சேலம்: ஆளுநர் ரவி கைதாகி வெளிவந்த துணை வேந்தருடன் சந்திப்பு – பெரியார் பல்கலையில் என்ன நடந்தது?

சேலம்: ஆளுநர் ரவி கைதாகி வெளிவந்த துணை வேந்தருடன் சந்திப்பு - பெரியார் பல்கலையில் என்ன நடந்தது?

சேலம்: கைதாகி வெளிவந்த துணை வேந்தரை சந்தித்த தமிழக ஆளுநர் - பெரியார் பல்கலையில் என்ன நடந்தது?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கைதாகி வெளிவந்த துணை வேந்தர் ஜெகநாதனை சந்தித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆளுநரைக் கண்டித்து போராட்டம், பல்கலையில் போலீசார் சோதனை என பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியுள்ளது.

சர்ச்சைகள் நிறைந்த பெரியார் பல்கலைக் கழகம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் ஜூன் 2021 முதல் ஜெகநாதன் என்பவர் துணை வேந்தர் பதவி வகித்து வருகிறார். ஜெகநாதனை துணை வேந்தராக நியமித்தபோதே, அவர் சங்பரிவார் பின்னணி கொண்டவர் என தி.மு.க, திராவிடர் கழகம் எனப் பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

சமீபத்தில் இந்த பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப் பேராசிரியரான சுப்பிரமணி, பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் இவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல், 2022இல் ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?‘ என வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டதும் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளானது. இப்படிப் பல வகைகளில் அடிக்கடி பெரியார் பல்கலைக்கழகம் சர்ச்சைகளுக்கு உள்ளாவது வாடிக்கையாகிவிட்டது.

ஊழல் புகாரில் துணை வேந்தர் கைது!

பெரியார் பல்கலைகழக துணை வேந்தருடன் ஆளுநர் சந்திப்பு

இப்படியான நிலையில், ‘துணைவேந்தர் ஜெகநாதன் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடி செய்துள்ளார், தன்னை சாதியைச் சொல்லி திட்டி இழிவாக நடத்தினார்,’ எனக் கூறி, துணை வேந்தர் மீது பெரியார் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஜெகநாதன் மீது நம்பிக்கை மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, டிசம்பர் 26ஆம் தேதி மாலை ஜெகன்நாதனை கருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

அன்று இரவு சேலம் ஜேஎம் 2வது நீதிமன்றத்தின் நீதிபதி தினேஷ்குமார் முன் விசாரணைக்கு ஆஜராகி, பின் டிசம்பர் 27ஆம் தேதி அதிகாலையே துணை வேந்தர் நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் வெளியில் வந்தார்.

இந்தக் கைதுக்குப் பின் ஜெகன்நாதனை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் எனப் பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.

துணைவேந்தருடன் ஆளுநர் சந்திப்பு – கருப்புக்கொடி போராட்டம்!

பெரியார் பல்கலைகழக துணை வேந்தருடன் ஆளுநர் சந்திப்பு

துணை வேந்தர் கைது விவகாரம் தமிழக அளவில் பெரும் பேசுபொருளான நிலையில், நேற்று (ஜனவரி 11), சேலம் பெரியார் பல்கலையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

இவரை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், இருவரும் 20 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனையும் நடத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கைதாகி ஜாமீனில் வெளிவந்த துணை வேந்தரைச் சந்திக்க ஆளுநர் வந்ததைக் கண்டித்து, இன்று காலை மாணவர் அமைப்பினர் மற்றும் தி.மு.க, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் மாணவர் அணியைச் சேர்ந்தவர்கள், பல்கலைக் கழகத்திற்கு முன்பு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆறு இடங்களில் போலீசார் சோதனை

பெரியார் பல்கலைகழக துணை வேந்தருடன் ஆளுநர் சந்திப்பு

ஆளுநர் ரவி பல்கலைக் கழகத்திற்கு வருவதற்கு முன், துணை வேந்தர் ஜெகநாதன் மீதான புகார் தொடர்பாக, காலை முதலே 30க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். பல்கலைக்கழக பதிவாளர், துணை வேந்தர் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகம், இல்லம் என ஆறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஒரு பக்கம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை, மறு பக்கம் ஆளுநர்-துணை வேந்தர் சந்திப்பு, ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் என இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில, தேசிய அளவிலான நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழா ஆகியவற்றுக்காக மட்டுமே பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சாதாரண ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளளார்.

ஆளுநரின் வருகை, துணை வேந்தர் – ஆளுநர் சந்திப்பை, தி.மு.கவினர் கடுமையாக விமர்சித்து வருவதுடன், ஆளுநர் துணை வேந்தரைக் காக்க முயல்கிறார் என்ற பகிரங்க குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

‘துணை வேந்தரை காக்க வந்தாரா ஆளுநர்?’

சேலம்: கைதாகி வெளிவந்த துணை வேந்தரை சந்தித்த தமிழக ஆளுநர் - பெரியார் பல்கலையில் என்ன நடந்தது?

பிபிசி தமிழிடம் பேசிய, திராவிடர் கழகத்தின் மாணவர் அணி மாநில செயலாளர் செந்தூரபாண்டியன், ‘‘துணை வேந்தர் ஜெகநாதன் முற்றிலும் சங்பரிவார் பின்னணி கொண்டவர். அவர் வருகைக்குப் பின், சாதி பாகுபாட்டைக் களையப் போராடிய பெரியாரின் பெயரில் இருக்கும் பல்கலைக் கழகத்திலேயே ஊழியர்கள், மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்துள்ளன.

நிதி மோசடி, சட்ட விரோதமாக தனி நிறுவனம் நடத்துவது, வன்கொடுமை எனப் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி கைதான துணை வேந்தரை, ஆளுநர் சந்தித்தது வருத்தத்துக்குறியது.

இதைக் கண்டித்துதான் இன்று போராட்டம் நடத்தினோம். துணை வேந்தரைக் காப்பதற்காகவும், ஆதாரங்களை அழிக்கவும்தான் ஆளுநர் வந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது,’’ என்கிறார் அவர்.

‘ஆளுநருக்கு அழகல்ல – அவமானம்!’

பெரியார் பல்கலைகழக துணை வேந்தருடன் ஆளுநர் சந்திப்பு

துணை வேந்தர் – ஆளுநர் சந்திப்பு குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன், ‘‘பாஜக பல்கலைக் கழகங்களை காவிக் கழகங்களாக மாற்றுவதற்காக, சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களை துணை வேந்தர்களாக நியமித்து வருகிறது. பெரியார் பல்கலையின் துணை வேந்தர் ஜெகநாதனும் அப்படித் தேர்வானவர்தான்.

சாதியத்தைக் களையப் பாடுபட்ட பெரியாரின் போராட்டங்கள் குறித்து புத்தகம் எழுதிய, பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தின் பேராசிரியருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதில் இருந்தே துணை வேந்தர் ஜெகநாதன் ஆர்.எஸ்.எஸ் மனநிலையில் இயங்குவதை உணர முடிகிறது,’’ என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த ப்ரியன், ‘‘தமிழக அமைச்சர்கள் கைதானபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிவேகத்தில் செயல்படத் துடித்த ஆளுநர் ரவி, கைதான துணை வேந்தர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டது அதிர்ச்சியளிக்கிறது. நடவடிக்கை எடுக்காமல், கைதான துணை வேந்தரை ஆளுநர் சந்தித்தது, அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்ட ஆளுநர் பதவிக்கு அழகல்ல, அவமானம்,’’ என்றார்.

‘ஆளுநரை விமர்சிக்க தி.மு.கவுக்கு தகுதியே இல்லை’

சேலம்: கைதாகி வெளிவந்த துணை வேந்தரை சந்தித்த தமிழக ஆளுநர் - பெரியார் பல்கலையில் என்ன நடந்தது?

தி.மு.கவின் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.

அப்போது பேசிய நாராயணன் திருப்பதி, ‘‘குற்றவாளிகளை அரவணைத்து, ஆலோசனை வழங்கி, ஆதரவு தெரிவிப்பவர்கள்தான் தி.மு.கவினர். ஊழல் வழக்கில் கைதாகி பல மாதங்களாகியும் அமைச்சர் பதவியை நீக்காமல் காப்பவர்கள்தான் தி.மு.கவினர்.

துணை வேந்தர் ஜெகநாதன் வேண்டுமென்றே தி.மு.கவின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார், அவரது கைது அவசியமற்றது. ஆளுநர் துணை வேந்தரை சந்தித்ததைப் பற்றியும், ஆளுநரைப் பற்றியும் விமர்சிக்க தி.மு.கவுக்கு தகுதியே இல்லை,’’ என்றார் சுருக்கமாக.

‘துணை வேந்தரின் ஜாமீன் செல்லாது’

பெரியார் பல்கலைகழக துணை வேந்தருடன் ஆளுநர் சந்திப்பு

“துணை வேந்தருக்கு ஜாமீன் கொடுத்தது செல்லாது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளேன்” என்கிறார், துணை வேந்தர் மீது வழக்கு தொடுத்த பெரியார் பல்கலைக் கழகத்தின் தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன்.

பிபிசி தமிழிடம் பேசிய இளங்கோவன், ‘‘துணை வேந்தர் ஜெகநாதன் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளார், தனியாக நிறுவனம் துவங்கியுள்ளார் என செய்தித்தாள்களில் வெளிவந்தன. அந்தத் தகவல்களை நான்தான் ஊடகங்களுக்குக் கொடுத்தேன் எனக் கூறிய துணை வேந்தர் ஜெகநாதன், என் மீது எழுத்துப்பூர்வமான 3 புகார்களை காவல் நிலையத்தில் பதிவிட்டார்.

அதன்பின், துணை வேந்தரைச் சந்தித்த நான் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ‘என் மீது வழக்கு கொடுக்கும் முன் கேட்கலாமே நான் இங்கே தானே இருக்கிறேன்?’ என அவரிடம் கேட்டேன். ஆனால், கோபத்தில் இருந்த அவர் என்னை சாதியைச் சொல்லித் திட்டி அவமானப்படுத்திவிட்டார்.

அதனால்தான் வழக்கு தொடுத்தேன். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது செல்லாது, இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்துள்ளேன்,’’ என்கிறார் இளங்கோவன்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *