தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் முடிவு வெளியாகி வருகிறது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெல்லும் என எதிர்ப்பார்த்த நிலையில், பா.ஜ.க பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வெற்றி வாய்ப்புடன் இருப்பது காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பா.ஜ.க வென்றதன் பின்னணி என்ன?!
சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்க, பாஜக கட்சி பெரும்பான்மை இலக்கைக் கடந்து 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்த நிலையில் சத்தீஸ்கர் முன்னிலை நிலவரங்கள் தலைகீழாக வந்துள்ளன. இதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

விடாபிடி பா.ஜ.க!
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “2003-ல் இருந்து, பா.ஜ.க-வே தொடர்ந்து ஆட்சியில் இருந்தது, 15 ஆண்டுகளுக்கு பிறகு 2018 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் வெற்றியை தட்டி பறித்திருக்கிறது பா.ஜ.க
கடந்தமுறை ஆட்சியை இழந்திருந்தாலும் இம்முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டுமென தீவிரம் காட்டினர் பா.ஜ.க நிர்வாகிகள். மூன்று முறை சத்தீஸ்கர் முதல்வராக இருந்தவரும், பா.ஜ.க-வின் சத்தீஸ்கர் முகமாக அறியப்படுபவருமான ராமன் சிங் தேர்தலில் களம்கண்டாலும் அவரை முன்னிறுத்தாமல், பிரதமர் மோடியின் முகத்தை மட்டுமே பா.ஜ.க முன்னிறுத்தியது. மறுபக்கம், பூபேஷ் பாகல் அரசுமீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பா.ஜ.க தொடர்ச்சியாக மேற்கொண்டது. மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் நடமாட்டம் அதிகரித்துவிட்டது, காங்கிரஸ் அரசாங்கம் அதனை கட்டுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சித்து வந்தது குறிப்பிடதக்கது” என்றனர்.

பெரும் ஏமாற்றத்தில் காங்கிரஸார்..!
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “கடந்த 5 ஆண்டுகளில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் உள்ளூர் அளவில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. . சத்தீஸ்கர் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க முதல்வராகத்தான் பூபேஷ் பாகல் திகழ்ந்தார். மேலும் ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலும், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்திருப்பதாலும் ஓ.பி.சி வகுப்பினரிடையே காங்கிரஸின் செல்வாக்கு அதிகரிக்கும் என்றே பேசப்பட்ட நிலையில்,
தேர்தல் முடிவு தலைகீழாக வந்துள்ளன. 68 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 31 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கடந்தமுறை 15 தொகுதிகளை மட்டுமே வென்ற பா.ஜ.க இம்முறை 54 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது” என்றனர்.

காங்கிரஸை நிகாரித்த மக்கள்!
நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நீண்ட காலமாக பா.ஜ.க ஆட்சி செய்த மாநிலம் சத்தீஸ்கர், பின்தங்கிய மாநிலமாக இருந்ததை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை வகுத்ததுள்ளோம். இருந்தபோதும் ஒரு மாற்றம் வேண்டுமென சத்தீஸ்கர் மக்கள் காங்கிரஸை கடந்த தேர்தலில் தேர்வு செய்தனர். மக்கள் நலனின் சிறிதும் கவனம் செலுத்தாத காங்கிரஸை அரசை மீண்டும் நிராகரித்திருக்கிறார்கள் சத்தீஸ்கர் மக்கள். அங்கே காங்கிரஸ் ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் அமலாகியுள்ளன. குடிநீர் வசதி தொடங்கி மின் விநியோக திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது மத்திய அரசு. குறிப்பாக, பிரதமர் மோடியின் செயல்பாடுகள், கடந்த ஆண்டுகளில் ஊழல் இல்லா ஆட்சி வழங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக சத்தீஸ்கர் மாநில மக்கள் பா.ஜ.க-வை தேர்தெடுத்துள்ளனர்” என்றார் மகிழ்வுடன்.
நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர் “மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளரிடமிருந்து முதல்வர் பூபேஷ் பாகலுக்கு ரூ.508 கோடி கைமாறியதாக அமலாக்கத்துறை தெரிவித்த குற்றச்சாட்வைத்து காங்கிரஸை தொடர்ந்து சாடியது பா.ஜ.க. மறுபுறம் பா.ஜ.க-வின் நேர்த்தியான பிரசாரமும், தேர்தலுக்கு முந்தைய கள செயல்பாடுகளும் கைக்கொடுத்துள்ளன. சிறப்பாக ஆட்சிக் கொடுத்துள்ளோம், மக்கள் நம்மைதான் தேர்ந்தெடுப்பார்கள் என சத்தீஸ்கர் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளின் அலட்சியமும் தோல்விக்கு ஒரு காரணம்” என்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தை போலவே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க வென்று ஆட்சி அமைக்கவுள்ளது. சத்தீஸ்கர் மட்டுமின்ற 4 மாநிலங்களிலும் மாநில நிர்வாகிகளை முன்னிறுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடி முகத்தை முன்னிறுத்தியது குறிப்பிட்டது. `இது மோடி மேஜிக்’ என குறிப்பிட்டு வருகிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள் பலர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
