கென்னத் யூஜின் ஸ்மித்: உடலில் நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை அளிக்கப்படுவது எப்படி?

கென்னத் யூஜின் ஸ்மித்: உடலில் நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை அளிக்கப்படுவது எப்படி?

கென்னத் யூஜின் ஸ்மித்

பட மூலாதாரம், ALABAMA DEPARTMENT OF CORRECTIONS

கொலை வழக்கு குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித் அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாண அரசு நைட்ரஜன் வாயு பயன்படுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதுவே, அமெரிக்காவில் இந்த முறையில் நிகழ்த்தப்பட்ட முதல் மரண தண்டனை.

தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஒரு கொடூரமான, வழக்கத்திற்கு மாறான தண்டனை என்று வாதிட்டு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு இறுதி மேல் முறையீடுகளிலும், ஒரு மத்திய நீதிமன்ற மேல்முறையீட்டிலும் தோல்வியடைந்தார் 58 வயதான ஸ்மித்.

கடந்த 2022ஆம் ஆண்டில், அலபாமா அரசு ஸ்மித்தை இறப்பதற்கான ஊசி மூலம் மரண தண்டனை விதிக்க முயன்று தோல்வியடைந்தது. ஸ்மித் 1989ஆம் ஆண்டில், போதகரின் மனைவியான எலிசபெத் சென்னெட்டை கூலிக்காக கொலை செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டார்.

உலகில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் ஸ்மித் என்று மரண தண்டனை தகவல் மையம் தெரிவித்தது.

மரண தண்டனைக்காகப் பயன்படுத்தப்படும் ஊசிகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. அதனால் தேசிய அளவில் மரண தண்டனை வழங்கப்படுவது குறைந்துவிட்டதால், அலபாமா மற்றும் மேலும் இரண்டு அமெரிக்க மாகாணங்கள் மரண தண்டனைக்காக நைட்ரஜன் ஹைபோக்சியாவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன.

நைட்ரஜன் ஹைபோக்ஸியா என்றால் என்ன?

நைட்ரஜன் ஹைபோக்ஸியா என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நைட்ரஜன் வாயு விஷத்தன்மை உடையதல்ல. சொல்லப்போனால், நமது பூமியின் வளிமண்டலத்தில் முக்கால் பங்குக்கு மேல் நைட்ரஜன் வாயு இருக்கிறது.

ஆனால் வெறும் நைட்ரஜனை மட்டும் அதன் செறிவூட்டத் தன்மையில் சுவாசிப்பது, மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை முடக்குகிறது, இதுவே நைட்ரஜன் ஹைபோக்ஸியா எனப்படுகிறது.

மரண தண்டனைக்காக நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுவதை அலபாமா உட்பட அமெரிக்காவின் மூன்று மாநிலங்கள் 2018ஆம் ஆண்டு அங்கீகரித்தன. அதன்பின் பல சட்ட ரீதியான சவால்கள் எழுந்தன.

இதுபோன்ற தண்டனை முறைகள் இதுவரை சோதிக்கப்படவோ நிரூபிக்கப்படவோ இல்லை. “இது ஒரு பரிசோதனை செயல்முறை, பல விஷயங்கள் தவறாகப் போகலாம்,” என்று அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஒன்றின் தலைவர் டாக்டர் ஜெஃப் கெல்லர் கூறினார்.

“இதுவொரு வலியற்ற செயல்முறை என்ற கோட்பாடு மட்டும் இருக்கிறது” என்பதை மரண தண்டனை முறைகள் பற்றி ஆய்வு செய்யும் ஃபோர்டாம் சட்டப் பள்ளியின் குற்றவியல் நிபுணரான டெபோரா டென்னோ வலியுறுத்தினார்.

மேலும், “இந்த முகக்கவசங்கள் மக்களுக்குப் பொருந்தாது, அது காற்று புகாதவை அல்ல” எனக் கூறும் அவர், அதனால் ஸ்மித் வாந்தி எடுக்க ஆரம்பித்திருக்கலாம் அல்லது மரண தண்டனை முயற்சியில் இருந்து மூளை பாதிப்புடன் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

இந்த முறையை ஆதரிப்பவர்கள், தொழிற்சாலையில் நைட்ரஜன் ஹைபோக்ஸி விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக என்ன நடக்கிறது என்பது தெரியாது என்பன போன்ற உதாரணங்களைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை மறுக்கின்றனர்.

நைட்ரஜன் வாயுவை மரண தண்டனைகளுக்குப் பயன்படுத்தலாமா என்பதை மேற்கோள் காட்டி, ஓக்லஹோமா சட்டமியற்றுபவர்களுக்கான ஓர் ஆய்வில், “ஆக்சிஜன் இல்லாமல், வெறும் நைட்ரஜனை 12 முறை மட்டுமே சுவாசித்தால் திடீரென சுயநினைவை இழக்கக்கூடும்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“மரண தண்டனை முறைகளில் இதுவே மிகவும் மனிதாபிமான முறை” என்று அலபாமா மாநில அட்டர்னி ஜெனரல் ஸ்டீவ் மார்ஷல் கூறினார்.

ஸ்மித்தின் மரண தண்டனை சாட்சியங்கள் கூறுவது என்ன?

கென்னத் யூஜின் ஸ்மித்: நைட்ரஜன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது எப்படி? உடலில் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், ASSOCIATED PRESS

மரணதண்டனை விதிக்கப்படுவதைக் காண ஐந்து ஊடகவியலாளர்கள் வேன் மூலம் அட்மோரில் உள்ள ஹோல்மன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

“அல்பாமா மனிதத் தன்மையில் இருந்து ஒரு படி பின்னால் சென்றுள்ளது,” என்றும் “என்னை ஆதரித்ததற்கு நன்றி. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என்றும் ஸ்மித் கூறியதாக சாட்சிகள் தெரிவித்தனர்.

முகக்கவசத்தின் மூலம் வாயு பாயத் தொடங்கிய பிறகு, ஸ்மித் சிரித்துக்கொண்டே அவரது குடும்பத்தினரை நோக்கித் தலையசைத்து “ஐ லவ் யூ” என்று சைகை காட்டினார் என்று கூறப்படுகிறது.

இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் துடிதுடித்து, ஐந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்த கடும் மூச்சுத் திணறலுக்குப் பின்னர், ஸ்மித் அலபாமா நேரப்படி இரவு 08:25 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று சாட்சிகள் கூறுகின்றனர்.

ஆக்ஸிஜன் இல்லாமல் நைட்ரஜன் வாயுவை சுவாசித்தால் உடலில் உள்ள உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மரணத்தை ஏற்படுத்தும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான கோரிக்கைக்குப் பதிலளிக்காத அலபாமா ஆளுநர் கே ஐவி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்மித்தின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

மரணதண்டனை

பட மூலாதாரம், Getty Images

“முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு அமைப்பிற்கு ஆட்டம் காட்டிய ஸ்மித், தனது கொடூரமான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

“எலிசபெத் சென்னட்டின் பெரும் இழப்பைச் சமாளித்து வரும் அவரது குடும்பம், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தீர்வு காணட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”

ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் கூறும் “கணிப்புகளை” மறுத்து, “இதுவொரு பயனுள்ள மற்றும் மனிதாபிமானம் மிக்க மரண தண்டனை முறையாக” நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அட்டர்னி ஜெனரல் ஸ்டீவ் மார்ஷல் தெரிவித்தார். மேலும் “நீதி வழங்கப்பட்டுள்ளது” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மரணப் படுக்கையில் ஸ்மித் நடுங்கியது தன்னிச்சையான செயல்கள் என்று அலபாமா சிறையின் கமிஷனர் ஜான் ஹாம் கூறினார். “இது எதிர்பார்க்கப்பட்டதுதான், மேலும் இவை நாங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்த நைட்ரஜன் ஹைபோக்ஸியாவின் பக்க விளைவுகள்தான்,” என்று ஜான் ஹாம் கூறினார்.

“நாங்கள் எதிர்பார்த்ததில் இருந்து அசாதாரணமானது எதுவும் நிகழவில்லை,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மித் சில நொடிகளில் சுயநினைவை இழந்து, சில நிமிடங்களில் இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னர் அலபாமா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எலிசபெத் கொலையில் ஸ்மித்தின் பங்கு என்ன?

கென்னத் யூஜின் ஸ்மித்: நைட்ரஜன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது எப்படி? உடலில் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், WHNT/CBS

மார்ச் 1988ஆம் ஆண்டில் $1,000 (£790) கூலிக்காக எலிசபெத் சென்னட்டை கொலை செய்த இருவரில் ஸ்மித் ஒருவர்.

நெருப்பு கிண்டும் இரும்புக் கம்பியால் மார்பிலும் கழுத்திலும் குத்தப்பட்டு 45 வயதான எலிசபெத் கொல்லப்பட்டார். அவரது மரணம், வீட்டிற்குள் புகுந்து திருடுவது போல் அரங்கேற்றப்பட்டது.

அவரது கணவர் சார்லஸ் சென்னட், காப்பீட்டுத் தொகையை வசூலிக்க இதை அரங்கேற்றி கடன் சிக்கலில் இருந்து மீளத் திட்டமிருந்த ஒரு போதகர். புலனாய்வாளர்களுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தக் கொலையில் ஸ்மித்தின் கூட்டாளி ஜான் ஃபாரஸ்ட் பார்க்கருக்கு, 2010ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எலிசபெத் கொல்லப்பட்டபோது ஸ்மித் அங்கு இருந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் தாக்குதலில் பங்கேற்கவில்லை என்றும் கூறினார். எலிசபெத்தின் மகன் சார்லஸ் சென்னெட் ஜூனியர், தனக்கு ஸ்மித் மீது சிறிது அனுதாபம் இருப்பதாக ஊடகப் பேட்டி ஒன்றில் கூறினார்.

அமெரிக்க சிறை

பட மூலாதாரம், Getty Images

அவர் WAAY தொலைக்காட்சியிடம், “எனது தாயை பல முறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்கள். ஆனால் மக்களில் ஒரு சிலர், ‘அவர் அவ்வாறு கஷ்டப்படத் தேவையில்லை’ எனக் கூறுகிறார்கள்”, என்று தெரிவித்தார்.

ஸ்மித்தின் மரணதண்டனை ஆழ்ந்த வருத்தமளிப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்று மூலம் கூறியுள்ளனர்.

“சென்னெட் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனுபவிக்கும் வலி உட்பட, ஸ்மித் செய்த குற்றத்தின் விளைவுகளைத் தவிர்க்க முடியாது. அதனால் அவர் தண்டிக்கப்பட்டார்,” என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். “இருப்பினும், ஸ்மித்தின் முழு வாழ்க்கையையம் அவர்கள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.”

ஸ்மித் வாழ்க்கையின் கடைசி 48 மணிநேரம்

கென்னத் யூஜின் ஸ்மித்: நைட்ரஜன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது எப்படி? உடலில் என்ன நடக்கும்?

வியாழக்கிழமை அன்று, அலபாமா சிறைத்துறை ஸ்மித்தின் இறுதி 48 மணிநேர விவரங்களைப் பகிர்ந்துகொண்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள், இரண்டு நண்பர்கள், ஆன்மீக ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் ஸ்மித்தை சந்தித்தனர்.

காலை உணவாக அவர் இரண்டு பிஸ்கட், முட்டை, திராட்சை ஜெல்லி, ஆப்பிள்சாஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை உண்டார். அவரது இறுதி உணவு மாட்டிறைச்சி, ஹாஷ் பிரவுன் மற்றும் முட்டைகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலபாமா அரசு ஸ்மித்திற்கு மரண ஊசி பயன்படுத்தி மரண தண்டனை அளிக்க முயன்றது. ஆனால் அதற்குள் மரண தண்டனை ஆணை காலாவதி ஆகிவிட்டதால் அதை நிகழ்த்த இயலவில்லை. கடந்த வியாழக்கிழமை இரவு, உச்ச நீதிமன்றம் அவரது இறுதி மேல்முறையீட்டையும் மறுத்தது.

மரண தண்டனைக்கு நைட்ரஜன் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?

அமெரிக்காவின் சிறை

பட மூலாதாரம், Getty Images

மூன்று லிபெரல் நீதிபதிகள் கன்சர்வேடிவ் தலைமையிலான பெரும்பான்மையின் தீர்ப்பை எதிர்த்தனர். “முதல் முயற்சியிலேயே ஸ்மித்தை கொல்லத் தவறியதால், அலபாமா அரசு ஸ்மித்தை “எலி” போலத் தேர்ந்தெடுத்து, இதுவரை சோதிக்கப்படாத மரண தண்டனை முறையைச் சோதித்துள்ளார்” என்று நீதிபதி சோனியா சோட்டோமேயர் கூறியுள்ளார். “இதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.”

ஸ்மித்தின் மற்றொரு முறையீட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு ஒருநாள் கழித்து இந்தக் கருத்து வெளிவந்தது. மரண தண்டனைக்கு நைட்ரஜன் பயன்படுத்துவதால் வலிப்பு, உடல் உணர்வற்ற நிலைக்குச் செல்வது போன்ற பெரிய ஆபத்துகள் நிகழக்கூடும் என்று எச்சரித்து சில மருத்துவ வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், நைட்ரஜன் பயன்படுத்தி ஸ்மித்தை கொலை செய்வது, சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான நடத்தைக்குச் சமம் என்று கூறி மரண தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *