
பிரிட்டன் நாட்டில் வாழ்ந்த ஒரு ரவுடி மத போதகரைப் பற்றி இப்போது அறிந்துகொள்வோம். மால்ம்ஸ்பரி என்ற கிராமத்தில் இருந்த ஓர் அழகிய மடாலயத்தில் அவர் வாழ்ந்து வந்தார். உலகமே வியக்கத்தக்க குற்றங்களை மேற்கொண்ட அவரின் பெயர் ஜான் ஆப் டிண்டர்ன்.
அவர் ஏராளமான குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக ஒரு பட்டியலே இருக்கிறது. மத தலைவராக இருந்து வந்த அவர், திருட்டு, குடி, சண்டை என எல்லா குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
மால்ம்ஸ்பரி கிராமத்தின் வரலாற்றை ஆராய்ந்த எழுத்தாளர் மெக் எலிவி இதைக் கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றை ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார்.
அந்தப் புத்தகத்தில், ஜான் எப்படி மது அருந்திவிட்டு சண்டை போட்டார், எப்படி மக்களின் பொருட்களைத் திருடினார், எப்படி அபாயகரமான சிலம்ப வீச்சுகளை மேற்கொண்டார் என்பதெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன.
மன்னர் நடத்திய விசாரணை
ஜானின் நீண்ட குற்றப் பட்டியல் 1318ஆம் ஆண்டு தொடங்கியதாக எழுத்தாளர் டோனி மெக்கெலிவி பிபிசி ரேடியோ வில்ட்ஷைரிடம் தெரிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் பலவற்றை அலசி ஆராய்ந்து அவர் இந்தத் தகவல்களை நமக்குக் கூறினார்.
ஜான் மீதான வழக்கு ஒன்றை 1318இல் இரண்டாம் எட்வர்ட் என்ற மன்னர் விசாரித்திருக்கிறார். லெக்லேட் நகரில் நடந்த ஒரு பெரிய சண்டையில் ஜான் கலந்துகொண்டதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் மால்ம்ஸ்பரியில் இருந்து 40 பேருடன் சென்றதாகவும், நிலம் மற்றும் பணம் தொடர்பான தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

எழுத்தாளர் மெக் எலிவி
மால்ம்ஸ்பரி கிராமத்தில் பெரிய கட்டுமான திட்டம் ஒன்று தொடங்கவிருந்தது, அதற்குப் பணம் தேவைப்பட்டது.
எனவே ஜான் அதற்கு நிதி திரட்டுவதில் தீவிரமாக இருந்தார். “ஜான் ஜெப புத்தகத்துடன் இருக்கும் நபர் அல்ல. செயலில் ஈடுபடுபவர்,” என்று மெக் எலிவி தெரிவிக்கிறார்.
மால்ம்ஸ்பரி கிராமத்தில் உள்ள மடாலயம் இன்று காணப்படும் வடிவத்தை அடையக் காரணமாக இந்தச் சம்பவம் இருந்தது.
மடாலயத்தின் மேல்பகுதி புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும் அதன் கீழ் தளம் ஏற்கெனவே இருந்து அமைக்கப்பட்ட ஒன்று.
இன்று மக்கள் காணும் கட்டடம் சிறியது. 1500களில் மடாலயங்கள் கலைக்கப்பட்ட பிறகு தேவாலயமாக எஞ்சியிருக்கும் பகுதி இதுவே.
பதுக்கப்பட்ட பிரபுவின் சொத்து

மடாலயம் 1320களில் மிகப்பெரிய ஒரு தகராறில் சிக்கிக்கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது சுமார் 10 ஆயிரம் பவுண்டுகள். இன்றைய மதிப்பில் அது பல கோடிக்கும் மேல் இருக்கும்.
அந்தக் காலத்தில், மடாலயங்கள் அரசியலில் ஈடுபட்டு வந்தன. மால்ம்ஸ்பரியில் உள்ள மடாலயம் டெஸ்பென்சர்ஸ் என்ற உள்ளூர் பிரபு குடும்பத்துக்கு ஆதரவளித்தது. இந்தக் குடும்பத்தினர் பாதுகாப்புக்காக மடாலயத்தில் மிகப்பெரிய தொகையை ஒப்படைத்திருந்தனர்.
ஆனால், காலத்தின் சக்கரம் திரும்பியபோது, அந்தக் குடும்பத்தின் தலைவர் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதனால், மடாலயம் அமைதியாக அந்தப் பணத்தைப் பற்றி பேசாமல் இருப்பது என்று முடிவு செய்தது.
மேலும், அவர்கள் அந்தப் பணத்தை எங்கே பதுக்கி வைத்திருந்தார்கள் என்பதையும் யாருக்கும் சொல்லவில்லை. அந்தப் பணம் இப்போது மடாலயத்தின் அடித்தளத்தில் எஞ்சியிருக்கும் ஒரே பகுதியில் இருந்திருக்க வேண்டும்.
“அந்த மடாலய மத போதகர்கள் இந்த இருண்ட ரகசியத்தைப் பாதுகாத்து வருவதால் மிகுந்த அச்சத்தில் இருந்திருக்க வேண்டும்,” என்று எழுத்தாளர் மெக் எலிவி கூறினார்.
மடாலயம் தங்கள் ரகசியத்தை மூடி மறைத்து வைத்தது. ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அது வெளிச்சத்துக்கு வந்தது. யாரோ ஒருவர் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்.
அப்போது தலைமை மடாதிபதியின் கையாளாக இருந்த ஜான், மீண்டும் ஒருமுறை அரச குடும்பத்தின் முன்பு இழுத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
ஆனால் இறுதியில், மால்ம்ஸ்பரி மடாலயத்தைச் சேர்ந்த மத போதகர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. “அதிசயமாக, மன்னர் அந்த 10,000 பவுண்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களை விட்டுவிட்டார்.”

கூலிப்படை போலச் செயல்பட்டார்
ஜான் 1340ஆம் ஆண்டில் மடத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மடத்தின் பண்புக்கு மாறான செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பதை எழுத்தாளர் மெக் எலிவி விளக்கினார்.
“அவர் சாமியார் என்ற தகுதிக்கு அழகைச் சேர்க்காமல், கொள்ளை மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார். ஒரு கூலிப்படை தலைவனைப் போல இருந்தார். தம் எதிரிகளைக் கொல்லவோ அல்லது கொல்லச் சொல்லவோ அவர் தயங்கவில்லை,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், மடத்துப் பணிகளைப் புறக்கணித்து ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்தது மட்டுமின்றி, அவளும் அவள் கணவரும் வசித்த குடிசையைத் தீயிட்டு அந்தப் பெண்ணைக் கடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு மால்ம்ஸ்பரி நகரில் பரவலாக அறியப்பட்டிருந்தது. லண்டனில் இருந்து நீதிபதிகள் மால்ம்ஸ்பரி வந்தபோது, நகர மக்கள் முன்வந்து ஜானின் குற்றங்களைப் பற்றி புகாரளித்தனர்.
தீ வைப்பு மற்றும் கடத்தல் மட்டுமே ஜானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அல்ல. அவர் நான்கு படுகொலைகளையும் ஏற்பாடு செய்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் சிலர் மடத்தின் நிலத்தில் உள்ள குத்தகைதாரர்கள். “ஜான் அவர்களை அப்புறப்படுத்தி, அந்த நிலத்தைத் தன் நண்பர்களுக்கு குத்தகைக்குக் கொடுக்க விரும்பினார்,” என்று தெரிகிறது.
மடாலயம் அமைந்த பகுதியின் சட்டம் ஒழுங்கை மேற்பார்வையிடும் வில்ட்ஷையர் ஷெரிஃப் ஆக இருந்த கில்பர்ட் ஆஃப் பெர்விக், ஜானின் கூட்டாளி என்பது, நிலைமைகளை இன்னும் மோசமாக்கியது.
படுகொலைகள் நடக்கும்போது ஜான் அங்கே இல்லை. அருகிலுள்ள பேட்மின்டனில் இருந்து ஒருவரை அழைத்து வந்து அடிப்பது, கொல்வது போன்ற வேலைகளைச் செய்யச் சொல்லிவிட்டு, ஜான் தப்பி ஓடிவிட்டார். எனவே ஜான், அவரது கூட்டாளி மார்கரெட் ஆகியோருக்கு எதிராகக் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் என்ன நடந்தது என்பது சரியாகத் தெளிவாகவில்லை.

ஆனால், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு லண்டனில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவே ஜானின் குற்றச் செயல்களுக்கு ஒரு முடிவாகத் தோன்றியது.
எழுத்தாளர் மெக் எலிவி கூறும்போது, “நீதிமன்றம் அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டது. இருப்பினும் கடுமையான அபராதம் விதித்து அவரை மன்னித்து விட்டது. அந்த அபராதம் 500 பவுண்டுகள் ஆகும். இன்றைய மதிப்பில் அது லட்சக்கணக்கில் இருக்கும்.
அந்த நேரத்தில் மடாலயத்தில், முதன்மையான ஒரு கட்டட வடிவமைப்பாளரைப் பணிக்கு அமர்த்தி நிறைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே இந்த முழு சம்பவத்திலும் பணம் பெரும் பங்கு வகித்ததாகவே நம்ப முடிகிறது,” என்றார்.
மனம் வருந்தியதற்கான பதிவுகள்

ஜான் மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், அவர் தனது செயல்களுக்காக லேசான குற்ற உணர்வு கொண்டதாகச் சில ஆதாரங்கள் உள்ளன.
இவர், வாடிகனில் உள்ள ஆவணங்களில், திருத்தந்தையிடம் மன்னிப்புப் பிரமாண (Indulgence) கோரிக்கை விடுத்ததற்கான பதிவுகள் காணப்படுகின்றன. அவர் இறக்கும் தருணத்தில் தனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று திருத்தந்தை அங்கீகாரம் செய்வதுதான் மன்னிப்புப் பிரமாணம்.
அன்றைய காலத்தில் இதுவொரு வழக்கமான செயலே என்றாலும், ஜான் இந்தக் கோரிக்கை விடுத்தது அவர் சில குற்ற உணர்வுகளை உணர்ந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பிளேக் நோய் 1349ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பரவி வந்த காலகட்டத்தில், ஜான் உயிரிழந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அவரது மரணம் தற்செயலான நிகழ்வு அல்ல என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
ஜான் ஆஃப் டைனடெரின் வாழ்க்கை ஒரு மர்மம் நிறைந்த கதையாகவே இப்போதும் உள்ளது. “இப்படியும் ஒரு மதத் தலைவர் இருந்தாரா என்று நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது,” என்கிறார் டோனி மெக் எலிவி.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
