திருப்பதி: தமிழ் – தெலுங்கு பட்டியல் சாதியினர் மோதல் ஏன்? கோவில் வழிபாட்டில் என்ன பிரச்னை?

திருப்பதி: தமிழ் - தெலுங்கு பட்டியல் சாதியினர் மோதல் ஏன்? கோவில் வழிபாட்டில் என்ன பிரச்னை?

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

கோவில் முன்பு கூடியிருக்கும் மக்கள்

  • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
  • பதவி, பிபிசிக்காக

ஆந்திராவின் புத்தூர் பகுதியில் கோயிலில் வழிபாடு செய்ய பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன?

திருப்பதி மாவட்டம் புத்தூர் மண்டலத்துக்கு உட்பட கொல்லப்பள்ளி கிராமத்தில் போலக்ஷம்மா கோவில் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமையான விளைநிலங்கள், இதமான சூழலுடன் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த கிராம கோவிலை சுற்றி உட்கார மேசைகள் போடப்பட்டுள்ளன. ஆனாலும், நூற்றுக்கணக்கான மக்கள் கவலையுடன் கோவில் அருகே கூடி நின்றிருந்தனர். 7 கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு சாதிகளை சேர்ந்த மக்கள், விவசாயிகள் ஆகியோர் அங்கு கூடியிருந்தனர்.

வழிபாடு நடத்துவதற்கு போலக்ஷம்மா கோவிலுக்குள் பட்டியல் சாதியினர் அனுமதிக்கப்படவில்லை என்று அண்மையில் ஏற்பட்ட சர்ச்சைதான் அங்கு நிலவும் அசாதாரண சூழலுக்கு காரணம்.

போலக்ஷம்மனை கொல்லப்பள்ளி கிராமத்தில் இருப்பவர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் கிராம தெய்வமாக வழிபடுகின்றனர்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

போலக்ஷம்மா

சர்ச்சை தொடங்கியது எப்படி ?

பட்டியல் பிரிவினர் கோவிலுக்குள் அனுமதிக்கபடவில்லை என்பது குறித்த சர்ச்சை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு கொல்லப்பள்ளியில் தமிழ் பட்டியல் பிரிவினர் – தெலுங்கு பட்டியல் பிரிவினர் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

வெகு காலத்திற்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த சில பட்டியல் பிரிவினர் தமிழ்நாட்டில் இருந்து சென்று கொல்லப்பள்ளியில் குடியேறினர். இந்த கிராமத்திலேயே தலைமுறைதலைமுறையாக வாழ்ந்து வரும் பட்டியல் பிரிவினர் தெலுங்கு பட்டியல் பிரிவினர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தற்போதைய சர்ச்சை கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கியது. அன்று மதியம் தமிழ் பட்டியல் பிரிவினர் பொலக்ஷம்மனை வழிபட கோவிலுக்கு சென்றுள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் கோவிலின் கதவுகள் பூட்டப்பட்டதாகவும், உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேசி தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் பிரிவினர் கோவிலுக்கு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இருதரப்பும் சுமூகமாக செல்லும்படியும் அதிகாரிகள் கூறி சென்றனர்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

கிராம மக்கள்

தமிழ் பட்டியல் பிரிவினர் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லையா?

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி பிபிசி நிருபர் போலக்ஷம்மா கோவிலுக்குச் சென்றபோது ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு திரண்டிருந்தனர். கோவிலுக்குள் தமிழ் பட்டியல் பிரிவினரை அனுமதிக்கவில்லை என்பது உண்மையா என்று பிபிசி சார்பில் அவர்களிடம் கேட்டபோது, தமிழ் பட்டியல் பிரிவினரால் இந்த மோதல் தொடங்கப்பட்டதாக தெரிவித்தனர்.

போலக்ஷம்மா கோவிலை வைத்து தமிழ் பட்டியல் பிரிவினர் அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அந்த கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு பட்டியல் பிரிவு பெண்மணியான நாகபூஷனா பிபிசியிடம் பேசும்போது, ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராம தெய்வத்தை ஒன்றாக வணங்குகிறார்கள் என்றும், தமிழ் பட்டியல் பிரிவினர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும் கூறினார்.

“அந்த காலத்தில் தமிழ் மக்கள் இங்கு வந்து குடியேறினர், எங்கள் முன்னோர்களும் அவர்களுக்கு வீடு கொடுத்தார்கள், பின்னர் அவர்களும் நாங்களும் அவ்வப்போது சந்திக்கிறோம். அதெல்லாம் விசயமல்ல, இப்போது இந்த மாதிரியான அரசியல் நடக்கிறது.

அவர்கள் எங்கள் ஊர் பெரியவர்களிடம் தனித்தனியாக வழிபாடு நடத்துமாறு கூறுகின்றனர். ஏடுல் விவசாயிகள் மீது சேற்றை அள்ளி வீசுகிறார்கள். தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடுகிறார்கள்.எங்கள் ஏழு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் `பட்டியல் பிரிவினராகிய நீங்கள் எங்கும் வரவேண்டாம், போகவேண்டாம்` என்று சொன்னதில்லை. இதை வீணாக அரசியலாக்குகின்றனர். ஆரம்பத்தில் என்ன வழக்கம் பின்பற்றப்பட்டதோ அதே வழக்கமே தற்போதும் பின்பற்றப்பட வேண்டும் ” என்று நாகபூஷனா தெரிவித்தார்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

தமிழ் பெண்கள்

தெலுங்கு பட்டியல் பிரிவினர் – விவசாயிகள் இடையே நல்லுறவு

கொல்லப்பள்ளி பட்டியல் பிரிவினர் பகுதியில் சுமார் 50 வீடுகள் உள்ளன. அங்குள்ள குடியிருப்புக்கு சென்றால் போனால் முதலில் தமிழ் பட்டியல் பிரிவினரின் வீடுகள்தான் தென்படுகின்றன. இரண்டு தெருக்களில் தமிழ் பட்டியல் பிரிவினர் வசிக்கின்றனர்.

தமிழ்நாடு எல்லையையோட்டி ஆந்திராவில் அமைந்துள்ள இந்த கிராகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் பிரிவினர் அதிக எண்ணிக்கையில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 30 வீடுகளில் தமிழ் பட்டியல் பிரிவினர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த தமிழரான கஜபதி இதற்கு முன்பு காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியில் அவர் இருக்கிறார்.

தமிழ் பட்டியல் பிரிவினரின் வீடுகளைத் தாண்டி சுமார் 10 மீட்டர் சென்றால் தெலுங்கு பட்டியல் பிரிவினர் வசிக்கும் தெரு வரும். 20 வீடுகளில் அவர்கள் வசிக்கின்றனர்.

இந்த குடும்பங்களில் பலர் திருவிழாக்கள், திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்பான பணிகளில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தோட்டி என்று குறிப்பிடுகின்றனர்.

ஏழு கிராமங்களில் உள்ள விவசாயிகளுடன் இவர்கள் நல்லுறவை பேணுகின்றனர்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

தமிழ் பெண்மணி சம்பூரணம்

தெலுங்கு பட்டியல் பிரிவினர் வசிக்கும் தெருவில் நுழைந்தவுடனே ஒரு சிறிய கோவிலை காணமுடிகிறது. கிராம ஊர் திருவிழாவின்போது 7 நாட்களுக்கும் 7 கிராமங்களுக்கு அம்மன் அழைத்து வரப்படுவது வழக்கம் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

அப்போது அங்குள்ள பட்டியல் பிரிவினர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதாகவும், ஏழு கிராம மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி தங்கள் கைகளால் பிரசாதம் வழங்கி மரியாதை செய்வதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்பிறகு, பெண்கள் கோவிலுக்கு சென்று வணங்குவார்கள். திருவிழா கொண்டாட்டங்கள் முடிவடையும். ஆனால், தமிழ் பட்டியல் பிரிவினர் தெலுங்கு பட்டியல் பிரிவினர் தெருவில் உள்ள அம்மனைத் தங்கள் தெருவுக்குக் கொண்டு வந்து வழிபட உரிமை கோருகின்றனர். இதனால்தான் சர்ச்சை தொடங்கியது என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழரான சம்பூர்ணா பிபிசியிடம் பேசும்போது, தங்களுக்கு கடவுள் வேண்டும் என்றும் கடவுளுக்கு தாங்களும் மரியாதை செய்ய விரும்புவதாகவும் கூறினார். தெலுங்கு மக்கள் முதலில் பூஜைகள் செய்த பிறகு தங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கினால் கூட பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“நாங்களும் பூஜை செய்ய வேண்டும். எங்களுக்கும் கடவுள் வேண்டும். முதலில் நீங்கள் வழிபாடு செய்யுங்கள் பிறகு நாங்கள் வழிபாடு நடத்துகிறோம் என்று சொல்லிவிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தெரு வழியாக சாமியை அழைத்து வருவார்கள், ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு செய்யவில்லை” என்று அவர் கூறினார்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

கோவில் அறங்காவலர் ஸ்ரீனிவாச ரெட்டி

நாங்கள் யாரையும் தடுக்கவில்லை: அறங்காவலர் சீனிவாச ரெட்டி

கிராம கோவிலுக்குள் நுழைய பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்பதை அறிய கிராம தெய்வ கோவிலின் அறங்காவலரான சீனிவாச ரெட்டியிடம் பிபிசி பேசியது.

கொல்லப்பள்ளியை சுற்றியுள்ள 7 கிராமங்களில் 14 சாதியினர் இருப்பதாகவும், அனைவரும் கோவிலுக்கு அருகில் ஒன்றாக சேர்ந்து வழிபாடு செய்வதாகவும், கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று யாரையும் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பழங்காலத்தில் எப்படி நடந்ததோ அந்த வழக்கப்படியே அம்மன் வழிபாடு நடந்து வருவதாக கூறிய சீனிவாச ரெட்டி, கோவிலை சாக்காக வைத்து ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு தமிழக பட்டியல் பிரிவினர் இடைஞ்சல் செய்வதாக விமர்சித்தார்.

“தெலுங்கு பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதிக்கு மட்டும் கடவுளை எடுத்து செல்லும் வழக்கம் கிராமத்தில் உள்ளது. இப்போது சண்டை வந்ததால் அம்மனை எங்களிடம் கொண்டு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அந்த கிராமத்தில் உள்ள பட்டியல் பிரிவினருக்கு இடையே ஏற்படும் பிரச்சனை ஏழு கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் பாதிக்கும். அம்மனை தனித்தனியாக தங்கள் பகுதிக்கும் கொண்டுவரச் சொன்னால், எங்கள் வழக்கத்தை என்ன செய்வது? பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இதையே கேட்டால் என்ன செய்வது? அனைவருக்கும் கொடுக்க முடியாது.” என்று சீனிவாச ரெட்டி தெரிவித்தார்.

ஆந்திரா தமிழ் தலித்
படக்குறிப்பு,

ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ் பட்டியல் சாதி மக்கள் வழிபாடு நடத்துவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளனர்

கோவில் அருகே நடந்தது என்ன?

ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ் பட்டியல் பிரிவினர் வழிபாடு நடத்துவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளனர் அப்போது. கோயில் பூட்டியிருந்துள்ளது. இதையடுத்து பட்டியல் பிரிவினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஊடகங்களில் இந்த சம்பவம் இடம்பெறத் தொடங்கியது.

தமிழ் பெண்மணியான சம்பூரணம் இது குறித்து பிபிசியிடம் பேசியபோது, இருதரப்பும் ஒன்றாக இணைந்து வழிபாடு நடத்துவோம் என்று தெலுங்கு பட்டியல் பிரிவினரிடம் கூறி வருகிறோம் ஆனால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களை புறந்தள்ளுகின்றனர் என்றார்.

“ கடந்த ஆண்டும் ஒன்றாக சேர்ந்து வழிபாடு செய்வோம் என்று கூறினோம். அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். அவர்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தனர். நாங்கள் சனிக்கிழை வழிபாடு நடத்தினோம். தற்போது தெலுங்கு பட்டியல் பிரிவினருடன் சேர்ந்து ரெட்டி மக்களும் எங்களை புறந்தள்ளுகின்றனர். அவர்களுக்கு தெலுங்கு பட்டியல் பிரிவினரின் உதவி தேவைப்படுகிறது. ” என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவில் அறங்காவலர் சீனிவாச ரெட்டி பேசும்போது, அங்கு பூஜைகள் நடத்தும் ஈஸ்வரி, கோவிலை பூட்டிவிட்டு மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றுவிட்டார் என்றார்

“பூஜை செய்யும் பெண்மணி வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் அவர்கள் (தமிழ் பட்டியல் பிரிவினர்) வழிபாடு நடத்த வந்துள்ளனர். அவர்கள் வருவது குறித்து எங்களிடம் சொல்லவில்லை. கோவிலுக்கு வந்த பின்னர் கூட எங்களிடம் தெரிவித்திருந்தால் பூட்டை திறந்து அவர்களை வழிபட வைத்திருப்போம். அவர்கள் என்னிடம் கூறியிருந்தால், நானே நேரில் சென்று பூட்டை அகற்றியிருப்பேன். அதற்கு பதிலாக அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதோடு பூட்டையும் உடைக்க முயற்சி செய்தனர். அடுத்த நாள் அவர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி சென்றனர். அவர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துவதில் எந்த தடையும் இல்லை. பட்டியல் பிரிவினர் பகுதிக்கு சாமி செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறினார்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

பட்டியல் பிரிவினர் பகுதியில் உள்ள கோவில்

தமிழ் பட்டியல் பிரிவினருக்கு சம உரிமை வழங்கப்படுவதில் தெலுங்கு பட்டியல் பிரிவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிராம மக்களிடம் சென்று உங்களுக்கு எல்லா வேலைகளையும் செய்ய நாங்கள் வேண்டுமா அல்லது அவர்கள்(தமிழ் பட்டியல் பிரிவினர்) வேண்டுமா என்று முறையிட்டுள்ளனர். இதையடுத்து, தெலுங்கு பட்டியல் பிரிவினருக்கு ஆதரவாக நிற்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.

வழிபாட்டுக்கு நாங்கள் தகுதியற்றவர்களா – கேள்வி எழுப்பும் தமிழ் பட்டியல் பிரிவினர்

கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் அம்மாவாரிணி ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் என்றும், பட்டியல் பிரிவினர் பகுதி முழுவதும் அம்மாவாரிணியை ஊர்வலமாக நடத்த வேண்டும் என்றும் தமிழரான கஜபதி கோரிக்கை வைக்கிறார்.

“அப்போது ஒரு தெரு இருந்தபோது அங்கேயே ஊர்வலம் செல்வார்கள். தற்போது 3 தெருக்கள் உள்ளன. அதனால்தான் எல்லா தெருக்களையும் சுற்றி வர வேண்டும் என்று கூறுகிறோம். இந்த வழிபாடு நடத்த நாங்கள் தகுதியற்றவர்களா” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஆனால், இதற்கு அதிகாரிகள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோயில் அறங்காவலர் சீனிவாச ரெட்டி கேட்டுக் கொண்டார். கடந்த 23ம் தேதி ஏழு கிராம மக்களிடம் பேசிய அவர், பட்டியல் பிரிவினர் கோவிலுக்கு வந்து வழிபடலாம், ஆனால் ஒரு கிராமத்தில் இரண்டு இடங்களில் கடவுளை நிறுத்த முடியாது என அவர் கூறினார்.

தெலுங்கு, தமிழ் பட்டியல் பிரிவினருக்கு இடையே நிலவும் பிரச்னை தீரும் வரை அம்மனை ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், இல்லையெனில் அங்கு மோதல் ஏற்படும் என்றும் தெலுங்கு பட்டியல் பிரிவினர் கூறியதாக அவர் கூறினார்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

கொல்லப்பள்ளி

கலெக்டரிடம் புகார் அளித்த தமிழ் பட்டியல் பிரிவினர்

இந்த விவகாரம் தொடர்பாக கஜபதி பிற பட்டியல் பிரிவு குழுக்களுடன் சேர்ந்து அதிகாரிகளிடம் தெலுங்கு பட்டியல் பிரிவினர் தங்களை அனுமதிக்கவில்லை என்றும் கிராம மக்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்று கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் புகார் அளித்தனர்.

அதிகாரிகள் இரு சமூகத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ் பட்டியல் பிரிவினர் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் கமிட்டியில் தமிழ் பட்டியல் பிரிவினருக்கு உறுப்பினர் சேர்க்கை வழங்கவும், பட்டியல் பிரிவினர் குடியிருப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலும் அம்மனை ஊர்வலம் அழைத்து செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து புத்தூர் தாசில்தார் பரமேஸ்வரசுவாமி கூறுகையில், “தமிழ்நாடு பட்டியல் பிரிவினர் கலெக்டரிடம் சென்றபோது, அவர் எங்களை அழைத்து, நீங்கள் வந்து கோவிலில் பூஜை செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசாருடன் அங்கு சென்றோம்” என்றார்.

ஆந்திரா தமிழ் பட்டியல் சாதியினர்
படக்குறிப்பு,

புத்தூர் டிஎஸ்பி ஸ்ரீனிவாச ராவ்

இரு பட்டியல் பிரிவினருக்கு இடையேயான மோதலுக்கு மறைமுக அரசியலே காரணம் என போலீசார் கூறுகின்றனர். ‘மேல் சாதியினருக்கு’ எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பட்டியல் பிரிவினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று ஊடகங்கள் பரப்பும் பிரசாரத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் புத்தூர் டிஎஸ்பி சீனிவாச ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

“கடந்த 19ம் தேதி, கொல்லப்பள்ளியில் பட்டியல் பிரிவினரை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. உண்மையில் அந்த கோவிலுக்கு பட்டியல் பிரிவினர் மற்ற சாதியினருடன் சேர்ந்து பல நூறு ஆண்டுகளாக சென்று வருகிறார்கள். கிராமத்தில் தெலுங்கு பட்டியல் பிரிவினரும் தமிழ் பட்டியல் பிரிவினரும் உள்ளனர். வெளியூர்களில் இருந்து குடியேறிய தமிழ் பட்டியல் பிரிவினர், தெலுங்கு பட்டியல் பிரிவினருக்கு கிராம மக்கள் காலங்காலமாக அளித்து வரும் அதே மரியாதையை தங்களுக்கும் கொடுக்க விரும்புகிறார்கள்” என்று டிஎஸ்பி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *