ENG vs NED நெதர்லாந்துக்கு இலக்கு 340 ரன் – இங்கிலாந்துக்கு கட்டாய வெற்றி நெருக்கடி ஏன்?

ENG vs NED நெதர்லாந்துக்கு இலக்கு 340 ரன் - இங்கிலாந்துக்கு கட்டாய வெற்றி நெருக்கடி ஏன்?

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நடப்புச்சாம்பியனான இங்கிலாந்து அணிக்கும் கடைசிக்கு முந்தைய இடமான 9வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பார்ட்னர்ஷிப் இல்லாமல் தடுமாறிய இங்கிலாந்து

தொடக்க பேட்ஸ்மேன்களான ஜானி பேர்ஸ்டோவும் டேவிட் மலானும் தொடக்கத்திலேயே வேகமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 48 என்று இருக்கும்போது நெதர்லாந்து பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மாலன் 36 பந்துகளில் அரை சதமடித்தார். பேட்டிங் பவர்ப்ளேவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் சேர்த்தது.

மாலன் – ரூட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் சீரான வேகத்தில் இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து வந்த நிலையில் ரிவர்ஸ் ஹிட் அடிக்க முயற்சித்து வான் பீக்கின் பந்தில் ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பார்ட்னர்ஷிப் இல்லாமல் தடுமாறிய இங்கிலாந்து

ஒருநாள் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மலானும் 87 ரன்களில் ஆர்யன் தத்தின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியில் மாற்றமாக உள்ளே வந்த ஹேரி ப்ரூக் 11 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணிக்கு ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. களத்தில் பென் ஸ்டோக்ஸும் கேப்டன் ஜாஸ் பட்லரும் ஜோடி சேர ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால், இங்கிலாந்து கேப்டன் பட்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியை 33 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற இக்கட்டான சூழலுக்கு நெதர்லாந்து அணி கொண்டுவந்தது. ஆர்யன் தத்தின் மூன்றாவது விக்கெட்டாக அடுத்து வந்த மொயின் அலியும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை அடித்த பென் ஸ்டோக்ஸ்

மறுபுறம் நிதானமாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ் 58 பந்துகளில் தனது 24வது ஒருநாள் அரை சதத்தை அடித்தார். 42.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 7 ஓவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து ஸ்டேக்ஸும் வோக்ஸும் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். ஆர்யன் தத் வீசிய 45வது ஓவரில் 3 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் ஸ்டோக்ஸ் விளாசினார்.

47வது ஓவரில் இங்கிலாந்து அணி 300 ரன்களை எட்டியது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 78 பந்துகளில் தனது சதத்தை அடித்தார் ஸ்டோக்ஸ். அரை சதம் அடித்த வோக்ஸ் டி லீடின் பந்தில் 51 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த டேவிட் வில்லி முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். கடைசி வரை இருந்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் போது 108 ரன்களுக்கு அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற இங்கிலாந்து போராட்டம்

2025ல் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தகுதிப்போட்டியாக இந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை முடியும்போது புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் தான் சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறும். எனவே எப்படியாவது இந்தப் போட்டியில் வென்று 8வது இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு இங்கிலாந்து அணி விளையாடுகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *