பட மூலாதாரம், Getty Images
ராஞ்சியில் நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்துக்கு அணி.
இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இலக்கின் கால்பகுதியை இந்திய அணி கடந்துவிட்டநிலையில் நாளை வெற்றி எளிதாகலாம். அதேநேரம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்ற தகவலும், ஆட்டத்தை பரபரப்பாகக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
அதேசமயம், அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். உள்நாட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் இதை முறியடிக்கவில்லை. ஆனால், அஸ்வின் தனது 5 விக்கெட் வீழ்த்தியபோது, உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து 350 விக்கெட்டுகளைக் கடந்து 354 விக்கெட்டுகளை எட்டி சாதனை படைத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியை 2-வது இன்னிங்ஸில் விரைவாக சுருட்டியதில் அஸ்வின், குல்தீப் யாதவ் பங்களிப்பு முக்கியமானது. இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 152 ரன்கள் தேவை. களத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வென்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்துக்கு நகரும்.
பட மூலாதாரம், Getty Images
ஆடுகளம் எப்படி?
ராஞ்சி ஆடுகளம் களி மண்ணால் அமைக்கப்பட்டது. இயல்பாகவே மெதுவான ஆடுகளம். பேட்டர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் அதிகம் ஒத்துழைக்கும் ஆடுகளமாக இருக்கும். ஆட்டத்தின் தொடக்கத்தில் காற்றின் ஈரப்பதம், தரையின் ஈரப்பதத்தால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதல் 10 ஓவர்கள் ஒத்துழைக்கலாம். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியமாகவே இருக்கும். அதிலும் கடைசி 2 நாட்களில் ஆடுகளங்களில் அதிக வெடிப்பும், வறண்ட நிலையிலும் இருக்கும். அப்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்றாக சுழன்று பேட்டர்களுக்கு வரும், பந்து மிகவும் தாழ்வாக பேட்டரை நோக்கி வரும் என்பதால் எதிர்த்து பேட்டிங் செய்வது சற்று சிரமமாக இருக்கும்.
ஆதலால், இந்திய அணி நாளை ஆட்டத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கிறதே என்று கவனக்குறைவாக பேட் செய்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீப் ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிக்க இந்திய பேட்டர்கள் சிரமப்பட்டனர். கடைசி இரு நாட்களில் இருவரின் பந்துவீச்சும் சவாலாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணி போராடியே வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படலாம்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்த ஜூரெல், குல்தீப்புக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்காமல் தானே பேட் செய்து ரன்கள் சேர்த்தார்
பொறுப்பான பேட்டிங் செய்த ஜூரெல்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்திருந்தது. ஜூரெல் 30, குல்தீப் யாதவ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டத்தை ஜூரெல், குல்தீப் தொடங்கினர். இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்த ஜூரெல், குல்தீப்புக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்காமல் தானே பேட் செய்து ரன்கள் சேர்த்தார். ஜூரெல் 96 பந்துகளில் டெஸ்ட் போட்டியில் முதல் அரைசதத்தை அறிமுகப் போட்டியில் எட்டினார். நிதானமாக பேட் செய்த குல்தீப் 28 ரன்களில் ஆன்டர்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். 8-வது விக்கெட்டுக்கு குல்தீப், ஜூரெல் இருவரும் சேர்ந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த ஆகாஷ் தீப் சிங், ஜூரெலுக்கு நன்கு ஒத்துழைத்து பேட் செய்தார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் ஜூரெல் அதிரடியாக பேட்செய்து பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ஆகாஷ் தீப் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் உள்பட 9 ரன்கள் சேர்த்துஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய ஜூரெல் 149 பந்துகளில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும்.
103.2 ஓவர்களில் இந்திய அணி 307 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சோயிப் பசீர் 5 விக்கெட்டுகளையும், ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ராபின்சனின் விக்கெட்டை வீழ்த்தியபின் குதூகலிக்கும் குல்தீப் யாதவ்
முன்னிலை பெற்றும் இங்கிலாந்து திணறல்
46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆடுகளம் நன்கு வறண்டு காணப்பட்டதும், காற்று இல்லாமல் இருந்ததும் அஸ்வின் சுழற்பந்து வீச்சுக்கும், பந்து டர்ன் ஆவதற்கும் ஏதுவாக இருந்தது.
அஸ்வின் வீசிய 5-வது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 15 ரன்களிலும், அடுத்துவந்த ஓலே போப் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 19 ரன்களுக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
3-வது விக்கெட்டுக்கு வந்த ஜோ ரூட், கிராலேயுடன் சேர்ந்து நிதானமாக பேட் செய்தார். ரூட் மெதுவாக பேட் செய்ய கிராலோ அதிரடியாக ரன்களைச் சேர்த்து பேஸ்பால் ஆட்டத்தைக் கையாண்டார். இதனால் 11 ஓவர்களில் இங்கிலாந்து 50 ரன்களைக் கடந்தது.
அஸ்வின் பந்துவீச்சுக்கு தொடக்கம் முதலே திணறிய ரூட் 11 ரன்கள் சேர்த்தநிலையில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த பேர்ஸ்டோ, கிராலியுடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். கிராலி 71 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 60 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.
தொடர்ந்து வெளியேறிய இங்கிலாந்து பேட்டர்கள்
அதன்பின் இங்கிலாந்து பேட்டர்கள், பெவிலியனிலிருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் செல்வதும் என நடந்தார்களேத் தவிர நிலைத்து நின்று யாரும் நின்று ஆடவில்லை செய்யயவில்லை. 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி அடுத்த 35 ரன்களில் மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பென் போக்ஸ் (17) பென் ஸ்டோக்ஸ் (4), ஹார்ட்லி (7), ராபின்சன் (0), ஆன்டர்ஸன் (0) என வரிசையாக குல்தீப், அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் கடைசி 4 விக்கெட்டுகள் மட்டும் வெறும் 12 ரன்களில் இழந்தது இங்கிலாந்து அணி. 133 ரன்கள் வரை 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, அடுத்த 12 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
நடுப்பகுதியில் ஜடேஜா, குல்தீப் பந்துவீச்சில் பந்து நன்றாக ட்ர்ன் ஆனது. ஆடுகளம் எந்த மாதிரி பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கிறது என்பதை பேட்டர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. சில நேரங்களில் குல்தீப், ஜடேஜா நினைத்ததைவிட பந்து நன்றாகவே டர்ன் ஆனது.
53.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஏற்கெனவே 46 ரன்கள் முன்னிலையும் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 51-ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். டெஸ்ட் போட்டியில் 35 வது முறையாக 5விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்
வரலாறு படைத்த அஸ்வின்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்து ரவிச்சந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
உள்நாட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் இதை முறியடிக்கவில்லை.
ஆனால், அஸ்வின் தனது 5 விக்கெட் வீழ்த்தியபோது, உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து 350 விக்கெட்டுகளைக் கடந்து 354 விக்கெட்டுகளை எட்டினார்.
இதனால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். தற்போது 2-வது இடத்தில் அனில் கும்ப்ளே, 3-வது இடத்தில் ஹர்பஜன் சிங் (265), கபில் தேவ் (219), ரவீந்திர ஜடேஜா (206) விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தியபோது, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த முறை ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 22 டெஸ்ட்போட்டிகளில் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே 20 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 23 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 103 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆசியாவில் மட்டும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தார்போல், அஸ்வின் உள்ளார். இந்தியாவில் மட்டும் 352 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இலங்கையில் 38 விக்கெட்டுகளையும், வங்கதேசத்தில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
‘ரசித்துப் பந்து வீசினேன்’
கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த அஸ்வின் அளித்த பேட்டியில் “புதிய பந்தில் மிகவும் ரசித்துப் பந்து வீசினேன். என் கரங்களை நன்றாக உயர்த்தி பந்து வீசி சற்று வேகமாக வீசினேன். இன்று காற்றும் பெரிதாக இல்லை என்பதால், நினைத்தமாதிரி பந்துவீச முடிந்தது. நாங்கள்தான் சேஸிங் செய்ய வேண்டும் என்பதால், கூடுதலாக ரன்கள் கொடுக்காமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினேன். குல்தீப் பந்துவீச்சும் அற்புதமாக இருந்தது.
பந்துவீச்சில் வேகத்தை மாற்றி, லென்த்தையும் மாற்றி வீசி பேட்டர்களை திணறிடித்தார். பேட்டிங்கிலும் குல்தீப் டிபென்ஸ்ஸை வெளிப்படுத்தினார். துருவ் குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்ததால்தான் பெரிய இலக்கை எட்ட முடிந்தது. டெஸ்ட் போட்டியை வென்றால்தாந் சிறந்த கிரிக்கெட் வீரராக உணரமுடியும். நாளை நடக்கும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
