பட மூலாதாரம், Getty Images
ஐரிஷ் கடற்படை அதிகாரிகள் 1985, 28 ஜூன் அன்று விமான சிதைவுகளை கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவு மோசமான நிலையை எட்டியிருக்கும் நிலையில், 1985ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல் செய்திகளில் மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த குற்றச்சாட்டு குறித்து கனடா விசாரித்துவருவதாக கடந்த வாரம் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார்.
அப்போதிருந்தே, 1985ஆம் ஆண்டு நடந்த ’கனிஷ்கா குண்டுவெடிப்பு’ பேசுபொருளானது. இந்தச் சம்பவமும் இந்தியா மற்றும் கனடா உறவுகள் இடையே பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
1985-இல் என்ன நடந்தது?
1985, ஜூன் 23இல் கனடாவிலிருந்து லண்டன் வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஐரிஷ் கடற்கரையில் வெடித்தது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 329 பேரும் உயிரிழந்தனர்.
பயணிகள் சூட்கேஸில் இருந்த வெடிகுண்டு காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வெடிகுண்டு இருந்த சூட்கேஸின் உடைமையாளர் விமானத்தில் பயணிக்காத போதும், அவருடைய சூட்கேஸ் மட்டும் விமானத்தில் இருந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 268 பேர் கனேடிய குடிமக்கள். அதில், பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 24 பேர் இந்திய குடிமக்கள். ஆனால், உயிரிழந்தவர்களின் 131 உடல்கள் மட்டுமே கடலில் இருந்து எடுக்கப்பட்டன.
இந்த விமானம் வானில் பயணித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், டோக்கியோவின் நரிடா விமான நிலையத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் இரண்டு ஜப்பானிய விமான நிலைய ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வெடிகுண்டு பேங்காக்கிற்கு செல்ல இருந்த மற்றொரு ஏர் இந்தியா விமானத்தை குறிவைக்க கொண்டு செல்லப்பட்டதும், ஆனால், தவறுதலாக முன்கூட்டியே வெடித்ததும் பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
பட மூலாதாரம், Getty Images
1985இல் குண்டுவெடிப்புக்கு மறுநாள் டொராண்டோவில் உள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
தாக்குதலின் பின்னணியில் இருந்தது யார்?
பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்ததற்கு பழிவாங்கும் பொருட்டு சீக்கிய பிரிவினைவாதிகளால் இந்தக் குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்டதாக கனேடிய புலனாய்வு அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்தத் தாக்குதல் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, தல்விந்தர் சிங் பர்மர் மற்றும் இந்தர்ஜித் சிங் ரேயாட் ஆகிய இருவரை கனேடிய காவல்துறை கைது செய்தது. தல்விந்தர் சிங் பர்மர் என்பவர் தற்போது கனடா மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் பாபர் கல்சா அமைப்பின் தலைவர்.
ஆனால், பர்மருக்கு எதிரான வழக்கு பலவீனமாக இருந்ததால், அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், 1992இல் பர்மர் இந்தியாவில் காவல்துறையால் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பர்மர்தான் என்று புலனாய்வு அதிகாரிகள் தற்போது நம்புகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
2004ஆம் ஆண்டு வான்கூவரில் உள்ள சிறையில் ரிபுதமன் சிங் மாலிக் மற்றும் அஜய்ப் சிங் பக்ரி. (இடமிருந்து வலமாக)
2000ஆம் ஆண்டில், ரிபுதாமன் சிங் மாலிக் என்ற தொழிலதிபர் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த மில் தொழிலாளி அஜய்ப் சிங் பக்ரி ஆகியோரை கொலை மற்றும் சதி உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
ஆனால், இருவரும் நீடித்த விசாரணைக்குப் பிறகு 2005ஆம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். இருவருக்கு எதிராக சாட்சியமளித்த முக்கிய சாட்சிகளிடம் உண்மைப் பிழைகள் மற்றும் நம்பகத்தன்மை குறைபாடு இருப்பதாக தீர்ப்பளித்த நீதிபதி கூறினார்.
இந்த விவகாரத்தில் இந்தர்ஜித் சிங் ரேயாட் மட்டுமே தண்டிக்கப்பட்டார். ஜப்பான் குண்டுவெடிப்பில் அவருக்கு இருந்த தொடர்புக்காக பிரிட்டனில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர், கனடாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, 2003ஆம் ஆண்டு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மாலிக் மற்றும் பக்ரி மீதான விசாரணையில் அவர் பொய்ச் சாட்சியம் அளித்த விவகாரத்தில் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணை விமர்சனத்துக்குள்ளானது ஏன்?
குண்டுவெடிப்பை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, விசாரணை திறம்பட இல்லை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு கனேடிய அதிகாரிகள் உள்ளாகினர்.
மாலிக் மற்றும் பக்ரியின் விடுதலை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்திய பிறகு, குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் கனடா பொதுவிசாரணை நடத்தியது. ’தொடர்ச்சியான பிழைகள்’ கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான கொலைக்கு வழிவகுத்ததாக 2010ஆம் ஆண்டு விசாரணைக்குழு தெரிவித்தது.
தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்தச் சதித்திட்டம் குறித்து, அடையாளம் தெரியாத சாட்சி ஒருவர் கனேடிய காவல்துறையை எச்சரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன் பர்மர் மற்றும் ரேயாட்டை கனேடிய ரகசிய உளவு அதிகாரிகள் வான்கூவர் தீவில் பின்தொடர்ந்ததும், அங்கு பெரிய அளவில் வெடிச்சத்தம் கேட்டதும், அதை அப்போது அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
முக்கிய சாட்சிகளாக இருந்திருக்க கூடிய இரண்டு சீக்கிய ஊடகவியலாளர்கள் 90களில் லண்டன் மற்றும் கனடாவில் வேறுவேறு சம்பவங்களில் கொல்லப்பட்டனர்.
தன் அடையாளம் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தினால் சீக்கிய சந்தேக நபர்களின் 150 மணிநேர உரையாடல் டேப்பை காவல்துறையிடம் கொடுப்பதற்கு பதிலாக, தான் அழித்ததாக ஒரு முன்னாள் ரகசிய உளவு அதிகாரி 2000ஆம் ஆண்டு ஒரு நாளிதழிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
2005இல் டொராண்டோவில் உள்ள ஒரு நினைவிடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது?
2010ஆம் ஆண்டு விசாரணை அறிக்கை வெளியான பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் அப்போதைய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பொது மன்னிப்பு கோரினார்.
9 ஆண்டுகள் தண்டனையில் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்த பிறகு 2016ஆம் ஆண்டு கனடா சிறையில் இருந்து ரேயாட் விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே ஹாஃப் வே ஹவுஸ் (halfway house) எனப்படும் புணர்வாழ்வு மையத்தில் இருந்து வெளியேற ரோயாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு, ரிபுதமன் சிங் மாலிக், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் தனது காரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறிவைத்து நடத்தப்பட்ட கொலை என காவல்துறை குறிப்பிட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பின் 38ஆம் ஆண்டை நினைவுகூறும் வகையில் இந்தாண்டின் தொடக்கத்தில் அங்கஸ் ரீட்( Angus Reid Institute) எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் துயரச் சம்பவம் ஓப்பீட்டளவில் கனேடிய வரலாற்றில் அதிகம் அறியப்படாமல் உள்ளது தெரியவந்தது. 10இல் 9 கனேடியர் இந்தத் தாக்குதல் சம்பம் குறித்து குறைவாகவோ அல்லது அறியப்படாமலோ உள்ளனர் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் நரேந்திர மோதி 2015ஆம் ஆண்டு டொராண்டோவில் உள்ள நினைவுச் சின்னத்தில் மாலை அணிவித்தனர்.
இந்தியாவில் என்ன நிலைமை?
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு இந்தியாவில் நீண்ட கால வலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அதிகம் உயிரிழந்தோர் கனடா குடிமக்கள்தான் என்றாலும் அதில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர். உரிய நீதி வழங்கப்படவில்லை என்பதுதான் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் பார்வையாக உள்ளது.
2006ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்க இந்தியா வந்த கனேடிய வழக்கறிஞர் ரிச்சர்ட் குவான்ஸ் பிபிசியிடம் கூறும் போது, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் நீதிமன்ற செயல்முறையில் சேர்த்துக்கொள்ளப்படாதது போல உணர்ந்ததாகவும், மாலி மற்றும் பக்ரி விடுவிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.
குண்டுவெடிப்பால் கைவிடப்பட்ட இந்திய குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், ஒதுக்கப்பட்டதாகவும் உணர்ந்தனர் என அமர்ஜித் பிந்தர் அப்போது பிபிசியிடம் கூறினார். அமர்ஜித் பிந்தரின் கணவர் குண்டுவெடிப்புக்கு உள்ளான விமானத்தில் துணை விமானியாக இருந்தார்.
கனடா மற்றும் இந்தியா இடையேயான தற்போதைய மோதல் இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்தியாவில் மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.
பல ஆண்டுகளாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
’’ஏர் இந்தியா விமான தாக்குதலோடு எதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்களை நான் இன்றும் சந்திக்கிறேன். என் மழலையர் பள்ளி மகளின் ஆசிரியை பாதிக்கப்பட்ட ஒருவரின் பள்ளித் தோழி. கனேடியர்களை எவ்வளவு பரந்த அளவில் இந்தத் தாக்குதல் பாதித்துள்ளது என ஆச்சர்யமளிக்கிறது’’ என்கிறார் சுஷில் குப்தா. குண்டுவெடிப்பில் தன் அம்மாவை பறிகொடுத்த போது சுஷில் குப்தாவின் வயது 12.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
