அதேசமயம், அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்த ‘மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின்’ தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், `பாகுபாட்டோடு பொய் வழக்கு பதிவுசெய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக, ஹென்றி திபேன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘‘உரிமைக்காகப் போராடிய விவசாயிகள்மீதான தவறான நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த திருவண்ணாமலை ஆட்சியர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் சொந்த பணத்தில் இழப்பீட்டுத் தொகையும், பின்புலமாக பொய் வழக்குகள் பதிவுசெய்ய காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகள்மீதான பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

யார் இந்த அருள் ஆறுமுகம்?
செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகத்தின் சொந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அத்திபாடி கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் இவர், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதால், காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். அதன் பிறகு ‘உழவர் உரிமை இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார். இந்த நிலையில்தான் செய்யாறு பகுதி விவசாயிகள், சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிரான போராட்டக் களத்துக்கு அழைப்பு விடுத்ததால், அவர்களுடன் கைகோத்து தமிழக அரசின் கோபத்துக்கும், நடவடிக்கைக்கும் ஆளானார்.
நன்றி
Publisher: www.vikatan.com
