தமிழ்நாடு: பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் ஓடாதா? என்ன பிரச்னை?

தமிழ்நாடு: பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் ஓடாதா? என்ன பிரச்னை?

பேருந்துகள் வேலைநிறுத்தம்
படக்குறிப்பு,

கோப்புப்படம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வேலைநிறுத்தத்தில் இறங்கப்போவதாகவும் டிசம்பர் 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.

கோரிக்கைகள் என்னென்ன?

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், போக்குவரத்துத் துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கை.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையர், போக்குவரத்துக் கழகங்கள், தொழிற்சங்கங்கள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, ஜனவரி 3-ஆம் தேதி மீண்டும் முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டுமென போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் கூறப்பட்டது.

இதனை போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஏற்கவில்லை. முடிவில், நிலுவையில் உள்ள அகவிலைப் படியையாவது உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் கூறப்பட்டது.

ஆனால், இதனை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 9-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்துள்ளன.

பேருந்துகள் வேலைநிறுத்தம்

போக்குவரத்து அமைச்சர் என்ன சொல்கிறார்?

இதையடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ. 2,800 கோடியும் டீசல் மானியமாக ரூ. 2,000 கோடியும் மாணவர் இலவச பேருந்து பயணத்திற்காக ரூ. 1,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்னைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே, தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் மிக அடிப்படையான கோரிக்கையையே அரசு ஏற்காத நிலையில், வேலை நிறுத்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர்.

பேருந்துகள் வேலைநிறுத்தம்

“புதிய கோரிக்கைகள் அல்ல”

இது குறித்து பிபிசியிடம் பேசிய சிஐடியு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், “தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. குறிப்பாக ஓய்வுபெற்றவர்களுக்கான அகவிலைப்படியை வழங்குவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதை மட்டுமாவது முதலில் ஏற்றுக்கொண்டு, பிற விஷயங்களை அப்புறமாக பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்க்கலாம் என்கிறோம். ஆனால், அதைக்கூட அரசு நிதிப் பிரச்னையைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கிறது” என்கிறார்.

ஓய்வூதியர்கள் குறித்த முக்கியமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, பிற கோரிக்கைகள் குறித்து பிறகு பேச ஒப்புக்கொள்வோம் என்கிறார் அவர்.

“அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த வேலைக்கும் ஆட்களை புதிதாகச் சேர்க்கவில்லை. வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது கடந்த 18 ஆண்டுகளாக நடக்கவில்லை. இப்போது 20,000 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. 8 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை எல்லாம் நாங்கள் இப்போது புதிதாக முன்வைக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவருகிறோம்” என்கிறார், ஆறுமுக நயினார்.

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
படக்குறிப்பு,

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை – திமுக தொழிற்சங்கம்

ஆனால், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என, திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தெரிவித்திருக்கிறது.

“தொழிற்சங்கங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை அரசு பேசித் தீர்க்க வேண்டும். ஆனால், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக சார்பு அண்ணா தொழிற்சங்கமும் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.”

“ஆனால், இம்மாதிரி கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? அதிமுக ஆட்சியின்போது, 2013-ல் போட வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை இரண்டாண்டுகள் தாமதித்து 2015-ல்தான் செய்தார்கள். 2016-ல் செய்யப்பட வேண்டிய ஒப்பந்தம் 2018-ல்தான் செய்யப்பட்டது. 2019-ல் செய்யப்பட வேண்டிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படவேயில்லை.”

“ஓய்வூதியர்களுக்குக் கொடுக்க வேண்டிய சலுகைகள் 119 சதவீதமாக இருக்கும்போது நிறுத்திவிட்டார்கள். ஊதிய உயர்வு அதிகரிக்கும்போது ஓய்வூதியமும் அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்காமல் அதிமுக ஆட்சியில்தான் நிறுத்தப்பட்டது. அப்போதிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் அதை ஏனென்றே கேட்கவில்லை.”

“2011-ல் திமுக ஆட்சி முடியும்போது அரசுப் பேருந்துகள் தினமும் 91,000 கி.மீ. ஓடின. அதிமுக ஆட்சி முடியும்போது தினமும் 78,000 கி.மீ ஓடியது. திமுக ஆட்சியில் தினமும் 2,04,00,000 பயணிகள் பயணம் செய்தார்கள். அதிமுக ஆட்சியில் அது ஓரு கோடியே 68 லட்சமாக குறைந்தது.”

“அதேபோல, பணி நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களைத் தாமதமாகக் கொடுப்பதை ஆரம்பித்ததே அதிமுகதான். அப்படியிருக்கும்போது அவர்கள் நியாயம் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.”

“தற்போதைய ஊதிய ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ல்தான் முடிவுக்கு வந்தது. மூன்று மாதங்கள்தான் தாமதமாகியிருக்கின்றன. அதற்குள் வேலைநிறுத்தத்திற்கு நோட்டீஸ் கொடுக்கிறார்கள். இது தொழிலாளர் பிரச்னை. ஆனால், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொழிலாளர் மத்தியில் பேசுகிறார்கள். இது தொழிற்சங்க ரீதியாக சரியாக இருக்குமா? கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை அணுகும் விதம் சரியல்ல. ஆகவே, அரசின் வழிகாட்டுதலிலேயே நாங்கள் செயல்படப் போகிறோம்” என்கிறார், தொ.மு.சவின் பொருளாளர் நடராஜன்.

பேருந்துகள் வேலைநிறுத்தம்
படக்குறிப்பு,

கோப்புப்படம்

வேலைநிறுத்தம் ஏன்?

ஆனால், இந்த விவகாரத்தில் அதிமுக தொழிற்சங்கம் மீது குற்றம்சாட்டுவது நியாயமில்லாதது என்கிறார், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளர் கமலக் கண்ணன்.

“ஓய்வூதிய நிலுவைத் தொகையைப் பொறுத்தவரை, அதிமுக ஆட்சியின்போது நிதி நெருக்கடியால் ஓய்வதியர்களுக்கான படி அதிகரிப்பை சில ஆண்டுகளாக வழங்க முடியவில்லை. இதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய அதிமுக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, தற்போதைய அதிகரிப்பை பெற்றுக்கொள்ளுங்கள். நிலுவைத் தொகை குறித்து பிறகு பேசலாம் என்றார்கள். ஆனால், அதனை தொமுச ஏற்கவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். அதற்குள் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது.

செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையைக் கொடுக்க உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், திமுக அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.

இதுதவிர, ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்பட்டுவந்தது. அதனை திமுக ஆட்சியில் நான்காண்டுகளாக உயர்த்தினார்கள். அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

ஓய்வுபெற்றவர்களுக்கான பலன்களைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் உடனடியாக வழங்க முடியவில்லை என்றாலும் பின் தேதியிட்ட காசோலைகளை அளித்தார்கள். இப்போது 13 மாதங்களாக அதுவும் இல்லை. கடந்த நான்கு மாதங்களாக இறந்தவர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்கப்படுகின்றன.

2015-க்குப் பிறகு ஆட்களை எடுக்கவில்லை என்பது தவறான தகவல். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கியிருக்கும் வழக்கே 2015-ல் ஆள் எடுக்கும்போது நடந்த முறைகேடு தொடர்பானதுதானே… இதையெல்லாம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப் பார்த்து, நடக்காமல் போகவேதான் நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். பொங்கல் கழித்துப் பேசுவோம் என்கிறார் அமைச்சர்.

ஆனால், எந்தத் தேதியில் பேசுவோம் என்று சொல்ல மறுக்கிறார். 91 மாதங்களாக படி உயர்வு இல்லாமல் இருக்கும் ஓய்வூதியர்களுக்கு இந்த மாதத்தில் இருந்தாவது தற்போதைய அளவுப்படி கொடுங்கள், நிலுவையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றோம். அதையும் அரசு ஏற்கவில்லை. அதனால்தான் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கிறோம்” என்கிறார், கமலக்கண்ணன்.

பேருந்துகள் வேலைநிறுத்தம்
படக்குறிப்பு,

கோப்புப்படம்

”படிப்படியாக பேசித் தீர்ப்போம்”

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? பிபிசியிடம் இது குறித்துப் பேசிய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்த விவகாரம் குறித்து தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேசப்போவதாகவும் பொங்கல் பயணங்கள் தடைபடாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

“தொழிற்சங்கங்களோடு நடத்திய பேச்சுவார்த்தையில், ஓய்வூதியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைதான் தீர்க்க முடியாத ஒற்றைப் பிரச்னையாக இருக்கிறது. இது அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது.

இதற்குப் பிறகு கோவிட் பரவல் காரணமாக போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலை மோசமடைந்தது. நிதி நிலை மேம்பட்ட பிறகு, இந்த நிலுவைத் தொகையை அளிப்போம் என சொல்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகை விவகாரத்தைப் பொறுத்தவரை, போக்குவரத்துக் கழகங்கள் மட்டுமல்ல, அரசின் எல்லாத் துறைகளிலுமே ஓய்வூதியர்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன. ஆகவே, இது தொடர்பாக அரசு ஒட்டுமொத்தமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் அளிக்காத மாநிலங்கள்கூட இருக்கின்றன. ஆனால், இங்கே சம்பளம் மிகச் சரியாக வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகூட சரியாக நடத்தவில்லை.

திமுக அரசு வந்த பிறகு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை உடனடியாக ஒப்புக்கொண்டோம். இப்போது தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் பிரச்னைகளை படிப்படியாக பேசித் தீர்ப்போம் என்று சொல்கிறோம். போக்குவரத்துக் கழக அதிகாரிகளோடு பேசி இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.

பொங்கல் பண்டிகைக்கு எவ்வித பிரச்னையும் இல்லாமல் பேருந்துகள் ஓடியாக வேண்டும். இதுதான் தற்போது தமிழக அரசின் நிலைப்பாடு” என்கிறார், எஸ்.எஸ். சிவசங்கர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தமாக சுமார் 1,20,000 பேர் பணியாற்றிவருகிறார்கள். இதில் 90 சதவீத ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ள தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *