ஜப்பான் விமானத்தில் இருந்த 379 பேரும் வெறும் ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?

ஜப்பான் விமானத்தில் இருந்த 379 பேரும் வெறும் ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?

ஜப்பான் விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர்.

விமானப் பணியாளர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் தங்கள் பொருட்களை கைவிட்டு தப்பி ஓடியதே விமானத்திலிருந்த 379 பேரும் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516 தரையிறங்கிய போது ஒரு கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்தச் சிறிய விமானத்திலிருந்து 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.

379 பேரும் வெறும் ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?

இவ்விபத்தில் ஒரு சிறு தடங்கலுமின்றி விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டது உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விமானவியல் நிபுணர்களும் விமானப் பணியாளர்களும் இது மிகச் சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விமானப் பணியாளர்களாலும், அவர்களது பாதுகாப்பு அறிவுறுத்தலைக் கேட்டு அதன்படி நடந்த பயணிகளும்தான் இதற்குக் காரணம் என்று பிபிசியிடம் கூறினர்.

கிரீன்விச் பல்கலை கழகத்தின் தீவிபத்துப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் எட் கலீயா கூறுகையில், “நான் பார்த்தவரையில் தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது பயணிகள் வெளியேற்றத்தை தாமதப்படுத்தி மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும்,” என்கிறார் அவர்.

மேலும், “இந்த விபத்து மிகச் சிக்கலான முறையில் நடந்தது, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி இருந்தது. இது பயணிகள் வெளியேறுவதைக் கடினமாக்கியது,” என்கிறார் அவர்.

வெளியேறுவதற்கான காற்று நிரம்பிய சறுக்குகள் மூன்று மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால், விமானம் நின்றிருந்த கோணத்தால் அவையும் சரியாகச் செயல்படுத்தப்பட முடியவில்லை. அது மிகவும் செங்குத்தாக இருந்திருக்கும்.

“விமானத்தின் அறிவிப்புப் பொறிமுறையும் செயல்படாமல் போனது. அதனால் விமானப் பணியாளர்கள் ஒலிபெருக்கிகள் மூலமும், சத்தமாகக் கத்துவதன் மூலமும் அறிவிப்புகளை வழங்கினர்” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒரு பயணிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டதாகவும், 13 பேர் உடல் அசௌகரியத்திற்காக மருத்துவ பரிசோதனையைக் கோரியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

“பெரும விபத்து நேரிட்டிருந்தாலும் வெறும் ஐந்தே நிமிடங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்” என்று அதில் பயணித்த யமகே என்ற பயணி கூறினார். தீ மளமளவென விமானம் முழுவதும் பரவ பத்து பதினைந்து நிமிடங்கள் ஆனதாக அவர் கூறினார்.

28 வயதான சுபாசா சவாதா (Tsubasa Sawada) “இது ஒரு அதிசயம், ஒருவேளை நாங்கள் இறந்திருக்கக் கூடும்” என்றார்.

“தீ எப்படி ஏற்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன், பதில் கிடைக்கும் வரை எந்த விமானத்திலும் பயணிக்க மாட்டேன்” என்று சவாதா மேலும் கூறினார்.

விபத்துக்குள்ளான விமானம், ஜப்பானின் வடக்கிலிருக்கும் சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குக் கிளம்பியது. இரண்டு மணி நேரத்தில் ஹனேடாவில் தரையிறங்கியது.

அவ்விடத்தில், புத்தாண்டன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்க ஒரு சிறிய கடலோரக் காவல்படை விமானம் நின்றிருந்தது. அதனோடு பெரிய விமானம் எப்படி மோதியது என்பதைப் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

ஜப்பான் விமான விபத்து

பட மூலாதாரம், Reuters

‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’

பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிபிசியிடம் பேசிய ஒரு முன்னாள் ஜப்பானிய விமானப் பணியாளர் தப்பித்த பயணிகள் ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ என்றார்.

“பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதை அறிந்து நிம்மதியாக இருந்தது. ஆனால் ஆபத்து கால வெளியேற்ற வழிமுறைகளை நினைத்தால் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. இந்த விபத்தில் விமானங்கள் மோதிக்கொண்ட விதத்தையும், தீ பரவியதையும் பார்க்கையில் இந்த விபத்து மிக மோசமாக இருந்திருக்கக் கூடும்,” என்கிறார் அந்தப் பெண்.

நிஜத்தில் பயணிகளை பதற்றமடையாமல் இருக்க வைப்பது மிகக் கடினம் என்ற அவர், அவர்கள் காப்பாற்றப்பட்டது கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானது என்றார். “இது பணியாளர்களின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்த பயணிகள் ஆகியவற்றால் சாத்தியப்பட்டது,” என்றார்.

கைகொடுத்த பயிற்சிகள்

விமானப் பணிப்பெண்கள் மூன்று வார தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். இது ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும்.

“எழுத்துத் தேர்வு, நிஜ சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள், செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை இதில் அடக்கம். விமானம் கடலில் விழுந்தால் என்ன செய்வது, விமானத்தில் தீப்பிடித்தால் என்ன செய்வது, போன்றவை கற்றுத்தரப்படும். பராமரிப்புப் பணியாளர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார் 10 வருடங்களுக்குமுன் பணியிலிருந்து விலகிய அந்தப்பெண்.

தென்கிழக்கு ஆசிய விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் விமானியும் விமானப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த மீட்புப் பணியில் உதவியது என்றார்.

“இங்கு பயிற்சி மிக முக்கியப் பங்காற்றியது என்று நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் யோசிப்பதற்கு நேரமே இருக்காது. பயிற்சியில் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த மட்டுமே முடியும்,” என்றார் அவர்.

பயணிகள் விமானங்கள் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்கு, விமானத்தில் இருக்கும் அனைவரும் 90 வினாடிகளில் வெளியேற முடியும் என்று விமானத் தயாரிப்பாளர்கள் காண்பிக்க வேண்டும். சில சமயம் பரிசோதனை மீட்பு முயற்சிகள் உண்மையான பயணிகளை வைத்து செய்யப்படுகின்றன, என்கிறார் அவர்.

ஜப்பான் விமான விபத்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை

கடந்த கால விபத்துகள்

கடந்த கால விபத்துகளுக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அந்த விமானி.

உதாரணமாக, 1977-ஆம் ஆண்டு ஸ்பெயினில் இரண்டு போயிங் 747 ரக விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 583 பேர் கொல்லப்பட்டனர். இது விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இது விமானப் பணியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாகிகள் ஆகியோரிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து விமானத்திலிருக்கும் விமானி அறை மற்றும் ரேடியோ தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன.

1985-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு விபத்தை எதிர்கொண்டது. டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குக் கிளம்பிச் சென்ற 123 என்ற விமானம், கிளம்பிய சற்றி நேரத்திலேயே ஒரு மலையில் மோதியது. அந்த விமானத்தில் பயணித்த 524 பேரில் 4 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.

இவ்விபத்திற்கான காரணமாக போயிங் நிறுவனம் விமானத்தில் செய்த பழுதுவேலையைச் சரியாகச் செயவில்லை என்று சொல்லப்பட்டது.

2006-ஆம் ஆண்டு இந்த விபத்தின் இடிபாடுகளை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு அருங்காட்சியகம் அமைத்தது. இது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.

“அந்த விபத்திற்குப் பின், குடும்பத்தாரை இழந்து தவித்தவர்களின் வலி, வேதனை ஆகியவற்றைப் பார்த்தபின், அதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்,” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *