
பட மூலாதாரம், SIVAKARTHIKEYAN/@X
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம், உண்மைக்கு மிக நெருக்கமான முழுநீள VFX காட்சிகளுக்காக அதிகம் பாராட்டை பெற்றுள்ளது. தமிழில் பேசும் ஏலியனாக தோன்றியுள்ள ‘டேட்டூ’ கதாபாத்திரம் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த ஏலியனை உருவாக்க 1,500 பேர் சேர்ந்து உழைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
“இந்திய சினிமாவிலேயே VFX கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட முழு நீளக்கதை இதுவரை வெளிவந்ததில்லை. அதை முதலில் செய்திருப்பது அயலான் என்பதில் எங்களுக்கு பெருமை” என்றார் VFX காட்சிகளை தயாரித்த பேந்தம் எஃப் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிஜாய் அற்புதராஜ்.
“இந்தப் படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அப்போது வெளிவந்திருந்தால், இந்த முயற்சிகள் இன்னமும் புதிதாக பார்க்கப்பட்டு இருக்கும். கடந்த ஆறு ஆண்டுகளில் வேறு பல படங்கள் VFX தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளன. இருந்தாலும் நாங்கள் அயலானில் செய்திருப்பதை எந்த படமும் செய்யவில்லை” என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

பட மூலாதாரம், BejoyArputharaj

பட மூலாதாரம், BejoyArputharaj
அம்பத்தூரில் உருவாக்கப்பட்ட VFX
ஹாலிவுட் படங்களைத்தான் தமிழில் மொழி மாற்றம் செய்து பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அயலான் திரைப்படம் அதை மாற்றியமைத்துள்ளது என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார், “அயலான் படத்துக்கு அவதார் படக்குழுவினர் பங்களித்ததாக சமூக ஊடகங்களில் சிலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. அம்பத்தூரில் உள்ள குழுவினர் தான் இந்த VFX அனைத்தையும் உருவாக்கியது” என்கிறார்.
அடுத்தடுத்த திரைப்படங்களும் அறிவியல் தொழில்நுட்பத்துடனே அமைந்திடும் என்பதுடன், இன்னும் பிரமாண்டமான வடிவத்தில் அயலான்-2 உருவாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் அவர்.

பட மூலாதாரம், Ravikumar
ஏலியனுக்கு எது அடிப்படை?
அயல் கிரகத்தில் வாழும் உயிரினங்களை காட்சிப்படுத்துவதற்கு கற்பனையை மட்டுமே நாட வேண்டியுள்ளது. இப்போது பயன்படுத்தப்பட்டுள்ள ஏலியன் உருவத்திற்காக ஆய்வுகள் செய்து முடிவுக்கு வந்தோம் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். அதுபற்றி அற்புதராஜ் கூறும்போது “ இந்த கதாபாத்திரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. எனவே ஏலியனின் உருவம் குள்ளமாக இருக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே இயக்குநர் சொல்லிவிட்டார். பார்ப்பதற்கு க்யூட்டாக கார்ட்டூன் கதாபாத்திரம் போல இருக்க வேண்டும் அதேநேரம் பொம்மை படம் என்றும் யாரும் கூறிவிடக்கூடாது அதற்கேற்ற வகையில் உருவம் மற்றும் நிறம் தேர்வு செய்யப்பட்டது.
கிரே ஏலியன் (Grey alien) என்று கருத்தாக்கத்தை கொண்டுதான் இந்த ஏலியன் உருவாக்கப்பட்டது. கிரே ஏலியன் என்பது உலகம் முழுக்க இருக்கக்கூடிய ஒரு கருத்தாகும். ஏலியன் வந்ததை நேரில் பார்த்ததாக சொல்லக் கூடியவர்கள் அது எப்படி இருந்தது என்று விவரித்த விவரங்களைக் கொண்டு ஹாலிவுட் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட உருவம் தான் இந்த கிரே ஏலியன். எனவே இது யார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. அதன் அம்சங்களை எடுத்துக்கொண்டு நமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொண்டோம்” என்கிறார் அற்புதராஜ்.

பட மூலாதாரம், X/@bejoyraj
ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் டைனோசர் என்ற அழிந்துபோன உயிரின வகையின் தோற்றத்தை மீண்டும் வடிவமைத்திருப்பார்கள். அதே போன்ற ஒரு முயற்சிதான் அயலான் என்கிறார் ரவிக்குமார், “ஜுராசிக் பார்க், டைட்டானிக் போன்ற படங்கள் எப்படி பிரமாண்டமாக இருக்கின்றனவோ, அதுபோன்ற படங்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறோம். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் நம் ஊரிலேயே இருக்கின்றன.” என்று குறிப்பிட்ட அவர் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
“ஹாலிவுட் நம்மை விட இன்னும் முன்னேறியதாக இருக்கிறது. அவர்களின் சந்தை பெரியது. எல்லா துறைகளிலும் இருப்பது போல, அவர்களின் நிபுணத்துவமும் இதிலும் அதிகம். எனவே, இப்போதிருக்கும் சூழலில் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், X/@@Ravikumar_Dir
அயலானின் தமிழ் முக பாவனைகள்
டேட்டூ என அழைக்கப்படும் தமிழ் ஏலியன், பேச்சில் மட்டுமல்லாது முக பாவனைகளின் வழியாகவும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. “ஏலியன் திரையில் தோன்றினால் மட்டும் போதாது. இந்தப் படத்தில் ஏலியன் சிரிக்க வேண்டும், அழ வேண்டும் ,கோபப்பட வேண்டும். மனிதரை போல பல உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதை பார்க்கும் ரசிகர்களுக்கு புரியும்” அதற்காக பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம் என விவரித்தார் அற்புதராஜ்.
“ முக பாவனைகளை துல்லியமாக வெளிக்கொணர ஏலியனின் வாய், கண் மற்றும் கன்னத்தில் உள்ள சதைகள் மிக முக்கியமானவை. Performance capture என்ற தொழில்நுட்பத்தின் மூலம், எங்கள் குழுவினர் பல பேரின் முக பாவனைகள் பதிவு செய்யப்பட்டு, அவை ஏலியனுக்கு ஏற்ற விதத்தில் பொருத்தப்பட்டன. இதனை சாத்தியமாக்கிட ஒருவர் ஹெல்மெட் போன்ற கருவியை தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். அதன் மீது இருக்கும் ‘கோ ப்ரோ’ என்ற கேமரா முகபாவனைகளை பதிவு செய்துகொள்ளும். பின்னர் அதனை கணிணி வழியாக அயலானுக்கு மாற்றினோம்” என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Ravikumar
மேலும் உடல் அசைவுகளை மொத்தமாக பதிவு செய்துகொள்ளும் தொழில்நுட்பமும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, அதுபற்றி அற்புதராஜ் விளக்கும்போது, “மற்ற படங்களில் ஸ்டுடியோவில் தான் மோஷன் கேப்சர் நடைபெறும். அதாவது ஒரு நபரின் உடல் அசைவுகளை பதிவு செய்யும் முறை. ஆனால் அயலான் திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தளத்திலேயே, பாடி சூட் என்பதை ஒருவர் அணிந்து கொண்டு, அவருடைய அசைவுகள் பதிவு செய்யப்பட்டன” என்று விளக்கினார்.

பட மூலாதாரம், BejoyArputharaj
1,500 பேர் உழைப்பு
அயலான் திரைப்படத்தை உருவாக்குவதில் 1,500 பேர் உழைத்துள்ளார்கள் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, Phantom FX என்ற நிறுவனத்தில் மட்டும் 650 பேர், மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்து இயங்கிய சிறிய நிறுவனங்களின் வழியாக 800 பேர் பணியாற்றியுள்ளனர். ஒரு வாகனம் உற்பத்தி செய்யும்போது எப்படி துணை நிறுவனங்களிலும் உற்பத்தி நடக்குமோ அப்படித்தான் இந்த படத்திற்கான வேலைகளும் நடந்தன என படக்குழுவினர் விளக்கினார்கள்.
“VFX குழுவில் 16 துறைகள் உள்ளன. இந்த துறையின் செயல்பாடுகள் ஒரு பொம்மலாட்ட தயாரிப்பு போன்றவைதான். முதலில் பொம்மைகளுக்கான உருவத்தை தயாரிக்க வேண்டும். அது VFX -ல் மாடலிங் எனப்படும். அந்த பொம்மைக்கு கம்பிகள் கட்டி அதை அசைக்க வேண்டும். அது ரிக்கிங் எனும் துறையால் செய்யப்படும். அடுத்து அந்த பொம்மையை நடக்க வைக்க வேண்டும். அது அனிமேஷன் என்னும் துறை செய்யும். அதன் சருமம் எப்படி இருக்க வேண்டும் என்பதை டெக்ஸ்சர் துறை தீர்மானிக்கும்.
அதே போன்று ஆடைகள், தலைமுடி என ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் வெவ்வேறு துறையினர் செய்தனர். ஒரு ஷாட் முழுமை பெற 40 பேர் தேவைப்படும். அயலான் படத்தின் மொத்த செலவில் 50%க்கும் மேல் VFXக்காக செலவிடப்பட்டது. ஏனென்றால், VFXஎன்பது இந்தப் படத்தில் ஒரு பகுதி அல்ல, படம் முழுக்கவே VFX தான்.” என்று கூறுகிறார் அற்புதராஜ்.

பட மூலாதாரம், BejoyArputharaj
ஒரு திரைப்படத்தை முழு நீள VFX தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் போது அதற்கான செலவுதான் முதல் சவாலாக உள்ளது. இத போன்ற தமிழில் செய்ய முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. இதுபோன்ற தடைகளையும் தயக்கங்களையும் அயலான் உடைத்துள்ளதாக அற்புதராஜ் கூறுகிறார். தற்போது வரை இந்தப் படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
“VFX செய்ய, மும்பை செல்ல வேண்டும், ஹாலிவுட் செல்ல வேண்டும். அங்கு சென்று அதிகமான செலவு செய்தால் தான் தரமான VFX கிடைக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் அயலான் உடைத்துள்ளது. எங்கள் நிறுவனம் 15 வருடங்களாக இங்குதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்களை முழுமையாக யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என நம்பிக்கையுடன் பேசுகிறார் அற்புதராஜ்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்