குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.

அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.

ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.

கடந்த 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சட்டத்தில் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத்தில் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?

மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள்.

மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.

“இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சட்டம் மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது” என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.

“சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள்” என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம் என்றார்.

இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

எந்தெந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன?

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன.

இந்தச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, இது கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுப்பதாக சிவ்சேனா சாம்னாவில் தலையங்கம் எழுதியது.

ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஆதரித்து இருக்கிறது சிவசேனா.

நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். ஆனால், அதிமுக இந்தச் சட்டமசோதவை ஆதரித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று. அதே வேளையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்திய குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும்.

இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா?

நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார்.

பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜக அரசு என்ன சொல்கிறது?

குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா” என்றார்.

“ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது,” என்றும் அவர் அப்போது அவையில் தெரிவித்தார்.

“இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது,” என்றார்.

இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *