பட மூலாதாரம், Getty Images
45 ஆண்டுகளுக்குப்பின் இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொடுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே அஸ்வினுக்குத் தேவைப்படுகிறது.
சென்னைச் சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமானார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நிச்சயம் இந்த புதிய மைல்கல்லை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன
டாப்-5 பந்துவீச்சாளர்களில் இடம்பிடித்த அஸ்வின்
21-ஆம் நூற்றாண்டில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சென்னை தெருக்களில் டென்னிஸ் பந்து வைத்து கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களையும், திறமைகளையும் கற்றுக் கொண்டவர் அஸ்வின்.
குறிப்பாக அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகவே இருந்து வந்துள்ளார்.
அஸ்வினின் புத்திக்கூர்மை, அவரின் நுணுக்கமான ‘கேரம் பந்துவீச்சு’, ‘ஆர்ம் பந்துவீச்சு’, ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் ‘லைன் லென்த்தில்’ வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள். அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை பலரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராக தனி ராஜ்ஜியமே நடத்துவார்.
அணிக்கு நெருக்கடியான காலத்தில் அறிமுகமான அஸ்வின்
இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தாற்போல் நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனைத் தவிர வேறுயாரும் அடையாளம் காணப்படாத காலம்.
பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார்.
அஸ்வின் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று வியப்பில் ஆழ்த்தினார்.
பட மூலாதாரம், Getty Images
அதிகவேகமாக 400 – 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்
அதிவேக சாதனைகளை நிகழ்த்திய அஸ்வின்
அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிவேகமாக 250 முதல் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். அதிகவேகமாக 400 – 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளையும், ஓர் ஆண்டுக்கு 50 விக்கெட்டுகள் என 4 முறை வீழ்த்தியுள்ளார்.
2016-17-ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 28 விக்கெட்டுகளையும், வங்கதேசத்துக்கு எதிதாரன டெஸ்டில் ஒரே ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும்போது, அஸ்வின் 96 டெஸ்ட் போட்டிகளில் 496 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், முதலிரு டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து 499 விக்கெட்டுகளுடன் நின்றுவிட்டார்.
அடுத்த டெஸ்டில் 500-வது விக்கெட்டை அஸ்வின் எட்டிவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறு அஸ்வின் சாதனை படைத்தால், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த 2-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார்.
ஒருவேளை 500வது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் அடுத்த டெஸ்டில் எடுத்துவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.
இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
இங்கிலாந்துக்கு எதிராக ‘செஞ்சுரி விக்கெட்’
அது மட்டுமல்லாமல் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் முறியடித்து 100 விக்கெட்டுகளை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகள், அதைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகள், பிஷன் சிங் பேடி, கபில் தேவ் தலா 85 விக்கெட்டுகள், இசாந்த் சர்மா 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை அஸ்வின் எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் எட்டினால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அஸ்வினின் எகனாமி ரேட் 2.78 ரன்கள்தான்.
பட மூலாதாரம், Getty Images
250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார்
அஸ்வினின் பந்துவீச்சு சாதனைகள்
- அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 499 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச அளவில் 9-வது இடத்தில் இருக்கிறார்.
- அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார்.
- தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தி 5-வது இடத்தில் அஸ்வின் உள்ளார்.
- ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-வது வயதான வீரர் (36 வயது, 298 நாட்கள்) சாதனையையும் அஸ்வின் வைத்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பேட்டர்களை போல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்து 9-வது இடத்தில் அஸ்வின் உள்ளார்.
- 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார்.
- 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும், 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
- 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகவேகமாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை வைத்துள்ள அஸ்வின், 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியும் 2-வது பந்துவீச்சாளராக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
- ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 10 முறை தொடர் நாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
