இப்போது சிலருக்கு சில கேள்விகள் வரலாம். அந்தக் கேள்விகளை சமூக ஊடகத்திலும் எதிர்கொண்டோம்.
கேள்வி 1 : அது மழை தேங்கும் பகுதி என்று தெரியும்தானே… உங்களை யார் அங்கு வாடகைக்கு (அல்லது சொந்தமாகவோ) வீடு எடுக்க சொன்னது?
எல்லாம் மையப்படுத்தப்பட்ட இந்தச் சூழலில், பிழைப்பின் காரணமாக சென்னைக்கு வரும் யாரும் ஏரியின் மீதுதான் குடியிருப்பேன் என்று சபதம் எடுத்து வருவதில்லை. தாக்குப்பிடிக்க முடிந்த வாடகையும், பணிச்சூழலும் அந்தப் பகுதியைக் கோருவதால்தான் அங்கு குடியேறுகிறார்கள், வசிக்கிறார்கள். உங்கள் கேள்வி, ஏரியை மனைகளாக மாற்ற அனுமதி தந்த அரசை நோக்கி இருக்கட்டும். ஏற்கெனவே பொருளாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை நோக்கி இருக்க வேண்டாம். ஏன் எல்லாம் சென்னையில் இருக்கிறது… ஏன் இந்த மையப்படுத்தப்பட்ட சூழல் என்று அரசு இயந்திரத்தை நோக்கி உங்கள் சுட்டு விரல் நீளட்டும். குறைந்தது ஓராண்டு சேமிப்பை இழந்து நிற்கும் மக்களை நோக்கி வேண்டாம்.
கேள்வி 2: சரி. பெருமழைக்கான எச்சரிக்கையை அரசு கொடுத்ததுதானே… பிறகு ஏன் அந்தத் தாழ்வான பகுதியிலுள்ள வீட்டில் தங்கினீர்கள்?
தவறுதான். ஆனால், முகாமில் தங்கிக்கொள்ளுங்கள் என்று ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு கூறியதா… குறைந்தபட்சம் அந்தப் பகுதியில் முகாமையாவது ஏற்படுத்தியிருந்ததா?
நன்றி
Publisher: www.vikatan.com
