சட்டப் பிரிவு 370: நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் பேசிய பெரியாரின் கருத்து நீக்கப்பட்டது ஏன்?

சட்டப் பிரிவு 370: நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் பேசிய பெரியாரின் கருத்து நீக்கப்பட்டது ஏன்?

ஜம்மு காஷ்மீர், பெரியார், திமுக, சட்டப்பிரிவு 370, அரசியல்

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று வழங்கியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது. மேலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீருக்கும் தனி இறையாண்மை கிடையாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019 திருத்த மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தன.

இதன் மீதான விவாதத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம். முகமது அப்துல்லாவின் உரை அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்திய அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடகமான சன்சாத் தொலைக்காட்சியில் இந்த விவாதம் குறித்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் திமுக எம்.பி அப்துல்லா பேசியது, “நான் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், இந்த நாட்டின் கலாச்சாரங்களையும் பாரம்பரியங்களையும் பின்பற்றுகிறேன். சில கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், சாதி, மத, இன வேறுபாடுகள் கடந்து இந்த நாட்டில் பிறந்த அனைவராலும் மதிக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஒன்றிய அரசு அதை மதிப்பதில்லை”

அவர் தொடர்ந்து பேசுகையில், “ஆனால் இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நாங்கள் பாதுகாக்கிறோம் என ஒன்றிய அரசு மார்தட்டி கொள்கிறது.

“முதலில் நம் முன்னோர்கள் காஷ்மீர் ராஜா ஹரி சிங்கிற்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைப்பதை விட அவர் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது முக்கியம்,” என சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டியதால் உண்டான அமளி

ஜம்மு காஷ்மீர், பெரியார், திமுக, சட்டப்பிரிவு 370, அரசியல்

பட மூலாதாரம், SANSAD TV

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது கூட்டாட்சியின் மீதான தாக்குதல் என கூறிய அவர், “ஒவ்வொரு இனத்திற்கும் தங்களது சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை உள்ளது, காஷ்மீரி மக்களுக்கும் அது பொருந்தும்” எனும் பெரியாரின் வாசகத்தை மேற்கோள் காட்டி பேசினார்.

இதனைத் தொடர்ந்து அப்துல்லாவின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் எனக் கூறிய தி.மு.க உறுப்பினரின் கருத்தை ஏற்க முடியாது” என்றார்.

“இனத்தின் அடிப்படையில் தீர்மானிப்பது, அரசியலமைப்புக்கு எதிரானது. பாராளுமன்றத்தில் கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் தேசத் துரோகக் கருத்தைக் கூட மேற்கோள் காட்ட முடியுமா? திமுக உறுப்பினர் அப்துல்லாவின் கருத்து நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது.

“இதை ஏற்க முடியாது. இதைக் கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருப்பது ஏன்? அவர் கூறிய கருத்துக்களை நான் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்,” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர், பெரியார், திமுக, சட்டப்பிரிவு 370, அரசியல்

பட மூலாதாரம், SANSAD TV

அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “காங்கிரஸ், தி.மு.க உறுப்பினருடைய கருத்துடன் உடன்படுகிறீர்களா என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும்,” எனக் கூறினார். அவையில் சிறது நேரத்திற்கு கூச்சலும் குழப்பமும் தொடர்ந்தது.

மத்திய அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நோக்கி, “தி.மு.க உறுப்பினர் கூறியதைக் காங்கிரஸ் ஆமோதிக்கிறதா? அப்துல்லாவின் இந்த அறிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெரியார் கூறியதை அப்துல்லா மேற்கோள் காட்டியிருக்கிறார். அதை ஆதரிப்பதா வேண்டாமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம், ஆனால் ஒருவரை அவையில் பேசவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது,” எனக் கூறினார்.

இறுதியாக பெரியாரின் வாசகம் உட்பட எம்.பி அப்துல்லா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

‘தந்தை பெரியாரின் பெயரை அனைவரும் பயன்படுத்துங்கள்’

ஜம்மு காஷ்மீர், பெரியார், திமுக, சட்டப்பிரிவு 370, அரசியல்

பட மூலாதாரம், X/M.K.Stalin

இந்தச் சம்பவம் சர்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “மாநிலங்களவையில் உறுப்பினர் அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார் தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்.

“மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்,” என பதிவிட்டுள்ளார்.

‘திராவிட நாடு கேட்ட காலம் மலையேறிவிட்டது’

ஜம்மு காஷ்மீர், பெரியார், திமுக, சட்டப்பிரிவு 370, அரசியல்

பட மூலாதாரம், X/Narayanan Thirupathy

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “ஜனநாயகத்தின் உயிர்நாடியான பாராளுமன்றத்தில் பிரிவினைவாதம் பேசி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயன்ற திமுகவின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது” எனக் கூறுகிறார்.

“இது நாள் வரை மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து கொண்டிருந்தவர்கள், வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், பாஜகவின் ஆட்சியே தொடரும் என்ற நிலையை உணர்ந்து, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த காஷ்மீர் அமைதி பாதைக்கு திரும்பியுள்ளதை ஏற்றுக்கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இன ரீதியிலான பிரிவினைவாதத்தை விதைக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது,” என்று அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், “திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய் விட்டது என்பதை அறிவாலயமும், முதல்வரும் உணரவேண்டும். ஈ.வெ.ரா.வின் பெயரை எங்கும், எப்போதும், எந்த சூழலிலும் பயன்படுத்துவோம் என்று முழங்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“ஈ.வெ.ரா அவர்கள், தி.மு.க குறித்தும், அண்ணாதுரை அவர்கள் குறித்தும், கருணாநிதி அவர்கள் குறித்தும், மகாத்மா காந்தி அவர்கள் குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் கூறிய அனைத்து கருத்துக்களையும் பயன்படுத்துவாரா முதல்வர் அவர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

“பிரிவினைவாத கருத்துக்களை மட்டும் அல்ல சிந்தனையைக் கூட ஏற்காது இந்தியா என்பதை முதல்வர் உணர்ந்து கொண்டு, திமுக உறுப்பினரின் பிரிவினைவாத பேச்சை கண்டிக்காமல், ஈவெரா பெயரை நீக்கிவிட்டார்கள் என்று மடைமாற்றி, பிரச்சனையை திசை திருப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று நம்மிடம் கூறினார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

‘இந்தியாவிற்கு பெரியார் என்றும் தேவை’

ஜம்மு காஷ்மீர், பெரியார், திமுக, சட்டப்பிரிவு 370, அரசியல்
படக்குறிப்பு,

திராவிடர் கழக துணைத்தலைவர் கலி. பூங்குன்றன்

பெரியாரின் கருத்துகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து திராவிடர் கழக துணைத்தலைவர் கலி. பூங்குன்றனிடம் பேசினோம்.

“உச்சநீதிமன்ற தீர்ப்பாகவே இருந்தாலும் அது குறித்து மாறுபட்ட கருத்துகள் கூற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. திமுகவின் உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது பெரியார் வாழ்க என சொல்லி தான் பதவி ஏற்றார்கள், அப்போதும் கூட ஒரு சர்ச்சை உண்டானது,” என்கிறார் கலி. பூங்குன்றன்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே, அவர் மறைந்து பல ஆண்டுகளான பின்பும் கூட மதவாதிகளுக்கு பயம் வரத் தான் செய்கிறது.

“தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லாமல் இந்தியாவிற்கே தேவையான தலைவராக உணர்வாலும் கொள்கையாலும் பெரியார் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். பெரியாரின் வாசகத்தை அப்துல்லா பயன்படுத்தியதால் தான் இது நடந்துள்ளது,” என்று கூறினார்.

கருத்து கூற மறுத்த எம்.பி அப்துல்லா

இது குறித்து தி.மு.க மாநிலங்களவை எம்.பி அப்துல்லாவிடம் பிபிசி தமிழ் கருத்து கேட்க முயற்சி செய்தது. ஆனால் அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *