
பட மூலாதாரம், Getty Images
ஒரு நபருக்கு திருமண வாழ்க்கை வழங்கக் கூடிய பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை, ஒரு லிவிங் டுகெதர் உறவால் ஒருபோதும் வழங்க முடியாது என்று, லிவ்-இன் உறவு தொடர்பான ஒரு வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்தது.
இந்திய சமூகத்தில், லிவ்-இன் ரிலேஷன்ஷிப், அதாவது திருமணம் செய்யாமல் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த வாழ்க்கையை ஆதரிப்பவர்கள் லிவிங் டுகெதர் உறவுமுறை என்பது அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது மட்டுமல்லாமல் அது ஒரு தனியுரிமை என்று வாதிடுகின்றனர். ஆனால், இதுபோன்ற உறவுகளை எதிர்ப்பவர்கள் அத்தகைய உறவை சமூக விழுமியங்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்துடன் இணைத்து, அது போன்ற உறவுகளை வைத்துள்ளவர்கள் பொறுப்பற்றவர்கள் என்றும் மோசமானவர்கள் என்றும் வாதிடுகின்றனர்.
அதே நேரத்தில், அத்தகைய உறவில் வாழும் பெண்களை சமூகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்த பெண்களை சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கும் போக்கு தான் இன்னும் தொடர்கிறது.
இதற்கிடையே, லிவ்-இன் (லிவிங் டுகெதர்) உறவுகள் தொடர்பாக இந்திய நாடாளுமன்றம் இதுவரை எந்த ஒரு தனி சட்டத்தையும் இயற்றவில்லை. இருப்பினும், உச்ச நீதிமன்றம் தனது முடிவுகளின் மூலம் அத்தகைய உறவுகளின் சட்ட நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இதுபோன்ற வழக்குகளில் வெவ்வேறு நீதிமன்றங்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது?
லிவ்-இன் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த்தா, இந்த நாட்டில் திருமண வாழ்க்கை முறையை அழிக்க “முறையான வடிவமைப்பு” இருப்பதாக கூறினார். சமூகத்தை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிப்பதற்காகவும் காட்டப்படும் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் திருமணம் போன்ற நெறிமுறைகளை அழிக்க முயல்கின்றன எனத்தெரிவித்துள்ளார் அவர்.
திருமணமான உறவில் கணவனோ, மனைவியோ தனது துணைக்கு துரோகம் இழைப்பது மற்றும் சுதந்திரமாக லிவ்-இன் உறவு போன்றவை ஒரு முற்போக்கான சமூகமாக காட்டப்படுகிறது என்பதுடன் இளம் சமுதாயம் இதுபோன்ற கட்டற்ற சுதந்திரத்தினால் ஈர்க்கப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், “வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் பல நாடுகளில் திருமண உறவைக் காப்பாற்றுவது ஒரு பெரிய பிரச்னையாகி விட்டதைப் போல, இந்த நாட்டில் திருமண உறவு பயனற்றதாக மாறும் காலம் வந்தால் மட்டுமே லிவ்-இன் உறவு சாதாரணமாக கருதப்படும்,” என்றும் நீதிமன்றம் கூறியது.
இதுமட்டுமின்றி ஒருவருக்கு குடும்பத்தில் நல்லுறவு இல்லையென்றால், அவர் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை அந்த நாட்டின் நடுத்தர வர்க்கம் மற்றும் அதன் ஒழுக்கத்தைப் பொருத்தது என்றும் நீதிமன்றம் கூறியது.

பட மூலாதாரம், Getty Images
லிவ்-இன் உறவுமுறை வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரம் திருமண வாழ்க்கையில் கிடைப்பதில்லை என சமூகச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
நீதிமன்றம் ஏன் இந்த கருத்தை வெளியிட்டது?
உண்மையில் இந்த உறவு முறையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடன் முதலில் நட்பாக பழகியதாகவும், ஒரு வருடமாக லிவ்-இன் உறவில் இருந்தபோது, திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். அந்த பெண் கருவுற்ற போது கருக்கலைப்பு செய்ய அறிவுறுத்தியதாகவும், அதற்கான மருந்துகளைக் கொடுத்ததாகவும் மனுவில் கூறியிருந்தார். மேலும், அதன் பின், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்டுக் கொண்டபோது அவர் மறுத்துவிட்டதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை அளித்த நீதிமன்றம் லிவ்-இன் உறவு தொடர்பான தனது கருத்தைத் தெரிவித்தது.
இந்த கருத்தை வெளிப்படுத்திய நீதிமன்றம், “மேலோட்டமாகப் பார்த்தால், லிவ்-இன் உறவுமுறை மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது என்பதுடன், அது இளைஞர்களை ஈர்க்கிறது. ஆனால் காலம் செல்லச்செல்ல அவர்கள் நடுத்தர வர்க்க சமூக ஒழுக்கங்கள் மற்றும் விதிகளை எதிர்கொள்ளத் தொடங்குகிறார்கள். அத்தகைய தம்பதிகள் பின்னர் தங்கள் உறவுக்கு சமூக அங்கீகாரம் இல்லாததால், சாதாரண சமூக வாழ்க்கையை வாழ முடியாது என்று உணர ஆரம்பிக்கிறார்கள்,” என்று கூறியது.

பட மூலாதாரம், RANJANA KUMARI FB
லிவ்-இன் உறவு என்பது பல ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதாக சமூகசச் செயற்பாட்டாளர் ரஞ்சனா குமாரி கூறுகிறார்.
இந்த உறவுமுறை இருவரில் ஒருவருக்குக் கசக்கும் போது பிரிந்து வாழும் நிலை ஏற்படுகிறது. ஆனால், இந்த உறவுமுறையில் ஈடுபட்ட ஒரு பெண் சமூகத்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது என்றும் நடுத்தர வர்க்க சமூகம் இந்தப் பெண்ணை அவரது உறவிலிருந்து பிரிந்த பெண்ணாகப் பார்ப்பதில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
நீதிபதி சித்தார்த்தா, “லிவ்-இன் உறவுமுறைக்குப் பிறகு ஒரு பெண் சமூகத்தால் புறக்கணிப்பு செய்யப்படுவதில் தொடங்கி, அநாகரீகமான கருத்துகளை எதிர்கொள்வது வரை அவருடைய வாழ்க்கையின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண், எப்படியாவது இந்த லிவ்-இன் உறவை திருமண உறவாக மாற்ற முயற்சிக்கிறார். லிவ்-இன் உறவு திருமண உறவாக மாறிய பின்னர் தான் அது சமூக அங்கீகாரத்தைப் பெறுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

திருமணத்தில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு ‘லிவ்-இன்’ உறவு மூலம் வாழும்போது கிடைக்காது என்று கூறுவது தவறு என்கிறார் சமூக செயற்பாட்டாளரான அபிஜீத்.
வாழும் உறவுகள் பற்றிய கருத்து
ஒரு ஆணுக்கு இன்னொரு பெண் துணை அல்லது மனைவியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எந்த சிரமமும் இல்லை என்றும், ஆனால் ஒரு பெண் திருமணம் செய்வதற்காக ஒரு ஆணைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறார் என்றும் நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், பல நூற்றாண்டுகளாக லிவ்-இன் உறவுகள் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர் மற்றும் அத்தகைய உறவுகளும் சமூகத்தில் ஒரு இடத்தைப் பெற்றிருந்ததாகவும் கூறுகின்றனர்.
இது குறித்துப் பேசிய ஒரு சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுபவருமான ரஞ்சனா குமாரி, திருமணத்திற்கு சமூக, குடும்ப அங்கீகாரம் அளிக்கும் இந்த தனிப்பட்ட மனப்பான்மை இந்திய சமூகத்தில் இன்னும் நீடிப்பதாகவும், எந்தப் பிரச்சனை வந்தாலும் இறுதியாக ஒரு பெண் திருமணம் செய்துகொள்வது மட்டுமே தீர்வு என்ற எண்ணம் நிலவுவதாகவும் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, “லிவ்-இன் உறவில், ஒரு பெண்ணுக்கு தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. அவர் தன் சொந்த காலில் சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.” ஆனால் அதே நேரத்தில், ஒரு பெண்ணை திருமணத்தில் ஏற்றுக்கொண்டு, அவரது சுதந்திரத்துக்கு எப்போதும் முட்டுக்கட்டை போடுவது தான் தற்போது சமூகத்தில் உள்ள பழக்கம் என்று அவர் கூறினார்.
மேலும், இந்திய சமூகத்தில், ஒரு பெண்ணை திருமண பந்தம் என்ற ஒரு கூட்டுக்குள் அடைப்பதும், பாதுகாப்பதும் இயல்பானதாகக் கருதப்படுவதால், அங்கே பெண்ணின் முடிவுகள், அவருடைய ஆளுமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதால் லிவ்-இன் வாழ்க்கை முறையை சமூகம் ஏற்பதற்கு பல ஆண்டுகள் ஆகும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சுதந்திரம், வாழும் உரிமை மற்றும் ஒருவரின் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவை அடங்கும் நிலையில், ஒரு பெண்ணின் உரிமைகளைப் பறிப்பதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
புனேயில் காதல் உரிமை இயக்கம் ஒன்றை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்திவரும் கே.அபிஜீத் பேசியபோது, “ஒரு பெண் திருமணத்திற்கு முன் ஒரு ஆணுடன் வாழ விரும்பினால், அதற்கேற்ப வாழலாம். அதன் பிறகு அதே துணையை அந்த பெண் திருமணம் செய்ய விரும்பினால், அது அவருடைய விருப்பம். அவர் விரும்பினால், அத்தகைய உறவில் இருந்து வெளியேறலாம், அல்லது அந்த உறவை மேலும் ஆழமாகக் கொண்டு செல்லலாம்,” என்றார்.

பட மூலாதாரம், ANI
லிவ்-இன் உறவுமுறை வாழ்க்கையை வாழ்ந்த ஷ்ரத்தா வால்கர் மற்றும் அஃப்தாப் ஜோடியின் வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லிவ்-இன் உறவுகளில் பெண்களின் உரிமைகள்
சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் ஷ்ரத்தா வால்கர் மற்றும் அஃப்தாப் ஜோடியின் வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து லிவ்-இன் உறவுகள் தொடர்பான விவாதங்கள் அதிகரித்தன.
ஆனால், திருமணத்தில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு லிவ்-இன் உறவு மூலம் வாழும்போது கிடைக்காது என்று கூறுவது தவறு என்கிறார் கே.அபிஜீத்.
திருமணமான உறவில் என்ன நடக்குமோ அதுவே லிவ்-இன் உறவிலும் நடக்கும் என்கிறார். திருமணத்துக்குப் பின் ஒரு பெண் ஒவ்வொரு நபரையும் சார்ந்திருப்பதால், அந்த உறவில் அதிக பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்வது தவறாகும் என்கிறார் அவர்.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைக் காக்கும் PWDV 2005 சட்டத்தின் அடிப்படையில் தான் 2013 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் லிவ்-இன் உறவு குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தது.
அந்தச் சட்டத்தின் பிரிவு 2(f) இல் குடும்ப உறவுகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
பெண்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞரான சோனாலி கட்வாஸ்ரா பேசிய போது, “இந்தியாவில் லிவ்-இன் உறவு சட்டப்பூர்வமானது. 2005ம் ஆண்டு சட்டத்தின்படி, திருமணம் உறவுகளில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே பாதுகாப்பையும், உரிமைகளையும் லிவ்-இன் உறவில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் வழங்க வேண்டும்,” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிய போது, “லிவ்-இன் உறவில் இருக்கும் பெண் ஏதேனும் ஒருவகையில் உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அந்தப் பெண்ணும் இந்தச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கசிய விடப்போவதாக ஆண் துணை மிரட்டினாலும் அவர் சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம்,” என்றார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வினோத் பன்சால் கூறுகையில், லிவ்-இன் உறவுகளுக்கு அவர் எதிரானவர் அல்ல என்றார். மேலும், “திருமணத்தில் பெண்களுக்குக் கிடைக்கும் அதே உரிமைகள் லிவ்-இன் உறவுகளின் போது அவர்களுக்குக் கிடைப்பதில்லை,” என்றார். தொடர்ந்து பேசிய அவர், அத்தகைய உறவு எவ்வளவு தூரம் முன்னேறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் இந்த உறவை திருமணமாக கருத முடியாது, ஏனெனில் திருமணமும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
லிவ்-இன் உறவு தொடர்பாக சமூகம் இரு பிரிவுகளாகப் பிரிந்திருப்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள், இதில் இரு தரப்பினருக்கும் அவரவர் கருத்துகள் மற்றும் வாதங்களை வைத்துள்ளனர். ஆனால் இதுபோன்ற உறவுகளில் வாழும் இளைஞர்கள் தங்கள் உறவைப் பற்றி இன்னும் வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்