
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான மோதலால் சர்வதேச சமூகம் பல தசாப்தங்களாக பிளவுபட்டுள்ளது.
ஆனால் கடந்த மாதம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்த பிளவு முன்னெப்போதையும் விட மிக அதிகமாகவும் தெளிவாகவும் உள்ளது.
ஹமாஸ் தாக்குதல் நடந்த உடனேயே சில நாடுகள் ஹமாஸை கண்டித்து இஸ்ரேலை ஆதரித்த நிலையில், சில நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக களமிறங்கின.
சில நாடுகள் அமைதியை நிலைநாட்ட புதிய முயற்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தன. சில நாடுகள் இந்த போருக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டின.
ஆனால் இப்போது மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் ஹமாஸுக்கு ஆதரவாகவும் அணி திரள்வதைக் காணமுடிகிறது.
ராஜதந்திர உறவுகளைப் பேணிக் கொண்டே இஸ்ரேலுக்குத் தூதர்களை அனுப்பிய அரபு நாடுகளிடையே கூட அமைதியின்மை அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகள் இஸ்ரேலில் இருந்து தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் ஹமாஸுக்கு ஆதரவாகவும் அணி திரள்வதைக் காணமுடிகிறது.
இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்துமாறு அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் இரான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மறுபுறம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் நின்று இந்தப் போரில் உதவுகின்றன.
போர் தொடங்கி ஒருமாதம் ஆகப் போகிறது. போர் எப்போது முடிவடையும்? ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? காஸாவில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்போது திரும்பும் என்பதற்கு தற்போது யாரிடமும் பதில் இல்லை.
முதலில் இஸ்ரேலுடன் நிற்கும் நாடுகளைப் பற்றிப் பேசுவோம். அக்டோபர் 26 அன்று, ஐநா சபையில் ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காஸாவில் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்வதற்கு’ ஆதரவாக ஒரு போர்நிறுத்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது .
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், அமெரிக்கா உட்பட 14 மேற்கத்திய நாடுகள் எதிராகவும், இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமலும் இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்களின் பதவிக்காலத்தில் இஸ்ரேலியப் பகுதியைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
1948 இல் இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் சென்று, ‘இஸ்ரேலுடன் நிற்கிறேன்’ என்று கூறினார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேலை ஒரு முக்கிய கூட்டாளியாக அமெரிக்கா கருதுகிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்களின் பதவிக்காலத்தில் இஸ்ரேலியப் பகுதியைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
2020 ஆம் ஆண்டில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு 3.8 பில்லியன் டாலர் உதவியிருந்தது, இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில், அமெரிக்கா 2017 முதல் 2028 வரை செயல்படுத்த 38 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அமெரிக்கா தனது சொந்த நாட்டில் யூதர்களை குடியமர்த்துவது மட்டுமல்லாமல், இஸ்ரேலின் ராணுவத்தை உலகின் மிகவும் மேம்பட்ட ராணுவமாக மாற்ற மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறது.
பிரான்ஸ் உள்நாட்டிலும், ஐ.நா.விலும் என்ன சொன்னது?
பிரான்ஸ் ஐரோப்பாவில் யூத மற்றும் முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வாழும் ஒரு நாடு. சுமார் ஐந்து லட்சம் யூதர்கள் அங்கு வாழ்கிறார்கள், இது ஐரோப்பாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.
ஒரு மதிப்பீட்டின்படி, முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம். ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இதுவும் அதிகமாகும்.
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க அதிபர் மட்டுமின்றி பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கும் இஸ்ரேலுக்குச் சென்றார்.
இந்த மோதலில் ஹமாஸ் வெற்றி பெற்றால் ஐரோப்பாவுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியிருந்தார். இந்தப் போராட்டம் இஸ்ரேலுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்துக்கானது என்று மக்ரோங் கூறினார்.
பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸை “பயங்கரவாத அமைப்பு” என்று வர்ணித்த மக்ரோங், “இந்த அமைப்பு இஸ்ரேல் மக்களின் மரணத்தை விரும்புகிறது” என்றார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை.
பிரான்ஸ் நாட்டில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பிரான்ஸில் வசிக்கும் வெளிநாட்டு மக்கள் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், அவர்கள் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டெர்மாவின் எச்சரித்துள்ளார்.
இதையெல்லாம் மீறி, காஸா மீதான ஐ.நா வாக்கெடுப்பில், பிரான்ஸ் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. பொதுமக்கள் கொல்லப்பட்டதை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியது. ஐ.நா.வில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் போது, பிணைக் கைதிகளை விடுவிக்க பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தவிர ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஹமாஸை விமர்சிக்கும் போது இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.

பட மூலாதாரம், Reuters
பாலத்தீனர்களின் நிலத்தை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாக இரான் நம்புகிறது
இரானின் நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன?
1948 இல் ஐநா தீர்மானத்தின் கீழ் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேல் அதன் அண்டை அரபு நாடுகளுடன் பல போர்களை நடத்தியது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த நாடுகளில் மிக முக்கியமான பெயர் இரான்.
இஸ்ரேல் இருப்பதை இரான் விரும்பவில்லை. பாலத்தீனர்களின் நிலத்தை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாக அவர் கூறுகிறார்.
இரானும் இஸ்ரேலும் ஒன்றையொன்று எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனாலும், இரானின் செல்வாக்கு இஸ்ரேலின் அண்டை நாடுகளான லெபனான், சிரியா மற்றும் பாலத்தீனத்தில் தெளிவாகத் தெரியும்.
இந்தத் தாக்குதலுக்கு இரான் நேரடியாகப் பின்னணியில் இல்லையென்றாலும், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்குப் பயிற்சி அளிப்பதிலும், அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதிலும், தாக்குதலுக்கு முன் ஆதரவு அளிப்பதிலும் இரான் முக்கியப் பங்காற்றுகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த மோதலில், இரான் பகிரங்கமாக ஹமாஸை ஆதரித்து, மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என இஸ்ரேலுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் முஸ்லிம்களை யாராலும் தடுக்க முடியாது என இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அறிக்கையில் அவர் அனைத்து முஸ்லிம் நாடுகளையும் இஸ்ரேலுக்கு எதிராக அணிதிரளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேலுக்கு எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பும் முஸ்லிம் நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். “முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுடன் பொருளாதார ரீதியாக ஒத்துழைக்கத் தேவையில்லை.” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
துருக்கியின் தயக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் 2022 இல், துருக்கியும் இஸ்ரேலும் நான்கு ஆண்டு கால மோதலுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுத்தன.
துருக்கியும் இஸ்ரேலும் 1949 முதல் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளன. இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடு துருக்கியே.
துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தன. பாலத்தீன விவகாரம் தொடர்பாக துருக்கி எப்போதுமே இஸ்ரேலை தாக்குபவர்.
2018 ஆம் ஆண்டில், காஸாவில் பாலத்தீன எதிர்ப்பாளர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தனது தூதரை துருக்கி திரும்பப் பெற்றது.
ஆகஸ்ட் 2022 இல், துருக்கியும் இஸ்ரேலும் நான்கு ஆண்டு கால மோதலுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் ராஜீ உறவுகளை மீட்டெடுத்தன.
அக்டோபர் 28, சனிக்கிழமையன்று இஸ்தான்புல்லில் பாலத்தீன ஆதரவு பேரணியில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் உரையாற்றினார்.
இந்தப் பேரணியில், ஹமாஸ் ஆயுதக்குழுவை ஒரு விடுதலைக் குழு என்றும் இஸ்ரேலை ஒரு போர்க் குற்றவாளி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்றும், அது ஒரு விடுதலைக் குழு என்றும், அது தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்கப் போராடுவதாக எர்துவான் கூறினார்.
செளதி அரேபியவிற்கும் இஸ்ரேலுக்குமான உறவு என்ன?
சில காலத்திற்கு முன்பு, செளதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ஆனால், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், இந்த முழு முயற்சியையும் தடம் மாற்றிவிட்டது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் அரேபியர்களுக்கு பாலத்தீனம் மிகவும் முக்கியமானது.
பாலத்தீனர்களின் போராட்டத்தை புறக்கணித்தால், அது பிராந்தியத்திலும் உலக அளவிலும் தனது செல்வாக்கை பாதிக்கும் என்பதை செளதி தலைமை உணர்ந்துள்ளது. செளதி அரேபியா இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அது அதன் மதச் சட்டத்தை கடுமையாக பாதிக்கும்.
மோதலின் தொடக்கத்திற்குப் பிறகு, செளதி அரேபியா வெளியிட்ட அறிக்கையில், “பாலத்தீன மக்களின் நியாயமான உரிமைகளை அடைவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், நியாயமான மற்றும் நீடித்த நிலையை அடைவதற்கும் செளதி அரேபியா துணை நிற்கும்.”என்றது.

பட மூலாதாரம், Getty Images
ஹமாஸ் சமீபத்தில் நான்கு பணயக்கைதிகளை விடுவித்தது, இதற்கு அமெரிக்க அதிபரும், பிரிட்டிஷ் பிரதமரும் கத்தாருக்கு நன்றி தெரிவித்தனர்.
கத்தார் என்ன சொல்கிறது?
கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோதலை அதிகரிக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கத்தார் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளது. இந்தப் பகுதி மேலும் வன்முறைச் சுழலில் சிக்காமல் இருக்க இரு தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும்.
கத்தார் இஸ்ரேலுடன் முறையான உறவுகளை கொண்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், கத்தார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்போது கத்தாரின் உதவியுடன் பணயக்கைதிகளை ஹமாஸிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் அதிகாரிகள் இஸ்ரேலிய மத்தியஸ்தர்களுடன் தொலைபேசியில் பேசி வருகின்றனர்.
ஹமாஸ் சமீபத்தில் நான்கு பணயக்கைதிகளை விடுவித்தது, இதற்கு அமெரிக்க அதிபரும், பிரிட்டிஷ் பிரதமரும் கத்தாருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஹமாஸின் அரசியல் பிரிவின் அலுவலகம் 2012 முதல் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ளது.
பல கட்டார் அதிகாரிகள் காஸாவிற்குச் சென்றுள்ளதாகவும், மூத்த ஹமாஸ் தலைவர்களை நன்கு அறிந்திருப்பதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆனால் கத்தார் மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்துள்ளன. கத்தார் அதிகாரிகள் பிணைக் கைதிகளை விடுவிக்கும் பிரச்னையில் இஸ்ரேலிய மத்தியஸ்தர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் பாலத்தீனத்தை ஆதரிப்பது ஏன்?
இந்த போரில் பாலத்தீனத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைக்கூட பாகிஸ்தான் எதிர்க்கவில்லை.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலத்தீனத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் நிற்கிறது, இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளின் வன்முறை மற்றும் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டுமாறு வேண்டுகோள் விடுக்கிறது” என்று கூறியுள்ளது.
அவர் இரு தரப்பினரின் கொள்கையையும் முன்வைத்து வருகிறார். இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் சர்வதேச சட்டத்தின்படி பாலத்தீன பிரச்னைக்கு நியாயமான மற்றும் விரிவான தீர்வினால் மட்டுமே நிரந்தர அமைதியை மீட்டெடுக்க முடியும் என்றும் பாகிஸ்தான் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா ஐநா.வில் வாக்களிக்காதது ஏன்?
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோதி, இந்த இக்கட்டான நேரத்தில் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பல நாடுகளைப் போலவே இந்தியாவும் இரு தரப்பு தீர்வு குறித்து பேசுகிறது. இரு தரப்பின் தீர்வின் கீழ், பாலத்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது குறித்து பேசுகிறது. இதில், 1967 க்கு முந்தைய போர்நிறுத்தக் கோட்பாட்டில், மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால், அக்டோபர் 26-ம் தேதி காஸா தொடர்பாக ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடந்தபோது, அந்தத் தீர்மானத்தில் இருந்து இந்தியா விலகிக் கொண்டது. இந்தியாவின் நிலைப்பாடு மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டிருப்பதால், இப்படி இருப்பதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங் பாலத்தீனர்களுக்கு ஆயுதங்களை அனுப்பிய காலம் ஒன்று இருந்தது.
சீனா பாலத்தீனத்திற்கு ஆயுதம் அனுப்பியதா?
ஐநா பொதுச் சபையில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது. சீனா இரு தரப்புத் தீர்வு பற்றி பேசுகிறது. அதாவது பாலத்தீனம் சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக மாறும்போதுதான் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றனர்.
ஹமாஸை ஆதரிக்கும் இரானுடன் சீனா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. இரானுடனான உறவுகளைப் பயன்படுத்தி சீனாவும் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆனால், இந்த மோதலில் சமநிலையை பேணுவதில் சீனா சிரமத்தை எதிர்கொள்கிறது. இதற்குக் காரணம் பாலத்தீனப் பிரச்னையில் சீனா நீண்டகாலமாக அனுதாபம் காட்டி வருவதுதான்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங் பாலத்தீனர்களுக்கு ஆயுதங்களை அனுப்பிய காலம் ஒன்று இருந்தது.
பின்னர், சீனா தனது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி, இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கியது, ஆனால் பாலத்தீனர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்திய நாட்களில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிற தலைவர்கள் சுதந்திர பாலத்தீன அரசின் அவசியத்தை வலியுறுத்தினர்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்