இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் – சீண்டிய ரசிகர்களுக்கு நவீன் பதிலடி என்ன?

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - சீண்டிய ரசிகர்களுக்கு நவீன் பதிலடி என்ன?

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

உலகக்கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 285 ரன் இலக்கை எட்ட முடியாமல் 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்துள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியை ஆப்கன் வீரர்கள் சுருட்டியது எப்படி? அதிரடி வீரர்கள் நிறைந்த இங்கிலாந்து அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது எப்படி? இந்த தோல்வியால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? ஐ.பி.எல். தொடரில் கோலியுடன் மோதியதால் ரசிகர்களின் சீண்டலுக்கு ஆளான ஆப்கன் வீரர் நவீன் உல்ஹக், அவர்களை வாயடைக்கச் செய்தது எப்படி?

டெல்லியில் இங்கிலாந்து – ஆப்கன் அணிகள் மோதல்

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. வங்கதேசத்திற்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் வந்திருந்த இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் மாற்றம் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அணியோ நஜிபுல்லா ஜட்ரமை வெளியே உட்கார வைத்துவிட்டு, இக்ரம் அலிகில்லை அணிக்குள் கொண்டு வந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்சதுவீச்சை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதியும் ஒருவேளை தான் டாஸ் வென்றிருந்தால் பந்துவீசவே முடிவு செய்திருப்பேன் என்றார். இந்த ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் குவித்தால் சிறந்ததாக இருக்கும் என்பது அவரது கணிப்பாக இருந்தது.

ஆப்கானிஸ்தான் சிறப்பான தொடக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹ்மத்துல்லா குர்பாசும் இப்ராஹிம் ஜட்ரனும் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் ஓவரை வீச வந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதல் பந்தை வீசுவதற்குள்ளாகவே 5 வைட் பால்களை வீசி ரன்களை வாரி வழங்கினார்.

குர்பாஸ் அதிரடி காட்டியதால் ஆப்கானிஸ்தான் அணி முதல் 5 ஓவர்களிலேயே 35 ரன்களை சேர்த்துவிட்டது. கிறிஸ் வோக்ஸ் பந்துகளை குர்பாஸ் அடிக்கடி பவுண்டரிக்கு ஓடவிட்டார். இதனால், வோக்சுக்குப் பதிலாக, ஐ.பி.எல்.லில் ரசிகர்களால் சுட்டிக் குழந்தை என்று அழைக்கப்படும் சாம் கர்ரனை பந்துவீச அழைத்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

குர்பாஸ் அதிரடி அரைசதம்

ஆனால், குர்பாஸின் அதிரடியை இங்கிலாந்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சாம் கர்ரனையும் அவர் பதம் பார்த்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய குர்பாஸ் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த ஜட்ரன் நிலைத்து நின்று குர்பாசுக்கு கைகொடுத்தார். விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போராடிய இங்கிலாந்து அணிக்கு சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் பந்துவீச்சில் பலன் கிடைத்தது. நிதானமாக விளையாடிய ஜட்ரனை அவர் காலி செய்தார். ஜட்ரன் 48 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார்.

குர்பாஸ் ரன் அவுட்

ஜட்ரனைத் தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா நிலைக்கவில்லை. 3 ரன்களை ம்டடுமே எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரால் அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா குர்பாஸ் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகிப் போனார்.

கடினமான ஒற்றை ரன்னை எடுக்க முயற்சிக்கையில் குர்பாஸை டேவிட் வில்லி ரன்அவுட் செய்தார். குர்பாஸ் 57 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடுன் 80 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால் வலுவான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் நிலைமை மாறிப் போனது.

114 ரன்களில் முதல் விக்கெட் இழந்த ஆப்கானிஸ்தான் மேலும் 8 ரன்களை எடுப்பதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இங்கிலாந்துக்கு கைகொடுத்த சுழற்பந்துவீச்சு

தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக ரன் கொடுத்ததுடன் விக்கெட்டையும் எடுக்க முடியாமல் திணறினர். அந்தநேரத்தில், அடில் ரஷித் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அடுத்த சுழற்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த முடிவு செய்தார். ஜோ ரூட், லிவிங்ஸ்டன் ஆகிய பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்தினார். அதற்குப் பலனும் கிடைத்தது.

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் நடுப்பகுதியில் அவர்கள் இருவரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பந்துவீசி முடித்தனர். ஜோ ரூட்டும், லிவிங்ஸ்டனும் 12 ஓவர்களை வீசி 37 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கனுக்கு ரன் சேர்த்த இக்ரம் அலிகில்

ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஜோடியை இழந்த பிறகு தடுமாறிய நிலையில், பின்னர் வந்த விக்கெட் கீப்பர் இக்ரம் அலிகில் காப்பாற்றினார். அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்திய அவர் 66 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சாளர்களான ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களை எட்டியது. ஒரு பந்து மீதமிருந்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானுக்கு தொடக்கம் அமர்க்களமாக இருந்த நிலையில் இங்கிலாந்துக்கோ தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. ஃபரூக்கி வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஜோ ரூட், முஜீப் உர் ரஹ்மான் வீசிய பந்தை பேக்ஃபுட்டில் ஆட முயற்சிக்க ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அவருக்கு பக்கபலமாக யாரும் நின்று ஆடவில்லை. மற்ற அனைவருமே வருவதும் போவதுமாக இருந்தனர்.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

நவீனுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய ரசிகர்கள்

ஐ.பி.எல்.லில் விராட் கோலியுடன் முட்டிக் கொண்ட ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கு எதிராக இன்றைய போட்டியிலும் ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பினர். முந்தைய இந்தியா – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் போது கோலியே கேட்டுக் கொண்ட பிறகும் கூட சமாதானமடையாத ரசிகர்கள், நவீன் பந்துவீச வந்ததுமே, கோலி, கோலி என்று முழக்கமிட்டனர்.

ஆனால், ரசிகர்களை வாயடைக்கச் செய்யும் விதமாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை நவீன் உல் ஹக் கிளீன் போல்டாக்கி அசத்தினார். அடுத்து 5-வது விக்கெட்டாக லிவிங்ஸ்டனும் அவுட்டாக இங்கிலாந்து அணி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. அப்போது இங்கிலாந்து அணி 117 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன் வெற்றிக்கு இன்னும் 168 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

வீண் போன இங்கிலாந்தின் நம்பிக்கை

ஆனாலும், நடப்புச் சாம்பியன், சமீபத்திய ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களை எளிதாக கடக்கும் அதிரடி சூரர்களைக் கொண்ட அணி என்று பெயரெடுத்த இங்கிலாந்து அணி எப்படி ஜெயித்து விடும் என்று அதன் ரசிகர்கள் நம்பினர். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

இங்கிலாந்து அணியின் பின்வரிசையை நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் காலி செய்தார். இதனால், இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களிலேயே 215 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால், 69 ரன் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

இங்கிலாந்து அணிக்கு சிக்கல்

இங்கிலாந்து அணிக்கு நடப்பு உலகக்கோப்பையில் இது இரண்டாவது தோல்வியாகும். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்றிருந்த இங்கிலாந்து அணி அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை தோற்கடித்திருந்தது. தற்போதைய நிலையில் ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் அந்த அணி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.

உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோற்றுப் போன அந்த அணி வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *