டேனியோனெல்லா செரிப்ரம்: மியான்மரைச் சேர்ந்த ஒரு சென்டிமீட்டர் அளவே இருக்கும் இந்த மீன் புல்டோசர் அளவு சத்தம் எழுப்புவது எப்படி?

டேனியோனெல்லா செரிப்ரம்: மியான்மரைச் சேர்ந்த ஒரு சென்டிமீட்டர் அளவே இருக்கும் இந்த மீன் புல்டோசர் அளவு சத்தம் எழுப்புவது எப்படி?

டேனியோனெல்லா செரிப்ரம்

பட மூலாதாரம், Ralf Britz/Senckenberg Dresden

ஒரு சிறிய, கண்ணாடி போன்ற மீன், ஒரு பெரிய ட்ரில் மெஷினைப் போல பெரும் சத்தத்தை எழுப்பும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால் அப்படிப்பட்ட ஒரு விசித்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களது ஆய்வகத்தில் உள்ள மீன் தொட்டிகளில் இருந்து மர்மமான சத்தம் ஒன்று வந்ததையடுத்து, அவர்கள் அதை ஆராயத் துவங்கினர்.

டேனியோனெல்லா செரிப்ரம் (Danionella cerebrum) என்ற மீன் நீச்சல் பை (swim bladder) எனப்படும் ஒரு உறுப்பின்மூலம் ஒரு சக்திவாய்ந்த தாளத்தை வெளிப்படுத்துவதை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த மீனுக்கு அருகில் உள்ள நீரில், அது 140 டெசிபல் அளவு சத்தத்தை உருவாக்குகிறது. இது துப்பாக்கி சுடப்படும் அளவுக்கான சத்தமாக இருக்கும்.

12மி.மீ நீளமே கொண்ட இந்த மீன் இனம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இவ்வளவு சிறிய மீன்களிலேயே அதிக சத்தத்தை உருவாக்கும் மீன் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஒலியெழுப்புதல் மீன்களின் சமூக தொடர்புக்கான ஒரு முறையாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

டேனியோனெல்லா செரிப்ரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

‘பிஸ்டல் இறால்’ போன்ற பிற உயிரினங்கள் மற்ற உயிரினங்களை வேட்டையாடும்போது, சுமார் 200 டெசிபல் வரை சத்தம் எழுப்பும்

மீன் தொட்டியில் இருந்து வந்த விசித்திர ஒலி

பெரும்பாலும், ஒரு விலங்கு பெரிதாக இருந்தால் அதன் சத்தமும் பெரிதாக இருக்கும். ஆனால், தண்ணீருக்கு அடியில் கதையே வேறு.

‘பிஸ்டல் இறால்’ போன்ற பிற உயிரினங்கள் மற்ற உயிரினங்களை வேட்டையாடும்போது, சுமார் 200 டெசிபல் வரை சத்தம் எழுப்பும் என்பதை விஞ்ஞானிகள் முன்னரே கண்டுபிடித்திருந்தனர்.

இந்த டானியோனெல்லா மீனை, விஞ்ஞானிகள் பொக்கிஷமாகக் கருதுகின்றனர். ஏனெனில் கண்ணாடி போன்ற அதன் உடலுக்க்குள் இருக்கும் உறுப்புகளை நாம் வெளிப்படையாகப் பார்க்க முடியும். அதன் மூளை செயல்படுவதையும் நாம் பார்க்கமுடியும். இதன்மூலம் ஆராய்ச்சியாளர்களை அதன் நடத்தையை ஆய்வு செய்கிறார்கள்.

ஆனால் ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் இந்த மீன்களை ஆய்வு செயும் போது, விஞ்ஞானிகள் விசித்திரமான ஒன்றை கவனித்தனர்.

“ஆராய்ச்சியாளர்கள் இந்த மீன்கள் இருந்த தொட்டிகளுக்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது, ஒரு ஒலியைக் கேட்டனர். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்று அப்போது தெரியவில்லை,” என்று இந்த மீன் குறித்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய, பெர்லினில் உள்ள ஷாரிடே பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் வெரிட்டி குக் கூறினார்.

“இறுதியில் அச்சத்தம் மீனில் இருந்து வருகிறது என்பது தெளிவானது. இது அசாதாரணமானது, ஏனென்றால் இந்த மீன்கள் அளவில் மிகச் சிறியதாக இருந்தபோதும் அவற்றின் சத்தம் மிகப்பெரிதாக இருந்தது,” என்கிறார் குக்.

டேனியோனெல்லா செரிப்ரம்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு,

‘பிளாக் டிரம்’ மீனும் அதிக சத்தத்தை எழுப்பும். ஆனால் அவை டானியோனெல்லாவை விட அளவில் மிகப்பெரியவை

இந்த மீன் எப்படி ஒலி எழுப்புகிறது?

ஒலிபெருக்கிகள், வீடியோ கேமராக்கள் ஆகியவறைப் பயன்படுத்தி, ஆராய்ச்சிக் குழு இந்தச் சத்தத்தின் அளவை மிக விரைவாகக் கணித்தனர்.

“ஒரு மனித உடலின் நீளமுள்ள தொலைவில், இந்த மீனின் சத்தம் சுமார் 140 டெசிபல்கள் அளவுக்கு ஒலிக்கும். அதுதான் மற்ற மீன்களால் உணரப்படும் ஒலி என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“தொலைவு அதிகமாக ஆக ஒலி குறைகிறது. எனவே ஒரு மீட்டர் தொலைவில், இந்த சத்தம் 108 டெசிபல்களாக இருக்கும்,” என்கிறார் அவர்.

இருந்தும் அது ஒரு புல்டோசரின் சத்தம் அளவுக்கு இருக்கும்.

இந்த ஒலியின் பெரும்பகுதி தண்ணீருக்குள்ளேயே மீண்டும் பிரதிபலிக்கப்படுவதால், தொட்டிகளுக்கு அருகில் நின்றால், இச்சத்தம் நமக்கு ஒரு ரீங்காரம்போல் கேட்கும்.

‘ப்ளைன்ஃபின் மிட்ஷிப்மேன்’ மற்றும் ‘பிளாக் டிரம்’ ஆகிய பிற மீன்களும் அதிக சத்தத்தை எழுப்பும். ஆனால் அவை டானியோனெல்லாவை விட அளவில் மிகப்பெரியவை.

“தகவல்தொடர்புக்காக இவ்வளவு பெரிய சத்தத்தை எழுப்பும் மற்றொரு விலங்கை என்னால் யோசித்துப்பார்க்க முடியவில்லை,” எக்னிறார் குக்.

ஒலியெழுப்ப இந்த மீன் பயன்படுத்தும் முறை மிகவும் அதிநவீன கருவி போன்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எலும்புகளுள்ள அனைத்து மீன்களுக்கும் நீச்சல் பை என்ற உறுப்பினைக் கொண்டுள்ளன. இது தண்ணீருக்கு அடியில் இருக்க உதவும் வாயு நிரப்பப்பட்ட உறுப்பு.

பல மீன் இனங்கள் தங்கள் தசைகளை இந்தப் பையின்மீது தட்டுவதன்மூலம் ஒலியெழுப்புகின்றன. ஆனால் டானினெல்லா பல படிகள் மேலே செல்கிறது. அதன் தசைகள் சுருங்கும்போது, அவை விலா எலும்பை இழுக்கின்றன. இது தசையின் உள்ளே இருக்கும் குருத்தெலும்புத் துண்டுடன் ஒருவகை அழுத்தத்தை உருவாக்குகிறது.

இந்தக் குருத்தெலும்பு வெளியேறும்போது அது நீச்சல் பையைத் தாக்கி ஒலியெழுப்புகிறது.

ஆண் மீன்கள் மட்டுமே சத்தமிடுகின்றன

இந்த மீன் இனத்தில் ஆண் மீன்கள் மட்டுமே இந்த ஒலியை உருவாக்குகின்றன, அதுவும் கூட்டமாக இருக்கும்போது மட்டுமே. சில மீன்கள் மற்றவற்றைவிட அதிக ஒலியெழுப்பும்.

“ஒரு பெரிய தொட்டியில் நீங்கள் எட்டு ஆண் மீன்களை ஒன்றாக வைத்திருக்கும் போது, அவற்றில் மூன்று அதிக ஒலியெழுப்பும். மற்றவை அமைதியாக இருக்கும். எனவே இதில் ஒருவித படிநிலை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்,” என்று குக் கூறினார்.

இந்த மீன்கள் மியான்மரில் கலங்கலான நீரில் தோன்றியதல், அவை தொடர்பு கொள்ள உதவும் வகையில் இவ்வளவு பெரிய சத்தத்தை உருவாக்கும் திறனை வளர்த்துக்கொண்டிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

“பல சுவாரஸ்யமான பிரச்னைகளைத் தீர்க்க பரிணாமம் பல சுவாரஸ்யமான வழிகளைக் கொண்டு வந்துள்ளது” என்று குக் கூறுகிறார்.

“மற்ற உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை வைத்து அல்லா உயிரினங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியும் என்று நாம் கருதக்கூடாது,” என்கிறார் அவர்.

இந்த ஆய்வு, தேசிய அறிவியல் அகாடமியின் ‘Proceedings’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *