அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்தியான மன்னார்குடி யூனியன் சேர்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக இருக்கிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த மனோகரன், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது. மனோகரன், 2018-ம் ஆண்டு மன்னார்குடியைச் சேர்ந்த ஞானம்மாள் என்ற பெண்ணிடமிருந்து ஒரு லட்சம் சதுர அடி நிலம் வாங்கியிருக்கிறார். போலியாகச் சில ஆவணங்களைக் கொடுத்து, அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஞானம்மாள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்த திருவாரூர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், விசாரணை நடத்தி வந்தனர். அந்தச் சமயத்தில் வழக்கில் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டனர். மனோகரன் உள்ளிட்ட சிலர் முன்ஜாமீன் பெற்றிருந்தனர். இந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று காலை 5 மணியளவில் மன்னார்குடி கீழ ஆறாம் தெருவிலுள்ள மனோகரனின் வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனோகரனை எழுப்பி விசாரணை நடத்தினர். இதையறிந்த அவரின் ஆதரவாளர்கள் பலரும், அவர் வீட்டு முன்பு திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலை ஐந்து மணிக்குத் தொடங்கிய விசாரணை, மதியம் வரை தொடர்ந்திருக்கிறது. இதனால் அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சிலரிடம் பேசினோம். “சர்ச்சைக்குள்ளான அந்த நிலத்தை மனோகரன் தன்னுடைய மனைவி அமுதா பெயரில் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அதனை வேறு ஒருவரிடம் விற்பனை செய்திருக்கிறார். அப்போது இதில் இடைத்தரகராகச் செயல்பட்ட ஒருவர், ஏற்கெனவே நிலம் வாங்கியவரின் வாரிசு உயிருடன் இருக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் கொடுத்து அதன் பிறகு பத்திரம் பதிவுசெய்ததாகச் சொல்லப்படுகிறது.
இது பின்னர் பிரச்னையாகி வழக்கு வரை சென்றது. அ.தி.மு.க ஆட்சியில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணை நடக்காமல் அமுக்கப்பட்டது. பின்னர் தி.மு.க ஆட்சி ஆரம்பித்த பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த நிலையில்தான், தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்திருக்கிறது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
