பட மூலாதாரம், Getty Images
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.
ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்?
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8ஆம் நாளை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் குறிக்கின்றனர்.
ஏன் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
பட மூலாதாரம், Corbis / Hulton Deutsch
கிளாரா ஜெட்கின் 1910இல் சர்வதேச மகளிர் தினத்தை முதல் முறையாக அறிவித்தார்.
மகளிர் தினம் எப்போது தொடங்கியது?
சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது.
1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.
இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது.
1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இது முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது.
எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 111வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) “கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்” என்பதாகும்.
சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.
அதே சமயம் அன்றைய அரசியல் வேர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
2022இல் மெக்சிகோவின் டோலுகாவில் பாலின வன்முறைக்கு எதிரான சர்வதேச மகளிர் தின ஆர்ப்பாட்டத்தில் பெண் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்
மார்ச் 8 ஏன் தேர்வானது?
சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை.
1917இல் ரஷ்ய பெண்கள் “உணவும் அமைதியும்” என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை – அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.
ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஊதா நிறம் பெரும்பாலும் ஐடபிள்யூடி உடன் தொடர்புடையது. இந்த நிறம், ‘நீதி மற்றும் கண்ணியத்தை’ குறிக்கிறது.
மகளிர் தினத்தில் மக்கள் ஏன் ஊதா நிற ஆடையை அணிகிறார்கள்?
ஊதா, பச்சை, வெள்ளை ஆகியவை ஐடபிள்யூடி நிறங்கள் என்று சர்வதேச மகளிர் தின இணையதளம் தெரிவித்துள்ளது.
“ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை தூய்மையை பிரதிபலிக்கிறது.
ஒரு சர்ச்சைக்குரிய கருத்து என்றாலும் நிறங்கள் 1908இல் பிரிட்டனில் உள்ள பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (டபிள்யூஎஸ்பியு) உருவானது,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?
உண்மையில், ஆண்களுக்கான தினம், நவம்பர் 19 என இருக்கவே செய்கிறது.
ஆனால் இது 1990களில் இருந்து மட்டுமே குறிக்கப்பட்டது. இந்த தினத்தை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் இதை கொண்டாடுகிறார்கள்.
ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, “ஆண்கள் அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறையான மதிப்பை” இந்த தினம் கொண்டாடுகிறது. மேலும் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்தவும் ஆண்களின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலின உறவுகளை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று யுக்ரேனில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹங்கேரிக்கு வந்தடைந்தபோது, அவர்கள் மலர்களால் வரவேற்கப்பட்டனர்.
மகளிர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
சர்வதேச மகளிர் தினம் என்பது ரஷ்யா உட்பட பல நாடுகளில் தேசிய விடுமுறையாக உள்ளது. அங்கு மார்ச் 8ஆம் தேதி மூன்று அல்லது நான்கு நாட்களில் பூ விற்பனை இரட்டிப்பாகும்.
சீனாவில், மாநில கவுன்சில் அறிவுறுத்தியபடி, பல பெண்களுக்கு மார்ச் 8 அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இத்தாலியில், சர்வதேச மகளிர் தினம், அல்லது லா ஃபெஸ்டா டெல்லா டோனா, மிமோசா மலர்களைக் கொடுப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்த பாரம்பரியத்தின் தோற்றம் தெளிவாக இல்லை. ஆனால் இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரோமில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவில், மார்ச் மாதம் பெண்களின் வரலாற்று மாதமாகும். இந்த நாளில் நாட்டின் அதிபர் வெளியிடும் அறிவிப்பு அமெரிக்க பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
சம ஊதியத்திற்காக அமெரிக்க மகளிர் கால்பந்து அணி வெற்றிகரமாக போராடியது
2024 மகளிர் தின கருப்பொருள் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையானது 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை ‘பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது, அதே சமயம் இந்த ஆண்டுக்கான பரப்புரைக் கருப்பொருள் ‘அனைவரையும் உள்ளடக்கும் பணியை ஊக்குவிக்கவும்’ என்பதாகும்.
சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த பரப்புரையின் மூலம், சமூகத்தின் பல்வேறு துறைகளில் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமைக்காக பெண்கள் போராடி வருகின்றனர்
நமக்கு ஏன் அவசியம்?
கடந்த ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், இரான், யுக்ரேன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள பெண்கள் அந்தந்த நாடுகளில் போர், வன்முறை மற்றும் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில் தங்கள் உரிமைகளுக்காக போராடினர்.
ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள் எழுச்சி மனித உரிமைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இப்போது பெண்களுக்கு உயர்கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே பெரும்பாலான வேலைகளில் ஈடுபட கட்டுப்பாடு, ஆண் துணை இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்ய தடை மற்றும் பொது இடங்களில் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலைமை உள்ளது.
பட மூலாதாரம், Mahsa Amini Family
மாசா அமினி தாக்கப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகளின் புகார்களை இரான் போலீசார் மறுத்தனர்
இரானில், பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப்பால் மறைக்க வேண்டும் என்ற அந்நாட்டு ஆளுகையின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி டெஹ்ரானில் அறநெறி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மாசா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் தூண்டியது.
அப்போதிருந்து, பல இரானியர்கள், பெண்களுக்கான சிறந்த உரிமைகள் மற்றும் தற்போதைய அரசியல் தலைமையில் மாற்றத்துக்கு அழைப்பு விடுத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
“பெண், வாழ்க்கை, சுதந்திரம்” என்பதே போராட்டங்களின் முழக்கமாகும். அதிகாரிகள் அவற்றை “கலவரங்கள்” என்று சித்தரித்து, வலிமையுடன் எதிர்வினையாற்றிய நடவடிக்கையில். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
2022ஆம் தேதி பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய படைகள் யுக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, போரால் தூண்டப்பட்ட விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக யுக்ரேனிலும் உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றில் பாலின இடைவெளிகள் மோசமடைந்துள்ளன என்று ஐ.நா தெரிவித்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
