பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
ஜோத்பூரின் காளி பேரியில் வசிக்கும் மாயாவின் குடும்பம்
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த ஏராளமான இந்துக் குடும்பங்கள் பாகிஸ்தான் அருகே உள்ள ராஜஸ்தானில் வாழ்கின்றன. சிஏஏ அமலுக்கு வந்த பிறகு சில குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது. ஆனால், பெரும்பாலான குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்த குடும்பங்கள் இந்துக்களாக இருந்தும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இவர்கள் கவலைப்படுவது ஏன்?
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
ஜோத்பூரின் அங்கன்வா காலனி மக்கள், சிஏஏ பற்றி விவாதிக்கின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வருத்தத்தில் இந்துக் குடும்பங்கள்
“சிஏஏ-வின் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதன் மூலம் எங்களுக்கு தெரிந்த பலர் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். ஜனவரி 11, 2015 அன்று நான் எனது குடும்பத்துடன் இந்தியா வந்தேன். சிஏஏ சட்டத்தின்படி, நான் 11 நாட்கள் தாமதமாக இந்தியா வந்துவிட்டேன்.
எனவே எனது குடும்பத்திற்கு இந்திய குடியுரிமை கிடைக்காது. நாங்களும் இந்துக்கள், நாங்களும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அங்கு பல இன்னல்களை அனுபவித்த பின்னரே நாங்கள் இந்தியா வந்தோம்” என்று கூறுகிறார் ஹேம் சிங்.
இவர் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் ஜோத்பூரில் உள்ள அங்கன்வா குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியா வந்த பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மட்டுமே இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவர்கள்.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
அங்கன்வா காலனியில் வசிக்கும் ஹெமி பாய், கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார்.
குஜராத்திலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற குடும்பங்கள்
ஜோத்பூர் மாவட்டத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அங்கன்வா குடியிருப்பு உள்ளது, அங்கு சுமார் இருநூற்று ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த எண்ணூறு பேர் வாழ்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், இவர்களின் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள். இங்கு வசிக்கும் சுமார் நாற்பது பேர் சிஏஏ விதிகளின்படி குடியுரிமை பெறலாம். சுமார் இருபது பேர் காலனியில் ஒரு குடிசைக்குள் அமர்ந்து சிஏஏ பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் ராமச்சந்திர சோலங்கி. இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் 31 டிசம்பர் 2014 அன்று இந்தியா வந்தவர். “இங்கு ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. காரணம், நாங்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் குடிமக்களாக மாறப் போகிறோம்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
குடிசையில் அமர்ந்திருப்பவர்களைச் சுட்டிக்காட்டிய அவர், “ஆனால், சிஏஏவுக்குப் பிறகு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அதே அளவு சோகமாகவும் இருக்கிறோம். எங்கள் காலனியில் இரண்டு வீடுகளில் மகிழ்ச்சியான சூழல் இருந்தால், முன்னூறு வீடுகள் சோகத்தில் உள்ளன. சிஏஏ காரணமாக, டிசம்பர் 31, 2014க்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது.” என்று கூறுகிறார் சோலங்கி.
அதே காலனியில் வசிக்கிறார் ஹெம் பில். இவர் தனது சகோதரர், நான்கு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் 2014ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
“எங்களுக்கு குடியுரிமை அளிக்க அரசாங்கம் சட்டம் இயற்றியிருப்பதாக கேள்விப்பட்டோம். இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மேம்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது” என்று ஹெம் பில் கூறுகிறார்.
ஹெம் பில்லின் மனைவி அமர் பாய் கூறுகையில், “பாகிஸ்தானில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரியும் எங்கள் உறவினர்களிடம் இன்று பேசினேன், அவர்களும் உங்களுக்கு கண்டிப்பாக குடியுரிமை கிடைக்கும் என்று கூறினார்கள்” என்றார்.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
சிஏஏ-இன் கீழ் குடியுரிமை பெறுவதற்கான காலக்கெடு முடிந்து 11 நாட்களுக்குப் பிறகு ஹேம் சிங் இந்தியா வந்துள்ளார்.
இடம்பெயர்ந்த மாணவர்களின் எதிர்காலம்
ஹெம் பில் மற்றும் அமர் பாய் ஆகியோரின் மகள் கவிதா, எட்டாம் வகுப்பு படிக்கிறார். பாஸ்போர்ட் வைத்திருப்பதன் அடிப்படையில் அவருக்கு பள்ளியில் இடம் கிடைத்தது.
“நாங்கள் 2014இல் இந்தியாவுக்கு வந்தோம், எனவே எங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று நேற்று தந்தை எங்களிடம் கூறினார், விரைவில் நாங்கள் இந்தியர்களாக மாறுவோம்.
குடியுரிமை கிடைத்தவுடன் படிப்பிலும், வேலையிலும் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படித்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்கிறார் கவிதா.
இந்த காலனியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்த ஹெமி பாய் என்பவரின் வீடு உள்ளது. அவர் செப்டம்பர் 2014இல் தனது குடும்பத்துடன் இந்தியா வந்தார். ஜோத்பூரில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பிஏ படித்து வருகிறார்.
“இந்திய அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியதாக, நேற்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. பாகிஸ்தானில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். இந்தியா வந்த பிறகு நீதிமன்ற உத்தரவு மூலம் பள்ளியில் சேர்க்கை பெற்றேன்.
குடியுரிமை கிடைத்தவுடன் எங்களது எதிர்காலம் வெகுவாக மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது. நாங்களும் இந்தியராக மாறுவோம். குடியுரிமை கிடைத்தால், எனக்கும் வேலை கிடைக்கும். பிஏவுக்குப் பிறகு பி.எட் படித்து, ஆசிரியராக வேண்டும் என்பதே என் ஆசை” என்கிறார் ஹெமி பாய்.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
2015, 2016 அல்லது அதற்குப் பிறகு வந்த அனைவரையும் இதில் சேர்க்க வேண்டும் என்கிறார் ராமச்சந்திர சோலங்கி.
‘எங்களுக்கும் குடியுரிமை வேண்டும்’
சிஏஏ சட்டத்தின் கீழ் ஹேம் சிங்கிற்கு இந்திய குடியுரிமை கிடைக்காது, ஏனெனில் அதற்கான காலக்கெடு முடிந்து 11 நாட்களுக்குப் பிறகு அவர் இந்தியா வந்தார்.
“எங்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் இந்தியாவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகிறது. மற்ற இந்திய மக்கள் பெறும் வசதிகள், எனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”
இந்தியக் குடியுரிமை பெறக்கூடியவர்களில் ராமச்சந்திர சோலங்கியும் ஒருவர். “எல்லோரும் எங்களுடன் குடியுரிமை பெற்றால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் விரும்புகிறோம், 2015, 2016 அல்லது அதற்குப் பிறகு வந்த அனைவரையும் அதில் சேர்க்க வேண்டும்” என்கிறார் அவர்.
“நாங்கள் குடியுரிமையைப் பெற்று இந்தியர்களாக வாழ்வதைப் பார்த்துவிட்டு, இறக்க வேண்டும் என்று எண்பது வயது முதியவர்கள் விரும்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் வாழ்கிறோம்” என்கிறார் சோலங்கி.
பாகிஸ்தான் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காகப் பணிபுரியும் சீமந்த் லோக் சங்கதன் என்ற அமைப்பின் தலைவரான இந்து சிங் சோதாவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடுவுக்கு எதிராக இருக்கிறார்.
“2014 முதல் 2024 வரையிலான பத்து வருட பயணத்தில் பலரின் வாழ்க்கை அடங்கியுள்ளது, அவர்களும் சிஏஏ-இன் கீழ் குடியுரிமை பிரிவில் சேர்க்கப்பட வேண்டும். இந்தியாவில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வாழும் மக்கள் குடியுரிமை பெற வேண்டும்.” என்கிறார் இந்து சிங் சோதா.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
இடம்பெயர்ந்த மக்களின் பாகிஸ்தான் பாஸ்போர்ட்.
இந்தியக் குடியுரிமை கிடைத்தால் என்ன மாறும்?
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அகில் சௌத்ரி பிபிசியிடம் பேசியபோது, “இந்தியக் குடியுரிமையைப் பெற்ற பிறகு, மற்ற இந்தியர்களைப் போலவே அவர்களுக்கும் அனைத்து வசதிகளும், அரசின் திட்டங்களின் பலன்களும், சட்ட உரிமைகளும் கிடைக்கும்” என்கிறார்.
ஜோத்பூரின் காளி பெரி குடியிருப்பில் வசிக்கும் கோவிந்த் பீல், பாகிஸ்தானில் இருந்து 1997இல் இந்தியாவுக்கு வந்தவர். 2005இல் குடியுரிமையும் பெற்றார்.
“குடியுரிமை பெறுவதற்கு முன்பு, எல்லோரும் என்னை துன்புறுத்தினார்கள். ஆனால், குடியுரிமை பெற்ற பிறகு, வாழ்க்கை எளிதாகிவிட்டது. ஆனால், குடியுரிமை பெற்ற பிறகும் எனக்கு சொந்த வீடு இல்லை” என்கிறார் அவர்.
“இப்போது நாங்கள் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இந்திய மக்களுக்கு கிடைக்கும் வசதிகள், முன்னுரிமை, எங்களுக்கு இப்போது இல்லை. குடியுரிமை பெற்ற பிறகு, எங்களுக்கும் அத்தகைய அடிப்படை வசதிகள் கிடைக்கும்” என்கிறார் ஹெம் பில்.
“பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்த இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமின்றி மறுவாழ்வுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பள்ளிகள் இல்லை, கழிவறை இல்லை, சாலை இல்லை. இந்த வசதிகள் எல்லாம் கிடைத்தால்தான் அவர்கள் வாழ்வில் மாற்றம் வரும்” என்கிறார் இந்து சிங் சோதா.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
அங்கன்வாடி குடியிருப்பு வீடுகளில் காவிக்கொடி பறக்கிறது.
பாகிஸ்தான் அகதிகளின் மற்றொரு காலனி
காளி பேரி ஜோத்பூர் மாவட்டத்திலிருந்து சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜோத்பூர் கோட்டையை அடுத்துள்ள சாலை சுர்சாகர் வழியாக, காளி பேரியை அடைகிறது.
காளி பேரி அருகே உள்ள பகுதிகளில் கல் குவாரிகள் உள்ளன. இதில் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய பலர் கூலி வேலை செய்து வருகின்றனர். காளி பேரியில், டாக்டர் அம்பேத்கர் நகர் காலனி வழியாக பில் காலனிக்கு கான்கிரீட் சாலை செல்கிறது.
சுமார் 2,800 பேர் வசிக்கும் இந்த பில் குடியிருப்பில் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த நானூறு குடும்பங்கள் வசிக்கின்றன. பிரதான சாலையின் இடதுபுறத்தில் உள்ள இந்த பில் குடியிருப்பில் ஒரு அரசு பள்ளி உள்ளது. அதன் பலகையில் ‘பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி’ என்று எழுதப்பட்டுள்ளது.
பள்ளிக்குப் பக்கத்தில் தான் மாயாவின் வீடு. அவர் 2013இல் பத்து உறுப்பினர்களைக் கொண்ட தனது குடும்பத்துடன் இந்தியா வந்தார். “குடியுரிமைக்காக நிறைய முயற்சி செய்தேன். நிறைய ஓடினேன். ஆனால் குடியுரிமை கிடைக்கவில்லை. மனதளவில் மிகவும் சோர்வாக உணர்ந்தேன்” என்கிறார் மாயா.
சிஏஏ பற்றி ஏதாவது தெரியுமா என்று பிபிசி கேட்டதற்கு, “அரசாங்கம், குடியுரிமை கொடுக்கப் போகிறது என்று போனில் பார்த்தேன். இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இனி இது எங்கள் நாடு. குடியுரிமை கிடைத்தால், எங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் சுதந்திரமாக நடமாட எந்த தடையும் இருக்காது” என்று மாயா கூறுகிறார்.
மாயாவின் ஆறு மகன்களில், மூத்த மகன் இறந்துவிட்டார். அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் மாயாவுடன் வசிக்கின்றனர். ஐந்து மகன்களில் மூன்று பேர் கல் குவாரிகளில் வேலை செய்கிறார்கள், இருவர் படிக்கிறார்கள்.
அதே குடியிருப்பில் வசிக்கும் குட்டி, கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடும்பத்துடன் இந்தியா வந்தார். அவர் முதலில் பேசத் தயங்கினார், பின்னர் “தீபாவளியைப் போல ஒரு மகிழ்ச்சியான சூழலை உணர்கிறேன். குடும்பத்தில் நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் என் கணவர் ஆகியோர் உள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருவர் படிக்கிறார், மூன்று பேர் கல் குவாரிகளில் வேலை செய்கிறார்கள். இந்தியக் குடிமகனாக இருந்தால் சொந்தமாக நிலம் வாங்கலாம், கார் வாங்கலாம். குடிமகனாக இருப்பவர்களுக்கு தான் அரசு சலுகைகள் கிடைக்கும், எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை” என்றார்.
மாயாவின் கணவர் மனு ராம் பேசுகையில், ”நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தேன். என்ஓசியும் வந்துள்ளது, ஆனால் குடியுரிமை சான்றிதழ் இன்னும் வரவில்லை.
இப்போது அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதால் எங்களுக்கு குடியுரிமை கிடைக்கும். அரசின் திட்டங்களின் பலன்கள் கிடைக்கும், கார் வாங்க முடியும், குடியுரிமை இல்லாமல் கூலி வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. பாஸ்போர்ட் மற்றும் நீண்ட கால விசாவின் அடிப்படையில் மட்டுமே எங்களுக்கு ஆதார் அட்டை கொடுக்கப்பட்டது” என்றார்.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
இடம்பெயர்ந்தோருக்கு அடிபப்டை வசதிகள் அனைத்தும் கிடைத்தால்தான் மாற்றம் வரும் என்கிறார் இந்து சிங் சோதா.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ள குறைகள்
சமூக ஆர்வலர் அருணா ராய் பிபிசியிடம் பேசுகையில், “இந்தச் சட்டமே அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நமது சமத்துவ விதிகளுக்கு எதிரானது என்று நான் நினைக்கிறேன். இதுவே இந்த சட்டத்தில் ஒரு பெரிய சிக்கலாக உள்ளது.
இது குறித்து யாரிடமும் கருத்து கேட்கப்படவில்லை, சட்டம் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை “ என்று கூறுகிறார்.
“ஆர்டிஐ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற சட்டங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் சிஏஏவில் யாரிடமும் கருத்து கேட்கப்படவில்லை.” என்கிறார் அருணா ராய்.
இந்து சிங் சோதா பேசுகையில், “சிஏஏவில் டிசம்பர் 31, 2014 என்ற காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். மதத் துன்புறுத்தலுக்குப் பிறகு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்க சிஏஏ-வில் விதி உள்ளது.
இந்த சட்டத்தில் குறிப்பிட்ட கால அடிப்படையிலான செயல்முறை இருக்க வேண்டும், இல்லையெனில் இந்த செயல்முறைக்கு அதிக அவகாசம் தேவைப்படும” என்கிறார்.
இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் குடியுரிமை பெற வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சோதா, “அவர்கள் இஸ்லாமிய நாட்டிலிருந்து வந்தால், அங்கு மத ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், இரு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு திருமணங்கள் நடக்கின்றன.
அதனால் தான் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டுமென நான் 2004இல் கோரிக்கை வைத்தேன்” என்கிறார்.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
காளி பேரி குடியிருப்புக்கு அருகில் ஒரு கல் குவாரி.
நிர்வாகம் என்ன சொல்கிறது?
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.
இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த 27,674 பேர் நீண்ட கால விசாவின் அடிப்படையில் ராஜஸ்தானில் வாழ்கின்றனர் என ராஜஸ்தான் உள்துறை துணைச் செயலாளர் ராஜேஷ் ஜெயின் பிபிசியிடம் கூறினார்.
இதுவரை இடம்பெயர்ந்த எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, “2016 முதல், 3,648 இடம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், 1,926 இடம்பெயர்ந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர், இது பரிசீலனையில் உள்ளது” என்றார் ராஜேஷ் ஜெயின்.
பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்கள் மட்டுமே ராஜஸ்தானில் வசிக்கின்றனர். இதிலும் ஜோத்பூரில் அதிகபட்சமாக 18 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சிஏஏ விதிகளின் கீழ் இந்தியாவுக்கு வருவதற்கான காலக்கெடு காரணமாக, இடம்பெயர்ந்தவர்களில் மிகச் சிலரே குடியுரிமை பெறுவார்கள் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ஜோத்பூர் ஆட்சியர் கௌரவ் அகர்வால் கூறுகையில், “ஜோத்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 18 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் சுமார் 3300 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர்” என்றார்.
“புதிய திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், மூன்று முதல் நான்காயிரம் பேர் குடியுரிமை பெறுவார்கள். இவர்கள் கங்கனா, காளி பெரி, பாசி தம்போலியான், ஜாவர் சாலை, ஜோத்பூரின் அங்கன்வா ஆகிய பகுதிகளைச் சுற்றி வாழ்பவர்கள்” என்றும் கூறினார்.
சிஏஏ அமலுக்கு வந்த பிறகு, குடியுரிமை பெற பதிவு செய்வதற்கான புதிய இணையதளத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு இதுகுறித்து ஏதேனும் அறிவுறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜஸ்தான் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனந்த் குமார், “தற்போது வரை மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை” என்றார்.
வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தின் அதிகாரியாக இருக்கும் (Foreigners Registration Office) கூடுதல் எஸ்பி ரகுநாத் கார்க் கூறுகையில், ‘எங்களுக்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அறிவுறுத்தல்களைப் பெற்றவுடன், அதற்கேற்ப செயல்முறையைத் தொடர்வோம்” என்றார்.
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
தனது மனைவி அம்ரி பாய் மற்றும் மகள் கவிதா மற்றும் சகோதரருடன் ஹெம் பில்.
சிஏஏ-க்கு முன் குடியுரிமை எப்படி கிடைத்தது?
சிஏஏ-க்கு முன்பு, பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு குடியுரிமைச் சட்டம் 1955இன் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்திய சட்டத்தின் 51(A) முதல் 51(E) வரையிலான பிரிவுகளில் அவர்களின் குடியுரிமை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசு ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் ஜெய்சல்மேர் மாவட்ட ஆட்சியர்களுக்கு குடியுரிமை வழங்க அதிகாரம் அளித்துள்ளது.
மாவட்ட நீதிபதிகள் மட்டத்தில், தகுதியான இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு நடைமுறைப்படி குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, குடியுரிமை வழங்குவதற்கான கடைசி முகாம் நவம்பர் 2009இல் நடத்தப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
