்டு வழியில் வரும்போது தான் பஸ் நின்றது, அப்போது தான் கண்டக்டர் பாட்டியை எல்லோர் முன்னாலும் திட்டினார். நானும், பாட்டிக்காக பேசினேன். அவர்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. பார்த்து மாட்டுக்கறி வச்சிக்கிட்டு என்ன தையரித்தில் பஸ்ஸில் ஏறுவாய் என கேட்டார். நானும் கட்டப்பையில் கறி வைத்திருந்தேன், அதை அவர் கண்டுபிடிக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அதே பஸ்ஸில் வீட்டுக்கு சென்று எங்கள் சொந்தங்களிடம் சொன்னேன். அதன்பிறகு, டெப்போ, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம்,” என்றார்.

‘இது சாதிய வன்கொடுமை’

தருமபுரி சாதி வன்கொடுமை
படக்குறிப்பு,

சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் வடிவேன்

இந்தச் சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் வடிவேனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பாக அரூர் வட்டப் பகுதியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சாதிய வன்கொடுமை நடந்து வருவதாகக் கூறினார் அவர்.

“இந்த நிலையில் தான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்த ரகு என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணியை பஸ்ஸில் ஏறக்கூடாது என்று வன்கொடுமை செய்திருக்கிறார்,” என்றார்.

மேலும், “அவர் செய்து வருகிற தொழிலையும் மாட்டுக்கறி விற்பனையையும் சொல்லி பஸ்ஸில் ஏற விடாமல் தடுத்து அவமானப்படுத்தி இருக்கிறார். அவர்கள் மீது அரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

அரசின் பதில் என்ன?

தருமபுரி சாதி வன்கொடுமை

இதுகுறித்து அரூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டோம்.

பெண் பயணியை பாதுகாப்பில்லாமல் நடு வழியில் இறக்கி விட்ட சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு தெரிய வந்ததையடுத்து விசாரணை செய்ததில் ஓட்டுனர் சசிகுமார் மற்றும் நடத்துனர் ரகு ஆகிய இருவரையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

இது குறித்து பிபிசி தமிழுக்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் விளக்கம் கேட்டோம், அவர் குறுந்தகவல் மூலம், “எனக்கு தகவல் வந்த ஒரு மணிநேரத்தில் விசாரணை நடத்தி தற்காலிக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை. அதனால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *