கேரளா: பாரத் மாதா கி ஜே கூற மறுத்ததால் வெளியேறச் சொன்ன மத்திய அமைச்சர் – கல்லூரி மாணவி என்ன செய்தார்?

கேரளா: பாரத் மாதா கி ஜே கூற மறுத்ததால் வெளியேறச் சொன்ன மத்திய அமைச்சர் - கல்லூரி மாணவி என்ன செய்தார்?

மீனாட்சி லேகி சர்ச்சை

பட மூலாதாரம், ABVP

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த இளைஞர் மாநாட்டில், ‘பாரத் மாதா கி ஜே‘ சொல்ல மறுத்ததால் கோபமடைந்த மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பெண் ஒருவரை அரங்கை விட்டு வெளியேறுமாறு கூறிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது? மத்திய அமைச்சர் வெளியேறுமாறு கூறியதும் அந்த பெண் என்ன செய்தார்? அந்த பெண் யார்?

விவேகானந்தர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி..பி அமைப்பினர், ‘அவேக் – Awake 2024’ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஜனவரி 12ம் தேதி துவங்கிய நிகழ்ச்சிகளின் இறுதியாக பிப்ரவரி 3ம் தேதி (நேற்று) கோழிக்கோடு அருகே இளைஞர் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மத்திய கலாசாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ஏபிவிபி நிர்வாகிகள், ஏபிவிபி விளையாட்டுப் பிரிவான கேலோ பாரத் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘‘இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான். ஊழலற்ற ஆட்சியால் பிரதமர் மோதியின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன,’’ என்று கூறி பிரதமரின் சாதனைகளைப் பற்றி பேசினார்.

மேலும், தொடர்ந்த அவர், ‘‘கேரள மாநிலத்தின் ஆளுநரான ஆரிப் முகமது கான் என் மனம் கவர்ந்த தலைவர்களுள் ஒருவர். ராஜீவ் காந்தி மந்திரி சபையில் இருந்த அவர், ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராஜினாமா செய்தார். தற்போது முத்தலாக் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது,’’ என்று பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இணை அமைச்சர் மீனாட்சி லேகி ‘பாரத் மாதா கி ஜே’ சொன்ன போது, அதை இளைஞர்கள் திரும்பச்சொல்லவில்லை. இதனால் கோபமடைந்த அவர், பெண் ஒருவரை அரங்கை விட்டு வெளியேறச் சொன்ன வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மீனாட்சி லேகி சர்ச்சை

பட மூலாதாரம், ABVP

‘அரங்கை விட்டு வெளியேறுங்க’ – மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

அந்த வீடியோ காட்சியில், தனது உரையை முடித்த இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்தை நோக்கி, ‘பாரத் மாதா கி ஜே’ என்று உரக்கச் சொல்கிறார். அப்போது, கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்தவர்கள் மட்டுமே ‘பாரத் மாதா கி ஜே’ என பதிலுக்கு முழக்கமிடுகின்றனர்.

இதைக்கேட்ட இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘‘நீங்கள் பலரும் கைகட்டி அமைதியா அமர்ந்திருக்கீங்க. பாரத் மாதா எனக்கு மட்டுமா தாய்? உங்களுக்கும் தாய் தான். இதுல ஏதாவது சந்தேகம் இருக்கா, சந்தேகம் இல்லைதான? உற்சாகம்னா அதை வெளிப்படுத்தணும்,’’ என்று கூறிவிட்டு, மீண்டும் ‘பாரத் மாதா கி ஜே’ என்கிறார்.

மீண்டும் அதேபோல் ஒரு பகுதியில் இருந்து சப்தம் வராததால், ‘இந்தப் பக்கம் என்ன பிரச்சினை உங்களுக்கு?’ என்று கேட்ட அமைச்சர் மீண்டும், ‘பாரத் மாதா கி ஜே’ சொன்ன போதும் அதே நிலை தொடந்தது.

இதைக்கண்டு கோபமடைந்த அமைச்சர், கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை எழுந்து நிற்குமாறு கூறிவிட்டு அவரிடம், ‘‘உங்களிடம் நேரடியாக கேட்கிறேன் பாரத் மாதா உங்கள் தாய் இல்லையா? நீங்கள் அரங்கை விட்டு வெளியேறுங்க. நாடு குறித்து பெருமைப்படாமல் நாட்டைப் பற்றி பேசாமல் இருப்பவர் இளைஞர் மாநாட்டில் பங்கேற்க தேவையில்லை,’’ என்று கூறுகிறார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் இணை அமைச்சர் மீனாட்சி லேகி செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் ‘நிகழ்ச்சியில் ஏன் சிலர் பாரத் மாதா கி ஜே’ சொல்ல மறுத்தனர்?’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘‘அவர்கள் இளைஞர்கள் சில நேரங்களில் அவர்கள் கூச்சத்தால் சொல்லாமல் இருப்பார்கள். அந்த கூச்சத்தை போக்க வேண்டும் அவ்வளவு தான், இதில் வேறெதுவும் சொல்வதற்கு இல்லை,’’ எனக்கூறி மிக சுருக்கமாக கூறினார்.

இந்த விவகாரம் கேரள அரசியலில் பிரதான பேசுபொருளாகியுள்ளது. ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறுமாறு இணை அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வற்புறுத்துகிறார், மறுத்தவர்களை வெளியில் அனுப்பியுள்ளார் என்று இடதுசாரிகளும், காங்கிரசாரும் விமர்சித்து வருகின்றனர்.

மீனாட்சி லேகி சர்ச்சை

பட மூலாதாரம், ABVP

ஏபிவிபி அமைப்பின் விளக்கம் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.

நம்மிடம் பேசிய, ஏ.பி.வி.பி.யின் முன்னாள் மாநில செயலாளரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீஹரி, ‘‘இளைஞர் மாநாட்டில் 450 மாணவர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். அமைச்சர் ‘பாரத் மாதா கி ஜே’ சொல்லிய போது கூட்டத்தில் இருந்த 20 பேர் மட்டும் பாரத் மாதாகி ஜே சொல்ல மறுத்து அமர்ந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணை எழுந்து நிற்க வைத்து, நாடு குறித்து பெருமைப்படாதவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாமென அமைச்சர் சொன்னார்,’’ என்கிறார் அவர்.

மீனாட்சி லேகி சர்ச்சை

பட மூலாதாரம், ABVP

கல்லூரி மாணவி என்ன செய்தார்?

அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ‘பாரத் மாதா கி ஜே’ கூறுமாறு வற்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த ஸ்ரீஹரி, ‘‘அமைச்சர் யாரையும் வற்புறுத்தவில்லை, அனைவரையும் உற்சாகப்படுத்தவே ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிடச் சொன்னார்.

நாட்டின் பெருமையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணை வெளியேறுமாறு அமைச்சர் கூறினார். ஆனாலும் அந்தப்பெண் வெளியேறவில்லை. அவர் ஒரு கல்லூரி மாணவி ஆவார். அவர் அங்கிருந்த 20 பேருடன் இணைந்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார்,’’ என்கிறார் ஸ்ரீஹரி.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழ், மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகியை பலமுறை தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொண்டும் அவர் தொடர்பை ஏற்கவில்லை. அவர் பிபிசி தமிழிடம் விளக்கமளித்தால் இந்தச் செய்தியில் புதுப்பிக்கப்படும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *