
பட மூலாதாரம், SHALIK RIYADH/INSTAGRAM
இது சவூதி அரேபியாவில் உள்ள ஷாலிக் ரியாஸ் என்ற பெண்களுக்கான ஆடைகளின் பிராண்டைச் சேர்ந்தது
இஸ்லாம் மதத்தை அல்லது இறைதூதர் முகமது நபியை அவமதித்ததாக குற்றம் சாட்டி ஒரு நபர் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்படுவது பாகிஸ்தானில் புதிதல்ல.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25), லாகூரில் உள்ள அச்ரா பஜார் பகுதியில் ஒரு பெண்ணைச் சிலர் சுற்றி வளைத்து, அவர் இறை நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டினர்.
அப்பெண் அணிந்திருந்த ஆடைகளில் ‘குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன’ என அக்கும்பல் கோபமாகக் குற்றம் சாட்டியது.
ஆனால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி சாதுரியமாகச் செயல்பட்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டார்.
இச்சம்பவத்திற்குப் பின்னர், அப்பெண்ணின் ஆடையில் அச்சிடப்பட்டிருந்தது குர்ஆன் வசனம் அல்ல என்று உள்ளூர் இஸ்லாமிய மத அறிஞர் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், TWITTER/OFFICIALDPRPP
சந்தையில் இருக்கும் கூட்டத்திலிருந்து நிகாப் (முகத்தை மூடிய துணி) அணிந்த அப்பெண்ணை பெண் காவல் அதிகாரி சையதா பானோ நக்வி பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்வதையும் காணலாம்
என்ன நடந்தது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் லாகூர் ஆச்ரா பஜாரில் தனது கணவருடன் ஷாப்பிங் செய்ய வந்த பெண்ணின் உடையில் சில அரபு வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அவை குர்ஆன் வாசகங்கள் என்றும், அப்பெண் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாகவும் கூறி அப்பெண் மீது குற்றம் சாட்டி சிறிது நேரத்தில் அங்கு பலர் திரள ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு திரண்ட கும்பல் கோபமடைந்து அப்பெண்ணையும் அவரது கணவரையும் துன்புறுத்தத் தொடங்கியது.
நிலைமை மோசமடைந்ததால், அப்பெண் உதவி கேட்டு லாகூர் காவல்துறையிடம் முறையிட்டார். அதன் பேரில் குல்பர்க் பகுதியின் பெண் உதவி காவல் கண்காணிப்பாளர் சையதா பானோ நக்வி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமை மோசமடையாமல் தடுத்தார்.
கோபத்தில் இருந்த கூட்டத்தை உள்ளூர் இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் அவர் சமாதானப்படுத்தினார். அவர்களிடம் இருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றார்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, அப்பெண்ணின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படத் துவங்கின. ஒரு வீடியோவில், அப்பெண் தனது கணவருடன் ஒரு சிறிய உணவகத்தில் அமர்ந்திருக்கிறார். கூட்டத்தில் இருக்கும் ஒருவர் அப்பெண் மதத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார். அந்தப்பெண் தனது முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்.
உதவி காவல் கண்காணிப்பாளர் சையதா பானோ நக்வி அங்கு கூடியிருந்தவர்களுக்கு விளக்கமளிக்கும் வீடியோவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில் அப்பெண் மதத்தை அவமதித்திருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு கூடியிருந்தவர்களுக்கு உறுதியளித்தார்.
இதனுடன், சந்தையில் இருக்கும் கூட்டத்திலிருந்து நிகாப் (முகத்தை மூடிய துணி) அணிந்த அப்பெண்ணை பெண் காவல் அதிகாரி சையதா பானோ நக்வி பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்வதையும் காணலாம்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

பட மூலாதாரம், TWITTER/OFFICIALDPRPP
‘அந்தப் பெண்ணை எங்களுடன் செல்ல அனுமதிக்குமாறு கூட்டத்தினரிடம் கூறி, அவர் குற்றம் செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தோம்’
பெண் காவல் அதிகாரி துணிச்சலுடன் செயல்பட்டு பெண்ணை காப்பாற்றியது எப்படி?
பிபிசி நிருபர் கரோலின் டேவிஸ் உதவி காவல் கண்காணிப்பாளர் சையதா பானோ நக்வியிடம் பேசினார். இவர்தான் அச்ரா மார்க்கெட்டில் இருந்து கோபமடைந்த கும்பலிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய துணிச்சலான போலீஸ் அதிகாரி.
சையதா நக்வி கூறுகையில், “அன்று மதியம் 1:00 மணி முதல் 1:30 மணிக்குள் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ பிரச்னை நடப்பதாக எங்களுக்குப் பட்டது. மார்க்கெட்டில் ஒரு பெண் முகமது நபியை இழிவுபடுத்தியதாகவும், அவரது ஆடையில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டதாகவும், மக்கள் கூடிவருவதாகவும் அந்த அழைப்பைச் செய்தவர் கூறினார்,” என்றார்.
சையதா நக்வி மேலும் கூறுகையில், இந்தச் செய்தி அப்பகுதியில் வேகமாக பரவி, ஐந்து-பத்து நிமிடங்களில் அங்கு மக்கள் கூட்டம் திரண்டது என்றார்.
“அந்த இடத்தை எங்களால் எளிதில் அடைய முடியவில்லை. அப்பகுதியை அடைய 400 முதல் 600 மீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது. அதற்குள் நிலைமை கொஞ்சம் மோசமாகிவிட்டது. நாங்கள் அங்கு சென்றடைந்த போது, சுமார் 200 முதல் 300 பேர் அந்த உணவகத்திற்கு வெளியே கூடியிருந்தனர்,” என்றார்.
அதுவரை அப்பெண்ணின் ஆடையில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
“அந்தச் சூழ்நிலையில், பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்ய, எப்பெண்ணை அவ்விடத்தை விட்டு வெளியேற்றுவதே மிக முக்கியமாக இருந்தது,” என்றார்.
மேலும் பேசிய சையதா நக்வி, “நாங்கள் கூடியிருந்த அந்தக் கும்பலிடம் பேச வேண்டியிருந்தது. அந்தப் பெண்ணை எங்களுடன் செல்ல அனுமதிக்குமாறு கூட்டத்தினரிடம் கூறி, அவர் குற்றம் செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தோம்,” என்றார்.
“அப்போது நான் உரக்கப் பேசாமல் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். எல்லாமே எங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டது, கடவுளுக்கு நன்றி,” என்றார்.
பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய காவலர் சையதா நக்வி, “இரண்டு வாரங்களுக்கு முன்பும், ஒன்றரை மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்தன. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன. ஆனால் அவற்றைச் சமாளித்து வருகிறோம்,” என்றார்.

பட மூலாதாரம், Social Media
அந்த வீடியோவில் அவருடன் அப்பெண்ணும் சில உள்ளூர் மத அறிஞர்களும் இருந்தனர்
மத அறிஞர்களின் உதவி நாடப்பட்டது
ஆனால் உதவி காவல் கண்காணிப்பாளர் சையதா பானோ நக்வி, அந்த பெண்ணை கூட்டத்திலிருந்து பத்திரமாக மீட்டதோடு மட்டும் நிற்கவில்லை.
ஏனெனில், ஆத்திரமாக இருந்த ஒரு கும்பலில் இருந்து ஒருவரைக் காப்பாற்றிய போதும், அதன் பின்னர் அக்கும்பல் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதால், சம்பந்தப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட் சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளன.
சையதா பானோ நக்வி இதுகுறித்துப் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர், “இன்று ஒரு பெண் தனது கணவருடன் அச்ரா பஜாரில் ஷாப்பிங் செய்யச் சென்றிருந்தார். அவரது ஆடையில் சில அரபு எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. அதனை அங்கிருந்தவர்கள் குர்ஆன் வாசகங்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டனர்,” என்றார்
அந்த வீடியோவில் அவருடன் அப்பெண்ணும் சில உள்ளூர் மத அறிஞர்களும் இருந்தனர்.
அந்த மத அறிஞர்களில் ஒருவர், “இப்பெண்ணின் ஆடையில் அச்சிடப்பட்ட எழுத்துகளைப் பார்த்தோம். அவை பொதுவான அரபுச் சொற்கள் மட்டுமே. இந்தப்பெண் இனிமேல் அப்படிப்பட்ட ஆடையை அணியமாட்டேன் என்று கூறிவிட்டார். மன்னிப்பும் கேட்டுவிட்டார்,” என்றார்.
வீடியோவில், அந்த பெண், “நான் ஷாப்பிங்கிற்காக அச்ரா பஜாருக்குச் சென்றிருந்தேன். நான் அணிந்திருந்த குர்த்தாவின் வடிவமைப்பில் தவறு இருந்தது. அதில் இருந்த எழுத்துகளை மக்கள் அரேபிய மொழி என்று புரிந்து கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு இஸ்லாமியர். மதத்தையோ, நபியையோ இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனாலும் மன்னிப்பு கோருகிறேன். இது மீண்டும் நடக்காது,” என்கிறார்.
உதவி காவல் கண்காணிப்பாளர் சையதா பானோ நக்விக்கு அரசு மரியாதை மற்றும் பதக்கம் வழங்க பஞ்சாப் காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
பஞ்சாப் காவல்துறை ஐ.ஜி. டாக்டர் உஸ்மான் அன்வரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “லாகூர் பகுதியில் ஏற்பட்ட விரும்பத்தகாத சூழ்நிலையில் கோபமடைந்த கும்பலிடம் இருந்து தனது உயிரைப் பணயம் வைத்து ஒரு பெண்ணை பாதுகாப்பாக மீட்ட ஏ.எஸ்.பி சையதா பானோ நக்வி, வெளிப்படுத்திய அசாதாரண துணிச்சலுக்காக ‘குவாய்ட்-இ-ஆசாம்’ பதக்கம் வழங்க பாகிஸ்தான் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், மதவாத கட்சியான தெஹ்ரீக்-இ-லப்பையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் உள்ளூர் தலைமையால் காவல்துறையுடன் இணைந்து தீர்க்கப்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் இப்போது கோருகிறோம். இது மனிதத் தவறுகளால் நடந்திருந்தால், இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்துறையினரின் துணிச்சலால் இன்று ஒரு பெரிய சம்பவத்தில் இருந்து நாட்டை அல்லாஹ் காப்பாற்றினான்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், SOCIAL MEDIA
பெண்ணின் உடையில் என்ன எழுதப்பட்டிருந்தது?
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பலரும் அப்பெண் அணிந்திருந்த ஆடையின் படங்களை பகிர்ந்துள்ளதோடு, இது சவூதி அரேபியாவில் உள்ள ஷாலிக் ரியாஸ் என்ற பெண்களுக்கான ஆடைகளின் பிராண்டைச் சேர்ந்தது என்றும், இங்கு அரபு எழுத்துகள் கொண்ட ஆடைகள் பொதுவானவை என்றும் கூறியுள்ளனர்.
அந்தப்பெண் தோன்றும் பல்வேறு காணொளிகள் மற்றும் படங்களில் தென்பட்ட அந்த உடையில் இருந்த ஆடையில் ‘அல்வா’ என்று அரபு எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது.
‘அல்வா’ என்றால் அரபு மொழியில் ‘அழகான’ மற்றும் ‘இனிப்பான’ என்று பொருள்.
அதே சமயம், பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் சிலர், இந்த வழக்கில் அந்த பெண்ணுக்கு பதிலாக, அவரை துன்புறுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் சில பயனர்கள் அப்பெண்ணின் அடையாளத்தை மறைத்து அவரது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசி வருகின்றனர். சில பயனர்கள் பெண் போலீஸ் அதிகாரியின் தைரியம் மற்றும் விவேகம் குறித்து தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சித் தொகுப்பாளர் ரபியா ஆனம் X-இல் பகிர்ந்த பதிவில், “இந்தச் சம்பவத்தைச் சமாளித்த பெண் போலீஸ் அதிகாரியின் புத்திசாலித்தனத்திற்கு வாழ்த்துக்கள். மிரட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதைச் செய்தவர்களை இதை மீண்டும் செய்யாதபடி சிறையில் அடைக்கவும்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
பத்திரிகையாளர் ராசா ரூமி, “இந்த பெண் போலீஸ் அதிகாரி ஒரு நட்சத்திரம். மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குடிமக்கள் துன்புறுத்தப்படும் போதும், தாக்கப்படும் போதும் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் சரியாகச் செய்தார்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், “நபியை அவமதிக்கும் பாகிஸ்தானின் சட்டங்கள், தினசரி அவற்றின் தவறான பயன்பாடு, வன்முறை கும்பல் மற்றும் அரசின் பாதுகாப்பில் உள்ள தீவிரவாத கும்பல் ஆகியவை நாட்டை இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு தள்ளியுள்ளன,” என்றார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் மத அறிஞர்கள் சபையான பாகிஸ்தான் உலமா சபையின் தலைவர் மௌலானா தாஹிர் அஷ்ரபி, “லாகூரில் ஒரு பெண்ணின் ஆடையில் அரபு எழுத்துகள் இருப்பதால் துன்புறுத்தப்பட்டதை பாகிஸ்தான் உலமா கவுன்சில் கண்டிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவத்தில் அக்ரா காவல்துறையின் சிறப்பான முயற்சி பாராட்டுக்குரியது, ஆனால் அந்தப் பெண் மன்னிப்புக் கேட்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அவரைத் துன்புறுத்தியவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்