பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (29-09-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதிகள் மற்றும் மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்தும் அவற்றைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர். மேலும், பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பிரச்னைகளை அடுக்கிய மாமன்ற உறுப்பினர்கள்:
சென்னை மாநகராட்சியின் 184-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ரவிச்சந்திரன், “சென்னை மெட்ரோ வாட்டர் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மிகவும் மோசமாகச் செயல்படுகிறார்கள். பல இடங்களில் மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து, பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வசதி தடைபட்டு, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக, கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவே இந்தப் பிரச்னைகள் குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டம்போட்டு அறிவுறுத்தியும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்.
இது எனது வார்டிலுள்ள பிரச்னை மட்டுமல்ல, சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளிலும் இதே நிலைமைதான். 200 வார்டுகளிலும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் எந்த மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கும், மாமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தலுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை!” என சரமாரியாகக் குற்றம்சாட்டினார். அதை மற்ற அனைத்து கவுன்சிலர்களும் மேசைகளைத் தட்டி ஆமோதித்தனர். மேலும் பலர் எழுந்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகளின் போக்கை கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டினர்.
அதைத் தொடர்ந்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், SEO-வை அழைத்து விளக்கம் கேட்ட மேயர் பிரியா, “அமைச்சர் சொல்லியும் கேட்கமாட்டீர்களா… ஒருமுறை நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் என்ன… நீங்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காததால்தான் இத்தனைப் பேர் புகார் சொல்கின்றார்கள். இனி இதுபோல் நடக்கக் கூடாது. அடுத்த மாமன்றக் கூட்டத்துக்குள் மெட்ரோ வாட்டர் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்!” என அதிகாரிகளுக்கு காட்டமாக உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, 151-வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ், “எனது வார்டில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை! காலை 8 மணிக்கு வரவேண்டிய டாக்டர்கள் 9:30 மணியாகியும் வராமல் இருக்கின்றனர். இதனால் குழந்தைகளும், பொதுமக்களும் போதிய நேரத்தில் மருத்துவம் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இனி இதுபோல் நடக்காமல் தடுக்க, பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு கொண்டுவந்து, அதனடிப்படையில் மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்!” என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து மாநகராட்சியின் 81-வது வார்டு கவுன்சிலரும், நிலைக்குழுத் தலைவருமான (பொது சுகாதாரம்) டாக்டர் சாந்தகுமாரி, “எனது வார்டில் உள்ள கல்யாணபுரம் தொடக்கப்பள்ளி கட்டடம் மிகவும் பழுந்தடைந்த நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தரப்பட வேண்டும். அதேபோல, கிருஷ்ணாபுரம் பூங்காவிலுள்ள சுற்றுச்சுவர் இடிந்துவிழும் தருவாயிலுள்ளது அதையும் சரிசெய்ய வேண்டும். மேலும், மாநகராட்சி வளாகத்திலுள்ள பிறப்பு/இறப்பு சான்றிதழ் வழங்கும் கட்டடம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதால் கோப்புகளிலிருக்கும் சான்றிதழ்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அந்தக் கட்டடத்தை மாற்றவேண்டும் அல்லது முறையாகப் பராமரிக்கவேண்டும். முக்கியமாக, டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதால், மாநகராட்சி பேட்டரி வண்டிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும்!” என கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய 71-வது வார்டு கவுன்சிலர் புனிதவதி, “எங்கள் பகுதியிலுள்ள முரசொலி மாறன் பூங்காவைப் பராமரிப்பதற்காக கோபாலகிருஷ்ணன் என்ற நிறுவனத்துக்கு ஓராண்டு கான்ட்ராக்ட் விடப்பட்டது. ஆனால், இன்றளவும் அவர்கள் முறையாகப் பராமரிக்காததால் அந்த கான்ட்ராக்ட்டை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகக் கட்டடம் பழுதடைந்த நிலையில், ஊழியர்களையும் மக்களையும் அச்சுறுத்திக்கொண்டிருப்பதால் அதை புதிய இடத்துக்கு மாற்றவேண்டும்!” என கோரிக்கை வைத்தார். அடுத்தடுத்து பல்வேறு மாமன்ற கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் தெருநாய்கள் தொல்லை, மழைநீர் வடிகால் சர்ச்சை, கால்வாய் ஏரி குளங்கள் தூர்வாறுதல் மற்றும் AE, SO-களை 3 ஆண்டுக்கு ஒருமுறை shuffle செய்யும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டப் பிரச்னைகள் குறித்துப் பேசினர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேயர் பிரியா ராஜனின் பதில்:
கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய மேயர் பிரியா ராஜன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். “அதிகாரிகளுக்கும் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்… இரண்டு கைகளையும் தட்டினால்தான் சத்தம் வரும். அதேபோல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கமுடியும். டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள், பணியாளர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி செயல்படுகின்றீர்கள்; அது பாராட்டுக்குரியது. அதேசமயம், கவுன்சிலர்கள் டெங்கு விழிப்புணர்வு பதிவுகளை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடவேண்டும். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, கொசு ஒழிக்கும் முறைகளைப் பற்றி பேசி வீடியோவாகப் பதிவிட வேண்டும். அது போன்ற வீடியோக்களை நாங்களே உருவாக்கித் தருகிறோம்!” என்றார்.
இறுதியாக, சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கான அபராதத்தொகை அதிகரிப்பு, தூய்மைப் பணியாளர்களுக்கான தினக்கூலி ரூ.687-ஆக உயர்வு உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி
Publisher: www.vikatan.com
