திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சிபிஆர் சிகிச்சை கொடுப்பது எப்படி?

திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சிபிஆர் சிகிச்சை கொடுப்பது எப்படி?

சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிபிஆர் முதலுதவி சிகிச்சை

சமீப காலமாகவே சிறு வயதுக்காரர்கள் கூட மாரடைப்பால் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அடிக்கடி கேட்கிறோம். பலரும் இதய நோயால் பாதிக்க பட்டவர்களாக இருப்பதை கூட நம்மால் பார்க்க முடிகிறது.

இது போன்ற சூழலில் பல நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு முதலுதவி கிடைக்காமல் போவதும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. உலக அளவில் சிபிஆர் என்று அழைக்கப்படும் முதலுதவி சிகிச்சை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் உயிர் பிழைத்தவர்கள் பலர் என்றும் நிரூபணமாகியுள்ளது. அப்படி ஆபத்து நேரத்தில் உயிர்காக்கும் இந்த சிபிஆர் என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை கொடுக்கலாம்? அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக சிபிஆர் சிகிச்சை வழங்கப்படுகிறது

சிபிஆர் என்றால் என்ன?

சிபிஆர் என்பது விரிவாக கார்டியோபல்மனரி ரீசசிடேஷன் (Cardiopulmonary Resuscitation) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக இது வழங்கப்படுகிறது.

இந்த சிகிச்சையை ஒரு நபர் மயக்கமடையும்போது அல்லது மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சு நின்று போகும் போது கொடுக்கலாம்.

ஒருவருக்கு இந்த சிகிச்சையை கொடுப்பதன் மூலம் அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும். அந்த ஆக்சிஜன் ரத்தம் மூலம் ஒட்டுமொத்த உடலுக்கும் பயணிக்கும்.

இது தற்காலிகமாக அந்த நபருக்கு சுவாசிப்பதற்கு உதவலாம். உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாரடைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும்

எப்போது இந்த சிகிச்சை வழங்க வேண்டும்?

பெரும்பாலும் சினிமாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாரடைப்பு ஏற்பட்ட நபரின் மார்பில் ஒருவர் கை வைத்து அழுத்துவதையும், வாயோடு வாய் வைத்து மூச்சு வழங்குவதையும் பார்த்திருப்போம். இதன் மூலம் குறிப்பிட்ட நபர் சுயநினைவுக்கு வருவது போல் அதில் காட்டியிருப்பார்கள்.

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் இந்த சிகிச்சை பலரது உயிர்காப்பானாக பயன்படுகிறது. ஆனால், முறையான பயிற்சியோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லாமல் இதை செய்யக்கூடாது.

பிரிட்டிஷ் இதய அமைப்பின் இணையதளத்தின்படி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, ஒரு நபர் மயக்கமடைந்து அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்கு செல்லும் போது, உடனடியாக அவசர ஊர்திக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சிபிஆர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்கிறது.

இதற்கான பயிற்சியை செஞ்சிலுவைச் சங்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் சுகாதார துறையை சேர்ந்த அனைவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

மாரடைப்பு ஏற்படும் போது என்ன ஆகிறது?

மாரடைப்பு ஏற்பட்டு இதயம் வேலை செய்வதை நிறுத்தும் போது அல்லது இதயத் துடிப்பு சீரற்றதாக ஆகும் போது, மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் இயல்பாக பாய்வதில்லை. இதனால் மூளை செயல்பாடு பாதிக்கிறது.

இது சில நேரங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால், சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

வங்கதேசத்தின் தேசிய இருதய நிறுவனத்தின் நிபுணரான மருத்துவர். அஷ்ரஃப் உர் ரஹ்மான் தமால் இதுகுறித்து கூறுகையில், “இதய நோயாளிகள் மட்டுமின்றி இதய நோய் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படலாம். ஒருவர் பலத்த காயம் அடைந்து அவருக்கு இதயம் நின்று போனால், அப்போது அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுப்பதன் மூலம், அவர் பிழைப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்தலாம்” என்கிறார்.

மேலும், இதயம் நின்று போகும் போது நமக்கு குறுகிய நேரமே இருக்கும். அதாவது 5 முதல் 7 நிமிடங்களே இருக்கும். எனவே உடனே சிபிஆர் சிகிச்சையை தொடங்குவது அவசியம் என்கிறார் அவர்.

சிபிஆர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாதிக்கப்பட்ட நபருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்

சிபிஆர் கொடுப்பதற்கான 7 படிநிலைகள்

செஞ்சிலுவை சங்கம் சிபிஆர் சிகிச்சையை ஏழு படிநிலைகளாக வடிவமைத்துள்ளது.

முதலில் நீங்கள் இருக்கும் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சில சமயம் வெள்ளம் அல்லது நெருப்பு சூழ்ந்த பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதியில் இருந்து சம்மந்தப்பட்ட நபரை வெளியே கொண்டு வர வேண்டும்.

தேவைப்பட்டால் பிபிஇ கிட் (PPE kit) அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை தொடுதல் அல்லது பேரை சொல்லி அழைத்தல் மூலம் அவரது நிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அவருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது கட்டத்தில், அந்த நபர் சுயநினைவற்று பதில் ஏதும் இல்லாமல் இருந்தால் அல்லது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனடியாக அவசர ஊர்திக்கு அழைக்கவும்.

சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும்.

நான்காவது கட்டத்தில் , அந்த நபரை கைகள் தோள்பட்டைக்கு முன்னுள்ளவாறு தரை அல்லது படுக்கையில் கிடத்தி, அவருக்கு அருகில் அமர வேண்டும்.

ஐந்தாவது கட்டத்தில், சிபிஆர் சிகிச்சையை தொடங்க வேண்டும். அதற்கு முதலில் உங்களது இரண்டு கைகளையும் அவரது மார்பில் வைக்க வேண்டும். ஒரு கையை மற்றொரு கையின் மீது வைத்து விரல்கள் உள்ளங்கையை அழுத்தியவாறு வைத்திருக்க வேண்டும். அழுத்தம் குறைந்தது 2 அங்குலமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் கையை முழுவதுமாக மேலே உயர்த்தி அழுத்த வேண்டும். அந்த சமயத்தில் மார்பு இயல்பு நிலைக்கு திரும்பும். நிமிடத்திற்கு 100 அல்லது 120 அழுத்தம் என்ற வேகத்தில் அழுத்த வேண்டும். ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும்.

ஆறாவதுக கட்டத்தில், அவரது வாயோடு வாய்வைத்து சுவாசத்தை உள்ளே செலுத்த வேண்டும். இதற்கு, அந்த நபரின் தலையை நேராக வைக்கவும். அவரது மூக்கை பிடித்து கொண்டு உங்களது மூச்சை நன்றாக உள்ளிழுத்து அவரது வாய்வழியாக உள்ளே முழுமையாக செலுத்த வேண்டும்.

இது ஒரு வினாடிக்கு நடக்கும். பின் மார்பு விரிகிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்து சுவாசத்தை உள்ளிழுப்பதற்கு முன்பு, நன்கு வெளியே விட்டுக்கொள்ளவும்.

அதே சமயம் முதல் முறையிலேயே மார்பு விரியவில்லை அல்லது மேலே எழும்பவில்லை என்றால், அவரது கண்கள் மற்றும் வாயை திறந்து பார்த்து ஏதாவது அடைப்பு உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும்.

ஏழாவது கட்டத்தில், மார்பில் ஒரு சுற்றில் 30 முறை அழுத்தம் , இரண்டு முறை சுவாசம் கொடுத்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். ஆனால் மார்பை ஒவ்வொருமுறை அழுத்தும்போதும் அது 10 நொடிகளுக்கு மேல் தொடராமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அவசர ஊர்தியோ அல்லது உதவியோ வரும்வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும்.

சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான சிபிஆர் சிகிச்சை

சில நேரங்களில் குழந்தைகளுக்கும் சிபிஆர் சிகிச்சை தேவைப்படும். இது இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கும்போது சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

முதலில் ஒரு கையை குழந்தையின் தலையில் வைத்து பின்னாலிருந்து உயர்த்தவும். வாய் மற்றும் மூக்கிற்குள் ஏதாவது சிக்கிக்கொண்டிருந்தால் வெளியே எடுக்க வேண்டும்.

அதன் பிறகு குழந்தையின் மூக்கை பிடித்துக் கொண்டு அதன் வாய் வழியாக சுவாசம் கொடுக்க வேண்டும். அதே சமயம் மார்பு மேல் எழும்புகிறதா இல்லையா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு உள்ளங்கையை குழந்தையின் மார்பில் வைத்து இரண்டு அங்குல அளவில் அழுத்தம் தரவேண்டும். உங்களால் ஒரு கையால் செய்யமுடியவில்லை என்றால், இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுவே குழந்தை ஒரு வயதுக்கும் குறைவாக இருந்தால் இரண்டு கைகளுக்கு பதில், இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் ஒன்றரை அங்குலம் என்ற அளவில் மட்டுமே அழுத்தம் தரப்பட வேண்டும்.

மேலும், 30-30 சுவாசம் என்ற கணக்கில் இருமுறை வாய்வழியாக ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 வாசம் என்ற அளவில் சிகிச்சை கொடுக்கலாம். அவசர ஊர்தி வரும் வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *