மகாராஷ்டிரா: ஃபேஸ்புக் நேரலையிலேயே சிவசேனா உறுப்பினர் சுட்டுக் கொலை – என்ன நடந்தது?

மகாராஷ்டிரா: ஃபேஸ்புக் நேரலையிலேயே சிவசேனா உறுப்பினர் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?

மகாரஷ்டிரா பேஸ்புக் லைவில் துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

மாரிஸ் மற்றும் அபிஷேக் இருவரும் தங்களுக்குள் இருந்த முன்பகை முடிவுக்கு வந்தது என்பதைக் காட்டும் வகையில் ஃபேஸ்புக் லைவில் ஒன்றாகத் தோன்றினர்.

சிவசேனாவைச் சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர் அபிஷேக் கோசால்கர், ஃபேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அவர் மீது 5 தோட்டாக்கள் பாய்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் அபிஷேக் கோசால்கர் உயிரிழந்தார்.

ஜே.ஜே. மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது சடலம் மும்பை நகரின் தஹிசர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 9) பிற்பகல் இறுதிச்சடங்குகள் செய்யப்படும்.

மாரிஸ் நோரோன்ஹா என்ற நபர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். சுடப்பட்ட பின்னர், மாரிஸும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். அவரும் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, உல்லாஸ்நகரில் சிவசேனா ஷிண்டே பிரிவு தலைவர் மகேஷ் கெய்க்வாடை மீது பா.ஜ.க எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவங்கள் மகாரஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மகாராஷ்டிரா பேஸ்புக் லைவில் துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், FACEBOOK/Abhishek Ghosalkar

படக்குறிப்பு,

அபிஷேக் கோசால்கர்

யார் இந்த அபிஷேக் கோசால்கர்?

அபிஷேக் கோசால்கர், சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வினோத் கோசல்கரின் மகன் ஆவார். அபிஷேக் மும்பையில் உள்ள தஹிசரின் முதலாம் வார்டின் முன்னாள் உள்ளாட்சி உறுப்பின்ர் ஆவார். மும்பை வங்கியின் இயக்குநராகவும் இருந்தார். கோசல்கரின் தந்தையும் மகனும் தற்போது உத்தவ் தாக்கரே குழுவில் உள்ளனர்.

தனிப்பட்ட பகை காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது அபிஷேக் கோசால்கரின் மனைவி தேஜஸ்வினி உள்ளாட்சி உறுப்பினராக உள்ளார். போரிவலி என்ற தொகுதியில் கோசால்கர் குடும்பம் அரசியல் செல்வாக்கு செலுத்தி வருகிறது.

சிவசேனா தலைவர் சுஷ்மா அந்தரே, ‘மாரிஸ் நோரோன்ஹா தஹிசார் தொகுதியில் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்ததாகவும், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும்’ தெரிவித்துள்ளார்.

மகாரஷ்டிரா பேஸ்புக் லைவில் துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், X/Sanjay Raut

படக்குறிப்பு,

மாரிஸ் நொரோன்ஹா, ஏக்நாத் ஷிண்டேவுடன்

துப்பக்கியால் சுட்ட மாரிஸ் யார்?

‘மாரிஸ்பாய்’ என்று பிரபலமாக அறியப்படும் மாரிஸ் நொரோன்ஹா தன்னை ஒரு சமூக சேவகர் என்று அழைத்துக் கொண்டவர்.

மாரிஸ்பாய் எம்.எல்.ஏ சுனில் ரானேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அபிஷேக் கோசால்கர் ஒரு வருடத்திற்கு முன்பு தஹிசார் காவல் நிலையத்தில் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்ததாக ஏ.பி.பி மஜா செய்தி சேனல் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை, மிரட்டி பணம் பறித்தல், மற்றும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மாரிஸ் . இவர் ஒரு பெண்ணிடம் 88 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அந்த வீடியோவை வைரலாக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் வீடியோவும் வைரலானது. அதுமட்டுமின்றி அவர் நீதிமன்றத்திற்கு செல்லும் போது பத்திரிகையாளர்களை மிரட்டினார்.

மகாரஷ்டிரா பேஸ்புக் லைவில் துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், BBC/SHARDUL KADAM

படக்குறிப்பு,

சம்பவம் நிகந்த மாரிஸ் நொரோன்ஹாவின் அலுவலகம்

பேஸ்புக் லைவில் என்ன நடந்தது?

மாரிஸ் மற்றும் அபிஷேக் இருவரும் தங்களுக்குள் இருந்த முன்பகை முடிவுக்கு வந்தது என்பதைக் காட்டும் வகையில் ஃபேஸ்புக் லைவில் ஒன்றாகத் தோன்றினர். தற்போது மக்களுக்காக ஒன்றுபட்டுள்ளதாகச் சிரித்துக்கொண்டே கூறினர்.

ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை.

இந்த ஃபேஸ்புக் லைவ்வில், அபிஷேக் கோசால்கர், ‘இன்று நான் மாரிஸுடன் சேர்ந்து நேரலையில் வர வாய்ப்பு கிடைத்துள்ளது. பலருக்கும் இது ஆச்சரியமாக இருக்கும்’ என்கிறார். இதற்கிடையில் மாரிஸ் அவர் அருகில் வந்து அமர்ந்து, ‘இன்று பலருக்கு ஒரு ஆச்சரியம் இருக்கும்’ என்று கூறுகிறார்.

இருவரும் ‘மக்களுக்காகப் பணியாற்றப் போகிறோம், மக்களுடன் இணைந்து முன்னேறப் போகிறோம்’ என்று கூறுகின்றர்.

அதன்பின் மாரிஸ் வெளியே சென்றுவிட்டு வருவதுபோல் தெரிகிறது.

அதன்பின், ‘கோசால்கர் எங்களுக்கிடையே இருந்த தவறான புரிதலை நீக்கிவிட்டார். இப்போது ஏழை மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்,’ என்கிறார்.

அதன்பின் கோசால்கர், ‘நாம் வெளியே செல்வோம்’ என்று கூறியபடி எழுகிறார்.

உடனடியாக மாரிஸ் அவரை துப்பாக்கியால் சுடுகிறார்.

மகாரஷ்டிரா பேஸ்புக் லைவில் துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், TWITTER/ABHISHEKGHOSALKAR

படக்குறிப்பு,

போரிவலி என்ற தொகுதியில் கோசால்கர் குடும்பம் அரசியல் செல்வாக்கு செலுத்தி வருகிறது. சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்துடன் கோசால்கர்

ஷிண்டே, ஃபட்னாவிஸ் மீது கடும் விமர்சனங்கள்

ஆதித்ய தாக்கரே அபிஷேக் கோசல்கருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். தனது அஞ்சலிக் குறிப்பில், ‘அபிஷேக் கோசல்கரின் கொடூரமான கொலை அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. சிவசேனா உள்ளாட்சி உறுப்பினராகவும், சிவசேனா வீரராகவும் அவர் ஆற்றிய பணியை மறக்க முடியாது. அவருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். கோசால்கர் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். இந்தப் பெரிய துயரத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு கடவுள் கொடுக்கட்டும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மகாராஷ்டிர மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குண்டர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. புனே மற்றும் மும்பையில் நடந்த குற்றச் சம்பவங்களால், எதிர்க்கட்சிகள், குறிப்பாக சிவசேனா உத்தவ் தாக்கரே குழுவின் தலைவர்கள், முதலமைச்சரை விமர்சித்துவருகின்றனர்.

உள்துறை அமைச்சர் ஃபட்னாவிஸ் தோல்வியடைந்துவிட்டார் என்று எம்பி சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடெட்டிவார் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “மாநிலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன. இதெல்லாம் நடக்கும் போது முதல்வர், உள்துறை அமைச்சர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ‘நடவடிக்கை எடுக்கப்படும், விசாரணை செய்யப்படும்’ என்ற உங்கள் வார்த்தைகள் வெறுமையாக இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை, தலைவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது, ஆளும் எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கி ஏந்தியபடி பயமுறுத்துகின்றனர்,” என்று கூறியிருக்கிறார்.

புனேவில் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் அஜித் பவார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த சம்பவம் தவறானது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதுதான் என் கருத்தும் கூட. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரியாக என்ன நடந்தது என்பதை விசாரிக்க வேண்டும். எதிர்கட்சிகளுக்கு விமர்சிக்க ஒரு ஒரு சாக்கு கிடைத்திருக்கிறது. அதை நாங்கள் மறுக்கவில்லை. நான் யாரையும் ஆதரித்துப் பேசவில்லை. துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *