இரான்-பாகிஸ்தான் பிரச்னை: பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது என்ன? பாகிஸ்தான் ஏன் இவர்களை தாக்குகிறது?

இரான்-பாகிஸ்தான் பிரச்னை: பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது என்ன? பாகிஸ்தான் ஏன் இவர்களை தாக்குகிறது?

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இவை பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்காக செயல்பட்டு வருகின்றன

வியாழக்கிழமை (ஜனவரி 18) காலை இரானின் சிஸ்தான்-ஓ-பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்கள் இரானின் தாக்குதலுக்கு எதிரான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ‘மார்க் பார் சர்மாச்சார்’ என்ற பெயரில் பயங்கரவாதிகளை குறிவைத்து தங்களது இராணுவம் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ‘இரானில் இருக்கும் பாகிஸ்தான் பகுதியை சேர்ந்த பயங்கரவாதிகள் தங்களை சர்மாச்சர் என்று அழைத்துக்கொள்கின்றனர்.’

‘மார்க் பார் சர்மாச்சார்’ என்பது இரானில் வசிக்கும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பிரச்சாரமாகும்.

“தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைவரும் பாகிஸ்தானில் பலரும் ரத்தம் சிந்த காரணமான மற்றும் இரானில் தங்களது கட்டுப்பாட்டில் யாருமே இல்லாத பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள பயங்கரவாதிகள்,” என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பான தகவல்களை பலமுறை இரானுடன் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அவை இரானால் புறக்கணிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. அதனால்தான் வியாழக்கிழமை காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது பாகிஸ்தான்.

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது இரான்

இதற்கு முன்னதாக செவ்வாயன்று, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது இரான். அதற்கு காரணமாக ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற போராளிகள் அமைப்பின் மறைவிடங்களே தங்களது இலக்கு என்று கூறியது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்தபடியே இரானுக்கும் தீவிரவாத செயல்களை செய்து வருவதாக தெரிவித்தது இரான்.

இரான் சிஸ்தான் – பலுசிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாத தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த ஒரு அமைப்பின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்
படக்குறிப்பு,

இருதரப்பும் தாக்குதல் நடத்திய இடங்கள்

இருப்பினும், அதன் இலக்காக பலுசிஸ்தானின் ஆயுதக்குழு அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால், பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் தங்களது அமைப்பு இரானில் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டது.

அதன் செய்தித்தொடர்பாளர் ஆசாத் பலோச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் பி.எல்.ஏ அமைப்பு இல்லை. பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“இரான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் (மேற்கு பலுசிஸ்தான்) உள்ள பிஎல்ஏ மற்றும் பிற விடுதலைக்கான ஆதரவு அமைப்புகளை தங்களது படைகள் குறிவைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தகவல்களை பிஎல்ஏ நிராகரிக்கிறது,” என்று கூறியுள்ளார் ஆசாத் பலோச்.

ஆனால் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்றால் என்ன?

அவர்கள் இரானில் இருப்பதற்கான ஆதாரம் இருக்கிறதா?

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான்.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்திற்கு என்ன வேண்டும்?

பலுசிஸ்தானை சேர்ந்த மக்கள் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது தாங்கள் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானோடு சேர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை ஒரு சுதந்திர நாடாக பார்க்க விரும்பினர்.

ஆனால் அது நடக்கவில்லை. எனவே பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் இராணுவத்துடன் இந்த பகுதி மக்களின் போராட்டம் இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது.

தற்போது பல பிரிவினைவாத குழுக்கள் பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்காக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பழமையானது மற்றும் மிகவும் திறன்வாய்ந்த அமைப்புகளில் ஒன்று பிஎல்ஏ என்ற பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்.

இந்த அமைப்பு முதன்முதலில் 1970-களின் முற்பகுதியில் உருவாகியதாக நம்பப்படுகிறது.

சுல்பிகர் அலி பூட்டோவின் அரசுக்கு எதிராக பலூச் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கியது. ஆனால் ராணுவ சர்வாதிகாரியான ஜியாவுல் ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு பலூச் சமூக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. அதன் முடிவில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவமும் இல்லாமல் போனது.

பின்னர் அது மீண்டும் 2000-ஆம் ஆண்டில் செயல்பட தொடங்கியது. பிஎல்ஏ அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டுதான் நிறுவப்பட்டதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த அமைப்பு 2000-ஆம் ஆண்டு முதல், பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த அமைப்பில் பெரும்பாலும் மாரி மற்றும் புக்டி பழங்குடியினரை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இது பிராந்திய சுயாட்சிக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக போராடுகிறது.

பலுசிஸ்தானின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சர்தார் அக்பர் கான் புக்டி. இவர் பிஎல்ஏ-இன் மிகவும் மூத்த நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 26 ஆகஸ்ட் 2006 அன்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டார்.

இதன் பிறகு, அதன் தலைவராக நவாப் கைர் பக்ஷ் மிரியின் மகனான நவாப்சாதா பாலாச் மிரி நியமிக்கப்பட்டார். ஆனால், நவம்பர் 2007-இல், பாலச் மிரியின் இறப்பு செய்தியும் வந்தது.

இந்த ஆண்டு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது பாகிஸ்தான் அரசு.

இந்த குழு பலுசிஸ்தானை வெளிநாட்டு செல்வாக்கிலிருந்து விடுவிக்க விரும்புகிறது. அதிலும் குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்திலிருந்து விடுவித்து கொள்ள விரும்புகிறது. பலுசிஸ்தானின் வளங்களின் மீது தங்களுக்கே முதல் உரிமை இருப்பதாக பிஎல்ஏ நம்புகிறது.

பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிஎல்ஏ தொடர் தாக்குதல்களை நடத்தியதின் விளைவாக காவல்துறையினர் மற்றும் பலூச் அல்லாத மக்கள் இறந்தனர்

பி.எல்.ஏ அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட தாக்குதல்கள்

  • ஜூலை, 2000 – குவெட்டாவில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
  • மே, 2003 – பி.எல்.ஏ தொடர் தாக்குதல்களை நடத்தியதின் விளைவாக காவல்துறையினர் மற்றும் பலூச் அல்லாத மக்கள் இறந்தனர்.
  • 2004 – பாகிஸ்தான் அரசின் பெரிய வளர்ச்சி திட்டங்களில் பணிபுரிந்து வந்த சீன வெளிநாட்டு தொழிலாளர்களை பிஎல்ஏ தாக்கியது.
  • (பாகிஸ்தானில் சீனா தொடங்கும் திட்டங்களுக்கு பிஎல்ஏ எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.)
  • டிசம்பர், 2005 – பி.எல்.ஏ போராளிகள், அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் கோஹ்லுவில் உள்ள துணை ராணுவ முகாமுக்கு வருகை தந்த போது அங்கு ஆறு ராக்கெட்டுகளை வீசினர். முஷாரஃப் காயமடையவில்லை என்றாலும், பாகிஸ்தான் அரசு இந்தத் தாக்குதலை அவரது உயிரை பறிக்கும் ஒரு முயற்சி என்று கூறியது மட்டுமின்றி பதிலடியாக மாபெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
  • ஏப்ரல், 2009 – பிஎல்ஏ-இன் தலைவர் என்று கூறப்படும் பிரமதாக் கான் புக்டி பலூசிஸ்தானில் வசிக்கும் பூர்வீகமற்றவர்களைக் கொல்லுமாறு பலூச் வம்சாவளி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் சுமார் 500 பஞ்சாபியர்கள் உயிரிழந்ததாக பிஎல்ஏ குறிப்பிடுகிறது.
பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடந்த 20 ஆண்டுகளில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது பி.எல்.ஏ

  • ஜூலை 2009 – சுய் பகுதியை சேர்ந்த 19 பாகிஸ்தான் காவல்துறையினரை கடத்தி சென்றனர் பிஎல்ஏவினர். கடத்தப்பட்டவர்களை தாண்டி ஒரு காவலரை கொலை செய்தது பிஎல்ஏ, மேலும் 16 பேர் காயமடைந்தனர். அடுத்தடுத்த மூன்று வாரங்களில் பிஎல்ஏவை சேர்ந்த கடத்தல்காரர்கள், கடத்தப்பட்ட காவலரில் ஒருவரை தவிர மற்ற அனைவரையும் கொன்று விட்டனர்.
  • நவம்பர் 2011 – வடக்கு முசாகேல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிலக்கரிச் சுரங்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசாங்கப் பாதுகாப்புப் பணியாளர்களை பிஎல்ஏ கிளர்ச்சியாளர்கள் தாக்கினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.
  • டிசம்பர் 2011 – முன்னாள் மாநில அமைச்சர் மிர் நசீர் மெங்கலின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை வெடிக்கச் செய்தனர் பிஎல்ஏ போராளிகள். இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
  • ஜூன் 2013 – பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் வீட்டில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் மற்றும் சோதனைக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றது. இந்த அமைப்பு ஜின்னாவின் வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றி விட்டு பிஎல்ஏ கொடியை பறக்க செய்தது.
  • ஜூன் 2015 – பிர் மசோரி பகுதியில் உள்ள ஐக்கிய பலூச் ராணுவத்தின் கரம் கான் முகாம் மீது பிஎல்ஏ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் உயிரிழந்தனர்.
  • மே 2017 – பலுசிஸ்தானின் குவாடரில் மோட்டார் சைக்கிள்களில் சென்றவாறே கட்டுமானத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் பிஎல்ஏ பயங்கரவாதிகள்.
  • ஆகஸ்ட் 2017 – பலுசிஸ்தானின் ஹர்னாயில் ஐஇடி தாக்குதலுக்கு பிஎல்ஏ பொறுப்பேற்றது. பாகிஸ்தான் துணை ராணுவ எல்லைப் படையின் எல்லைப் படையைச் சேர்ந்தவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
  • நவம்பர் 2018 – கராச்சியில் உள்ள சீனத் தூதரகத்தை பிஎல்ஏ பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பலுசிஸ்தான் எல்லைகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இணைந்துள்ளது

பலுசிஸ்தான் பகுதி எப்படி இருக்கும்?

பரப்பளவில் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான் மாகாணம் தான். ஆனால் நாட்டின் மற்ற நான்கு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது அதன் மக்கள்தொகை குறைவுதான். இதன் எல்லைகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இணைந்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், இரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மற்றும் ஹெல்மண்ட் உள்ளிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியதே பலுசிஸ்தானின் முழுப் பகுதியாகும்.

பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் பலுசிஸ்தான் மாகாணம் இயற்கை வளங்களால் நிறைந்தது. இங்கு அதிகளவில் எரிவாயு, நிலக்கரி மற்றும் தாமிரம் இருப்புக்கள் உள்ளன. ஆனால் இத்தனை இருந்தபோதிலும், இது பாகிஸ்தானின் ஏழ்மையான மாகாணமாகும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *