பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தா ஈடென் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடனே இந்தியா இறுதிச்சுற்றில் போட்டியிட வேண்டியிருக்கும். எனவே இந்தியா ஆடவில்லை என்றாலும் இந்திய ரசிகர்களும் ஆர்வத்துடனே இந்தப் போட்டியைப் பார்த்து வருகின்றனர்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். கொல்கத்தாவில் நேற்று இரவு மழை பெய்து, காலையிலிருந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங், சீமிங்கிற்கும் சாதகமாக இருக்கிறது.
‘கத்தி’போல் இறங்கிய துல்லியப் பந்துவீச்சு
பவுமா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க், ஹேசல்வுட் துல்லியமான லைன் லென்த்தில் பந்துவீசினர். இதனால் தென் ஆப்பிரிக்க பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
அதிலும் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் பவுமா டக்-அவுட்டில் விக்கெட் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வேன்டர் டூ சென் களமிறங்கினார்.
ஃபீல்டிங்கில் கலக்கிய வார்னர்
அடுத்தடுத்த ஓவர்களை ஹேசல்வுட், ஸ்டார்க் கட்டுப்கோப்பாகப் பந்து வீசியதால் டீகாக், டூசெனால் ரன் சேர்ப்பதே கடினமாக இருந்தது.
அது மட்டுமல்லாமல் தப்பித் தவறி ஏதாவது ஷாட்களை அடித்தாலும் அதையும் லாபுஷேன், வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து ஃபீல்டிங் செய்ததால் தென் ஆப்பிரிக்க அணியால் ரன்களை சேர்க்கவே முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
ஒரு பவுண்டரி கூட இல்லை
ஆறு ஓவர்களாக தென் ஆப்பிரிக்க அணியிடம் இருந்து ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. இதனால் டீ காக் பொறுமை இழந்தார். ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் சரியான லென்த்தில் வீசப்பட்ட பந்தை டீ காக் தூக்கி அடிக்க, கம்மின்ஸ் சிறிது தூரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். டீ காக் 14 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்க்ரம் களமிறங்கி, டூசெனுடன் சேர்ந்தார்.
52 பந்துகளுக்குப் பின்…
ஸ்டார்க் வீசிய 9வது ஓவரில் மார்க்ரம் லெக் திசையில் பவுண்டரி அடித்தார். ஏறக்குறைய 8 ஓவர்களுக்குப் பின் 52 பந்துகளுக்குப் பின் தென் ஆப்பிரிக்க முதல் பவுண்டரி அடித்தது.
பத்து ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை வரலாற்றில் ஓர் அணி பவர்ப்ளேயில் சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
பட மூலாதாரம், Getty Images
ஸ்டார்ஸ், ஹேசல்வுட் மிரட்டல்
மிட்ஷெல் ஸ்டார்க் ஏற்கெனவே 5 ஓவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில் மீண்டும் ஓவரை வீச கேப்டன் கம்மின்ஸ் வாய்ப்பளித்தார்.
அதை சரியாகப் பயன்படுத்தி 11வது ஓவரை வீசிய ஸ்டார்க், 5வது பந்தில் மார்க்கரமை வெளியேற்றினார். பாயின்ட் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து, மார்க்ரம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். உலகக்கோப்பைத் தொடரில் 49 பந்துகளில் சதம் அடித்த மார்க்ரம், இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன்னையும் சேர்க்க திணறி விக்கெட்டை இழந்தார்.
ஹேசல்வுட் 12வது ஓவரை வீச வந்தார். ஹேசல்வுட் தனது ஒவ்வொரு ஓவரையும் மிகத் துல்லியமான லைன் லென்த்தில் வீசியதால் அவரின் ஓவரில் ரன் சேர்க்கவே முடியவில்லை. இந்த ஓவரையும் ஹேசல்வுட் மிகத் துல்லியமாக வீசினார். 5வது பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டூசென் 31 பந்துகள் சந்தித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்து. அரையிறுதி பயம், அதிர்ச்சி, பதற்றம் தென் ஆப்பிரிக்க அணியை சூழ்ந்து கொண்டு அவர்களைப் பாடாய்ப்படுத்தியது.
அடுத்து வந்த டேவிட் மில்லர், கிளாசனுடன் சேர்ந்தார். ரன் சேர்க்கத் திணறிய தென் ஆப்பிரி்க்க, கம்மின்ஸ் வீசிய 14வது ஓவரில் கிளாசன், மில்லர் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
