ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட UPS நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னை, போரூரில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை (Technology Centre) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பின்னர் பேசியபோது, “கொரோனா என்ற கொடுமையான காலக்கட்டத்தில்தான் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம். கொரோனா மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல, நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. ஆனால், கொரோனாவையும் வென்றோம்; நிதி நெருக்கடியையும் சேர்த்தே வென்றுள்ளோம்” என்று கூறியிருப்பதோடு சில புள்ளிவிவரங்களையும் முன் வைத்தார்.

“2011-12 நிதியாண்டு முதல் கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கங்களுடன் 5.80 விழுக்காடாக இருந்தது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, நிலையான விலைகளின் அடிப்படையில், 2022-23-ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14,53,321 கோடி ரூபாயாகும். வளர்ச்சி விகிதத்தில் இது 8.19 விழுக்காடாகும். 2021-22-ஆம் ஆண்டில், நடப்பு விலைகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2021-22 மற்றும் 2022-23-ல் அகில இந்திய அளவிலான பணவீக்கம் 9.31 விழுக்காடு மற்றும் 8.82 விழுக்காடாக இருந்த நிலையில், தமிழகத்தின் பணவீக்கக் குறியீடு 2021-22-இல் 7.92 விழுக்காடாகவும், 2022-23-இல் 5.97 விழுக்காடாகவும் குறைந்துள்ளது என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புள்ளிவிவரம் மட்டுமல்ல; இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரம். தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், மாநில திட்டக் குழு அலுவலகத்தில் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழக அரசின் பொருளியியல், புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி, மாநில திட்டக் குழு அலுவலகத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோா் செய்தியாளா்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மேற்சொன்ன முதல்வர் குறிப்பிட்டுள்ள பணவீக்கம் குறித்தான புள்ளிவிவரங்களை அடுக்கியதோடு, “தமிழகத்தில் விலையாசி உயர்வு குறைவாக இருக்கிறது..” என்றார்.
மேலும், தனிநபர் வருமானம் பற்றி கூறுகையில், “2021-22-ல் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ரூபாயாக இருந்தது. 2022-23-ல் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டில் தனிநபர் வருமானம், 92 ஆயிரத்து 583 ரூபாயாக இருக்கிறது. ஒன்றிய அளவில் 2022-23-ல் 98 ஆயிரத்து 374 ஆக வந்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, ‘திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது…’ என்று பறைசாற்றியவர், அதன் புள்ளிவிவரங்களை விவரித்தார். “2011-12 நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரை, ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இல்லாமல், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 2018-க்குப் பிறகு, குறிப்பாக கொரோனா பெருந்தொற்று வந்தபிறகு, பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரிய சரிவு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சரிவில் இருந்து மீண்டும் கிட்டத்தட்ட 8 சதவீதம் என்ற அளவில் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டு வருகிறது.
பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த வளர்ச்சி எதிர்மறையாக இருந்தபோது, தமிழக பொருளாதாரம் நேர்மறையாக ஒரு நிலையான இடத்தில்தான் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்கள், அவர் வகுத்துள்ள பொருளாதார நோக்கங்கள், மாநில திட்டக் குழுவின் ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள்” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்ந்து பேசிய, மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், “இலவச பேருந்து திட்டத்தின் மூலம் மாதத்துக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.900 செலவு குறைந்துள்ளது. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் மூலம் என்ன பலன்கள் கிடைத்துள்ளன? என்பதை கள ஆய்வு செய்தால் தெரியும். மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடு குறித்து 3 மாதத்துக்குப் பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தரம் கண்டறியப்படும்” என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ள தனிநபர் வருமானம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தனி நபர் என்றால் அவருடைய வருமானமா. யாருடைய தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது? என்னிடம் வாடகை கட்டவே பணம் இல்லை…” என்று விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் சே. பாக்கியராசன், “போட்டி எப்போதும் வலிமையானவனோடு இருக்க வேண்டும். வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடு என்றும் பின் தங்கியதில்லை. இவர்கள் சொல்வதை பார்த்தால் இதற்கு முன், பின் தங்கி இருந்தது போலவும், இவர்கள் வந்த பிறகே முன்னேற்றியது போலவும் வெளிப்படுத்துகிறார்கள். அதேநேரத்தில் இரண்டாவது இடத்திலோ, மூன்றாவது இடத்திலோதானே இருப்பதாக சொல்கிறார்கள். அப்போது முதல் இடத்தில் இருப்பது எந்த மாடல் ஆட்சி.
ஒவ்வொரு படிநிலையிலும், ஒவ்வொரு ஆட்சியாளர்களும், ஒவ்வொரு ஆட்சி காலத்தில் உருவாக்கிய திட்டங்கள், அந்த திட்டங்களை மக்கள் முன்னெடுத்து போனதன் அடிப்படையில்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறது. இவர்கள் சொல்வது போல் இந்த இரண்டு ஆண்டில் எந்த ஒரு பெரிய மாற்றமும் நிகழவில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்து ஓட்டுகிறார்கள். கருணாநிதி அந்த காலத்திலிருந்து இப்படிதான் சொல்வார். பேருந்து கட்டணம் உயர்ந்தால், ‘ஆந்திராவை பார்த்தீர்களா… கர்நாடகாவை பார்த்தீர்களா…’ என்று ஒப்பிட்டே ஓட்டுவது. நம் ஒப்பீடு எப்போதும் வளர்ந்த நாடுகளுடன் இருக்கணும்.

திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சி வளர்ச்சி என்கிறார்கள். நாம் எதில் தன்னிறைவு அடைந்திருக்கிறோம்? உற்பத்தி பெருக்கியிருக்கிறோம். எந்த துறையில் தான் போராட்டம் இல்லாமல் இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாமல் இருக்கிறது இந்த திராவிட மாடல் அரசு. ஒரு தேர்தல் சமயத்தில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக கொண்டு வந்த புள்ளிவிவரங்களை போல், இப்போது ‘திராவிட மாடல்… திராவிட மாடல்…’ என்று இவர்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு வளர்ச்சியும் கிடையாது” என்றார்.
“இந்த மூன்று முக்கிய புள்ளிகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்பது வியப்போ, ஆச்சரியமோ இல்லை. அதற்கு திமுக ஆட்சி தான் காரணம் என்பது, பொருளாதாரம் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், தமிழ்நாட்டின் சரித்திரம் தெரிந்தவர்கள் எள்ளி நகையாடுவார்கள்” என்கிறார் பாஜக மாநில பொருளாலர் எஸ்.ஆர்.சேகர். அதற்கான காரணம் குறித்து விரிவாக பேசியவர், “கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சி ஜிடிபி, ஜிஎஸ்டிபி (Gross State Domestic Product) கொரோனா காலத்தை தவிர, மற்ற காலக்கட்டத்தில் இதே அளவு அல்லது இதற்கு சமமான அளவு இருந்திருக்கிறது. அதனால் இதற்கு சொந்தம் கொண்டாடுவதற்கு திமுக-வுக்கு எந்த உரிமையும் கிடையாது.

சுதந்திர காலத்திலேயே தமிழ்நாட்டை தொழில்துறையில் முன்னிலை மாநிலமாக மாற்றினார் சி.சுப்பிரமணியம். அதன் பின் காமராஜர் அதை தக்கவைத்தார். இப்படி தமிழ்நாட்டின் அஸ்திவாரம் மிக வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் வந்த திராவிட ஆட்சி அதை மெயிண்டன் செய்திருந்தாலோ அல்லது அதை அதிகமாக்க முயற்சி செய்திருந்தாலோ தொடர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் மட்டுமே இருந்திருக்கும். ஆனால், இதுவரை தமிழ்நாடு முதலிடத்தில் வரவேயில்லை.
தமிழ்நாடு, இந்தியாவில் மற்ற எந்த மாநிலங்களோடும் ஒப்பிடுவதற்கு தேவையில்லாத மாநிலம். ஏனென்றால், தமிழ்நாடு வளர்ந்த ஜப்பான், அமெரிக்க போன்ற நாடுகளோடு ஒப்பிடும் அளவுக்கு உட்கட்டமைப்பு, கல்வி போன்றவற்றில் முன்னணியில் இருக்கும் மாநிலம். அதன் அடிப்படையில், இந்தியாவிலேயே உட்கட்டமைப்பு வசதிகள் அதிகம் பெற்றிருக்கும் மாநிலம். குறிப்பாக, நான்கு சர்வதேச விமானநிலையம். நான்கு மிகப்பெரிய துறைமுகம். 2.6 லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலை. 31 மெகாவாட் மின் உற்பத்தி. இந்தியாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய ஏற்றுமதி. செயல்படுகின்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அதிகமான எண்ணிக்கை. 2.3 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள். அதனுடைய முதலீடு 2.7 லட்சம் கோடி ரூபாய் . கல்வி அறிவு 81%.

தொழில் சாலைகளில் இந்தியாவில் இருப்பதிலேயே 16 சதவீதம் தமிழ்நாட்டில். அதன் உற்பத்தியில் 10 சதவீதம் . இப்படிபட்ட உட்கட்டமைப்பு உள்ள மாநிலம் ஜப்பானை மிச்சும் அளவுக்கு இருக்க வேண்டுமே தவிர, மகராஷ்டிராவை மிச்சும் அளவு இல்லை. திராவிட ஆட்சி காரணமாகத்தான் இவ்வளவு பெரிய உட்கட்டமைப்பு சரியாக பயன்படுத்தாமல், சில புள்ளிவிவரங்களை வைத்து நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம்” என்று தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை பட்டியலிட்டவர், ‘திராவிட ஆட்சியினால் முதலிடத்துக்கு வராமல், இரண்டாம் இடத்திலேயே இருக்கிறோம்’ என்கிறர்.
அதிலும், ‘இப்போது முதலிடத்துக்கும், இரண்டாம் இடத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி உருவாகிக் கொண்டிருக்கிறது’ என்பதை சுட்டிக்காட்டுபவர், ‘இன்னும் தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே 4.1% மக்கள் இருக்கிறார்கள்’ என்கிறார்.
மேலும் தொடர்ந்தவர், “திராவிட ஆட்சியில் கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டின் கடன் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. வெறும் ரூ.23,000 கோடியில் ஆரம்பித்த கடன், இன்று ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு வந்து நிற்கிறது. இவ்வளவு பெரிய கடன் சுமை வைத்து கொண்டு, பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டோம் என்று மார்தட்டுவது நகைப்புக்குறியது. எனவே இது ஸ்டாலின் ஆட்சியின் சாதனையில்லை. சி.சுப்ரமணியம் தொடங்கி, காமராஜர் வரை உருவாக்கிய அஸ்திவாரம்.

இரண்டாவது தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும், கல்வியிலும் அதிகமாக அக்கரை உள்ளவர்கள். உலக நாடுகளில் பெரும்பாலான இடங்களில் கல்வியில் பெரிய பெரிய இடங்களில் இருக்கிறார்கள். குறிப்பாக டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், எஞ்சினியரிங் ஆகிய துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு பெற்று வருகிறது. இந்த வளர்ச்சி உலகத்தரத்தோடு போட்டி போட்டு முன்னணியில் வந்திருக்க வேண்டும். மாறாக வெறும் மகாராஷ்டிராவோடு போட்டி போடும் அளவுக்கு குறைந்து, தரம் தாழ்ந்து போயிருக்கும் வீழ்ச்சி இது. எனவே இந்த புள்ளி விவரங்கள் திமுக ஆட்சியின் சாதனை அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த சோதனை. மக்கள் அடைகின்ற வேதனை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
