சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: இஸ்லாமிய அடையாளத்தில் இருந்து விலகிச் செல்கிறாரா முகமது பின் சல்மான்?

சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: இஸ்லாமிய அடையாளத்தில் இருந்து விலகிச் செல்கிறாரா முகமது பின் சல்மான்?

சௌதி அரேபியா பட்டத்து இளவரசர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

சௌதி அரேபியா ரியாத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மது விற்பனை செய்ய ஒரு கடையைத் திறக்கப்போவதாகக் கூறியுள்ளது.

கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சௌதி அரேபியாவில் மது விற்கப்படுவது இதுவே முதல்முறை. ரியாத்தில் திறக்கப்படும் இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.

பல்வேறு நாடுகளின் தூதரக ஊழியர்கள பல ஆண்டுகளாக சீல் செய்யப்பட்ட மதுபானங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். அவை அரசுமுறை பேக்கேஜ்கள் என அழைக்கப்படுகின்றன.

தற்போது திறக்கப்படவுள்ள இந்த மதுபானக் கடையின் மூலம் சட்டவிரோத மது வியாபாரம் தடுக்கப்படும் என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சௌதி அரேபியாவில் கடந்த 1951ஆம் ஆண்டில், அரசர் அப்துல் ஆஸிஸின் மகன் மது அருந்துவது தொடர்பான சர்ச்சையில் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டுக்கொன்றார். அதைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு முதல் சௌதியில் மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏ.எஃப்.பி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைகள் பார்த்த ஆவணங்களின்படி, இந்தப் புதிய மதுக்கடை ரியாத்தின் தூதரக குடியிருப்பில் திறக்கப்படும்.

சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: யாருக்கெல்லாம் அனுமதி? எவ்வளவு மது வாங்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

மதுபானக் கடைக்கு விதிக்கப்படும் வரம்புகள் என்ன?

மதுபானம் விற்பனை செய்வதற்கான திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்த அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் இன்னும் சில வாரங்களில் கடை திறக்கப்படலாம் என்று தெரிவித்தனர்.

இருப்பினும், அந்தக் கடைக்குச் சில வரம்புகள் உள்ளன. அவை,

  • மதுபானம் தேவைப்படும் தூதரக அதிகாரிகள் அதற்கு முதலில் பதிவு செய்து, பின்னர் அரசிடமும் அனுமதி பெற வேண்டும்.
  • மதுக்கடைகள் 21 வயதுக்கு உட்பட்ட எவரையும் அனுமதிக்காது, அனைத்து நேரங்களிலும் தகுந்த உடை அணிந்திருக்க வேண்டும்.
  • மது அருந்துபவர்கள் வேறு யாருக்காகவும் மதுவை ஆர்டர் செய்ய முடியாது. அதாவது, ஒருவரது ஓட்டுநர் மூலமாக ஆர்டர் செய்வது போன்றவற்றைச் செய்யக்கூடாது.
  • செய்திகளின்படி, மதுபானம் வாங்குவதற்கு மாதாந்திர வரம்பும் இருக்கும்.
  • இருப்பினும், ஏ.எஃப்.பி செய்தி முகமை பார்த்த ஆவணங்களின்படி, இந்த வரம்புகள் கண்டிப்பானதாக இருக்காது என்றும் தெரிகிறது.
சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: யாருக்கெல்லாம் அனுமதி? எவ்வளவு மது வாங்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

ஒருவர் எவ்வளவு மது வாங்கலாம்?

பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 240 ‘புள்ளிகள்’ என்ற அளவில் மதுபானம் கிடைக்கும். ஆறு புள்ளிகளுக்கு ஒரு லிட்டர் ஸ்பிரிட்ஸ் என்ற கணக்கில் அளவிடப்படும். அதுவே ஒரு லிட்டர் ஒயின் மூன்று புள்ளிகளாகவும், ஒரு லிட்டர் பீர் ஒரு புள்ளியாகவும் கணக்கிடப்படும்.

சராசரி வெளிநாட்டினருக்கு மதுபானம் கிடைக்குமா அல்லது தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்குமா என்பது இன்னும் கூறப்படவில்லை. ரியாத்தின் தினசரி வாழ்வில் மதுபானம் இனி ஒரு பகுதியாக மாறும். ஆனால், மது அருந்துவோர் எங்கு குடிக்கிறார்கள், மது அருந்திய பிறகு எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதே அதில் மிக முக்கியமான விஷயம்.

தற்போது, சௌதி அரேபியாவில் மது அருந்துதல் அல்லது மதுவை வைத்திருத்தல் போன்ற செயல்களுக்கு, சிறைத் தண்டனை, பொதுவில் கசையடி வழங்குதல், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டினரை நாடு கடத்துதல் ஆகிய தண்டனைகளை வழங்கும் சட்டம் அமலில் உள்ளது.

மதுபான கொள்கை பற்றிய புதிய ஆவணங்களின்படி, சௌதி நிர்வாகம் புதிய விதிகளை உருவாக்கி வருகிறது. புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட அளவு மதுபானம் கொண்டு வர அனுமதிக்கப்படும். இதன்மூலம் கட்டுப்பாடற்ற மது விற்பனைகள் நிறுத்தப்படும்.

சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: யாருக்கெல்லாம் அனுமதி? எவ்வளவு மது வாங்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

சௌதி இளவரசர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டபோது என்ன நடந்தது?

பல ஆண்டுகளாக, தூதரக ஊழியர்கள் தங்கள் சொந்த மதுபான பேக்கேஜ்களை பயன்படுத்துகின்றனர். சௌதி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிடவில்லை. சௌதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு அதன் ‘விஷன் 2030’ என்ற கொள்கை வழியாகவும் பார்க்கப்படுகிறது.

சௌதி அரேபியாவின் பிரதமரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் இந்தப் பார்வையின் கீழ் கடுமையான விதிகளை தளர்த்தி வருகிறார். மற்ற வளைகுடா நாடுகளும் மது விஷயத்தில் இதேபோன்ற கொள்கைகளைக் கொண்டுள்ளன.

இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாரில், 21 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்கள் ஹோட்டல்கள், கிளப்புகள், பார்களில் மது விற்க அனுமதிக்கப்படுகிறார்கள். சௌதி அரேபியாவின் ஆவணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாரை போலவே செய்யுமா, இல்லையா என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை. இஸ்லாத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் 1952ஆம் ஆண்டு வரை மதுவின் மீது ஒருவித சமரச மனப்பான்மை இருந்தது.

ஆனால், 1951இல், இளவரசர் மிஷாரி பின் அப்துல் அஜிஸ் அல்-சௌத், ஜெட்டாவில் பிரிட்டிஷ் தூதர் சிரில் ஓஸ்மானை சுட்டுக் கொன்றார். ஒரு விழாவில் மது வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அவர் அப்படிச் செய்தார். இந்தச் சம்பவத்திற்கு ஓராண்டு கழித்து மன்னர் அப்துல் அஜீஸ் மது விற்பனை மற்றும் அருந்துவதை முற்றிலுமாகத் தடை செய்தார். கொலை வழக்கில் மிஷாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: யாருக்கெல்லாம் அனுமதி? எவ்வளவு மது வாங்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம்

கடந்த 2018ஆம் ஆண்டில், சௌதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் செயல்முறை தொடங்கப்பட்டது. ஜூன் 2018இல், முதல்முறையாக 10 பெண்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 24 முதல், சௌதி அரேபியாவில் பெண்கள் சாலைகளில் கார் ஓட்டுவதைக் காண முடிந்தது.

பழமைவாத நாட்டை நவீனமயமாக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தாராளமயமாக்கல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமத்தை வழங்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தும்கூட, பட்டத்து இளவரசரும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

சௌதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்க வேண்டுமென்று பிரசாரம் செய்த பெண்ணுரிமை ஆர்வலர்கள் மீது, வெளி சக்திகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி சௌதி அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016-17இல் விஷன் 2030 திட்டம் அறிவிக்கப்பட்டது. சௌதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியைச் சாந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் அதன் பொருளாதாரத்தைப் பல்வகைப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

நாட்டிலுள்ள பிற தொழில்களை மேம்படுத்துவது, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது, தனியார் தொழில்களை ஊக்குவிப்பது, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவது, ஆகியவற்றின் மூலம் அரசின் சுமையைக் குறைக்க முடியும்.

சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: யாருக்கெல்லாம் அனுமதி? எவ்வளவு மது வாங்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

பட்டத்து இளவரசர் இஸ்லாமிய அடையாளத்தில் இருந்து விலகிச் செல்கிறாரா?

தற்போது 38 வயதாகும் முகமது பின் சல்மன் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக உள்ளார். பட்டத்து இளவரசர் கடந்த ஏழு ஆண்டுகளாக நாட்டை வழிநடத்தி வருகிறார்.

அவரது தலைமையின்கீழ், பட்டத்து இளவரசர் சௌதி அரேபியாவில் பல முடிவுகளை எடுத்தார். அவை பாராட்டப்பட்டன. அதோடு, இஸ்லாமிய பழமைவாத நாடான சௌதி அரேபியாவை ஒரு நவீன நாடாக மாற்றுகிறார் என்றும் கூறப்பட்டது.

பட்டத்து இளவரசர் 2016இல் விஷன் 2030 திட்டத்தைப் பற்றி அறிவித்தார். அதன்கீழ், பல வகையான சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன. அவர் சௌதியை மேலும் தாராளமயமாக்கினார். பட்டத்து இளவரசார் சினிமா, கச்சேரிகள் மீதான தடையை நீக்கினார்.

ஹிப்-ஹாப் கலைஞர்கள்கூட அழைக்கப்பட்டனர். பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமையைப் பெற்றனர். அவர்களின் உடையில் தாராளமயம் காட்டப்பட்டது.

பட்டத்து இளவரசர் பிற்போக்கு மதகுருக்களின் பங்கை மட்டுப்படுத்தினார். மத போலீஸ் ஒழிக்கப்பட்டது. இதனுடன், இஸ்ரேலுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் முகமது பின் சல்மான் ஆராய்ந்தார்.

சௌதி அரேபியா எந்தப் பாதையில் செல்கிறது?

சௌதி அரேபியாவில் முதல் மதுபான கடை: யாருக்கெல்லாம் அனுமதி? எவ்வளவு மது வாங்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க இதழான தி அட்லான்டிக், 2022இல் சௌதி பட்டத்து இளவரசரிடம் ‘சௌதி அரேபியாவின் இஸ்லாமிய அடையாளத்தைப் பலவீனப்படுத்தும் அளவுக்கு நவீனமயமாக்குவாரா?’ என்று கேட்டது.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த இளவரசர், “உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் வெவ்வேறு கருத்துகள், மதிப்புகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா, ஜனநாயகம், சுதந்திரம், சுதந்திரப் பொருளாதாரம் போன்ற மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புகளின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், அனைத்து ஜனநாயகங்களும் நல்லவையா? அவை அனைத்தும் சரியாகச் செயல்படுகின்றனவா? நிச்சயமாக இல்லை,” என்றார்.

மேலும், “இந்த நாடு இஸ்லாத்தின் மதிப்புகள் மற்றும் சிந்தனைகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பழங்குடி கலாசாரம், அரபு கலாசாரம். சௌதிக்கென கலாசாரம், நம்பிக்கைகள் உள்ளன. இது எங்கள் ஆன்மா. அதை விட்டுவிட்டால் நாடு அழிந்துவிடும். சௌதி அரேபியாவை சரியான வளர்ச்சி, நவீனமயமாக்கல் பாதையில் கொண்டு வருவது எப்படி என்பதுதான் கேள்வி. ஜனநாயகம், சுதந்திர சந்தைகள், சுதந்திரத்தைச் சரியான பாதையில் எப்படி வைத்திருப்பது என்பது பற்றிப் பார்க்கையில் அமெரிக்காவுக்கு இதேபொன்ற கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்வி முக்கியமானது. ஏனெனில், அவர்கள் தவறான பாதையில்கூடச் செல்லலாம்.

ஆகவே, நாங்கள் எங்கள் மதிப்புகளில் இருந்து விலகிச் செல்லமாட்டோம். ஏனெனில், அது எங்கள் ஆன்மா. சௌதி அரேபியாவில் புனித மசூதிகள் உள்ளன. அவற்றை யாராலும் அகற்ற முடியாது. அந்தப் புனித மசூதிகள் எப்போதும் நிலைத்திருப்பதை உறுதி செய்வது எங்கள் பொறுப்பு. மேலும், நாட்டை சௌதி மக்களுக்காகவும் பிராந்தியத்திற்காகவும் சரியான பாதையில் வைத்திருக்க விரும்புகிறோம். அமைதி மற்றும் சகவாழ்வின் அடிப்படையில் உலகின் பிற பகுதிகளுடன் இணைக்க விரும்புகிறோம்,” என்று பதிலளித்தார் முகமது பின் சல்மான்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *