தமிழ்நாடு அரசின் LGBTQIA+ வரைவு கொள்கைக்கு திருநங்கை, திருநம்பியர் இரு தரப்பினரும் எதிர்ப்பு ஏன்?

தமிழ்நாடு அரசின் LGBTQIA+ வரைவு கொள்கைக்கு திருநங்கை, திருநம்பியர் இரு தரப்பினரும் எதிர்ப்பு ஏன்?

திருநங்கைகள்

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் LGBTQIA+ பாலின சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக வரைவுக் கொள்கையை வகுத்துள்ளது. அதுதொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் திருநங்கை, திருநம்பியருக்கு தனியான வரைவு கொள்கை வேண்டும் என்று கோரி அவர்கள் அரசு சார்பில் வகுக்கப்பட்டுள்ள வரைவுக் கொள்கைக்கு எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றனர்.

LGBTQIA+ என்ற ஒற்றைக் குடையின் கீழ் அனைத்து பாலின சிறுபான்மையினரையும் இணைத்து வரைவு கொள்கை உருவாக்குவதால் திருநங்கைகள் சந்திக்கும் பாதிப்பு என்ன?

மதுரையைச் சேர்ந்த ஒரு தன்பாலின ஈர்ப்பு இணையருக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரித்தார். அப்பொழுது எல்.ஜி.பி.டி சமூகத்தினரை பாதுகாக்க அரசு வரைவுக் கொள்கையை உருவாக்க வேண்டும் எனக் கூறி இருந்தார்.

அந்த வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் சார்பில் திருநர் மற்றும் LGBTQIA+ சமூகத்தினருக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளிப்பதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21-ஆம் தேதி 11 பேர் கொண்டக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவால் வரைவுக் கொள்கை தயார் செய்யப்பட்டு அதன் மீதானக் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோவை என ஐந்து மண்டலங்களில் நடத்தப்பட்டது.

இந்தக் கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து திருநங்கைகளும் தங்களுக்கு வரைவு கொள்கைத் தனியாக வகுக்க வேண்டும் என்று கோரினர்.

‘இட ஒதுக்கீடு நீண்ட காலப் போராட்டம்’

கருத்துக்கேட்புக் கூட்டம்

மதுரையைச் சேர்ந்த திருநங்கை செயல்பாட்டாளர் ப்ரியா பாபு பிபிசியிடம் பேசும் போது,”அசாம், கேரளம், கர்நாடகம் மாநிங்களில் திருநங்கைகளுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய திருநங்கைகள் தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகிறோம். இந்த நிலையில் சமூக நலத்துறை வழியாக வரைவுக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதில் திருநங்கை, திருநம்பி மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் என அனைவரையும் ஒன்றாக சேர்த்து LGBTQIA+ சமூகத்திற்கென பொதுவான வரைவுக் கொள்கையை வகுத்து இருக்கிறது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

திருநங்கை, திருநம்பி ஆகியோர் உடல் ரீதியான பல்வேறு மாற்றங்களை சந்திக்கின்றனர். அவர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஒரு குழுவாக இணைந்து வாழ துவங்குகின்றனர்.

ஆனால், லெஸ்பியன்ஸ் ( பெண் தன் பாலின ஈர்ப்பாளர்கள்) , பை செக்ஸுவலஸ்(இரு பாலின ஈர்ப்பாளர்கள்) , கே( ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்) போன்றவர்கள் பொது வெளியில் சொன்னால் மட்டுமே தெரியக்கூடியவர்கள். தன் பாலின ஈர்ப்பாளர்களுடன் பால் மாறியவர்கள திருநங்கைகள், திருநம்பிகளைச் சேர்த்து முன்னுரிமை வழங்குவது என்பது ஏற்புடையதாக இருக்காது”, என்றார்.

கருத்துக் கேட்புக் கூட்டம்

வரைவு கொள்கையால் மீண்டும் புறக்கணிப்பு ஏற்படும்

“LGB ஆகிய மூன்று குழுக்களுடன் அரசு தனி வரைவுக் கொள்கை வகுத்து அவர்களுக்கென தனியான முன்னுரிமை, இட ஒதுக்கீடு வழங்கலாம். ஆனால் எங்களுடன் வழங்கினால் சமூகத்தால் புறக்கணிப்பட்டு வாழ்பவர்களுக்கும், சமூகத்தில் ஒன்றாக இணைந்திருக்கும் அதேநேரத்தில் உணர்வு ரீதியாகப் பாலின மாற்றத்தால் வாழ்பவருக்கும் ஒன்றாக கொடுப்பது எங்களுக்கான வாய்ப்பை மறுப்பதாக மாறிவிடும். எனவே, அதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்றார்.

‘கணக்கெடுப்பு இல்லாமல் வரைவு கொள்கை தீர்வு தராது’.

எல் ஜி.பி.டி சமூக செயல்பாட்டாளர் கோபி சங்கர்

இது குறித்து பிபிசியிடம் பேசிய எல் ஜி.பி.டி சமூக செயல்பாட்டாளர் கோபி சங்கர் கூறும் போது, “இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய முழுமையானக் கணக்கெடுப்பு இல்லை. அதேபோல் தமிழ்நாட்டில் வாழும் திருநங்கைகள், திருநம்பிகள், மாற்று பால் இனத்தவரின் கணக்கீடு இல்லாமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த வரைவுக் கொள்கையை தயாரிப்பது அவர்களுக்கு எந்தப் பலனையும் தராது.

முதலில் பால் அடையாளம், பாலின அடையாளத்தின் அடிப்படையில் இவர்களைப் பிரிக்க வேண்டும்.

அரசு ஏற்படுத்தி இருக்கும் 11 பேர் அடங்கிய குழு திருநங்கை,எல்.ஜி.பி.டி செயல்பாட்டாளர்களிடம் கலந்து ஆலோசனை செய்து வரைவுக் கொள்கை தயார் செய்தால் மட்டுமே இது அனைவருக்குமானதாக இருக்கும். ஆனால், தற்பொழுது நியமிக்கப்பட்ட குழுவினர் யாரிடமும் பேசாமல் அவர்களாக இந்த வரைவை தயார் செய்து இருப்பது எந்த விதத்திலும் ஒரு முழுமையான கொள்கையை உருவாக்காது.

திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும் மாற்று பால் உணர்வு உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. எனவே ஒரே வரைவாக இருந்தாலும் தனித்தனியான பாதுகாப்பு, வேலைவாய்ப்பு,பொருளாதாரம் பற்றிய பத்திகள் வரைவுக் கொள்கையில் இடம் பெறுவது அவசியம்”, என்றார்.

அரசு தயார் செய்திருக்கும் வரைவுக் கொள்கையை சமூக நலத்துறையின் ஆணையர் அமுதவல்லி மண்டலம் தோறும் சென்று அந்தச் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கூறி அவர்களது கருத்தைப் பெற்று வருகிறார்.

LGBTQIA+ வரைவு கொள்கையில் அரசின் முடிவு என்ன?

சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி

சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி பிபிசியிடம் பேசும்போது, “தமிழ்நாடு முழுவதிலும் 8,000 திருநங்கைகள் இருக்கின்றனர். ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்களுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் மூன்றாம் பாலினத்தவராக மாற்றுவதில் சிரமம் இருப்பதாக பலரும் கூறி இருக்கின்றனர்.

அரசின் சார்பில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட வரைவுக் கொள்கை 5 மண்டலங்களில் உள்ள எல்.ஜி.பி.டி.கியூ.ஐஏ + சமூகத்தினரிடம் கருத்து கேட்புகள் நடத்தப்பட்டன. இதில் திருநங்கைகள் மத்தியிலிருந்து தனியான வரைவுக் கொள்கை வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டன “, என்றார்.

தமிழ்நாடு அரசு பணியில் இட ஒதுக்கீடு?

“தமிழ்நாடு அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட வரைவில் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், பள்ளிகளில் முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே இந்த வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டு அதற்கான கருத்து கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருநங்கைகள் 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். இன்னமும் சில பணிகள் முடித்த பிறகு வரைவு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அரசு முடிவு செய்யும்”, என்கிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *